பட்டாசு-ஶ்ரீதர் கோபால்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 121 பட்டாசு-ஶ்ரீதர் கோபால்

தங்கம் மாமி ஒரு வாரமாக பர பரவென்று வேலைகள் செய்து கொண்டிருந்தார். ஜவுளி எடுத்தாகி விட்டது.  பேரக் குழந்தைகளுக்கு பட்டாசும் வாங்கியாகி விட்டது. இப்போது தீபாவளிக்கு பட்சணங்கள் செய்ய வேண்டும்.  அதுவும் பையன் உன் கையால செய்யும் பட்சணங்களின் ருசியே தனி என்று சொல்லி விட்ட பிறகு செய்யாமல் இருக்க முடியுமா?

பையன், மாட்டுப்பொண்ணு, பேரன் பேத்திகளுடன் இன்னும் இரண்டு நாட்களில் USல் இருந்து வரப்போகிறான். அதுவே மனதுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்து வேலைகளின் பாரம் தெரியாமல் செய்தது.

“குழம்பு வைத்தாகி விட்டது. இன்னும் உலைல பொங்கற அரிசியை வடித்து சோறு செஞ்சு வெச்சுட்டு மாமி வீட்டுக்கு போகணும்.  மாமி தீபாவளி வேலை இருப்பதால் சீக்கிரமாகவே வரச் சொல்லி இருக்காங்க..”சத்யா மனசுக்குள் சொல்லிக் கொண்டே வேலை செய்தாள்.

“அம்மா பட்டாசு வாங்கித் தா’ என்று மகன் கந்தன் கேட்டதும் சீற்றமடைந்தாள் சத்யா.

“சோத்துக்கே இங்கே வழியில்ல உனக்கு பட்டாசு கேக்குதா..பட்டாசாம் பட்டாசு உங்கப்பன் எங்கயாவது குடிச்சிட்டு உருண்டுண்டு இருப்பான். அவனைக் கேளு” சத்யா கோபமாக கத்தினாள்.

“ரோட்டுல எல்லாரும் வெடிக்கறாங்க எனக்கும் வாங்கித் தா” 
மறுபடியும் கேட்டு நச்சரிக்க, வந்த கோபத்தில் “என்கிட்டே காசு இல்லை பட்டாசு எல்லாம் பணக்காரங்க வாங்கறது நாம வாங்கற மாதிரியா விக்குதுன்னு சொல்லிகினே இருக்கேன் நீ கூவிக்கினே இருக்கயேன்னு” பையனின் முதுகில் சுளீரென்று அறைந்தாள்.

பையன் வலி தாங்காமல் துடி துடித்து அலறினான்.  வீட்டு வேலையை முடித்து மாமி வீட்டுக்கு போகத் தயாரானாள். பையன் ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டு “நாம எப்பம்மா பணக்காரங்களா ஆகி பட்டாசு வாங்குவோம்” என்று கேட்டதும் மனம் கசிந்தது.  முருகன் சாமியை வேண்டிக்கோ பட்டாசு கிடைக்கும் என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

மாமியின் வீட்டை பெருக்கித் துடைத்து பாத்திரம் தேய்க்கத் தொடங்கினாள். 

“பொங்கலுக்குத்தான் டிரஸ் எடுப்பது வழக்கம் என்றாலும் அக்கம் பக்கம் குழந்தைகள் போடும் போது நம் குழந்தைகள் ஏங்காதா? பையனுக்கும் பொண்ணுக்கும் எடுக்கணும். குடிகாரனா இருந்தாலும் புருஷனாச்சே. அவனுக்கும் லுங்கி சட்டை எடுக்கணும். எனக்கும் சேலை வாங்கணும்.  மாமி கொடுக்கற போனஸ் இதுக்கே பத்தாது. பலகாரத்துக்கும் பட்டாசுக்கும் எங்கே முடியும்.. ஏழைக்கென்ன தீபாவளி எல்லா நாளும் ஒண்ணுதான். ஆறு வயசு குழந்தைக்கு நம்ம நிலமை என்ன தெரியும். பாவம் அதை அடித்து விட்டோம்” என மனதுக்குள் குமைந்து அழுதாள்.

வேலையெல்லாம் முடித்து மாமியிடம் சொல்லிக் கொண்டு போக வந்தாள்.  “என்ன மாமி தம்பியும் குடும்பமும் எப்ப வராங்க” என்று கேட்டாள். 

“அவனுக்கு லீவ் கிடைக்கல . தீபாவளிக்கு வர முடியல இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரேன்னு சொல்லியிருக்கான். கொஞ்சம் இரு உனக்கு பணம் தரேன்” என்று உள்ளே சென்றார்.

தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழங்களுடன் புடவை, சம்படம் நிறைய பட்சணம் ரெண்டாயிரம் ரூபாய் வைத்து கொடுக்க அவற்றுடன் பட்டாசுப் பெட்டிகளும் இருந்ததைக் கண்டு குமுறி குமுறி அழுதாள் சத்யா..
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Exit mobile version