மழை, மின்னல், மழலை-அனந்த் ரவி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 122 மழை, மின்னல், மழலை-அனந்த் ரவி

எங்கிருந்தோ பெரிய பெரிய மேகங்கள் மெல்ல நகர்ந்து வந்து சூழத் 

தொடங்கியிருந்தன ஒரு பேரரசனின் யானைப் படையை போல. அது 

வரை வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று நின்று போய் சட்டென்று 

ஒரு புழுக்கம் பரவத் தொடங்கியது. காது மடல்களின் பின்னால், பின் 

கழுத்தில் வியர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின இது மழை 

வருவதற்கான அறிகுறிதான், எந்த வினாடியும் வந்து விடும் என்றுதான் 

தோன்றியது நாதனுக்கு. படுத்துக் கொண்டிருந்தவர் மெல்ல எழுந்து 

படுக்கையில் உட்கார்ந்து கொண்டார்.  

கட்டிலுக்கு அருகில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி 

பனிரெண்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்படியே பின்பக்கமாக 

மெல்லத் திரும்பி சுதாவைப் பார்த்தார். இன்னும் குறையாத 

கோபத்தோடு அவள் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தான் அவருக்குத் 

தோன்றியது. “வயசாச்சே தவிர குழந்தை மாதிரிதான்” என்று 

உரிமையாக நினைத்துக் கொண்டார். அந்தக் குழந்தைத் தனமான 

முகத்தில் ஒரு மெல்லியக் கோபத்திரை படர்ந்திருப்பது அந்த 

இருளிலும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.  

அவள் தூக்கத்தைக் கலைக்காமல் மெல்ல எழுந்து பால்கனிக் கதவை 

திறந்துக் கொண்டு வெளியே வந்தார். ஜில்லென்ற காற்று சட்டென 

முகத்தில் அறைந்தது..வந்து விடுவேன், வந்து விடுவேன் என்று மழை 

மிரட்டிக் கொண்டிருந்தது. தெருவில் பெரிதாக நடமாட்டம் இல்லை.  

இரவுக் காட்சி படம் முடிந்து எதையோ சப்தம் போட்டு பேசிக்கொண்டே 

சென்றுக் கொண்டிருந்த ஒன்றிரண்டு பேர்களும் தங்கள் நடையை 

துரிதப் படுத்திக் கொண்டு மெல்ல ஓடத் தொங்கியிருந்தனர். அந்த 

தெருவில் மழை படாமல் ஒதுங்கிக் கொள்ள இடமே இல்லை. 

பேருந்துகள் நிற்கும் இடமோ, மூடப் பட்ட கடைகளோ இல்லை. 

எல்லாமே வீடுகள், வீடுகள் மட்டும்தான். எங்காவது ஒதுங்கிக்கொள்ள 

முடியுமா என்று சிலர் நம்பிக்கையுடன் ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் 

கொண்டே ஓடிக் கொண்டிருந்தார்கள். இரவு வெகு நேரமாகி விட்டதால் 

வாகனப் போக்குவரத்து நின்றுப் போயிருந்தது.  

​2 

குளிர் காற்றின் வேகம் மெல்ல மெல்ல அதிகமாகியது. மேகங்கள் 

அங்கும் இங்குமாக இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தன. 

உடனே மழை ஆரம்பித்துவிடும் என்று நாதன் புரிந்து கொண்டார். 

பால்கனிக் கதவைத் தான் திறந்து வைத்திருந்தால் சுதாவின் மேல் 

மழைத்துளிகள் படுமோ என்று எண்ணியவர் திரும்பி அவளைப் 

பார்த்தார். அதே முகத்துடன் அவள் படுத்துக் கொண்டுதான் இருந்தாள். 

தூங்கி கொண்டிருக்கிறாளா அல்லது தூங்குவது போல் நடிக்கிறாளா 

என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் 

அவளுக்கு நல்ல ஓய்வு தேவை என்பது அவருக்கு உறுதியாகத் 

தோன்றியது. “அவள் தூங்கட்டும் அவளைத் தொந்திரவு செய்யக் 

கூடாது” என்று எண்ணிக் கொண்டார்.  

