வல்லமை தாராயோ-லீலா ராமசாமி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 110 வல்லமை தாராயோ-லீலா ராமசாமி

அந்தச் சிறார் கூர்நோக்கு இல்லத்தின் தூய்மையான நீண்ட வராண்டாவில்  காலணிகள் சீராக சப்திக்க மிடுக்காக நடந்து வந்தார் அந்தப் பெண் காவலர். 

ஆறாம் எண் இடப்பட்ட அந்த விசாலமான அறைக்கு எதிரே வந்தவுடன் நின்றார்.

உள்ளே ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  பதினெட்டு வயதுக்குட்பட்ட பல்வேறு வயதுடைய சிறுமிகளில் ஒரு சிறுமியைத் தவிர மற்றவர்கள் சீருடையில் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.

“சக்தி இங்கே வா”

பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை அந்த வகுப்பறையின் வாயிலில் நின்று அழைத்த அந்த இல்லத்தின் பெண் காவலரைத் திரும்பிப் பார்த்தார்.

“சாரி மேடம். உங்களுடைய அனுமதி இல்லாமல் நாம்பாட்டுக்குக் கூப்பிடுறேன். சக்தியைக் கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?”

ஆசிரியை அந்தச் சீருடை அணியாத சிறுமியைப் பார்த்து, “சக்தி! எழுந்து போம்மா” என்றார்.

எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பன்னிரண்டு வயது சிறுமி எதுவுமே காதில் விழாதது போல அமர்ந்திருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த பெண் அவளுடைய தோளில் தட்டி, “சக்தி! உன்னைத்தான் கூப்பிடுறாங்க. எழுந்து போ” என்று கூறவும் அவளைத் திரும்பி வெற்றுப் பார்வை  பார்த்தாள். 

அவளே சக்தியின் கையைப் பிடித்து அழைத்து வந்து அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த பெண் காவலரிடம் சேர்த்தாள்.

அந்தப் பெண் காவலர் அவளுடைய கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு நடக்கையில் சக்தியின் கைகள் பயத்தில் நடுங்குவதை உணர முடிந்தது. வெகுளித்தனமான அந்தக் கிராமத்துப் பெண்ணின் அழகிய முகத்தில் பயமும் சோகமும் கலவையாக அப்பி இருந்தன. சக்தியை அந்த இல்லக் காப்பாளரின் அறையின் உள்ளே அழைத்துச் சென்றார். 

அங்கே நீதிமன்றத்தில் சக்திக்காக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த பெண் வழக்குரைஞரும், அந்த இல்லப் பொறுப்பாளரும் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் சக்தியை அழைத்துச் சென்று விட்டுவிட்டு அந்தப் பெண் காவலர் சற்றுத் தள்ளி நின்றுகொண்டார். 

சக்தியைப் பார்த்து, “சக்தி! என்னைப் பாரும்மா!” எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளை அழைத்துப் பார்த்தார் வழக்குரைஞர்.

சத்தி இவர்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. கூட வந்திருந்த பெண்மணி, (அவர் ஒரு மனநல மருத்துவர்) எழுந்து அவளை அழைத்து வந்து தங்களுடன்  அமர வைத்து இதமான குரலில் கேட்டார்:

 “நீ அங்கே என்ன நடந்ததுன்னு சொல்லும்மா. அப்பதானே நீ திரும்பி வீட்டுக்கு வர முடியும்?”

அந்த இல்லத்தின் காப்பாளர், “அதை ஏன் கேக்கறீங்க மேடம். நானும் கேட்டுப் பாத்துட்டேன். மத்தவங்களும் தன்மையா கேட்டாங்க. வாயே திறக்க மாட்டேங்கறா” என்று சலித்துக் கொண்டார். 

“எப்பவும் எங்கேயாவது மோட்டுவளையைப் பார்த்தபடி உக்காந்து இருக்கா. இந்தக் குழந்தையைப் போய் எப்படித்தான்..”  என்று கூறி கண்களை மூடித் தலையை அசைத்து உச்சுக் கொட்டினார். 

