விபத்தின் காரணமாக 11 மாத சிகிச்சைக்குப் பின் கோமா நிலையிலிருந்து விழித்த இளைஞன் கொரோனா என்றால் என்ன என்ற கேள்வி மருத்துவர்களை அதிர செய்துள்ளது.
ஸ்டாஃபோர்ட்ஷையர் :
பிரிட்டனில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷையர் பகுதியில் கடந்த 2020 மார்ச் 1 ம் தேதி ஜோசப் ஃபிளாவில் என்ற 19 வயதான இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் மீது எதிர்பாராத விதமாக கார் ஒன்று பயங்கரமாக மோதியது.
சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞன் சுதாரிப்பதற்குள் இரத்த வெள்ளத்தில் சரிந்த கிடக்க, அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஜோசப் ஃபிளாவில்க்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றுள்ளார்.அந்த நிலையில் தான் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டது.
ஜோசப் ஃபிளாவில் கோமா நிலைக்கு சென்று 3 வாரங்களுக்கு பிறகு பொதுமுடக்கம் போடப்பட்டது. கடந்த 11 மாதங்களாக கோமாவில் படுத்த படுக்கையாகி இருந்த ஜோசப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோமா நிலையிலிருந்து மீண்டார். அதன்பிறகு 11 மாதங்கள் கோமாவில் இருந்த விஷயத்தை அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
பின்பு எங்கே என் பெற்றோர்கள் என்று ஜோசப் கேள்வி எழுப்பியபோது, கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி இல்லை என விளக்கியிருக்கிறார்கள். அப்படி என்றால் என்னவென்று தெரியாத ஜோசப் கொரோனா தொற்றா? எதற்காக லாக்டவுன்? என அடுத்தடுத்து ஜோசப் ஃபிளாவில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க டாக்டர்கள் சற்று திணறியுள்ளனர். பின்பு மருத்துவர்கள் பொறுமையாக எடுத்து சொல்ல ஓரளவு புரிந்து முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றை பற்றி தெரிந்துகொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த மருத்துவர்கள் ஒருசில வாரங்களில் ஜோசப் ஃபிளாவில் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு வந்துவிடுவார் என்று தெரியப்படுத்தி உள்ளனர்.