“நாற்பத்தைந்து நாட்கள் ஆகி விட்டதே என்று மிகவும் நம்பிக்கையோடு 

இருந்தாள். பாவம்!”   

சப்தமெழுப்பாமல் அருகில் சென்று அவளை உற்றுப் பார்த்தார். 

மெல்லிய சப்தத்தோடு உறங்கிக் கொண்டுதான் இருந்தாள் சுதா. ஆறு 

வருடங்களாகவே இப்படித்தான். ஒவ்வொரு மாதமும் நம்புவதும் பிறகு 

இல்லை என்றாகி விடுவதுமாக. பல கோவில்களுக்கு போய் 

வந்தாயிற்று. பல பரிகாரங்கள் செய்து முடித்தாயிற்று. ஆனால் எந்த 

பயனும் இல்லை. அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருக்கிறது 

நாதனிடம். ஆனால் குழந்தை பாக்கியத்தை கொடுக்க மட்டும் 

ஆண்டவனுக்கு இன்னும் மனம் வரவில்லை. இரக்கத்தோடு  சுதாவைப் 

பார்த்து பெரு மூச்சு விட்டுக் கொண்டார் நாதன்.   

“இந்த வாரமே கண்டிப்பாக சென்று டாக்டரைப் பார்த்து விட 

வேண்டியதுதான்” என்று ஒவ்வொரு மாதமும் சுதா வற்புறுத்திக் 

கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் நாதனுக்கு அதில் பெரிய தயக்கம் 

இருந்தது. ஊரில் எல்லோருக்கும் தெரிந்தவர். டாக்டரிடம் சென்றால் 

இது எல்லோராலும் பேசப் பட்டு விடுமோ என்று தள்ளிப் போட்டுக் 

கொண்டே வந்தார். “உனக்குத்தான் குறைபாடு என்று டாக்டர் சொல்லி 

விட்டால்….?” என்று ஒரு பயம் அவரை அரித்துக் கொண்டே இருந்ததும் 

ஒரு ரகசியமான காரணம்தான். அப்படி ஒரு பேச்சு வந்து விட்டால் 

அதற்குப் பிறகு ஊரில் எப்படி கௌரவமாக நடமாடுவது? ஆனால் 

சுதாவிடம் அப்படிப் பட்ட தயக்கம் எதுவும் இல்லை  

​3 

“கண்டிப்பாக நாம் டாக்டரிடம் போயே ஆக வேண்டும். இதுவே ரொம்ப 

லேட்” என்று அவரிடம் பல முறை மன்றாடியிருந்தாள் சுதா.  

மழைக் காற்று சுதந்திரமாக அந்த அறையினுள் நுழைய 

தொடங்கியிருந்தது. அது சற்று வேகமாகவே இருந்ததில் கதவு மெல்ல 

நடுங்கியது. அவள் தூக்கம் கலைந்து விடுமோ என்று பயந்தவர் மெல்ல 

நகர்ந்து சென்று கதவின் குமிழை தரையோடு அமிழ்த்தி விட்டு மீண்டும் 

பால்கனிக்கு வந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரிய பெரிய 

துளிகள் விழத்தொடங்கி இருந்தன. அந்தத் துளிகளையும் நேராக விழ 

விடாமல் காற்று சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது. காற்றோடு 

மெல்ல ஒரு சப்தமும் சேர்ந்து கொண்டது. உய்…உய் என்று. தெருவில் 

அநேகமாக யாருமே இல்லை. சாட்டையால் அடிப்பது போல போக்கிரிக் 

காற்று மழைத்துளிகளை அப்படியும் இப்படியுமாக வீசி அடித்துக் 

கொண்டிருந்தது. காற்றுக்கும் மழைக்குமான அந்த போட்டியை, 

விளையாட்டை ரசித்துப் பார்த்த படியே நின்றிருந்தார் நாதன்.  

இப்படி ஏகாந்தமாக இரவு நேரத்தில் தனியாக நின்று இயற்கையை 

ரசித்து வெகு நாட்களாகி விட்டது என்று அவருக்குத் தோன்றியது. 