வழக்குரைஞர் சக்தியிடம்,

“இதோ பாரும்மா சக்தி! எனக்கு உன் வயசுல ஒரு குழந்தை இருக்கா. எனக்கு உன்னைப் பார்த்தா அவளை மாதிரிதான் இருக்கு. நீ அங்கே என்ன நடந்ததுன்னு சொல்லு. நான் உன்னை இங்கேயிருந்து வெளியே கூட்டிட்டுப் போய்டுவேன். நீ உங்க வீட்டுக்குப் போய் உங்கம்மாவைப் பாக்கலாம்.” என்றார்.  

‘அம்மா’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சக்தியின்  

கண்கள் விரிந்தன.

அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து மனநல மருத்துவர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். 

“அங்கே அன்னிக்கு என்னதான் நடந்ததுன்னு சொல்லு சக்தி.  பயப்படாதே. உனக்கு நாங்கள்லாம் இருக்கோம்.” என்று இரண்டு கைகளையும் ஆறுதலாகப் பற்றி அவளுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் அளித்தார்கள். 

அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்தாள் சக்தி. பின் மெதுவாக வாயைத் திறந்து திக்கித் திணறிப் பேசலானாள். 

சக்தி கூறியதை எல்லாம் மறைவிலிருந்து ஒரு கேமரா வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தது.

“அன்னிக்கு நானும் பக்கத்து வீட்டு மீனாவும் அவளோட தீபாவளித் துப்பாக்கியை வச்சி விளையாடிட்டிருந்தோம்.  அப்போ எங்கம்மா என்னைக் கூப்பிட்டாங்க.

‘எனக்கு உடம்புக்கு முடியல.  நான் வேலை செய்யுற வீட்டுக்குப் போயி இன்னிக்கு வேலைக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டு வந்துரு’ ன்னு சொன்னாங்க. 

நான் அந்த வீட்டுக்குப் போனப்போ வெளியே ஒரு காவலாளி இருந்தாரு. அவர் கிட்ட சொல்லிட்டு உள்ளே போனேன். உள்ளே யாரும் இல்லை. ‘அம்மா, அம்மா’ ன்னு கூப்பிட்டேன். மாடி மேல இருந்து ஒருத்தரு எட்டிப் பாத்தாரு .

அவர்கிட்ட, ‘எங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியல. இன்னைக்கு வேலைக்கு வர முடியாதாம்.’ னு சொல்லிட்டு நான் கிளம்பினேன்.

அவர் சரின்னு தலையை ஆட்டுனாரு. அப்புறம் என்ன நினைச்சாரோ, ‘பாப்பா! இங்க மேல வா’ ன்னாரு.

‘ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. நான்  போகணுமே’ ன்னு சொன்னேன். அதுக்கு அவரு ‘கொஞ்சம் மேல வந்து தண்ணி எடுத்துக் குடுத்துட்டுப் போ’ன்னாரு.

நான் மேலே போனேன். அங்க இன்னும் வேற மூணு பேர் இருந்தாங்க. அவங்க முன்னால மேஜை மேல என்னென்னமோ பாட்டில் பாட்டிலா இருந்தது. அங்கேயே தண்ணி பாட்டில் கூட இருந்துச்சு. அப்பறம் ஏன் இவங்க தண்ணி கேட்டாங்கன்னு தெரியல. 

அதுல ஒருத்தர் ஒரு பூனையோட விளையாடிட்டு இருந்தாரு. அது அவரைக் கீறிடிச்சி.

நான், ‘எங்கே தண்ணி இருக்கு? சொல்லுங்க. எடுத்துத் தரேன்’ ன்னு சொல்லும்போதே அவர் கதவைச் சாத்திட்டு,  ‘உன் பேர் என்ன’ன்னு கேட்டாரு. 

‘என் பேரு சக்தி. நான் வீட்டுக்குப் போகணும். ஸ்கூலுக்கு டைம் ஆச்சு’  

அவர் பக்கத்தில் வந்து என் கையைப் பிடிச்சுட்டு, பேசிட்டு இருந்த என்னைத்  தொடக்கூடாத இடத்தில எல்லாம் தொட்டாரு.  

