அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்திற்கு ‘லயன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்பட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
தனது பாலிவுட்டின் முதல் திரைப்படத்திலேயே முன்னணி நடிகர் ஷாருக்கானை இயக்கவிருக்கிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். புனேவில் கடந்தவாரம் தொடங்கிய படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், படத்திற்கு ‘லயன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இணையத்தில் இந்தப் படம் தொடர்பாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அது ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கை ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாண்ட் துக்காராம் மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி எழுதப்பட்ட கடிதத்தின் நகல் தான் அது. அந்த கடிதத்தில் தான் திரைப்படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், நடிகர்கள், இயக்குநர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நயன்தாரா நடிப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவிடப்படவில்லை.