இரவு எட்டு வரைக்கும் கம்பெனி வேலைகளை கவனிக்கவே அவருக்கு 

நேரம் சரியாயிருக்கும். அதற்கு பிறகும் மனம் அதிலேயே தான் 

சுழன்றுக் கொண்டிருக்கும் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட துரும்பை 

துழாவும் நாக்கைப் போல. அதைத் தவிர இடைவிடாமல் நாதஸ்வர 

ஒத்து போல குழந்தை இல்லையே என்கிற கவலை வேறு அவரை 

அரித்துக் கொண்டே தான் இருக்கும். “இப்போதெல்லாம் இதற்கு 

நிறைய வைத்திய முறைகள் வந்து விட்டன. அநேகமாக குழந்தை 

இல்லை என்கிற குறை இருப்பவர்களே இனி இருக்க மாட்டார்கள் 

என்பது மாதிரி ஒரு நிலைமை  வரப் போகிறது” என்று பல பேர் 

நாதனிடமும சுதாவிடமும் பல முறை சொல்லியிருக்கிறார்கள். 

அப்படிப் பட்ட செயற்கை முறைகளுக்கு எல்லாம் தேவையே இருக்காது 

என்றே அவர் இத்தனை வருடங்களாகப் பிடிவாதமாக இருந்து விட்டார்.  

காற்று நின்று விட்டிருந்ததால் வெளியே மழை வலுக்கத் 

தொடங்கியிருந்தது. கனத்து, இடைவெளி இல்லாமல் மழைக் கம்பிகள் 

பூமியை வெறியுடன் துளைத்துக் கொண்டிருந்தன. வேறு எதுவுமே 

​4 

காதில் கேட்க முடியாமல் மழையின் சப்தம் எங்கும் நிரவி இருந்தது.  

ஆகாயம் முதல் பூமி வரையிலான வெளி முழுவதும் அந்த சப்தம் 

மட்டுமே நிரம்பி இருந்தது.  

குளிர்ந்த காற்று முகத்தில் பட்டும், மழையின் சப்தம் காதுகளை 

நிரப்பியும் கூட எழுந்திருக்காமல் படுத்திருந்தாள் சுதா. கண்டிப்பாக 

முழித்திருப்பாள் என்று அவர் நினைத்தார். “பிடிவாதக்காரி” என்று 

சலித்துக் கொண்டார். சுதாவின் பிடிவாதமும் கோபமும் கடந்த இரண்டு 

வருடங்களாகவே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் போயின. 

காரணம்…?. தெரிந்ததுதானே!? தனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் 

கிடைக்கவில்லே என்ற கவலை அவள் மனத்தை அரித்துக் கொண்டே 

இருக்கிறது என்று அவருக்குப் புரியாமலா இருக்கிறது? அதனால் 

அவளின் பிடிவாதத்தையும் கோபத்தையும் பல சமயங்களில் அவர் 

பொறுத்துக் கொண்டார்.  

தெருவின் கோடியில் இருந்த பிச்சைக்காரிக்கு ஒரு பத்து ரூபாய் 

போடுவதைக் கூட பிடிவாதமாக எதிர்த்தவள் சுதா. 

காரணம்….அவள்….அந்த பிச்சைக்காரி.. நிறை மாத கர்ப்பிணியாக 

இருந்ததுதான்.   

“போதும் உங்க பெருந்தன்மையை இப்படி எல்லாம் காட்ட வேண்டிய 

அவசியமில்லை. ரெண்டு ருபாய் போட்டால் போதும்” என்று 

உறுமினாள். 

“சுதா! அவ இப்பவோ அப்பவோன்னு இருக்கா. பத்து ரூபா போட்டா 

நாக்குக்குப் பிடிச்சதை வாங்கிச் சாப்பிடுவோ. உபயோகமா இருக்குமே?” 

