ஒரு துண்டு ரயில்-நெய்வேலி பாரதிக்குமார்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 115 ஒரு துண்டு ரயில்-நெய்வேலி பாரதிக்குமார்

1940 ஆம் வருடம் இடைச்சிவிளை புகைவண்டி நிலையம்  

சக்கிமுத்து கொடி அசைக்க காத்திருந்தார். அதுதான் அந்த புகைவண்டி  

நிலையத்துக்கு வரும் கடைசி ரயில். ஒருவேளை அந்த புகைவண்டி  நிலையத்துக்கே 

அன்று கடைசி தினமாகவும் இருக்கலாம். இனி ஓடுமா இல்லையோ என்பதால் கடைசி 

முறையாக அதில் பயணம் செய்துவிடுவோம் என்பதற்காகவும் வேடிக்கைப் 

பார்ப்பதற்காகவும் மக்கள் வழக்கத்தைவிட அதிகமாக நிலையத்தில் கூடி இருந்தனர். 

சீருடை உடுப்பை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டார். இனி அதை அணிய 

வாய்ப்பு இருக்குமா? அப்பா பார்க்கும் வைத்தியத்தொழில்தான் இனி நமக்கா? 

நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் வண்டி வருவது தெரிந்தது. நிலையத்துக்கு வர 

இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும். மாட்டு வண்டி வேகத்தில்தான் வரும் என்றாலும் அதன் 

அழகும் கம்பீரமும் தனிதான்.  

மதராஸ்பட்டினத்தில் இருக்கும் பாரி கம்பெனிக்காரன்தான் திசையன்விளையில் 

இருந்து குலசை வரைக்கும் ரயில் விட்டான். இல்லை என்றால் இந்த ஊருக்கு எப்படி ரயில் 

வரும்? திசையன்விளை பனை மரத்து பதநீர் அவ்வளவு தித்திப்பா இருக்கும். அதிலேர்ந்து 

சீனி தயாரிக்கறதுக்கு சீனி ஆலைக்கு பதநீர் போகத்தான் மொதல்ல ரயில் வந்துச்சு. 

அப்புறம் ஆலையில் வேலை செய்ய ஆள் போகணுமே அதுக்காக மக்களும் போகட்டும்னு 

ரெண்டு பெட்டிய சேர்த்தான். மக்கள் கூட்டம் கூடுச்சு வெள்ளைக்காரன் சேர்க்கச் 

சொன்னான்னு இன்னும் பெட்டியைச் சேர்த்தான்.  

இப்ப ஒரே அடியாக நிறுத்தப்போறான். ஒரு மேகத்தை கக்குவது போல புகையைத் 

துப்பிக்கொண்டு வந்து மெல்ல நின்றது கே.எல்.ஆர்.  ரயில். குலசேகரப்பட்டினம் லைட் 

ரயிலைத்தான் மக்கள் சுருக்கமா கே.எல்.ஆர்.நு சொல்லுவாங்க. இஞ்சின் ஓட்டுனரிடம் 

எப்பொழுதும் தெரியும் நட்பான புன்னகை இன்று இல்லை. எல்லாவற்றிலும் கடைசி என்ற 

சொல் ஒன்று இருக்கத்தான் செய்யும் ஆனால் அது என்றைக்கு அல்லது எதற்கு என்பது 

தெரியாமல் இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் வண்டிக்குள் 

நிறைய சிறுவர்கள் ஆடையில்லாமல் இரயிலில் தரப்பட்ட ஓமப்போடியத் தின்றுகொண்டு 

நின்றார்கள். சட்டை டிரவுசர் போடாத பிள்ளைகளுக்கு டிக்கெட் இல்லை இலவசம்தான். 

அதுவுமில்லாம கையில ஓமப்பொடி ஓசியில குடுப்பாங்க. அதுக்காகவே வீட்டுல 

சுத்திக்கிட்டு கெடக்குற பசங்களை ரயில்ல போற சமயம்  கூட்டிக்கிட்டு வந்துடுவானுங்க. 

ஸ்டேஷன் தாண்டிட்டா பயில இருக்கற சட்டைத் துணியை எடுத்து பிள்ளைகளுக்கு 

போட்டுவிட்டு குலசேகரப் பட்டினத்தை சுத்துவாங்க. பதினைந்து வயதிலேயே வேலை 

கிடைப்பது அதுவும் மாதம் இருபத்தி மூன்று ரூபாய் சம்பளம் என்பது கொள்ளைப்பணம். 

