பாலைவன பறவைகள்-தனுஜா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 112 பாலைவன பறவைகள்-தனுஜா

ப்பா …எப்ப வருவீங்க? என்ற மழலை குரலுக்கு… ​

இன்னும் பத்தே நாள்..அப்பா சம்யா குட்டியோட இருப்பேனாம்..பாப்பாக்கு 

என்ன வேணும் சொல்லுங்க ? அப்பா வரும் போது வாங்கிட்டு வரேன்.. ​

பிங்க் ..கலர்..டெடிபியர்.. ​

ம்ம்…அப்புறம் ​

சாக்லேட்…பார்பி டால்..அப்பா அந்த வேதா இருக்காளே அவ எனக்கு அந்த 

பிங்க் பொம்மையை தரமாட்டாளாம். அவ பர்த்டேக்கு அவங்க அப்பா வாங்கி 

தந்ததாம்.. ​

சரிடா ..கண்ணு..அப்பா வரும்போது உனக்கும்  நிறையா பொம்மை வாங்கிட்டு 

வர்ரேன்…சரியா ​

அப்பா நாம வேதாக்கு எந்த பொம்மையும் தரக்கூடாது ஓக்கே!..என்று மழலை 

குரலில் சொல்லிய மகளின் பேச்சில் மனது நெகிழ்ந்தது  சரணுக்கு. ​

சரிடா..போனை அம்மாகிட்ட தர்றீயாடா செல்லம்.. ​

ஓக்கே…ப்பா..உங்களுக்கு தவுசண்ட் கிஸ்ஸஸ்…என முத்தமழை பொழிந்து 

மொபைலை அம்மாவிடம் தந்துவிட்டு விளையாட ஓடுகிறாள் சம்யா. ​

சொல்லுங்க..என்றாள் ரம்யா. ​

சம்யாகுட்டி எவ்வளவு அழகாக பேசுறா இல்லை..ரொம்ப வளர்ந்துட்டாளா?.. 

எவ்வளவு உயரம் இருக்கா இப்ப..நாலைஞ்சு வருஷமாகுது பார்த்து ..குரல் 

தழுதழுத்தது. ​

ஆமா..அவளுக்கென்ன வாய் ஓயாத பேச்சு…எல்லாம் உங்களை மாதிரியே 

தான்..என புகார் வாசித்தாள் ரம்யா ​

ஒரு தம்பியோ தங்கையோ பிறந்தா அடங்கிடுவா!…என சிரித்தான் ​

ஆசை தான்.. க்கும்.. இதுக்கொண்ணும் கொறச்சலில்லை…என சிணுங்கினாள் 

வெட்கத்துடன்.. ​

டிக்கெட் கன்பார்ம் ஆகியாச்சு ..எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா 

