ஸ்கோடா நிறுவனத்தின் புதிய திட்டம்.. இனி கார் வாங்க கவலைப்பட வேண்டாம்

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தனது கார் மாடல்களை குத்தகைக்கு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பல தரப்பட்ட மக்களின் முக்கிய ஆசையாக உள்ள நிலையில், விலை மற்றும் ஒரே நேரத்தில் தொகையை செலுத்துவது போன்ற காரணங்களால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலருக்கு அந்த எண்ணமே நிறைவேறாமல் கூட போகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட தரப்பினருக்கு, தனது கார் மாடல்களை குத்தகைக்கு விடும் புதிய திட்டத்தை ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆரிக்ஸ் ஆட்டோ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் கார்களை குத்தகைக்கு வழங்கும் இத்திட்டத்தை ஸ்கோடா நிறுவனம் தொடங்கியுள்ளது.

மாத சம்பளம் வாங்கும் நபர்கள், எஸ்எம்இ-க்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக ஸ்கோடா தெரிவித்து உள்ளது.

ஸ்கோடா இந்தியா 2.0 எனும் இந்த கிளெவர் லீஸ் திட்டத்தில் ஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ மற்றும் சூப்பர்ப் மாடல்கள் போன்றவை 24, 36, 48 மற்றும் 60 மாதங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது. இதற்கான மாத வாடகை ரூ. 22,580 முதல் தொடங்குகிறது

இந்த வாடகை கட்டணத்தில் சாலை வரி, விபத்துகளின் போது ஏற்படும் செலவீனங்கள், பிரேக்டவுன் அசிஸ்டண்ஸ், சர்வீஸ் பராமரிப்பு, டையர் மற்றும் பேட்டரி மாற்றம் உள்ளிட்டவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமக இந்த சேவை டெல்லி, மும்பை, பூனே, பெங்களுரு, ஆமதாபாத், சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.

Exit mobile version