பிரியாமணியின் டாக்டர் 56: சினிமா விமர்சனம்

பிரபல விஞ்ஞானி ஒருவர் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ அதிகாரி பிரியாமணி வசம் வருகிறது. அவர் விசாரணையை தொடங்குகிறார். அப்போது இன்னொரு பெண் டாக்டரை கொலை செய்து பிணம் தெருவோரம் வீசப்பட்டு கிடக்கிறது. அடுத்து இன்னொரு ஆண் டாக்டரும் கொல்லப்படுகிறார். இந்த தொடர் கொலைகளால் போலீஸ் துறை ஆடிப்போகிறது.

பிரியாமணியும் வழக்கை சவாலாக ஏற்று விசாரணையை தீவிரப்படுத்துகிறார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை திரட்டி இவன்தான் கொலையாளி என்று முடிவு செய்து ஒருவனை கைது செய்கிறார். அவனை சிறைக்குள் வைத்து அவர் விசாரிக்கும்போது மற்றொரு கொலையும் நடக்கிறது. நிஜ கொலைகாரன் யார்? கொலை நடப்பதற்கான காரணங்கள் என்ன? என்பது மீதி கதை. சி.பி.ஐ அதிகாரி கதாபாத்திரத்திற்கு கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் பிரியாமணி.

மிடுக்கான நடையும், தடயங்களை சேகரிக்கும் கூர்மையும், விசாரணை ஸ்டைலும் பிரியாமணியை இமை கொட்டாமல் கவனிக்க வைக்கின்றன. நோய் பாதிப்போடு போராடுபவராக வரும் பி.ஆர். பரிதாபம் பெறுகிறார். வியாதியோடு வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளில் மிரள வைக்கிறார். அவரது தந்தையாக வருபவரின் கதாபாத்திரம் திருப்பம். தீபக் ஷெட்டி, ரமேஷ்பட், எத்திராஜ், கிரிஷ் ஜாட்டி, வீனா பொன்னப்பா, சுவாதி ஆகியோரும் உள்ளனர்.

பெரும்பகுதி கதை விசாரணையிலேயே கடந்து விடுவதை தவிர்த்து இருக்கலாம். மருத்துவ ஆராய்ச்சிக்கு மனிதர்களை பயன்படுத்துவதையும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் விறுவிறுப்பான திரைக்கதையில் சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி உள்ள இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலாவை பாராட்டலாம்.

ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன என்ற திகிலோடு நகர்வது சிறப்பு. நோபின் பால் பின்னணி இசை கதைக்கு உயிர் ஊட்டி உள்ளது. ஒளிப்பதிவாளர் ராகேஷ் திலக் காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்துள்ளார்.

Exit mobile version