“நாளீக்கு குடியரசு நாளு.. அந்தாளு மேல முட்டையை அடிக்க வேண்டியது உம்பொறுப்பு”
ரிட்டயரான வாத்தியார் சாம்பமூர்த்தி மீது முட்டை அடிக்கச் சொல்லி தன் அக்காள் மகன் ஜகனிடம் ஏரியா ரவுடியான வைரவன் என்னும் நம்சு உத்தரவிடுகிறான்.
பயந்து போன ஜெகன், பள்ளியின் கரஸ்பாண்டண்ட் மற்றும் தலைமை ஆசிரியரான சதாசிவத்திடம் அதைப்பற்றி சொன்ன கையோடு, மாமா வைரவன் கொடுக்கும் 1000 ரூபாய்க்கும் ஆசைப்பட்டு, துணைக்கு தன் நண்பன் ரமேஷையும் முட்டையடிக்கக் கூப்பிட, முதலில் தயங்கிய ரமேஷிடம் 200 ரூபாய் கொடுப்பதாக ஆசை காட்டி அவனையும் சம்மதிக்க வைக்கிறான்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தற்போது :
நெடுஞ்சாலையை விட்டு இடது புறம் திரும்பி வெள்ளியூர் என்கிற பெயர்ப்பலகையைத் தாண்டி கார் விரைந்து கொண்டிருந்தது.
“பாஸ்..இப்ப நாம கொடைக்கானல் இல்லை ஊட்டியில இருக்கோமா…இந்த வெயில் காலத்தில் இப்படி குளிருது” என்றான் வஸந்த்..
“ரெண்டு பக்கமும் அடர்த்தியான மரங்கள்..அதான் சில்லுனு இருக்கு”
“என்ன ஏதுன்னு சொல்லாம மூணு
நாள் ஒரு கேஸ் விஷயமா போறோம்.
துணி மணி எடுத்துட்டு வான்னு சொன்னது இதுக்கா? ஆமா என்ன கேஸ் பாஸ்? பொதுவா நாம சிட்டியை விட்டு போக மாட்டோமே?”
“இது ஒரு கொலை கேஸ்..என்னோட உறவினர் ரொம்ப கேட்டுக்கிட்டதாலே ஒத்துக்க வேண்டியதாக போச்சு…எனக்கும் கவலையா இருக்கு. சென்னையில் நம்முடைய கிளையன்ட்ஸ் தேடுவாங்களேன்னு ன்னு”
“சும்மா உதார் வுடாதீங்க பாஸ்…ஏதோ கிளையன்ட்ஸ் தினமும் வாசல்ல வந்து லைன்ல நிக்கிறா மாதிரி பீலா வுடாதீங்க” என்று வஸந்த் சொல்லி முடிக்கவும் கார் அந்த கிராமத்தில்
அன்னியமாகத் தெரிந்த பெரிய வீட்டின் முன் நின்றது.
“வாங்க,.கணேஷ்..பிரயாணம் சௌகரியமாக இருந்ததா?” என்று வினவினார் கரஸ்பாண்டன்ட் சதாசிவம்.
“என்ன பிரயாணம்? சென்னையில் இருந்து ஒரு 40 கிலோமீட்டர் இருக்கும்”
“சும்மா இருடா வஸந்த்” என்று அதட்டினான் கணேஷ்.
“நீங்கள் தங்குவதற்கு பக்கத்திலேயே ஒரு வீடு இருக்கு…எல்லா வசதியும் இருக்கு…சாப்பாடு நம்ம வீட்டில் இருந்து வந்து விடும்..இப்ப சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு என்னை ஸ்கூலில் வந்து பாருங்கள்” என்றார் சதாசிவம்..
“உங்கள் பெண் என்ன படிக்கிறா?” சின்ன வயசுல பார்த்தது என்றான் வஸந்த்.
“வஸந்த் வாயை மூடிட்டு சும்மா இரு..வந்த வேலையை கவனிப்போம்” என்று அதட்டினான் கணேஷ்.
“ஏண்டா அவருக்கு பெண் இருக்கிறாளா? உனக்கு எப்படி தெரியும்?”
“சும்மா குன்ஸா நூல் விட்டு பார்க்கலாம்ன்னு”
“நீ உருப்பட மாட்டே” என்று கணேஷ் சிரித்தான்.
சாப்பிட்டு சற்று ஓய்வு எடுத்து விட்டு ஸ்கூலுக்கு விரைந்தனர்.
“சொல்லுங்கள்.. இதை காவல் துறையே கவனித்துக் கொள்ளுமே கொலை நடந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது..அதற்குள் என்ன அவசரம்?”