நான் கையை வெடுக்குன்னு அவங்ககிட்ட இருந்து பிடுங்கிட்டு கதவுப் பக்கம் ஓடினேன். அப்ப இன்னொரு ஆளு ஓடி வந்து என்னைப் பிடிச்சாரு. ‘என்னை விடு’ன்னு கத்தித் திமிறினேன். 

அவர் என்ன பண்ணாரு தெரியுமா? கையில சினிமாப் படத்துல எல்லாம் காட்டுவாங்களே, அதுமாதிரி ஒரு துப்பாக்கிய எடுத்து, அந்தப் பூனையைச் சுட்டுட்டாரு. அது ரத்தமா கொட்டிச் செத்துப் போச்சு. 

‘பாத்தேல்ல! நீ சத்தம் போட்டா அந்தப் பூனையோட கதிதான் உனக்கும்’ ன்னு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாரு. எனக்கு வாயடைச்சு போச்சு. 

அவங்க நாலு பேரும் நான் அலற அலற என்னென்னமோ செஞ்சாங்க. அவங்க யாருமே என் அழுகையைக் காதிலேயே வாங்கலை. அவங்க எழுந்து மறுபடியும் போய் குடிக்க ஆரம்பிச்சாங்க.   

ஓரத்திலே அந்தத் துப்பாக்கி இருந்தது. அதை நான் கையில எடுத்தேன். கனமா இருந்துச்சி. அவங்க என்கிட்ட மறுபடியும்  வந்தாங்க. 

‘என்னை விடுங்க. நான் வீட்டுக்குப் போகணும்’ன்னு சொன்னேன். அவர் நேரே என்னைப் பிடிக்க வந்தாரு. கையில வச்சிருந்த துப்பாக்கிய ரெண்டு கையால பிடிச்சு சுட்டேன். கீழே  விழுந்துட்டாரு. 

மத்த மூணுபேரும் ஓடி வந்தாங்க. நான் ஒவ்வொருத்தரையா மூணுபேரையும் சுட்டுட்டேன். 

கதவைத் திறந்துட்டு வெளியே ஓடிவந்தப்போ அந்தக் காவலாளி நின்னுட்டு இருந்தாரு. அவரைத் தள்ளிட்டு நான் வேகமா ஓடினேன். ஆனா அவர் என் கையப் புடிச்சுட்டு யாருக்கோ போன் பண்ணாரு. கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து என்னை கூட்டிட்டுப் போனாங்க. வழியிலயே நான் மயக்கமாயிட்டேன்.  

கண்ணு முழிச்சப்போ  ஆஸ்பத்திரில இருந்தேன். கொஞ்ச நாளைக்கப்பறம் இங்கே கொண்டுவந்து விட்டுட்டாங்க. நான் எங்கம்மாவைப் பாக்கணும். என்னைத் தேடும்” என்று கண்களில் நீர் வழிய அவள் கூறினாள். 

அங்கிருந்த அனைவரின்  கண்களும் கலங்கியிருந்தன.

“சக்தியைப் பரிசோதிச்ச டாக்டரோட ரிப்போர்ட்டை நான் வாங்கி வச்சிருக்கேன்.   அதிலேயும் சக்தி சொன்னதுபோல அவ நாலு பேரால சீரழிக்கப்பட்டிருக்கா ன்னுதான் குறிப்பிட்டிருக்கு.”

“மிருகங்கள்! இந்தக் குழந்தை அவனுங்களுக்குப் பேத்தி வயசு. அந்த நாலு மிருகங்கள் சேர்ந்து குழந்தையைச் சீரழிச்சிருக்காங்களே! அவங்களுக்கு இந்தத் தண்டனை கிடைக்க வேண்டியது தான்” என்று சொல்லி விட்டு, 

“சக்தி! நாளைக்குக் கோர்ட்ல  நான் கேக்குறதுக்கு மட்டும்  பதில் சொல்லு. பயப்படாதே. 

