தங்க மீன் -சக்தி ராணி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 124 தங்க மீன் -சக்தி ராணி

வண்ண வண்ண மீன்கள் கண்ணாடித் தொட்டியில் நீந்திக் கொண்டிருந்தன.அதையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அகல்யா…

அகல்யா குக்கர் விசில் அடிச்சுட்டே இருக்கு.நீ எதும் கவனிக்கலையா…

அகல்யா….அகல்யா…

ம்ம் ஏன் கத்துறீங்க…கத்துறேனா…எத்தனை முறை கூப்பிடுறேன்.எதும் கேட்காதது போல இருக்க.

ஓஓ கூப்டீங்களா…குக்கர் விசில்…

அய்யோ…மறந்துட்டேனே…வேகமாக ஓடினாள்.

என்ன ஆச்சு இவளுக்கு ஒரு வாரமாக சரியில்லையே…

ஆஃப் பண்ணிட்டியா…இதோ என் சட்டையை அயர்ன் பண்ணி வை.

அதாவது ஒழுங்கா பண்ணுவியா…

பார்த்தவாறே இருந்தாள்.

என்ன பண்ண போறீயோ தெரியலை…

வேகமாக சட்டையை அயர்ன் பண்ண ஆரம்பித்தாள்.

இன்னிக்கு டிபன் என்ன பண்ணிருக்க…

இட்லி…தக்காளி சட்னி…

ம்ம் ம்ம்…

எடுத்து வை.சாப்பிட்டுட்டு ஆபிஸ் போகனும்.

எடுத்து வைத்து அருகில் அமர்ந்தாள்.

அவள் முகம் கூட காணாமல் வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தான் கண்ணன்.

என்னங்க…

எதா இருந்தாலும் வெளிய கிளம்பும் போது சொல்லாத…அப்புறம் வந்து பொறுமையா கேட்குறேன்.

அமைதியானாள்…

பெரிய வீடு…எல்லா வசதிகளும் நிறைந்த வீடு…ஆனா‌ மனசு மட்டும் எப்போதும் ஏதோ சொல்லிட்டே இருக்கு.

மறுபடியும் மீன் தொட்டி அருகில் அமர்ந்து கொண்டாள்.

அங்கிருந்த தங்கமீன் ஒன்று தன் வாயை அசைப்பது அகல்யாவிற்கு பேசுவது போல் இருந்தது.

நீயாவது நான் சொல்றதை கேட்பியா…

எனக்கு இந்த வீட்டுக்குள்ளையே வாழ்ற வாழ்க்கை பிடிக்கலை.சந்தோஷமா வெளியில் போகனும்.நிறையா விஷயங்கள் கத்துக்கணும்.இப்படி ஏகப்பட்ட ஆசைகள் மனசு முழுக்க நிறைஞ்சி கிடக்கு.

ஆனா என் வாழ்க்கையை பார்த்தியா…சமைக்கனும்…சாப்பிடனும்…வீட்டு வேலை பார்க்கனும்.இப்படி ஒத்த சுவருக்குள்ள என் வாழ்க்கை முடிஞ்சிடும் போலயே…என்றே வருத்தப்பட்டாள்.

தங்கமீனும ஆமா…ஆமானு சொல்லுச்சு…

நீயும் இப்படி சொல்றீயே…

என்னோட வாழ்க்கை எப்போது எனக்கு பிடிச்ச மாதிரி மாறும்…என்றே கண்ணீர் விட்டாள்.

தங்க மீன் நிஜமாக பேசத்தொடங்கியது.இங்க பாரு அகல்யா…எல்லார் சொல்றதும் கேட்டா…இப்படித்தான் இருப்ப நீ…

உன் சிந்தனை என்ன சொல்லுதோ…அது முதல்ல கேளு…

சொல்றது நல்லாத்தான் இருக்கு.ஆனா இந்த கண்ணன் பார்த்தா எனக்கு பயம் வந்துடுது.