“இன்ஸ்பெக்டர் ராஜராஜன் புலன் விசாரணை செய்கிறார். கொலை செய்யப்பட்ட சாம்ப மூர்த்தியின் உறவினர்கள் திருநெல்வேலியில் இருக்கின்றனர். அவர்களின் மேலிடத்து அழுத்தம் காரணமாக அரசு எங்களை குடாய்ந்து கொண்டு அவசரப் படுத்துகின்றனர்.. அவரின் கொலை மிக கோரமாக பின் மண்டையில் பலத்த அடிபட்டு நடந்துள்ளது…அதான்” என்றார் சதாசிவம்.
” உங்களுக்கு யார் மேல் சந்தேகம்”?
“குறிப்பாக யார் மேலும் இல்லை…ஆனால் தலைமை ஆசிரியர் சுந்தரத்துக்கு அவரைக் கண்டால் பிடிப்பது இல்லை.
ரிபப்ளிக் டே அன்று சாம்பமூர்த்தி சாரின் மீது இரண்டு மாணவர்கள் முட்டை வீசி உள்ளனர்…இதற்கு ஜெகன் என்பவனின் மாமா வைரவன் என்கிற நம்சு தான் காரணம் மேலும் கொலை நடந்ததை வைத்து பார்க்கும் போது ஆண்கள்தான் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.”
“சாம்பமூர்த்தி ஐயா எப்படிப்பட்டவர்”?
“அவர் மேல் எந்த குறையும் சொல்ல முடியாது…மாணவ மாணவிகள் எல்லோரும் அவரை தந்தை மாதிரி உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள்.. அவர் மத்திய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருது பெற்றவர்”
எல்லோருடைய விலாசங்களை பெற்றுக் கொண்டு “இந்த ஸ்கூல் ஆசிரியர்களை விசாரிக்க வேண்டும். தேவையென்றால் மாணவ மாணவிகளையும” என்றான் கணேஷ்.
“நீங்கள் எல்லோரும் இவர்களுக்கு சாம்பமூர்த்தி ஐயா கொலை வழக்கு சம்பந்தமாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார் கரஸ்பாண்டன்ட் .
குறிப்பாக சிலரை மட்டும் வரவழைத்து விசாரிக்க ஆரம்பித்தான் கணேஷ்… முதலில் பிரின்சிபால் சுந்தரத்தை நோக்கி “உங்களுக்கு சாம்பமூர்த்தி சாரை பிடிக்குமா?” என்றான்.
“யாருக்குதான் பிடிக்காது? நல்ல மனிதர்…பொறாமை அற்றவர்”
“பின் ஏன் அவர் மீது முட்டைகளை வீச ஏற்பாடு செய்தீர்கள்?” என்று வினவியபடியே அவரின் கண்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
“சுந்தரத்தின் உடல் நடுங்கியது போல் தெரிந்தது….முட்டையா? நானா? இல்லை நான் ஏற்பாடு செய்யவில்லை”
“மிஸ்டர்.சுந்தரம். இது கொலை வழக்கு..இங்கே பொய்கள் எடுபடாது உண்மையை சொல்லுங்கள்”
“எனக்கு வர வேண்டிய பெயரும் புகழும் அவருக்கு கிடைக்கின்றது. அதுவும் அவர் பணி ஓய்வு பெற்ற பிறகும் என்கிற பொறாமையால் அப்படி செய்தேன்”
“சரி நீங்கள் போகலாம்.. அடுத்து ஒரு ஆசிரியையை வரவழைத்தான்.
“மிஸ்…நீங்கள் யூனிஃபார்ம் ஏன் போட்டுக் கொண்டு வரவில்லை?” என்ற வஸந்தை
“இது அரத பழசு.. வேற ஏதாவது கேளுங்கள் வஸந்த்”” என்றாள்.
“இல்லை ஸ்நேகா ..உங்களை எந்த சீரியலில் பார்த்திருக்கிறேன்? அபியும் நானும் மீனாவா அல்லது”
“ஹலோ…என் பெயர் தெரிய வேண்டும்..அவ்வளவுதானே.. என்னை வகுளாம்பிகா என்று கூப்பிடுவார்கள். வஸந்த் உங்களுக்கு லேட்டஸ்ட் டெக்னிக் ஒன்றும் தெரியவில்லை…வீட்டுக்கு வாருங்கள் கற்று கொடுக்கிறேன்” என்றாள் கண்ணடித்தபடி. “சரி சொல்லுங்கள் கணேஷ்…என்னிடம் எந்த விஷயம் எதிர்பார்க்கிறீர்கள்?”
“பெண்களிடம் அவர் எப்படி நடந்து கொள்வார்?”
“மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்…அவர் மேல் எந்த களங்கமும் கற்பிக்க முடியாது”
“சரி நீங்கள் போகலாம்” என்ற கணேஷை இடைமறித்து “மிஸ்.வகுளா..உங்கள் வீட்டு விலாசம்” என்றான் வஸந்த்.
“எங்கள் பள்ளியின் பதிவேடுகளில் தேடி எடுத்து வாருங்கள்” என்று ஒயிலாக சிரித்தபடி விடை பெற்றாள்.
“அம்மா சுகந்தி இவங்களுக்கு டீ கொடு” என்றார் கரஸ்பாண்டன்ட்.
சற்றே உயரமாகவும், கை கால்கள் உரமேறியும் உள்ள பெண் டீ கொடுக்க “சுகந்தி நீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வாயா?” என்றான் வஸந்த்.
“ஆமாம் சார்..நான் மாவட்ட அளவில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளேன்”
“அப்பால வூட்டாண்ட வா.. நா ஒரு மருந்து தரேன்..அத்தை தடவிக்கினு ஓடினா காத்துல பறக்கற மாதிரி இருக்கும்.. நீ ஒலிம்பிக்ல கோல்ட் மெடல் வாங்கலாம்”
“மெய்யாலுமா?”
“சுகந்தி அவன் சொல்றதை நம்பாதே. அவன் ஒரு பிராடு”
“என்ன பாஸ் நீங்களே என்னை கவுத்தடறீங்க…உங்களுக்கு என் மேல பொறாமை” என்றான் சோகத்துடன்.
மற்ற எல்லோரையும் விசாரித்து விட்டு கடைசியில் சுகந்தியை அழைத்தான்.
“வஸந்த்..நீ சுகந்தியை பக்கத்தில் நன்றாக பார்த்தாயா?”
“எஸ் பாஸ்..நல்ல வளப்பமா வாட்டசாட்டமா, மப்பும் மந்தாரமா இருக்கா”
“உன் புத்தி எங்கே போகும்?” என்று சொல்லி விட்டு சுகந்தியை அருகில் அழைத்து “உன் இடது கையை காட்டு” என்றான்.
கையில் சமீபத்தில் காயம் உண்டாகி கன்றி போய் இருந்தது.
” ஏம்மா..இது எப்படி ஆச்சு?”
“வீட்டுக்கு பக்கத்தில் வேலியோட முள் குத்தி இப்படி ஆச்சு” என்றாள்.
டாக்டர்கிட்டே போய் TT இஞ்செக்சன் போட்டுக்கணும்..இல்லைனா செப்டிக் ஆகி விடும்” என்று சொல்லி கிளம்பினார்கள்.
“இன்னா எங்காளுகிட்ட ராங்கு காட்டறீங்க?”
“நீ யாருடா?” என்றான் வஸந்த்
“நான் ஜெகன்…அந்த பொண்ணு சுகந்தியை நான் டாவடிக்கிறேன். அது கைல ராங் காட்டினீங்க….”
“ஏ கஸ்மாலம்…போலீஸ்கிட்டே ஸொல்லி லாடம் அடிக்க வைப்போம்.. எங்க கைல ராங் காட்டாதே” என்று சொல்லி கிளம்பி போனார்கள்.
“என்ன பாஸ் ஒன்னும் புரியவில்லையே?” என்றான் வஸந்த்.
“கொலை செய்யும் அளவுக்கு யாருக்கும் ஸ்ட்ராங் மோட்டிவ் இல்லை…நாளை அவர் வீட்டுக்கு சென்று பார்க்கலாம்” என்றான் கணேஷ்.
எல்லோரும் வஸந்தை சுற்றி வெள்ளை புடவைகளில் “ல லா லா பாடிக் கொண்டிருக்க வகுளாம்பிகா கலர் கலர்ப் புடைவைகளில் “வாராய் நீ வாராய்” என்று அழைக்க திடீரென்று மழை பொழிய மற்றவர்கள் காணாமல் போக “எழுந்திருடா கும்பகர்ணா” என்ற குரல் கேட்டு எழுந்திருக்க கணேஷ் பக்கெட் தண்ணியுடன் நின்றிருந்தான்.
காலை டிஃபன் முடித்து விட்டு நேராக சாம்பமூர்த்தி வீட்டுக்கு விரைந்தனர்.
“எங்களுக்கு இல்லாத காடா கழனியா? ஊருக்கே வந்து விடுங்கள் என்று நிறைய தடவை சொல்லியாச்சு…வந்தால்தானே.. குழந்தைகள், படிப்புன்னு சொல்லி இங்கேயே இருந்து விட்டார்..இப்ப இப்படி ஆகி போச்சு” என்று புலம்பினார் அவர் மனைவி.
