ஹேய்… (எ) செல்லம்மாள்….இது வார்த்தை அல்ல உணர்வு –வள்ளிகாந்தன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 130 ஹேய்… (எ) செல்லம்மாள் இது வார்த்தை அல்ல உணர்வு வள்ளிகாந்தன்

(A+B)2= A2+b2+2AB…என செல்லம்மா Black Board யில் Class எடுத்துக் கொண்டிருக்கிறாள்.கறுத்த, கட்டையான, கலையான உருவம் செல்லாம்மாவுக்கு. கணீரென்ற குரல் ஆனால் அவள் பேசுவது Class நடத்தும் சமயத்தில் மட்டுமே.Class எடுத்துக் கொண்டிருக்கும் செல்லம்மாவை  “ஹேய் …” என யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தால் பியூன்.. என்னது பியூனா என்னைப் பார்த்து “ஹேய்..” என கூப்பிடுகிறான் எவ்வளவு கொழுப்பு அவனுக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அதே “ஹேய்” என்ற குரல் ஆனால் அந்த குரல் ஏற்கனவே பரிட்சயமான குரல் ஆமாம் அது அவளுடைய கணவன் விருமாண்டியினுடையது. “ஹேய்” என்ற அதட்டலான குரல் மீண்டும் ஒலிக்க… கண்கள் விழித்து பார்க்க, Class Room, Black Board, பியூன் இதெல்லாம் கனவென்று அவளுக்கு அப்போது தான் தெரிந்தது.

“அலாரம் எவ்வளவு நேரமா அடிக்குது… எழுந்திரு…” என அவளை விருமாண்டி காலால் தட்ட, செல்லம்மா தன்னுடைய பழைய 1100 மொபைலை எடுத்து அலாரத்தை Off பண்ணிவிட்டு. ச்சே..எப்பதான் என் கனவெல்லாம் நனவாக போகுதோ? விடியற்காலைல கனவு கண்டா பலிக்கும்னு சொல்றாங்க… பார்ப்போம்…என முனகிக் கொண்டே எழுந்தவள் பல் விலக்கி, வாசல் தெளித்து, டீ போட்டு பிளாக்ஸில் ஊற்றி வைத்து விட்டு வேக, வேகமாக சென்று தன்னுடைய TRB(ஆசிரியர் பணியாளர் தேர்வு) புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

செல்லம்மா B.sc, B.ed First Class கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகிறது. தன்னுடைய ஆசை , கனவு எல்லாத்தையும் மூட்டைக் கட்டி விட்டு கணவன், குழந்தைகள் என ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு பெண், ஒரு பையன், மூத்தவ அறம்தாங்கி, ரெண்டாவது கரிகாலன்.என்னதான் குடும்பம், குட்டிங்கனு செல்லா இருந்தாலும் அவள் தன்னுடைய சுயத்தை இழந்து, வாழ்வதாகவே அவளுக்கு தோன்றியது.

விருமாண்டி ரைஸ் மில் வைத்து ஊரில் செல்வாக்காக இருந்தான் வீட்டிலும் செல்வத்துக்கு குறையொன்றுமில்லை. ஆனால் அவனை பொறுத்தவரை பெண் என்பவள் வீட்டு வேலைகளை செய்துக் கொண்டு, புள்ளக் குட்டிகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். செல்லம்மாவின் அப்பா கன்னையா 10 பொருத்தம் இருக்கிறதென்று “எண்ண”ப் பொருத்தம் பாராமல்  இந்த விருமாண்டியை கட்டி வைத்தார்.

மீண்டும் “ஹேய்” என்றக் குரல் கேட்க, படித்துக் கொண்டிருந்த செல்லம்மா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேகமாக எழந்து சமையலறைக்கு சென்று டீ ஊற்றிக் கொண்டு வர , ஹேய் எனக் கூப்பிட்டபடியே விருமாண்டி அங்கு வருகிறான் புத்தகத்தை பார்த்தவன் , அவளை பார்த்து முறைத்தபடி டீ கிளாஸை வாங்கிக் கொண்டு வெளியேறுகிறான். நேரம் அப்போது 6 .

செல்லம்மா புத்தகத்தை எடுத்து அலமாறியில் வைத்து விட்டு சமையல் வேலையை செய்ய ஆரம்பித்தாள். அடுத்தடுத்து கரிகாலன், அறந்தாங்கி என ஒவ்வொருவராக டீ குடித்து குளிக்க செல்ல, அதற்குள் செல்லம்மா காலை, மதியம் இருவேலைக்கும் உணவு சமைத்து டிபன் பாக்ஸில் போட்டு Lunch Bagயோடு ஹாலுக்கு வந்தாள். கரிகாலனும், அறந்தாங்கியும் காலை டிபனை அவசர, அவசரமாக சாப்பிட்டுவிட்டு கிளம்ப, அதற்குள் விருமாண்டியும் குளித்து சாப்பிட வருகிறான். அவனிடம், செல்லா “ஏங்க..புள்ளைங்கள School ல விட்டுட்டு வந்து சாப்பிடுங்களேன்..டைம் ஆச்சு…” அவளைப் பார்த்து முறைத்தவன், “ஹேய்…இங்கப்  பாருடி.. இந்த எடுப்பு வேலைலாம் நான் செய்யறதுக்கு அப்புறம் நீ எதுக்கு? இதோ புள்ளைங்க School க்கு கெளம்பியாச்சுனா நாள் முழுக்க என்னத்த வெட்டி முறிக்கப் போற…போ..அந்த TvsXL யை எடுத்துட்டு போய் விட்டுட்டு வா..” என சொல்லி  டிரஸை மாட்டிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.அவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு செல்லா பிள்ளைகளை வண்டியில் ஏற்றி பள்ளிக் கூடத்துக்கு போகும் போது மணி 8.50.அங்கிருந்து வீட்டுக்கு வந்து பார்க்கிறாள். சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்காமல் அதிலேயே கைக் கழுவி, போட்டது, போட்டபடியே விருமாண்டி கிளம்பி இருந்தான்.

