தங்கம் வாங்க ஆள் இல்லை – ஆனால் எப்படி விலை ஏறுது?

கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கிற தருணத்தில், கடந்த 3 மாதங்களிலேயே சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 39 ஆயிரத்தை எட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கிராமுக்கு 4 ஆயிரத்து 185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. முதன்முறையாக சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது, தங்கம் விலை. இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

நகை கடைகள் எல்லாம் மூடியிருக்க, யாருக்காக உயருகிறது இந்த விலை… என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் தினசரி நாளொன்றுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தங்கம் விலை ஏற, பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான 2 காரணங்களைத் தான் இங்கு விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

1. உலக பொருளாதார காரணிகள் + சர்வதேச தங்கம் விலை

2. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு.

உலக பொருளாதாரத்தில் எப்போது எல்லாம் ஒரு நிச்சயமற்ற நிலை வருகிறதோ, அப்போது எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு தங்கம் விலை ஏறத் தொடங்கிவிடும். அதற்கு கொரோனாவே மிகச் சிறந்த உதாரணம். ஜனவரி 01, 2020 அன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை சுமாராக 1,517 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால் இன்று கொரோனா பயத்தால் சுமாராக 1,735 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இப்படி தங்கம் விலை ஏறுவதற்கு இன்னொரு காரணம் அளவுக்கு அதிகமான முதலீடு. பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை தங்கத்தில் கொண்டு வந்து கொட்டுவார்கள். எந்த பொருளுக்கும் டிமாண்ட் அதிகரித்தால் விலை அதிகரிக்கத் தானே செய்யும்..? அது தான் சர்வதேச தங்கத்திலும் நடக்கிறது. விலை அதிகரிக்கிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிப்பதால் சென்னையில் ஆபரண தங்கம் விலை எப்படி அதிகரிக்கிறது..? இதோ விடை: 100 கிராம் தங்கத்தின் விலை 1000 டாலராக இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு டாலர் = 70 ரூபாய் என வைத்துக் கொள்வோம். ஆக 70,000 ரூபாயில் நமக்கு 100 கிராம் தங்கம் கிடைத்துவிடும்.

இதுவே, 100 கிராம் தங்கத்தின் விலை 1200 டாலராக அதிகரித்துவிட்டது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்க டாலர் மதிப்பு அதே 70 ரூபாய் என வைத்துக் கொள்வோம். ஆக 84,000 ரூபாய் கொடுத்தால் தான் 100 கிராம் தங்கம் நமக்குக் கிடைக்கும். இப்படித் தான் சர்வதேச தங்கம் விலையால், சென்னையில் விற்கும் ஆபரண தங்கம் விலை அதிகரிக்கிறது.

சர்வதேச தங்கம் விலை எப்படி சென்னை தங்கம் விலையை பாதிக்கிறது எனப் பார்த்தோம். இப்போது அமெரிக்க டாலர் எப்படி நம் சென்னை தங்கம் விலையை பாதிக்கிறது எனப் பார்ப்போம்.

பொதுவாக, அமெரிக்க டாலரில் தான், இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். கடந்த ஜனவரி 01, 2020 அன்று ஒரு டாலர் = 71.22 ரூபாயாக இருந்தது. இன்று ஒரு டாலர் = 75.66 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த ஜனவரி 01, 2020 அன்று, ஒரு டாலர் = 71.22 ரூபாய். 100 கிராம் தங்கம் விலை 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 71,220 ரூபாய் (71.22*1000) கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஒரு கிராம் தங்கத்தின் விலை 712.2 ரூபாய்க்கு வாங்கி இருப்போம்.

உதாரணமாக ஒரு டாலர் = 75.66 ரூபாய். 100 கிராம் தங்கம் விலை, அதே 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 75,660 ரூபாய் (75.66*1000) கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஒரு கிராம் தங்கத்தின் விலை 756.6 ரூபாய்க்கு வாங்கி இருப்போம். ஆக இந்த டாலர் மதிப்பு உயர்வால் மட்டும், கிராமுக்கு 44.4 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது எனலாம்.

இந்த கொரோனா காலத்தில், மக்கள் தங்கத்தை வாங்காத போதும், ஒரு பக்கம் சர்வதே தங்கம் விலை அதிகரித்துக் கொண்டிருப்பது & அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஆகிய முக்கிய காரணங்களால் தான், இந்தியாவில் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது

கொரோனாவுக்கு முன் ஒரு அவுன்ஸ் (சுமாராக 28 கிராம்) தங்கத்தின் சர்வதேச விலை 1,517 டாலர். ஒரு டாலர் = 71.22 ரூபாய். ஆக 1,08,040 ரூபாய்க்கு ஒரு அவுன்ஸ் (சுமாராக 28 கிராம்) தங்கம் கிடைத்தது.

கொரோனாவுக்குப் பின் ஒரு அவுன்ஸ் (சுமாராக 28 கிராம்) தங்கத்தின் சர்வதேச விலை 1,735 டாலர். ஒரு டாலர் = 75.66 ரூபாய். ஆக 1,31,270 ரூபாய்க்கு ஒரு அவுன்ஸ் (சுமாராக 28 கிராம்) தங்கம் கிடைக்கிறது. 23,230 ரூபாய் தங்கத்தின் விலை, சர்வதேச தங்கம் விலை அதிகரிப்பாலும், டாலர் மதிப்பு உயர்வாலும் அதிகரித்து இருக்கிறது.

தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை – நிபுணர்கள்

பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்பில்லை என்கிறார், தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்த குமார்.

இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.50,000 ஆக அதிகரிக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை என்கிறார், இத்துறை சார்ந்த வல்லுநர் சாந்த குமார்.

சாந்த குமார், தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர்

மக்கள் இனி தங்கத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்குவார்களா?? என்பது ஊரடங்கு முடிந்த பின்பே தெரிய வரும். தங்கத்தின் விலை குறையுமா அல்லது மக்களின் மனநிலை விலையை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொருத்திருந்தே பார்க்க முடியும்.

அனு பிரியம்

Exit mobile version