அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு : சென்னை திரும்புகிறார் ரஜினி ?

அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக ரஜினி சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால் அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரை ரஜினிகாந்த் அறிவுறுத்தினார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. 

ரஜினிகாந்த் தினமும்  14 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட வேகமாக காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

இந்த நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக  அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், ரஜினிகாந்த்திற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் சூழ்நிலை கருதி ரஜினி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version