கடைசி பிஸ்கட்-ஜாஹித் அகமது

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 101 கடைசி பிஸ்கட்- ஜாஹித் அகமது

நள்ளிரவு ஒரு மணி இருக்கும் தேவாலயம் மணி ஒலித்தது. மருத்துவ கல்லூரியில் விடுதியில் உள்ள 67ஆம் அறையில் நவீன் தன் பையில் இருந்து 500 ரூபாயை வெளியே வைத்து ஒரு பந்தயம் வைத்தான். இந்த இரவில் என்ன பந்தயம் வைக்க போகிறாய் என நக்கலாக கேட்டான் மணி. பந்தயத்தொகை பெரிதாக இருப்பதால் பந்தயமும் பெரிதாகவும் விபரீதமாகவும் இருக்குமே என்றான் தயா. ஆமாம் இருக்காதா பின்னே நான் உங்களிடம் ஒரு டார்ச் லைட்டும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் தருவேன். நான் தரக்கூடிய பிஸ்கட் பாக்கெட்டில் மொத்தம் 25 பிஸ்கட்கள் இருக்கும். அதை அரசு மருத்துவமனையில் கிழக்கு திசையில் உள்ள பிணவறையில் இருக்கும் பிணங்களின் வாயில் வைத்து அந்த ட்ராயரை மூடி விட்டு வரவேண்டும் என்ற ஒரு விபரீத பந்தயத்தை முன் வைத்தான்.

இதை கேட்டவுடன் என் உயிரின் மேல் எனக்கு பயம் உள்ளது, ஆசை உள்ளது எனவே நான் இந்த பந்தயத்திற்கு வரவில்லை என்று விலகினான் மணி. பின் தயாவும் விலகி கொண்டான். ஆனால் என்னால் முடியும் என்றான் குணா. குணாவிற்கு தைரியம் அதிகம். அது மட்டுமின்றி அவனுக்கு குடி பழக்கமும் இருந்தது. இப்பொழுது கூட அவன் குடித்துக்கொண்டு, பேசிக்கொண்டு தான் இருக்கிறான். டேய் அவன் பந்தயத்தை கண்டாயா நீ போதையில் இருக்கிறாய் உன்னால் தெளிவாக கூட சிந்திக்க முடியாது. ஏன் உனக்கு விபரீத விளையாட்டு. நான் பந்தயத்தை முடிக்கிறேன், என்னிடம் டார்ச் லைட்டையும் பிஸ்கட் பாக்கெட்டையும் கொடு என்று கர்ஜித்தான் குணா.

நான்கு நண்பர்களும் பிணவறையில் அருகிலுள்ள சுவற்றின் பக்கம் வந்து நின்றனர். காவலாளி சரியாக 20 நிமிடங்கள் தேநீர் அருந்த சென்று வருவார். அதற்கு இடையில் நான் பிணங்களின் வாயில் பிஸ்கட்டுகளை வைத்து விட்டு வந்து விடுகிறேன். அவ்வாறு வரவில்லை என்றால் நீங்கள் மூவரும் மறைந்திருந்து காவலாளியை தாக்குங்கள் அவர் ஓடி விடுவார் என்று சுவற்றில் ஏறி குதித்து பிணவறையை நோக்கி ஓடினான் குணா.

குணா உள்ளே சென்று நிமிடங்கள் ஆகிவிட்டது. காவலாளியும் வந்துவிட்டார். மூவரும் எறிந்த கற்கள் காவலாளியை பயந்து ஓட செய்தது. அதன் பிறகும் பிணவறையின் கதவுகள் திறக்கப்படவில்லை. மூவரின் இதயத்துடிப்பும் இருளையும் தாண்டி நிலவை தொட்டது. இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் என்றான் தயா. இப்பொழுது என்ன செய்வது உள்ளே சென்றவனுக்கு என்ன ஆனதென்று ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை உள்ளே சென்று மயங்கி விழுந்திருப்பானோ என்றது நவீனின் நடுங்கிய பற்கள். பேசாமல் நாம் மூவரும் உள்ளே சென்று பார்க்கலாமா என்று எச்சிலை விழுங்கி கொண்டே கேட்டான் தயா. எனக்கு தைரியம் என்று கூறினான் மணி. எனக்கும் தான் ஆனால் சற்று பயமாக தான் உள்ளது என்று நடுங்கி கொண்டே கூறினான் நவீன். நீதானே இந்த பந்தயத்தை வைத்தாய் நீயே உள்ளே செல்ல அஞ்சுகிறாய் என்று அதட்டினான் தயா.