உன்னை நான் கூட்டிட்டுப் போய் உங்கம்மாகிட்ட விடறேன்.” என்று ஆறுதலாகக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

******

அந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதி, நீதிமன்ற அலுவலர்கள், இருதரப்பு வழக்குரைஞர்கள், காவல்துறை அதிகாரிகள், வெறித்த பார்வையுடன் சக்தி இவர்கள் மட்டுமே காணப்பட்டார்கள்.

வெளியாட்கள் யாரும் அங்கு பார்வையாளர்களாக அனுமதிக்கப்படவில்லை.

ஒரு ஓரத்தில் சக்தியின் அம்மா நின்று அழுதுகொண்டே இருந்தாள்.

“கனம் நீதிபதி அவர்களே! ஒரு பூனை கூட அதற்குத் தப்பிக்க வழியில்லை எனும் போது எவ்வளவு பெரிய மனிதனையும் எதிர்த்துச் சீறுகிறது. அப்படி இருக்கும்பொழுது ஒரு சிறுமியை நான்கு பேர் சேர்ந்து சீரழித்தால் அவள் என்ன செய்வாள்? கைக்குக் கிடைத்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவள் தப்பித்து வெளியே வந்திருக்கிறாள். 

அவள் திட்டமிட்டோ, கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனோ அங்கு செல்லவில்லை. 

தன்னுடைய தாய் அங்கு வேலைக்கு வர முடியவில்லை என்ற செய்தியைச் சொல்லப் போன இடத்தில் இப்படி அந்த நான்கு மிருகங்களுக்கு இரையாகி, வேறு வழியில்லாத காரணத்தால், தற்காப்புக்காக அவளையும் அறியாமலேயே இதைச் செய்திருக்கிறாள். 

இந்தச் சிறுமி சக்தியை கொலையுண்ட அந்த நான்கு பேரும் சேர்ந்து சீரழித்ததாக அவள் வாக்குமூலம் கொடுத்த வீடியோவை இதோ தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். மருத்துவமனையில் அவளைப் பரிசோதித்த மருத்துவர் கொடுத்த  மருத்துவச் சான்றிதழையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.

அதைக் கனம் கோர்ட்டார் அவர்கள் பார்வையிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.”

வழக்குரைஞர் கொடுத்த வீடியோவை கோர்ட் அலுவலர் வாங்கி நீதிபதியிடம் கொடுக்க, அவர் அதைக் கணினியில்  இணைத்துப் பார்த்தார்.

இடையிடையே

நிமிர்ந்து அங்கு அமர வைக்கப்பட்டிருந்த சக்தியையும் பார்த்தார். அவர் கண்களில் இரக்கம், பச்சாத்தாபம், கருணை எல்லாம் மாறி மாறி வந்தன.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதிகமாக எதிர் வாதாடவில்லை.

“இருதரப்பு வாதங்களையும், நடந்த நிகழ்ச்சிக்கான சான்றுகளையும், இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட சக்தியின் வாக்குமூலத்தையும், அவரது இளம் வயதையும் கருத்தில் கொண்டு சக்தி நிரபராதி என்று இந்த  நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

சக்தி மட்டுமல்ல; இந்த நாட்டின் குழந்தை முதல் முதிய வயது பெண்கள் யாரையும் தவறாக அணுகும் எவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

சத்தி உடலாலும் மனதாலும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உடலுக்கான மருத்துவச் சிகிச்சையும், ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனையும் அறிவுரையும்  அவருக்கு மிகவும் தேவைப்படுகிறது.

அதைத் தடையின்றி அவருக்கு வழங்குமாறு இந்த நீதிமன்றம் காவல்துறைக்கு ஆணையிடுகிறது.

இத்துடன் இந்த  நீதிமன்றம் கலைகிறது.”

சக்தியின் தாய் ஓடிவந்து சக்தியைக் கட்டிக்கொண்டு நீதிபதியையும் வழக்குரைஞரையும் கையெடுத்துக் கும்பிட்டாள்.

         ‌‌               ******

Exit mobile version