ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்!

Aishwarya Rajesh
மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவும், அந்தப் படத்திற்கு தேசிய விருது வாங்கவும் தான் ஆசைப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா  ராஜேஷ் தெரிவித்துள்ளார்.Aishwarya Rajesh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டகத்தி, விளையாட வா, ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி என்று பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், ஹீரோயின் ரோலை விட, 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த காக்கா முட்டை படம் தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.

இதையடுத்து, தர்மதுரை, வடசென்னை, செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, க/பெ. ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் என்று பல படங்களில் நடித்துள்ளார். பூமிகா படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மனநோய் மருத்துவராக நடித்துள்ளார். இயக்குநர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ், கல்ராமன், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் தங்களது ஸ்டோன் பென்ஞ் பிலிம்ஸ் பேனர் மூலமாகவும், சுதன் சுந்தரம், ஜெயராமன் ஆகியோர் தங்களது பேஷன் ஸ்டூடியோஸ் பேனர் நிறுவனத்தின் மூலமாகவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், இது என்னுடைய 25ஆவது படம். ஆதலால் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தால் இந்தப் படத்தில் நடித்தேன். பூமிகா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது.

இரவு பகலாக பணியாற்றி 35 நாட்களிலேயே பூமிகா படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. எனக்கு மற்ற நடிகைகளைப் போன்று வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

அதிலும், ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இது, எனது நீண்டநாள் ஆசை. நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version