“தேவையில்லிங்க! இதுங்களை இப்பிடித்தான் வெக்கணும். திமிரப் 

பாருங்க. அப்படியே மகராணி மாதிரி செவுத்துல சாய்ஞ்சி 

உட்கார்ந்திருக்கிறத…” 

“ஏய் சுதா! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அவ நெற மாசமா 

இருக்கா. அதுதான் நிற்க முடியாம உட்கார்ந்திருக்கா” 

“ஆஹாஹா! ரொம்பத்தான் கரிசனம் பொங்கி வழியுதாக்கும்! பேசாம 

​5 

வாங்க”         

கடைசியில் அவள் சொல் படிதான் நடக்க வேண்டியிருந்தது. தனக்கு 

அமையாதது அந்த பிச்சைக்காரிக்கு அமைந்து விட்டதே என்கிற 

பொறாமையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் என்று நாதன் 

எண்ணிக்கொண்டார்.  

பெருமூச்சுடன் சுதாவைப் பார்த்தார். மழையின் உக்கிரம் நிமிடத்திற்கு 

நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. சரி படுக்கலாம் என்று அவர் 

திரும்பும் பொழுது திடீரென்று பல குரல்கள் ஓங்கி ஒலிக்கத் 

தொடங்கின. யாரோ ஒருவர்…இல்லை இல்லை ஒருத்தி அலறுவது 

தெளிவாகக் கேட்டது. பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டு கீழேப் 

பார்த்தார். கார்பரேஷனின் மஞ்சள் விளக்கு ஒளியில் தெருவில் 

நாலைந்து பேர் மிகவும் பதட்டத்துடன் வந்துக் கொண்டிருந்தது 

தெரிந்தது. மழைக் கம்பிகளுக்கு நடுவே உற்றுப் பார்த்தார் நாதன். அதே 

அந்தப் பிசைக்காரிதான்….வலி எடுத்து விட்டது போலிருக்கிறது. மிகவும் 

கஷ்டப் பட்டு அவளை நடத்தின படி போய்க் கொண்டிருந்தனர் சிலர். 

அடிக்கடி அலறிக் கொண்டிருந்தாள் அவள். நடக்கவே முடியாமல் 

அவள் தடுமாறுவது தெளிவாகத் தெரிந்தது. இரண்டு நிமிடங்களில் 

மிகவும் முடியாமல் போய் விட்டது போல, தெருவிலேயே உட்கார்ந்து 

விட்டாள் அந்த கர்ப்பிணி.  

நாதனுக்குப் படபடப்பாக வந்தது. “அடடே என்ன இது?” என்று 

வருந்தினார். அவளுக்கு எதாவது உதவி செய்ய யாராவது வருவார்களா 

என்று துடிப்புடன் சுற்றிலும் பார்த்தார். மழை அடித்து பெய்து 

கொண்டிருந்தது. தெருவில் அந்த நான்கு பேரைத் தவிர வேறு யாருமே 

தென் படவில்லை. நேரமாக நேரமாக அந்த பிச்சைக்காரியின் அலறல் 

அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவளால் நடக்க முடியவில்லை 

என்பது தெளிவாகப் புரிந்தது நாதனுக்கு. “அவ்வளவு பெரிய வயிற்றை 

வைத்துக் கொண்டு எப்படி நடக்க முடியும்?” என்று புரிந்துக் 

கொண்டார். என்னவாவது செய்ய வேண்டும் என்று அவருக்கு 

பரபரப்பாக இருந்ததே தவிர என்ன செய்ய வேண்டும் என்று 

தெளிவாகத் தெரியவில்லை. கைகளைப் பிசைந்துக் கொண்டார். 

எப்படியாவது அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் 

தீவிரமாக இருந்தது. “அடடே மறந்து போனோமே? டிரைவரை எழுப்பி 

​6 

அனுப்பலாமே” என்று தோன்றி மகிழ்வுடன் அவர் திரும்பின அதே 

நிமிடம் அவர் தோளின் மேல் சுதாவின் கை விழுந்தது. அவரைத் 

தள்ளிக் கொண்டு தெருவைப் பார்த்தாள் சுதா. ஒரு மெல்லிய கேலிப் 

புன்னகை அவள் முகத்தில் தவழ்ந்தது.  

