புத்தாண்டு அன்று இயக்குனர் செல்வராகவன் அவரது ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்(AO 2). ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. சரியாக பத்து வருடங்கள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான சமயத்தில் அவ்வளவாக ஓடவில்லை. வழக்கமாக, செல்வராகவன் படம் என்றாலே வெளியாகி சில வருடங்கள் கழித்து தான் கொண்டாடப்படும். தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை படமும் இதற்கு ஒரு சான்று. புதுப்பேட்டை படம் செல்வராகவனுக்கு சின்ன சருக்கலை கொடுத்தாலும் தனுஷிற்கு கதாநாயகனாக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உள்ள முக்கிய இரு கதாபாத்திரங்கள் சோழ மன்னரும், தூதுவனும் தான். சோழ மன்னராக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் அவர்களும், தூதுவனாக கார்த்தியும் நடித்திருப்பார்கள். நடிப்பில் பார்த்திபனை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி, அறிமுக நடிகர் என்று சொல்லமுடியாத அளவிற்கு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் தூதுவனாக, அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் என்னும் அற்புத கலைஞரை வளர்த்தெடுத்ததில் செல்வராகவனின் பங்கு முக்கியமானது. புதுப்பேட்டை கொடுத்த ஹீரோ அந்தஸ்தை வைத்து கொண்டு நடிப்பில் தன்னை மெருகேற்றினார் தனுஷ். பென்சில்ல கோடு கிழிச்ச மாதிரி இருக்கான் இவன் எல்லாம் என்ன ஹீரோ என்று கேலி செய்தவர்கள் முன் நடிப்பின் மூலம் தன்னை நிரூபித்துக் காட்டினார் தனுஷ். தனுஷின் நடிப்பு மட்டுமல்லாமல் கதைத் தேர்வும் சிறப்பாக இருக்கும். ஆடுகளம் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. தொடர்ந்து வடசென்னை போன்ற படங்கள் தனுஷின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.அரசுனில் அந்த எதிர்பார்பை எல்லாம் பூர்த்தி செய்திருப்பார். அசுரனில் வரும் சிவசாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இளமையில் துடிப்பான நடிப்பையும், வயதானபின் வரும் தளர்ச்சியையும் அவ்வளவு தேர்ந்த உடல்மொழியால் வெளிப்படுத்தியிருப்பார்.
புதுப்பேட்டையில் இருந்து அசுரன் வரை தனுஷின் வளர்ச்சியும் அசுர வேகத்தில் இருந்தது. அதே வேகத்தோடு ஹாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார் தனுஷ். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்ன, தோற்றம் எப்படி இருக்கும், அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்று இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள். 2024 ல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் ஆயிரத்தில் ஒருவன் படம் கொண்டாடக் காரணம் ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை. இரண்டாம் பாகத்திலும் ஜி.வி.பிரகாஷின் இசையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டிற்கு திரையரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் திரையிடப்பட்டது. இதனால் படத்திற்கு இருக்கும் ஆதரவை நினைத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி புத்தாண்டு அன்று இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார்.இரண்டாம் உலகம், NGK என செல்வராகவனின் அடுத்தடுத்த படங்கள் நினைத்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. செல்வராகவனின் தொடர் தோல்விகளுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? தனுஷின் நடிப்பு திறமைக்கு தீனி போடுவதாக இருக்குமா ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்?