சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் நிச்சயம் விஜய் சேதுபதிக்கு விருது கிடைக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 67-வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்திலும் அவருடன் ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தனது ட்விட்டர் பக்க பதிவில், சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜவுக்கும் படக்குழுவுக்கும் நன்றி விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.