இப்போ என்ன தான் செய்வது என்று உரையாடலை முடித்தான் மணி. பிறகு அங்கிருந்து மூவரும் தட்டுத்தடுமாறி சுவர் ஏறி குதித்து அறை எண் 67 ஐ நோக்கி ஓடினர். அறை கதவை மூடிவிட்டு மூவரும் மூலையில் அமர்ந்தனர். கடிகாரத்தின் முற்களை நோக்கி வேகமாக ஓடு என்றனர். ஆனால் நான் மெதுவாக நடந்துதான் செல்வேன் என்று அடம்பிடித்தது. நவீன் செய்த விபரீதத்தை நினைத்து அவனது உள்ளம் வெட்கத்தால் சூழ்ந்தது. மூவரும் ஒன்றாக உட்கார்ந்து கண்ணாடியை பார்த்தார்கள். அதில் தெரிந்த உருவம் அவர்களை காரி உமிழ்ந்தது நண்பனை காப்பாற்ற தெரியவில்லை என்று. இறுதியாக கடிகாரத்தின் முற்கள் மெதுவாக நடந்து வந்து அவர்கள் விரும்பிய இடத்தில் வந்து நின்றது. மூவரும் அவர்களின் பயிற்சி உடையை எடுத்து கொண்டு ஓடினார்கள்.

மருத்துவமனைக்கு செல்ல செல்ல பரபரப்பாக இருந்தது. பிணவறையில் கூட்டம் அதிகமாக இருந்தது. மூவரும் பிணவறையை நோக்கி ஓடினார்கள். அங்கே காவல்துறையினர், மற்றும் மருத்துவர்களும், பிணவறை காவலாளியும் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் பயத்தின் உச்சத்திற்க்கே சென்று விட்டனர். பிணவறையின் கதவு திறந்து இருந்தது. தரையில் டார்ச் லைட்டும் பிஸ்கட் பாக்கெட்டும் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபொழுது குணா சாதாரணமாக நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் அழுது கொண்டிருந்தான் இல்லை அவன் கண்களில் வருவது நீர்த்துளிகள் அல்ல அது இரத்தம். அவன் கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது. அதனை கண்ட மூன்று நண்பர்களும் இது கனவாக இருந்து விடக்கூடாதா என்று வேண்டியது.

இது நடந்து மூன்று நாட்கள் கழித்து காவலர்கள் அந்த மூன்று நண்பர்களையும் கண்டித்தனர். அவர்கள் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. பின்பு குணாவின் உடல் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் stroke வந்து இறந்ததாக உள்ளது. வாதம் என்பது திடீரென்று தாங்க முடியாத அதிர்ச்சி ஏற்படும்பொழுது மூளையானது செயலிழந்து விடும். மேலும் உடலில் உள்ள ஏனைய உறுப்புகளும் ஒரு நொடியில் செயலிழந்து நவதுவாரங்களில் இருந்தும் இரத்தம் வரும். முற்றும் என்று போகும் முன் பல தோன்றுகிறது. அன்றிரவு என்ன தான் நடந்தது என்ற மறுபக்கத்தையும் பார்த்துவிடலாம்.

பிணவறையை நோக்கி அவன் வைத்த ஒவ்வொரு அடிகளும் அவன் தைரியத்தை அடித்து உடைத்து கொண்டிருந்தது. அவனது போதை கொஞ்சம் கொஞ்சமாக தெளிய தொடங்கியது. பிணவறையின் கதவை திறந்தவுடன் அவனது இதயம் வெடிப்பது போல் துடித்தது. கதவை மூடி உள்ளே சென்றவுடன் டார்ச் லைட் நடனம் ஆடியது. அது அவன் கை நடுக்கத்தை தெளிவாக உணர்த்தியது. முதல் ட்ராயரை திறந்து பிணத்தின் முகத்தில் டார்ச்சை அடித்தான். அதன் வாயில் பிஸ்கட்டை வைத்து மூடினான். அவ்வாறு ஒவ்வொரு பிணத்தின் வாயிலும் வைத்து கொண்டே வந்தான். பிஸ்கட் குறைய குறைய அவன் தைரியமும் குறைந்து கொண்டே வந்தது. அந்த பிஸ்கட் பாக்கெட்டின் கடைசி பிஸ்கட்டை ட்ராயரை திறந்து பிணத்தின் வாயில் வைத்து விட்டு வேகமாக அதை மூடிவிட்டு சட்டென்று திரும்பி பட்டென்று ஓட முயன்றான். ஆனால் திடீரென்று அவன் சட்டை பின்னால் இழுக்கப்பட்டது.

அந்த நொடியில் அவன் அடக்கிவைத்திருந்த பயம் உச்சத்தை தொட்டு அவன் உயிரை பறித்தது. யார் நம்மை பிடிப்பது பேயா? பிணமா? அல்லது பிணம் எழுந்து விட்டதா? என்ற கேள்விகள் அவனை பயத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த திடீர் தாங்க முடியாத அதிர்ச்சியே அவனுக்கு வாதம் வர காரணமாக இருந்தது. ட்ராயரை திறந்து பிஸ்கட்டை பிணத்தின் வாயில் வைத்துவிட்டு அவசரமாக ட்ராயரை மூடியதால் அவனது சட்டை நுனி ட்ராயரின் ஒடுக்கியில் மாட்டிக்கொண்டது. அவன் ஓட முயற்சித்தபோது அவனை பிடித்தது பேயோ, பிணமோ அல்ல டிராயரில் சிக்கிய சட்டை தான். அதை புரிந்துகொள்ளுமுன் அவன் உயிர் பிரிந்தது. தைரியம் என்பது அனைவரிடமும் உள்ளது. அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு உணர்ச்சி அதை உணர்ந்தாலே போதும்.

நன்றி.

Exit mobile version