போதையில் மிதக்கும் பாலிவுட்.. சிக்கிய தயாரிப்பாளரால் அதிர்ந்த திரையுலகம்.. இன்னும் எத்தனை பேர் மாட்ட போறாங்களோ?

சொகுசு கப்பலில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது நட்சத்திர நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு போலீசார், கடந்த 3ம் தேதி அந்த கப்பலில், சாதாரண பயணிகள் போல சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உட்பட 8 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த பரபரப்பு குறைவதற்கு முன்பாகவே, பிரபல இந்தி தயாரிப்பாளர் இமிதியாஸ் கத்ரியின் மும்பை பாந்த்ராவில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனை முடிவில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் இன்று அங்கு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டபோது எழுந்த போதை பொருள் விவகாரத்திலும், தயாரிப்பாளர் இமிதியாஸ் கத்ரியின் பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version