இசக்கிக்கு ஒரு உதவியாளன் கூட உண்டு. கூட்ட பெருக்க தண்ணீர் கொண்டு வந்து 

வைக்க பூட்ட திறக்க என்று மாடனை நியமித்திருந்தது நிர்வாகம். என்ன குறைச்சல்? யார் 

விட்ட சாபமோ எல்லாம் முடியப்போகிறது இன்றோடு… பதினைந்து வயதில் உத்தியோகம் 

பதினாறு வயதில் ரிட்டயர்மென்ட் ஒரு கையில் கருப்பட்டியைக் கொடுத்துவிட்டு அதன் 

ருசியை உணர்வதற்குள் மறுகையால் பிடுங்கி விட்டார்கள். வானம் இருட்டிக்கொண்டு 

வந்தது இரயில் புறப்பட்டுவிட்டால். இங்கு ஈ காக்கா இருக்காது. மணி இரவு ஏழாகிவிட்டது 

இஞ்சின் டிரைவர் தாங்கொண்ணா சோகத்தோடு தலையை அசைத்தார். இரயில் 

புறப்பட்டது. வீட்டுக்குப் போய் என்ன செய்யப்போகிறோம் என்று அப்படியே மணி 

பத்தானது கூடத்தெரியாமல் அமர்ந்துவிட்டார் இசக்கி. அப்பொழுதுதான் அந்த 

உருவத்தைப் பார்த்தார் இருட்டில் யாரென்று புரியவில்லை. கையில் இருந்த அரிக்கன் 

விளக்கை எடுத்துக்கொண்டு தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினார். அந்த உருவம் 

நகராமல் இருப்பது போலத்தான் தோன்றியது.  

2020 ஆம் வருடம் 

ங்கசாமியின் காலை எடுத்துவிட்டார்கள் என்று சின்ன பையன் செல்லத்துரை 

வந்து சொன்னான். அவனும் தங்கசாமியின் மகன் தருமராசனும் கூட்டாளிகள்.  

“ஓ அப்படியா எங்க இருக்கான் ஆஸ்பத்திரியிலேயா?” என்று கேட்டார் இசக்கி.  

“அவரு இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துடறார். இன்னிக்கு சாயந்திரம் 

கற்குவேல் அய்யனார் கோயில்ல படையல் வச்சிருக்கான் தருமராசன்.. ஆப்பரேஷன் 

நல்லபடியா முடிஞ்சா பொங்கல் வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டானாம். உங்களையும் 

வரச் சொன்னான். உங்களால வர முடியுமா? 

“அதுக்கென்ன நடக்கற தூரம்தானே நான் ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன் நீ 

கொல்லைக்கு போயிட்டு உன் சவுரியம் போல அங்க வந்துடு”   

நீரிழிவு நோய் முற்றிப்போய் கால் புரையோடி விட்டது. இனி காலை எடுத்தால்தான் 

பிழைக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். அவனுக்கும் வயசு தொண்ணூறு தொண்ணுத்தி 

ரெண்டு இருக்கும் என்னைவிட சின்னவன்தான்.  

“நீங்க எண்ணெய் எல்லாம் போட்டு வருஷக் கணக்குல காலை காப்பாத்தி 

வச்சிருந்தீங்க. இங்கிலீஷ் மருத்துவம் பாக்கறவன் ஒரு மணி நேரத்துல வெட்டிக் 

கெடாசிட்டான் அப்படின்னு தருமராசு ரொம்ப வருத்தப்பட்டான்”  

“என்ன பண்ண சொல்றே அப்ப கருப்பட்டிக் காப்பி டீதான் குடிப்பான். வெள்ளை 

சர்க்கரை வந்தப்போறவு இதை சீண்டறது இல்லை. அவன் எல்லாத்திலேயும் 

மேம்போக்குதான். சின்ன வயசுலே. பனங்கள்ளு இறக்கற இடத்துக்கே பொழுது விடிஞ்சா 

போய் நிப்பான் அதுலேயும் போதைக்காக கடுங்கள்ளுதான் குடிப்பான்..  