உங்களை எல்லாம் பாக்க போறோம்ங்குறதே… பேக்கிங் வேலை எல்லாம் 

தலைக்குமேல் கிடக்கு. ​

உங்க பொண்ணு எப்ப டிவெண்டி எய்த் டே வரும்னு தெனமும் ஒரே 

நச்சரிப்பு….காலண்டர்ல  28 ம் தேதி ரவுண்ட் பண்ணி அப்பா கம்மிங்னு வேற 

எழுதி வைச்சிருக்கா தெரியுமா?  கீரிட்டிங் கார்ட் எல்லாம் செய்து வச்சிருக்கா 

உங்களுக்கு.. ​

நானும் 28ம் தேதிக்காக தான் ரம்யா காத்திட்டிருக்கேன். ​

ஏங்க..இந்த முறை நீங்க வந்தா திரும்ப போகவேணாமே. இங்கேயே நாம 

ஏதாவது வேலை பாத்துக்கலாம்ங்க..எவ்ளோ நாள் தான் இப்படியே 

இளமையையும் வாழ்க்கையையும் தொலைச்சிட்டு பணத்தை நோக்கியே 

ஓடுறது? ​

இன்னும் இரண்டு வருஷம் தான் ரம்யா..கடனை அடைச்ச பிறகு 

உங்களோடவே இருந்துடறேன். அதுவரை கொஞ்சம் 

பொறுத்துக்கோடா..ப்ளீஸ் ​

ம்கும்..இப்படி சொல்லியே எட்டு வருஷம் ஓடி போச்சு ..அலுப்பாக இருக்குங்க 

..இப்ப கல்யாண கடன் வேற சேர்ந்தாச்சு…எப்பத்தான் விடியுமோ? ​

சரி உனக்கு என்ன வேணும் சொல்லு வரும்போது வாங்கிட்டு வரேன். ​

அதெல்லாம் எதுவும் வேணாம்..நீங்க வருவதே எனக்கு பெரிய கிப்ட் தான். ​

சௌம்யாவோட கல்யாண வேலை எவ்ளோ தூரம் போய்ட்டிருக்குடா. ​

கிட்டதட்ட முடிஞ்சிருச்சிங்க..இன்னும் சில கடைசிநேர வேலை தான் 

பாக்கியிருக்கு..இருங்க சௌம்யாவே வர்ரா…அவகிட்ட தரேன்… ​

சொல்லுண்ணா..எப்டி இருக்க..டிக்கெட் கன்பார்ம் ஆயாச்சாண்ணா…வீ ஆர் 

வெயிட்டிங் ​

ஆகிடுச்சி சௌமி..மச்சான் என்ன சொல்றாரு? ​

உன்னை பாக்க ஆவலாக காத்திருக்கார். நிச்சயதார்த்தம் அப்ப கூட நீ 

வர்லைங்குறது தாண்ணா பெரிய குறை எங்களுக்கு.. சீக்கிரம் வந்துருண்ணா.. ​

வந்துடுறேன்டா….நீ நல்லாயிருக்கியா? சந்தோஷமாயிருக்கியாடா?…அது 

தான் முக்கியம். ​

நான் நல்லா இருக்கேண்ணே..இருங்க.. அம்மாகிட்ட குடுக்கறேன்..ம்மா 

இந்தாங்க சரணண்ணா பேசுறாரு.. ​

ம்மா..எப்படிம்மா இருக்கம்மா? ​

நல்லாயிருக்கேன்டா கண்ணு..நீயெப்படி இருக்கேடா தங்கம்..என் 

கண்ணுலையே இருக்கடா ராசா..பாத்து எம்புட்டு நாளாகுது..ஒழுங்கா 

சாப்பிடுறீயா. உடம்பை பத்திரமா பாத்துக்க ராசா…எப்படா வருவ கண்ணு? ​

ம்மா..இன்னும் பத்தே நாள் தான் ஓடி  வந்துருவேன்மா..அப்பா எங்கே? சரத் 

எப்படி இருக்கான்.. ​

அப்பா இப்ப தாண்டா ராசா மார்க்கெட் வரை போயிருக்காரு..வந்தா பேச 

சொல்றேன்..சரத் காலேஜ் போயிருக்கான்… ​

சரிம்மா…நீயும் உடம்பை பாத்துக்க..அப்பாகிட்டயும் சொல்லு சீக்கிரமே 

வந்துடறேன்..வைச்சிடவா என்றபடி மொபைலை அணைத்தான். ​

இந்த பாலைவன வாழ்க்கையில் அவ்வப்போது குடும்பத்துடன் பேசுவது 

மட்டுமே ஒரே ஆறுதலாக இருக்கிறது.. ​

என்னடா..ஒரே குஷியாயிருக்க..என தலையை துவட்டியபடியே கேட்டான் 

ரூம்மேட் முருகேஷ்… ​

இப்ப தான் வீட்ல பேசினாங்கடா.. தங்கச்சி கல்யாண ஏற்பாடெல்லாம் 

போயிட்டிருக்கு..இன்னும் பத்து நாளில் அங்க இருப்பேன்ங்குறதே ரொம்ப 

சந்தோஷமா இருக்குடா.. ​

பர்சேஸ் முடிச்சிட்டியாடா? ​

இன்னும் இல்லைடா..இனிமே தான் போகணும்.. நாலஞ்சி வருஷத்துக்கப்புறம் 

ஊருபக்கம் போறேன்..எல்லாருக்கும் ஏதாவது வாங்கிட்டு 

போகணும்…கல்யாண பொண்ணுக்கும், மச்சானுக்கும் இன்னும் ஸ்பெஷலா 

ஏதாவது வாங்கணுமே… ​

ஜமாய்டா ..என தோளைத் தட்டினான் முருகேஷ். ஆமாம் உன் குட்டி 

பொண்ணு சம்யா குட்டி எப்டி இருக்கா.. ​

செம்மையா பேசுறாடா..இரண்டு வயசுல பாத்தது .என்றான் சரண் 

ஏக்கத்துடன்… ​

பிங்க் கலர் டெடியை ஒரு முறை தடவி பார்த்தவன் பெருமூச்சுடன் 

சூட்கேஸை மூடினான் ..மறுபடியும் திறந்து டெடியை மட்டும் எடுத்து 

ஹாண்ட் லக்கேஜில் வைத்தான்..இறங்கியதுமே சம்யாவிடம் கொடுத்து பூ 

போல் மலரும் அந்த மழலை முகத்தை கண்டு விட வேண்டும் என்ற ஆவலில். 

