தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்து 32க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலான பின்னர் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ந்தேதி ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தங்கம் விலை அதிக அளவாக பவுனுக்கு ரூ.33 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆனது. எனினும், மார்ச் மாதத்தில் இந்த விலை சற்று குறைய தொடங்கியது. கொரோனா வைரசின் பாதிப்பு, பங்கு சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
கடந்த மார்ச் 23ந்தேதி நிலவரப்படி ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 616க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும், கொரோனாவால் மார்ச் 24ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்கம் விலை உச்சம் அடைய தொடங்கியது. இந்த சூழலில், தங்கம் விலை நேற்று காலையில் கிராம் ஒன்றுக்கு ரூ.42 உயர்ந்திருந்தது. மாலையில் மேலும் ரூ.32 உயர்ந்தது.
இதனால், நேற்று ஒரே நாளில் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.74 உயர்ந்தது. இதனை தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 776க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது கணிசமாக உயர்ந்து ஒரு கிராம் 4,879 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்றைய நிலவரப்படி ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்து 32க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு அதிரடியாக நேற்று ஒரே நாளில் ரூ.592 உயர்வடைந்தது. இன்று பவுனுக்கு ரூ.256 உயர்ந்து உள்ளது. அடுத்த சில நாட்களில் தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் எட்டும் என நகை விற்பனையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