அதெல்லாம் பயப்படாத…நான் இருக்கேன் உனக்கு…நீ நினைக்குறத நாளையிலிருந்து செய்.

புன்னகைத்தே சரியென்றாள்.

காலிங்பெல் அடித்தது.

என்னங்க அதுக்குள்ள வந்துட்டீங்க…

திரும்புன இடமெல்லாம் பிரச்சனைனா எங்க போறது நான்…போகும் போதே கார் டயர் பஞ்சர்.அப்புறம் வீட்டுக்குத்தான வரனும் டிரைவர் சர் செய்து கொண்டு வரும் வரை…

டீ போட்டு கொண்டு வாரேன்.

வேண்டாம்…வேண்டாம்…வேகமாக லேப்டாப் எடுத்து மெயில் செக் பண்ண ஆரம்பித்தான்.

பின்னிருந்தே…தங்க மீன்…உன் எண்ணத்தை சொல் சொல் என்றது.

என்னங்க…பிஸியா இருக்கீங்களா…

ஆமா… இருந்தாலும் சொல்லு.காலையில இருந்தே ஏதோ மென்று முழுங்குற.

அது வந்து….நான் சொந்தமா பிசினஸ் பண்ண போறேன்க.

என்னது…நீ சொந்தமா பிசினஸ் பண்ண போறீயா…எதும் கனவு கண்டு வந்தியா…

இல்லங்க…நிஜமாவே…காலேஜ் படிக்கும் போது இருந்தே ஆசை.

சரி என்ன பிசினஸ் ஆரம்பிக்க போறீங்க… பியூட்டி பார்லர் வைக்கலாம்னு இருக்கேன்க…

அங்க போய் செலவு பண்ணிட்டு வர அகல்யாவைத்தான் எனக்குத்தெரியும்.இது என்ன புதுசா இருக்கு…

அதெல்லாம் இல்லங்க.எனக்குகொஞ்சம் மேக் அப் சென்ஸ் இருக்கு….

ஓ…மேக் அப் சென்ஸ் கே பார்லர்…அப்போ நல்லா தெரிஞ்சா.வேற லெவல் போயிடுவீங்க.அப்படியா…

அப்படி இல்லங்க…நான் நல்லா கத்துக்கிட்டு பண்ணுவேன்…ஃபோன் கால் வந்தது…

ஹலோ…சொல்லுங்க ராஜ் வண்டி சரியாயிடுச்சா…இதோ வாரேன் கீழே என்று கிளம்பினான்.

என்னங்க நான் சொன்னது…

அப்புறம் வந்து பேசுறேன்மா…

முகம் வாடிய மலராய் மறுபடியும் வந்து மீனிடம் பேசினாள்.

இத்தனை நாள் மனசுக்குள்ள வைச்சிருந்த.இப்போ பாரு…சொல்லிட்ட.இதுவே நல்ல நேரம் தான் என்றது.

ஆமா…தங்கம்..நீ சொல்றதும் சரி தான்.உங்கிட்ட பேச ஆரம்பிச்சதுல இருந்து ஹேப்பியா இருக்கு மனசு.

எல்லாம் சரியாயிடும்…நீ கவலைப்படாம வேலையைப் பாரு என்றது.

சரி சரி உன் வேலையில எனக்கு சாப்பாடு போடாம போகாத…

இன்னிக்கு நிறையா போடுறேன் நல்லா சாப்பிடு என்றது.

வேலையைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே…அகல்யா …அகல்யா…என்றே அழைப்பு.

யாருனு பார்த்தா…தங்க மீன் தான்.

எனக்கு தண்ணீல சரியா காத்து கிடைக்கல கொஞ்சம் மோட்டர் போட்டுவிடு என்றது.

என்னடா…இதும் நமல வேலை வாங்கும் போல என்றே சுவிட்ச் ஆன் செய்தாள்.

தேங்க்ஸ்…இன்னிக்கு கண்ணன் கிட்ட சரியா சொல்லிடு.

