ஒரு கப்பலை அழிக்க வீசப்பட்ட உலகின் மிகப்பெரிய குண்டு.. எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது

உலகின் மிகப்பெரிய வெடிகுண்டாக கருதப்படும் “டால் பாய்”, 75 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது.

1945 இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மன் போர்க்கப்பலான லுட்சோவை அழிக்க, “டால்பாய்” எனப்படும் 6மீ நீளம் கொண்ட பிரம்மாண்ட வெடிகுண்டை இங்கிலாந்து விமானப்படை செலுத்தியது.

அந்த குண்டு வெடிக்காத நிலையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் போலந்தில் பத்தியை ஆழப்படுத்தும் பணியின் போது, Szczecin துறைமுகத்திற்கு செல்லும் நீர்வழிப்பாதையின் அடியில் கண்டு எடுக்கப்பட்டது. 5400 கிலோகிராம் எடைகொண்ட வெடிகுண்டில், 2400 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து, போலந்தின் ஸ்வினூஜ்லி நகரில் இயற்கை எரிவாயு முனையம் அமைந்துள்ள பகுதியில் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய திட்டமிட்டு, கடற்படை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மிக நீண்ட ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பிறகு பியஸ்ட் கால்வாயில் வெடிகுண்டை நீருக்கடியில் செயலிழக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனால், பியஸ்ட் கால்வாய் பகுதியை சுற்றிலும், 2.5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு வசித்த 750 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

வெடிகுண்டை பியஸ்ட் கால்வாய் நீரில் மூழ்கியபடி செயலிழக்கச் செய்யக் கடற்படை வீரர்கள் முயன்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக, இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பியுள்ளனர்.

“நீருக்கடியில் இந்த வெடிகுண்டை யாருக்கும் காயம் ஏற்படாமல், எந்த வித கட்டுமானத்துக்கும் ஆபத்து ஏற்படாமல் செயலிழக்கச் செய்துள்ளோம்” என, போலாந்து கடலோர பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் க்ரெஸ்கோர்ஸ் லெவாண்டோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Exit mobile version