வெள்ளைக்காரன் லோன் தொரைக்கு எடுப்பு வேலைக்கு போனப்புறம் சீமை 

சரக்குத்தான்.. பனங்கள்ளு குடிக்கிறப்ப பய போறதும் தெரியாது வர்றதும் தெரியாது 

ஆனா சீமைச்சரக்குலதான் போதை ஏறுதுன்னு கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுட்டு 

தண்டவாளத்துல காலை விட்டான்…“  

ற்குவேல் அய்யனார் கோயிலுக்கு இசக்கி போனபோது தங்கசாமி குடும்பம் 

பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி படைக்கத் தயாராக இருந்தது. தருமராசன் இவரைப் 

பார்த்ததும் அருகே வந்து இசக்கியின் கைகளைப் பிடித்துக் கொண்டு  

“வாங்க மாமா.. அப்பாவைப் பார்த்தீங்களா?” தங்கசாமி முட்டிக்கு கீழே பேண்டேஜ் 

போட்டு மழுங்கலாகி இருந்தது.  

ஒரு வருஷமா ரெண்டு வருஷமா? கிட்டத்தட்ட அஞ்சு  வருஷம் விடாம எண்ணெய் 

காய்ச்சி நீவி தண்டவாளத்துல விட்ட அவரு காலை எப்படியோ நேராக்கி நடக்க வச்சிங்க. 

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வெரலை வெட்டினாங்க இப்ப….” என்று தாங்க 

முடியாமல் அழுதான். அப்பா மேல் மிகுந்த பாசம் அவனுக்கு. 

“இத்தனை வயசுக்கு அவரை உயிரோட திருப்பிக் குடுத்துருக்கானே அதை நெனச்சி 

மனசை தேத்திக்க ராசு”  

படைக்க வைத்திருந்த பொருட்களை எல்லாம் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். 

வாழைப்பழம் வெத்திலை பாக்கு தேங்காய் சூடம் வத்தி இப்படி எல்லாம் இருந்தது. 

மாம்பழத்தை காணவில்லை  

“ராசு என்னப்பா மாம்பழம் இல்லியே?”  

“இல்லை மாமா கிடைக்கலை” 

“யாரு சொன்னா? நம்ம மாடன் தோப்புல இருக்கே. கேட்டா ரெண்டு பழம் 

தரப்போறான். அவன் பையன் சக்கரைதான் தோப்புல இருக்கான். வர்றக்குள்ள பாத்தேன். 

போயி நான் சொன்னேன்னு கேட்டு வாங்கிட்டு வா.. மாம்பழம் இல்லாம கற்குவேல் 

அய்யனாருக்கு படைக்க கூடாதுப்பா. செல்லத்துரை நீ போயிட்டு வாப்பா ” 

செல்லத்துரை டூ வீலரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். மாம்பழம் வந்ததும் 

படையல் ஆரம்பமானது பக்கத்தில் இருந்த கே.எஸ்.எம். பள்ளியில் இருந்து பள்ளி 

விடுவதற்கான மணி அடிக்கும் சத்தம் கேட்டது. தண்டவாளத்துண்டு ஒன்றைத்தான் மணி 

அடிப்பதற்காக பள்ளியில் தொங்க விட்டிருந்தார்கள். அது கே.எல்.ஆர். இரயில் பாதையில் 

எஞ்சிய தண்டவாளத்தின் கடைசித்துண்டு. பாரி கம்பெனி இரயில் விடுவதை நிறுத்தியப் 

பிறகு தொடர்ந்து ரயில் விட எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். 

ஆனால் சர்க்கரை ஆலைக்கு சென்ற பதநீரில் குளத்து நீரை களவாணித்தனமாக 

கலந்துவிட்டதை அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நம்மை ஏமாற்றிய இவர்களுக்கு 

எதற்கு செய்ய வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் இரயில் போக்குவரத்தைத்  தொடர 

முன்வரவில்லை. கைவிடப்பட்ட தண்டவாளங்களை ஆளாளுக்கு தூக்கிக்கொண்டு போய் 

தங்கள் வீட்டு உத்திரமாகவும் மாடு கட்ட முளைக்குச்சி போலவும் பயன்படுத்திக் 

கொண்டார்கள். இப்பொழுது அந்த ரயில்பாதை இருந்ததற்கான சுவடே இல்லை.  

