இனி எங்கு பார்த்தாலும் இந்த பைக் தான்.. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் அதிரடி திட்டம்

ராயல் என்பீல்டு நிறுவனம் இனி ஒவ்வொரு காலாண்டிற்கும், ஒரு புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்யும் திட்டத்தில் உள்ளது.

இந்திய இளைஞர்களின் கனவு வாகன பட்டியலில், ராயல் என்பீல்ட் பைக்கிற்கு எப்போதும் ஓர் இடமுண்டு. அதன் காரணமாகவே இளைஞர்களின் தேவையை கருத்தில் கொண்டு அந்நிறுவனமும் பைக் மாடல்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. விற்பனையும் எப்போதும் சரியாமல் உள்ளது.

இதனிடையே, ராயல் என்பீல்ட் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் அதாவது, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் தசாரி உறுதிப்படுத்தி உள்ளார். அதன்படி, அடுத்த ஏழு ஆண்டுகளில் 28 மாடல்களை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்ட் திட்டமிட்டுள்ளது. தற்போதைக்கு, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேவையான உற்பத்தி திறன் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இவை நிற வேரியண்ட்களை கொண்டிருக்காமல், அனைத்தும் புதிய மாடல்களாக வெளியிடப்பட உள்ளன. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 250சிசி – 750சிசி பிரிவில் கவனம் செலுத்த உள்ளதாகவும், இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பங்களை உருவாக்கி, எலெக்ட்ரிக் மாடல்களை உற்பத்தி செய்ய ராயல் என்பீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுதவிர பெரும்பாலான நிதி சர்வதேச சந்தை விரிவாக்க பணிகளுக்கும் செலவிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளியான முதல் மாடலாக Meteor 350 சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பிளாட்பார்மில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version