சூட்கேஸின் வெயிட்டை சரிபார்த்தான் ஏகமாய் கனத்தது அனைவருக்கும் 

ஏகபட்ட பொருட்களை வாங்கி அடைத்திருந்தான்.. ​

ஏர்போர்டை அடைந்து  லக்கேஜை போட்டு விட்டு ஹாண்ட் லக்கேஜை 

மட்டும் கையில் எடுத்து கொண்டு ப்ளைட்டில் ஏறினான் “வெல்கம் “என்ற 

அழகான எர்ஹோஸ்டர்ஸின் இயந்திர புன்னைகையை ஆமோதித்தபடி தன் 

இருக்கையில் அமர்ந்தான். ​

இருக்கையில் அமர்ந்து கண்களை மூடியவனுக்கு நினைவுகள் பின்னோக்கி 

சென்றது. இருபத்தி நான்கு வயது இளைஞனாக கடல்கடந்து அயல் நாட்டிற்கு 

பொருள்தேடி வந்த அந்த நாட்கள் கண்முன்னே வந்து போனது. அப்பாவின் 

தொழிலில் ஏற்பட்ட சரிவு ஊரை சுற்றி கடன் படித்து கொண்டிருந்த தம்பி 

தங்கை..அம்மாவின் கண்ணீர்.. என குடும்ப சூழலில் மனதை கல்லாக்கி 

கொண்டு எடுத்த முடிவு அது..ஆயிற்று பத்து ஆண்டுகளாக அயல்நாட்டு 

வாசம்..நடுவில் மூன்று , நான்கு முறை திருமணம் , குழந்தை பிறப்பென 

ஊருக்கு சென்றது தான் தொண்டையை அடைத்தது.. ​

எஸ்கியூஸ்மி…என விமான பணிப்பெண்ணிடம் நீரை வாங்கி தாகம் 

தணிந்தான்.. ​

மறுபடியும் சொந்த ஊரை பற்றிய நினைவலைகள்..எப்படியோ மிகுந்த 

சிரமத்திற்கிடையில் கடனை அடைத்து பெற்றவர்களுக்கென சொந்த வீடு 

கட்டி கொடுத்தாயிற்று . தம்பி சரத்தையும் இன்ஜினியரிங் சேர்த்தாயிற்று 

..இன்னும் ஓரிரு வருடங்களில் படிப்பை முடித்து வேலைக்கும் சேர்ந்து 

விடுவான் ,தங்கை சௌமிக்கும் கல்யாணம் வரை வந்தாயிற்று. ​

பாவம் ரம்யா…கல்யாணம் ஆனது முதல் எதையும் வாயை திறந்து 

கேட்டதில்லை.. முதல்முறையாக கேட்கிறாள்.. எட்டு வருடங்களுக்கு பிறகு 

கணவனுடன் சொந்த ஊரிலே இருக்க ஆசைபடுகிறாள் பாப்பா… 

பிறந்ததிலிருந்து இரண்டுமுறை  இரண்டு மாதங்கள் இருந்ததோடு சரி.. ஒரு 

கணவனாக , தகப்பனாக எதையும் செய்யவில்லையே என்ற குற்றவுணர்வு 

வாட்டியது சீக்கிரம் அனைத்து  கடமைகளை முடித்து விட்டு ரம்யாவையும் , 

பாப்பாவையும் சந்தோஷமா வச்சிக்கணும்… கண்ணில் துளிர்த்த நீரை 

துடைத்து கொண்டான் பல்வேறு கனவுகளையும் கற்பனைகளையும் 

சுமந்தபடி ஏதேதோ நினைவுகளுடன் அப்படியே தூங்கி போனான். ​

ஆழ்ந்து தூங்கிகொண்டிருந்தவன்.. விமான பணிப்பெண்ணின் அறிவிப்பை 

கேட்டு திடுக்கிட்டு விழித்தான்.. வழமையாக தங்கள் விமான சேவையை 

பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தும் இன்னும் சிறிது நேரத்தில் விமானம் 