ம்ம்…நானும் அதை தான் நினைக்குறேன்.

மாலை நேரம்…கண்ணனும் வீட்டிற்கு வந்து ரிலாக்ஸ் ஆனான்.காலையில் என்னமோ சொன்னாயே…திரும்ப சொல்லு என்று அவனே ஆரம்பித்தான்.

அப்படா…காதுல தேன் வந்து பாயுது போலனு அவளும் வேகவேகமாக சொல்வது துவங்கினாள்.

டிவி பார்த்துக் கொண்டே தலயசைத்து

ம்ம்…என்றே கூறினான்.

என்னோட ஆசை இது தான்.நீங்க ஓகே சொன்னா போதும் என்றாள்.

சற்றே ஏற்றப்பார்வையில் ஓகே னா…பணத்துக்கு…

அது என்னோட நகை இருக்குல…

அதான….நல்லாருக்கே… அப்புறம் வெளில போனா…பண்டிகை வந்தா எதைப்போடுவ…

அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்ங்க…சரிப்படாது…எதும் சரிப்படாது என்றே எழுந்து அறைக்குள் சென்றான்.

என்ன சொன்னாலும் கேட்கலைனா…என்றே கத்திவிட்டு அமர்ந்தாள்.

வேலைக்கு போற முன்னாடியே…இப்படி…போயிட்டா…என்றே பதிலளித்தான்.

உங்கள வைச்சிக்கிட்டு என் வாழ்க்கை நல்லாயிருந்தாப்புல தான்.

கோபத்தை விட்டுட்டு கொஞ்சம் சிந்தனை செய் என்றது தங்கமீன்.

சற்றே பொறுமையாக கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

வேகமாக அறைக்கதவை சாத்திய கண்ணன்…இன்னிக்கு நைட் என்ன டின்னர் என்றான்.

ஏதும் பதில் சொல்லாமல் இருந்தாள்.

உன்னைத்தான்…

தலையைக்கூட அசைக்கவில்லை.

என்ன நீ இப்படி பண்ற…

உங்களுக்கு மேல பண்ணல…

சரி… நான் யோசித்து சொல்றேன்…

வீடு முழுக்க மௌனம் மட்டுமே… இரண்டு நாட்களாய்…

நீ சொன்னதை யோசிச்சேன்.ஆனா வீட்டையும் பார்த்து…வெளி வேலையும் பார்த்து உன்னால சமாளிக்க முடியுமா…

எதையும் யோசிக்காம நான் முடிவு பண்ணல… எல்லாம் யோசிச்சேன்…

தங்க மீன் பின்னிருந்தே தொட்டிக்குள் துள்ளிக்குதித்தது…

சரி வா…நகையை வைத்து பணத்தை ரெடி பண்ணி தாரேன்.உனக்கு பிடித்தமான வேலையைச்செய் என்றான்.

முகம் முழுதும் புன்னகையால்… தேங்க்ஸ்… தேங்க்ஸ் என்றே தங்கமீன்களைப்போல் துள்ளிக்குதித்தாள்.

மீன் தொட்டி அருகே சென்று…முத்தமிட்டாள்…மீனும் வாய் அசைத்து வாழ்த்து சொன்னது…

நகையை வைத்து பணத்தை வாங்கி அளித்தான்…அகல்யா எதிர்பார்த்தது போல இடமும் கிடைத்தது.

கடையின் ஆரம்பநாள்… உறவினர்கள்… நண்பர்கள் என அனைவரும் வந்தனர்.

அகல்யா நுழையும் முன்…பூக்கள் தூவி வரவேற்றனர் தோழிகள்…

கண்ணாடிப்புட்டியில்…தங்க மீனை எடுத்து நடந்து வந்தாள்.

கண் படாமல் இருக்க வண்ணமீனா…

இல்ல…இல்ல…என் கண்ணே இது தான்…என் கண்ணைத் திறந்ததும் இதுதான் என்றே உள்ளே வைத்தாள்.

Exit mobile version