
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். மாஸ்டர் படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. அதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக பீஸ்ட் உள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுவிட்டன. அதனால் படத்திற்கான டீசரை எதிர்நோக்கி பலரும் ஆர்வமுடன் காத்திருந்தனர். நேற்று முன் தினம் பீஸ்ட் பட டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து பலரும் இன்றைய நாளை எதிர்நோக்கி காத்திருந்தனர். அதன்படி இன்று மாலை 6 மணியளவில் சரியாக சன் டிவி-யின் யூ-ட்யூப் பக்கத்தில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. வெளியான அரைமணிநேரத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பீஸ்ட் பட டிரெய்லரை பார்த்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக பி.எல்.எஃப் பதிவின் அடிப்படையில் பீஸ்ட் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 1.89 ரேஷியாவொல் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் துல்லியமான காட்சி அமைப்பு, ஒலி மற்றும் ஆழப் பார்வையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
