இதுதான் உண்மையான நம்ம ஊரு வண்டி.. 10 பைசாவில் ஒரு கி.மீ பயணம் செய்யலாம்

திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கிலோ மீட்டருக்கு 10 பைசா செலவில் பயணம் செய்யும் வகையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வெளியிட்டு அசத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு, எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அதனை ஊக்குவிக்கும் நோக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, 100% வரி சலுகையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருப்பூரில் செயல்பட்டு வரும் சி.கே மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் பேட்டரியால் இயங்கும் கூடிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவன தலைவர் குணசேகர், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு தங்கள் நிறுவனம் லித்திய பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபட்கள் மற்றும் சைக்கிள்களை தயாரித்துள்ளது என கூறினார்.

மேலும், இதுவரை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து வகையான மின்சார வாகனங்களையும் தீவிரமாக ஆராய்ந்து அதில் காணப்படும் அனைத்து தொழில்நுட்ப மற்றும் இயக்கத்திலுள்ள இன்னல்களை தவிர்த்து இந்த வாகனங்களை தயாரித்து உள்ளதாகக் கூறினார்.

இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் வாகனம், 80 கிலோ மீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் வாகனங்களை தயாரித்து உள்ளோம் என்றும், இந்த வாகனங்கள் மூலம் கிலோ மீட்டருக்கு 10 பைசாவுக்கு குறைவான செலவில் பயணம் செய்ய முடியுமென்றும் சி.கே. மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version