படத்தில் சாம்பமூர்த்தி கம்பீரமாக இருந்தார். அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு படுக்கை அறை முழுவதும் தேடினர்…ஒன்றும் அகப்படவில்லை…போய் வருகிறோம் என்று சொல்லி விட்டு வாசலுக்கு வருகையில் வெயிலில் அது பளபளப்பாக மின்னியது. சட்டென்று அதை எடுத்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டான் கணேஷ்.
பள்ளியில் ஒப்புக்காக மற்ற சிலரையும் விசாரித்து விட்டு சுகந்தியை அழைத்தான். “எதுக்காக அவரை கொலை செய்தாய்?” என்றான்.
“கொலையா? நானா? எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் தைரியமாக..
“இது யாருது? எப்படி உடைந்தது? அவர் வீட்டில் எல்லோரும் தங்க வளையல்களே அணிகின்றனர்.. இது உன்னுடையது தான்…நடந்த போராட்டத்தில் கண்ணாடி வளை உடைந்து உன் கையில் காயம் உண்டாக்கியுள்ளது…என்னால் இதை சுலபமாக நிரூபிக்க முடியும்.. உண்மையை ஒத்துக் கொண்டால் உனக்கு இந்த கொலையிலிருந்து தப்பிக்க உதவி செய்வேன்”
“சொல்கிறேன்…எனக்கு கணித பாடம் சரியாக வராது…அவர் சொல்லிக் கொடுக்கிறேன் என்றதால் அங்கு செல்ல ஆரம்பித்தேன்.. முதலில் சாதரணமாக பழகிய அவர் போகப் போக இரட்டை அர்த்தத்தில் பேச ஆரம்பித்தார்.. நானும் சில காலம் பொறுத்து பார்த்தேன்…ஆனால் அவரின் செயல் எல்லை மீறியது.. ஒரு நாள் நான் எதிர்பார்க்காத போது என்னை அணைத்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்…அவரிடமிருந்து தப்பிக்க என் பலம் முழுவதும் பிரயோகம் செய்து வேகமாக தள்ளி விட்டேன்…அதில் அவர் சுவற்றுடன் மோதி அப்படியே சரிந்து விழுந்தார்… இந்த போராட்டத்தில் என்னுடைய வளையல்கள் உடைந்து போயின…உடைந்து போனதை திரட்டி எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்…ஆனால் ஒன்று மட்டும் உங்கள் கையில் சிக்கி இருக்கிறது” என்றாள் மெல்லியதாக அழுதபடி.
“உனக்கு 15 வயதுதான் ஆகிறது.. உன்னுடைய உறுதி எங்களை வியக்க வைக்கிறது… நீ வாழ வேண்டிய பெண்.. நீ செய்த செயல் சரிதான்…இந்தா உன்னுடைய உடைந்த வளையல்…இதை தூக்கி எறிந்து விட்டு உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொள்…யார் வந்து கேட்டாலும் உண்மையை சொல்லாதே” என்றான் கணேஷ் அவள் தலையில் கை வைத்து ஆசி வழங்கியபடி.
“நாங்கள் செல்கிறோம்..எங்களுக்கு சென்னையில் முக்கியமான வழக்குகள் உள்ளது…இது வரை சேகரித்தவற்றை காவல் ஆய்வாளர் அவர்களிடம் கொடுத்து விட்டு போகிறோம்” என்று சொல்லி கிளம்பினர்.
“ஏன் பாஸ்…இதுவரைக்கும் குற்றவாளிகளை மன்னித்து விட்டது இல்லையே..இப்ப மட்டும்?”
“இவள் சிறு பெண்…இவள் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை.. செய்திருந்தாலும் அதில் தவறு இல்லை .. இவளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் இவளது இளமைக் கால வாழ்க்கையும் படிப்பும் கெடும்” என்றான் கணேஷ் காரில் ஏறியபடியே..
“பாஸ்…அந்த வகுள்ஸ் வீட்டை கண்டு பிடித்து விட்டேன்…போகும் போது பார்த்து விட்டு போகலாம்” என்றான் வஸந்த்..
“யாருடா வகுள்ஸ்?”
“அதான் பாஸ் நம்ம வகுளாம்பிகா”
” இது என்ன புதுசா “கூகுள்” மாதிரி “வகுள்ஸ்?” “அதென்ன “”நம்ம” வகுளாம்பிகா?” எல்லாம் நீயே கட்டிண்டு அழு”
” இப்ப வகுளாம்பிகா வீட்டுக்கு போனால் அவளும் அவள் கணவரும் உன்னை வகுந்து விடுவார்கள்” என்றான் கணேஷ் சிரித்தபடியே.