தரையிறங்க போகிறது என்றும் பயணிகள் தங்கள் சீட்பெல்டை அணியுமாறும் 

அழகான ஆங்கிலத்தில் அறிவுறுத்தி கொண்டிருந்தாள். ​

சரண் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. பல வருடங்களுக்கு பிறகு பிறந்த 

மண்ணை , சொந்த பந்தங்களை காண போகிறோம் என்ற ஆவல். விமானம் 

தரையிறங்கி கொண்டிருக்க சரணின் மனமோ வானத்திலேயே மிதந்து 

கொண்டிருந்தது… ​

வேகமாக தரையிறங்கி கொண்டிருந்த விமானம் திடீரென சர்ரென்று  மீண்டும் 

உயரே பறக்க ஆரம்பித்தது..என்னவாக இருக்கும் என யோசித்து 

கொண்டிருக்கும் போதே விமான பணிப்பெண் மீண்டும் அந்த திடுக்கிடும்  

அறிவிப்பை சற்றுமே பதட்டத்தை காண்பிக்காமல் வெளியிடுகிறாள. 

தரையிரங்குவதில் சற்று சிக்கல்கள் என்றும் ஆனாலும் பாதுகாப்பாக 

இறங்குவோம் என அறிவிக்க பயணிகள் அலற சரண் திக்ப்ரமை பிடித்தவன் 

போல் அமர்ந்திருக்கிறான். ​

மீண்டும் சிறிது நேரத்தில் விமானி மிகுந்த அனுபவமிக்கவர். மறுபடியும் 

தரையிறங்க முயல்கிறோம் பாதுகாப்புடன் தரையிறங்குவோம் என 

நம்பிக்கையுடன் அறிவிக்கிறாள்…. ​

திக் திக் திக் நிமிடங்கள்… ​

பயணிகள் கண்களை இறுக மூடியபடி அவரவர் தெய்வங்களை வேண்ட.. ​

சர்ரென்று தரையிறங்கிய விமானம் நிறைய குலுக்கல்களுடன் ரன்வேயில் 

தொடர்ந்து நிற்காமல் வேகமாய் ஓட…. ​

சரண் கண்களை இறுக மூட ….ரம்யா , பாப்பா , அம்மா , அப்பா, சௌமி என மாறி 

மாறி வந்து போகிறார்கள் நினைவுகளில்..பெரும் பிரளயம் போன்றதொரு 

வெடிச்சத்தம்… அப்படியே மயங்கி சரிகிறான்… ​

கடைசியாக ஆம்புலன்ஸ் , தீயணைப்பு வாகனங்களின் சத்தம் , சில மனித 

குரல்கள் என தூரத்தில் எங்கோ கேட்டுகொண்டிருக்கிறது. உணர்வுகளற்று 

மரத்து போன உடலை யாரோ இருவர் தூக்கி கொண்டு ஓடுகிறார்கள். ​

மறுநாள் மருந்து நெடி மூக்கை துளைக்க கன்னத்தில் இரு துளிகள் சூடாக விழ 

திடுக்கிட்டு முழிக்கிறான் சரண். ​

உனக்கு ஏதும் இல்லை ராசா..நீ நூறு வருஷம் நல்லாயிருப்ப என விபூதியை 

பூசுகிறாள் அம்மா..கண்களில் நீருடன் ரம்யாவும் அருகில் பாப்பாவும்… ​

உங்களுக்கு ஒண்ணுமில்லை வெறும் மயக்கம் தான் என ப்ரஷர் செக் 

செய்துவிட்டு நர்ஸ் போனதும்…. ​

ரம்யா..இனி உங்களை விட்டு நான் ஒருநொடி கூட  எங்கேயும் 

போகறதாயில்லை. பாலைவனத்தில் இருக்குற ஓட்டகங்கள் நீண்ட 

நாட்களுக்கான தண்ணீரை உடலில் சேமித்து பல மாதங்கள் வாழுமாம். அந்த 

மாதிரி எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் அன்பையும் பாசத்தையும் 

சேமித்து பல வருடங்களாக தனியே வாழ்கிற அந்த ஓட்டக வாழ்க்கை இனிமே 

எனக்கு வேணாம்னு தோணுது ரம்யா…என் கதறி அழும் கணவனை 

கண்ணீருடன் அணைத்து கொள்கிறாள் ரம்யா.​


	
Exit mobile version