மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி உடனான நினைவுகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபி குறித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்பிபி க்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி மருத்துவமனையிலேயே எஸ்பிபி யின் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் எஸ்பிபி யின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து பலரும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்பிபியை தனது அண்ணனாக ஏற்றுக் கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபி பற்றி உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். எஸ்பிபி யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கமல் பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ‘ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால் தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்’ என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.