
விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள பீஸ்ட் படத்தின் பெயர் மாற்றப்பட்டு வெளியான போஸ்டர் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13-ம் தேதி திரைக்கு வருகிறது.
தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் பீஸ்ட் படம் தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.
’பீஸ்ட்’ என்கிற ஆங்கிலப் பெயரில் படம் வெளியானாலும், ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றவாறு படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு வருகிறது. அதையொட்டி இந்தியில் இப்படத்துக்கு ‘ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதனால் படத்தின் பெயரை மாற்றிவிட்டார்களா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