“ஓஹோஹோ! இதுதான் அய்யாவுக்கு தூக்கமே வரல்லியோ?” என்று 

கோபமும் கேலியுமாகக் கேட்டாள்.  

“சுதா! என்ன பேச்சு இது? அவ தடுமாறி கிட்டு இருக்கா…” 

“இருக்கட்டுமே…உங்களுக்கு என்ன வந்தது?! அவ என்ன உங்களுக்கு 

சொந்தமா பந்தமா?” 

அவளின் பேச்சு நாதனின் ஆத்திரத்தை தூண்டி விட்டது. “ச்சே! நீயும் 

மனுஷியா? ஒருத்தி பிரசவ வலியில துடிக்கிறா…பாத்துகிட்டு பேசாம 

இருக்க சொல்றியே!” என்று பொங்கினார். பதில் சொல்லாமல் அவரை 

கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுதா. அந்த பார்வையில் ஒரு 

குற்றசாட்டு இருப்பது போலப் பட்டது நாதனுக்கு. “ச்சே!” என்று 

வெறுப்பைக் கொட்டியவர் படாரென்று பால்கனிக் கதவை அறைந்துச் 

சாத்தினார். அதற்கு சுதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. எரிச்சலுடன் 

சென்று படுக்கையில் தொப்பென்று விழுந்தார் நாதன்.  

மழை அடர்த்தியாக அதே சமயம் அமைதியாக விழுந்து 

கொண்டிருந்தது. இடையிடையே அந்த கும்பலின் ஓலமும் 

கோரிக்கைகளும். புரண்டு புரண்டு பல முறை படுத்தவர் தூக்கம் 

வராமல் தடுமாறினார். அவருடைய கையாலாகாத்தனம் அவரை வாட்டி 

எடுத்தது. எதுவும் செய்யாமல் படுத்து விட்டோமே என்று அவருக்கு 

தன் மேலேயே கோபமாக வந்தது. வெகு நேரம் தன் மனசாட்சியோடு 

மல்லுக் கட்டியவர் பின்பு ஒரு தீர்மானத்துடன் சடாரென்று எழுந்த 

பொழுதுதான் கவனித்தார். அந்த ஓலம் அடங்கி இருந்தது. 

“என்னவாயிற்றோ தெரியவில்லையே” என்றவருக்கு விபரீதமான 

எண்ணங்கள் வந்தன. சட்டென்று எழுந்தார். அருகில் சுதா இல்லை. 

குழப்பமாக இருந்தது. அறைக்கு வெளியே வந்து படிகளில் வேகமாகக் 

கீழே இறங்கினார்  

​7 

கீழே சுதா நின்றிருந்தாள். வாயிற் கதவு திறந்திருந்தது. எட்டி வெளியே 

பார்த்தார் நாதன். அங்கே டிரைவரும் இல்லை. காரும் இல்லை. 

தெருவைப் பார்த்தார். மழை இன்னும் கொட்டிக் கொண்டுதான் 

இருந்ததது. ஆனால் அந்த பிச்சைக்காரியோ அந்த கும்பலோ அங்கு 

இல்லை. அவருக்கு மெல்லப் புரிந்தது. சுதாவை வாஞ்சையோடும் ஒரு 

மெல்லிய மகிழ்ச்சியோடும் திரும்பிப் பார்த்தார்.  

அதே கோபமான முகத்தோடுதான் சுதா நின்றுக் கொண்டிருந்தாள். 

அவள் கண்கள் இன்னும் உக்கிரத்தைதான் கொட்டிக் கொண்டிருந்தன. 

ஆனால் நாதனுக்கு அது வெப்பமாகத் தெரியவில்லை. குளிர் காற்றாகத் 

தெரிந்தது. சட்டென்று முன்னேறி சுதாவை ஆசையோடு அணைத்துக் 

கொண்டார்.  

“நாளை காலையில் கண்டிப்பாக டாக்டரிடம் சென்று விட வேண்டும்” 

என்கிற ஒரு புதிய உறுதி அவர் மனதில் அந்த வினாடியில் ஏற்பட்டது.  

********************************** 

Exit mobile version