ஒரே ஒரு பாம்பால் சிம்புவுக்கு வந்த வம்பு.. சிம்புவை தொடரும் சர்ச்சைகள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “ஈஸ்வரன்” படக்குழுவிற்கு, இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிம்பு நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். சிம்புவின் சினிமா எதிர்காலத்திற்கு முக்கிய படமாக எதிர்பார்க்கப்படும், ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் முழுவதுமாக கிராமத்து ஆளாக தோற்றமளிக்கும் சிம்பு, கரும்பு காட்டுக்குள் நின்றுகொண்டு தோள்மீது ஒரு பாம்பை போட்டுக்கொண்டு அதனை கையில் பிடிப்பதுபோல் இருந்தது. தொடர்ந்து, சிம்பு ஒரு பாம்பைப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

இதனைதொடர்ந்து, சிம்பு பாம்பைத் துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, குறிப்பிட்ட காட்சியை பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கி, அது நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்பட உள்ளது. இந்தக் காட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் விசாரித்துவருகின்றோம் என, இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,  ஈஸ்வரன் பட போஸ்டர், டிரெய்லரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று  இந்திய விலங்குகள் நல வாரியம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அனுமதியின்றி பாம்பு காட்சிகளைப் பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், படக்குழு இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version