மாம்பழம் வந்தது படையல் நல்லபடியாக முடிந்தது. தங்கசாமி அமர்ந்திருந்த 

கயிற்றுக்கட்டிலில் இசக்கியும் அமர அவர்களுக்கு அங்கேயே பொங்கல் வந்தது. 

மற்றவர்கள் எதிரிலிருந்த அரசமரத்துக்கு போய்விட்டார்கள். அப்பொழுதுதான் தங்கசாமி 

திடீரென கேட்டான். 

“எதுக்கு இசக்கி அன்னிக்கு என் கால் மாட்டிக்கும்னு தெரிஞ்சும் பாயின்ட் அடிச்சே. 

அதுல சிக்கித்தான் எனக்கு கால் எலும்பு முறிஞ்சுது. நீதான் மறுபடி வைத்தியம் பண்ணி 

என் காலை மறுபடி நல்லாக்கினே அதனாலதான் இன்னும் நாற்பது வருஷம் நல்லா நடக்க 

முடிஞ்சுது. இன்னி வரைக்கும் என் பிள்ளைக்கிட்ட கூட சொல்லலை.. இனிமே ரொம்ப நாள் 

இருக்க மாட்டேன் எனக்கு தெரிஞ்சாகனும் ஏன்  அப்படி செஞ்சே?” 

“கற்குவேல் அய்யனாருக்கு ஏன் கட்டாயம் மாம்பழம் வச்சி படைக்கணும்னு 

சொன்னேன்  தெரியுமா?” 

“தெரியாதே” 

“ரொம்ப வருஷத்துக்கு மின்னால சூரபாண்டியன்னு ஒரு ராஜா இருந்தாரு. அவரு 

காலத்துல ஒரு அதிசய மாமரம் இங்க இருந்துச்சு. அதுல என்ன அதிசயம் இருந்துச்சுன்னா 

வருஷத்துக்கு ஒரேஒரு மாம்பூதான் காய்க்கும். அது பழுத்தா வர்ற பழம் ஒண்ணுதான் 

அந்த வருஷத்துக்கு.. அதுக்கப்புறம் அடுத்த வருஷம்தான். அதனால அது ரொம்ப சக்தி 

வாய்ந்த பழம் அதை சாப்பிட்டா நூறு வருஷத்துக்கு மேல நோய்நொடி இல்லாம 

வாழலாம்னு அந்த ராஜா என்ன பண்ணினார் அந்த மரத்தை சுத்தி காவல் போட்டு பழம் 

கனிஞ்ச உடனே பறிச்சிட்டு வாங்கன்னு உத்தரவு போட்டுட்டார். மாமரம் இருந்த 

இடத்துக்கு நேரா ஒரு விதவைப் பொண்ணு  குடியிருந்தா. அவ தெனமும் மரத்துக்கு 

பக்கத்துல இருக்கிற கிணத்துல தண்ணி எடுக்க இந்த வழியாத்தான் போகணும். ஒருநாள் 

கனிஞ்ச மாம்பழம் கிணத்துல தானா விழுந்துடுச்சு. அது அந்த பொண்ணு தண்ணி 

எடுக்கறப்ப வாளியில வந்து அவ குடத்துல அவளுக்குத் தெரியாம விழுந்துடுச்சு. பழம் 

காணும்ன உடனே எல்லார் வீட்டுலேயும் சோதனை போடச் சொன்னார் ராஜா. அப்ப 

விதவை வீட்டு குடத்துல அதைப் பார்த்து எடுத்துட்டாங்க. அவ பழத்தைத் திருடிட்டான்னு 

ராஜா மரணதண்டனை குடுத்துட்டாரு.  

கிணத்துக்கு பக்கத்துல இருந்த கற்குவா மரத்துலதான் நம்ம அய்யனார் குடி 

கொண்டிருந்தார். அதனாலதான் அவருக்கு கற்குவேல்னு பேரு. அவருக்குத் தெரியும் இது 

தானா விழுந்ததுன்னு அவரும் ராஜாகிட்ட மனுஷன் உரு எடுத்துச் சொல்லிப் பார்த்தார் 

ஆனா ராஜா கேக்கலை. அவ செத்துட்டா. சும்மா சாகலை இந்த ஊரு மண்மாரி பொழிஞ்சு 

ஒண்ணுக்கும்  வேலைக்காவாம போவட்டும்னு சாபம் விட்டுட்டா. 

