இணையத்தில் வெளியாகி உள்ள தி பேட்மேன் மற்றும் வண்டர் உமன் 1984 திரைப்படங்களின் ட்ரெய்லர்கள் பட்டையை கிளப்பி வருகிறது.
டிசி ரசிகர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பேன்-டம், நடப்பாண்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ள பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர்பாக இந்நிகழ்ச்சியில் தகவல் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் இடையே இதற்காக பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சி நிறைவேற்றியுள்ளது என்றே கூற வேண்டும்.
யாரும் எதிர்பாராத விதமாக IT திரைப்படத்தின் இயக்குனர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தி பேட்மேன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்விலைட் பட சாகா மூலம் பிரபலமான ராபர்ட் பாட்டின்சன் ப்ரூஸ் வெயின் ஆக நடிக்க, ஜோ கிராவிட்ஸ், பால் ஃபிராங்க்ளின் டானோ, ஜெஃப்ரி ரைட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ட்ரையாலஜி அடிப்படையில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில், முந்தைய படங்கள் போல் அல்லாமல் இளம் வயதுடைய ஆரம்ப கால பேட்மேனை காட்ட முயற்சித்து இருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் 35 சதவீத படப்பிடிப்பு பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், எதிர்பாராத நேரத்தில் அதிரடி பாணியில் வெளியாகி உள்ள தி பேட்மேன் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரிட்லெர் மற்றும் பென்குயின் ஆகிய இரு வில்லன்கள் இந்த படத்தில் வில்லன்களாக நடித்து வரும் நிலையில், கேட் உமன் கதாபாத்திரமும் இதில் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் ட்ரெயிலரின் ஒரு இடத்தில் கூட, பேட்மேனின் உதவியாளரானா ஆல்ப்ரெட் கதாபாத்திரம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “I AM AVENGE” என பேட்மேன் வெறித்தனமாக கூறி தன்னை அறிமுகம் செய்யும் காட்சியை பேட்மேன் ரசிகர்கல் சில்லறையை சிதரவிட்டு ரசித்து வருக்கினறனர்.
இதைதொடர்ந்து, வண்டர் உமன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட, வண்டர் உமன் 1984 படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்தாலும் கூட தேதி குறிப்பிடப்படாமல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கேல் கேடட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இந்நிலையில், அவற்றுடன் சில புதிய காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மேக்ஸ்வெல் லார்ட் எனும் வில்லன் கதாபாத்திரத்தை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், முந்தைய ட்ரெய்லரில் காட்டப்பட்ட சீடா எனும் வில்லி கதாபாத்திரத்தின் முழு லுக்கும் இதில் வெளியிடப்பட்டு உள்ளது. ட்ரெய்லரின் இறுதியில் அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, டிசி ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்னைடர் கட் justice league மற்றும், ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாகியுள்ள சூசைட் ஸ்குவாட் படத்தின் சிறு ஸ்நீக் பீக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.