அதனாலதான் இந்த ஊரு செம்மண்ணாகி தண்ணீர் தேங்காம பாலைவனமா மாறி 

தேறிக்காடா ஆயிடுச்சு. அறம் தவறிட்டா அய்யனார் விடமாட்டார். அய்யனார்தான் அந்த 

அம்மாவுக்குள்ளே  பூந்து அப்படி ஒரு சாபத்தைக் குடுத்துட்டார்  

பொய் குற்றச்சாட்டுச் சொன்னதுக்கே இந்த ஊரு செம்மண் பாலையா ஆயிடுச்சு. நீ 

என்ன பண்ணின? திசையன்விளையிலே ஏத்திவிடற பதநீரை மொள்ளமா நகர்ற ரயில்ல 

இடைச்சன்விளை ஸ்டேஷன்ல ஏறி பதனியை திருடிட்டு அதுக்குப் பதிலா குளத்துத் 

தண்ணியை கலந்துவிட்டுட்டு  பிச்சிவிளையில இறங்கிப் போயிடுவே. ரொம்பநாளா நீ 

ஏன் இடைச்சிவிளையில ஏறுற அப்படின்னு எனக்குத் தெரியாது. ஒரு நாள் பிச்சிவிளையில 

உன்னை பானையோட பார்த்தேன். ஆனா அதுக்குள்ளே நீ கலந்த குளத்துத் தண்ணியில 

இருந்த மீனு, நண்டு எல்லாம் பதனியில விழுந்து கிடந்ததை சீனி ஆலையில பாத்து 

கண்டுபிடிச்சிட்டாங்க.  

அவனுங்களுக்கு கோவம் வந்து சீனி ஆலையையும் மூடிட்டாங்க அப்புறம் 

ரயிலையும் நிறுத்திட்டாங்க. ஊருக்காரவங்க பொழப்பு உன்னாலதான் போச்சுங்கறது 

எனக்கு மட்டும்தான் தெரியும். கடைசி ரயில் போன அன்னிக்கு ராத்திரி தண்டவாளத்தை 

பேர்த்து திருட வந்துட்டே. எல்லாம் போதை படுத்தின பாடு. உடம்பு வலிக்கும் சூட்டுக்கும் 

பனங்கள்ளு குடிச்சே.. அது வரைக்கும் பிரச்சினை இல்லை. அப்புறம் கடுங்கள்ளு, 

சாராயம், சீமைச்சரக்கு அப்படின்னு போதை பத்தாம காசு பத்தாம திருடற அளவுக்கு 

வந்துட்டே.. அன்னிக்கு பாயின்ட் அடிச்சது நானில்லை தங்கசாமி .. எனக்குள்ள இருந்த 

கற்குவேல் அய்யனாரு.. கிட்டத்தட்ட அஞ்சு வருசமா உன் காலுக்கு வைத்தியம் 

பண்ணினானே அவன்தான் உன் ஃபிரண்டு இசக்கி” பொங்கலை சாப்பிட்டு முடித்து 

ஏப்பம் விட்டார் இசக்கி.  

“என்னிக்காச்சும் அந்தப் பாதையில மறுபடி ரயில் வரும்னு ஏமாந்து போன பல 

பேருல நானும் ஒருத்தன். ஸ்கூல்ல அடிக்கிற பெல் பிள்ளைகளுக்கு வேணும்னா  

பள்ளிக்கோடம் விடற சந்தோசம் சத்தமா கேக்கும். ஆனா எனக்கு ரயில் போற சத்தம்தான் 

கேக்குது.. அந்த தண்டவாளத்துண்டு ஸ்கூல்ல கட்டித் தொங்கவிட்டு இருக்கறதை 

பாக்குறப்ப ஒரு ரயில் தூக்குல தொங்கற மாதிரி இருக்கு தங்கசாமி.. நான்தான் பாயின்ட் 

அடிச்சு உன் காலை ஒடைச்சேன்னு ஒன் பிள்ளைகிட்ட வேணும்னா சொல்லு அப்படியே நீ 

திருடனதையும் சொல்லு.” என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார் 

இசக்கி.  

****************

Exit mobile version