அதை எல்லாம் சுத்தம் செய்து, வீடு பெருக்கி, துணிகள் எல்லாம் துவைத்து, பூஜை செய்து செல்லம்மா சாப்பிடப் போகும் போது மணி 11.30 அதற்குள் வயிறு திகு, திகு வென்று எரிய ஆரம்பித்தது ..

“இதப் பாரும்மா நேரத்தோட சாப்பிடற வழியை பாரு.. இப்பவே அல்சர் அதிகமா இருக்கு…இப்படியே விட்டா கேன்சர் தான் வரும் பாத்துக்கோ” டாக்டர் மணிமேகலை சொன்னது , செல்லாம்மாவுக்கு ஞாபகம் வந்தது. அவர்களுக்கு என்ன Easy ஆ சொல்லிடுவாங்க.. இங்க இருந்து பாத்தாதானே தெரியும். அவள் மனதுக்குள் பேசிக்கொண்டே காலை டிபன் சாப்பிட உட்கார அவள் மொபைல் மீண்டும் அலற ஆரம்பித்தது.

“ஹேய்..நம்ப சதாசிவம் மாமா மில்லுக்கு வந்திருக்காரு…மதியம் சிக்கன் எடுத்து சமைச்சு வை..வீட்டுக்கு கூப்பிட்டு வரேன்.நல்ல தொடைக்கறியா பாத்து வாங்கு..” விருமாண்டி Order போட்டு போனை வைக்க. மணி 12 ,

1.30 மணிக்கெல்லாம் அந்த மனுஷன் வந்துடுவாரே என அரக்க, பறக்க சாப்பிட்டு விட்டு செல்லம்மாள்  கடைக்கு போய் கறி வாங்கி சமைத்து கொண்டிருக்கிறாள். அதற்குள் விருமாண்டியும் , சதாசிவம் மாமாவும் Lunchக்கு வந்து விட்டனர்.

“ஹேய்…அங்க என்னடி பண்ற, மாமா வந்திருக்காரு..குடிக்க தண்ணி கொண்டு வா” விருமாண்டி சொல்லி முடிப்பதற்குள் செல்லா சொம்பு நிறைய தண்ணியோடு சதாசிவம் மாமாவிற்கு கொடுத்து, “வாங்க…வீட்ல எல்லாம் சவுக்கியமா?”எனக் கேட்க, மாமாவும் தண்ணிக் குடித்துக்கொண்டே நலம் என்பது போல் தலையாட்டினார்.

“ஹேய்…இலை போடு சாப்பாடு ரெடியா?” , அவள் இன்னும் ஒரு10 நிமிஷம் ஆகும். “என்னத் தாண்டி பண்ணுவ.. நான் போன் பண்ணி 2 மணிநேரம் ஆச்சு… என்னத்த வெட்டி முறிக்கறையோ தெரியல..மாமா கை , கால் அலம்பிட்டு வா..” என சொல்ல மாமாவும் எழுந்து பாத்ரூமுக்குள் செல்ல, செல்லா அடுப்பங்கரைக்கு ஓடுகிறாள். கறி நன்றாக வெந்திருந்தது.

அவற்றையெல்லாம் ஹாலில் கொண்டு வந்து வைத்து விட்டு, தோட்டத்துக்கு சென்று  வாழை இலை அறுத்து, இருவருக்கும் சுட, சுட சாப்பாடு பரிமாறும் போது மதியம் 2 மணி. அவர்கள் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, பாத்திரம் எல்லாம் கழுவி, அதிலும் இந்த கறி செய்த கடாயையும், குக்கரையும் கழுவுற மாதிரி ஒரு கொடுமை வேற எதுவும் இல்லை. தேச்சு, தேச்சு , கை தேஞ்சது தான் மிச்சம்.  இவள் சாப்பிட்டு முடித்து அக்கடா என படுக்க போனா, மணி 3.30. அதற்குள் விருமாண்டியும், மாமாவும் ஒரு தூக்கத்தை போட்டு முடித்திருந்திருந்தார்கள்.

“ஹேய்..கொஞ்சம் காபித் தண்ணி போட்டுட்டு வா..மாமா  4 மணி பஸ்ஸீக்கு போகணுங்கறாரு.” படுக்க போன செல்லாவுக்கு செமக் கடுப்பாக இருந்தது.மீண்டும் அடுப்பங்கரை, காபித் தண்ணி , மாமாவையும், அவரையும் வழியனுப்பிய பிறகு மணி 4.10 , அய்யய்யோ 4.30 க்கு School விட்டுவாங்களே என XLயை ஓட்டு, ஓட்டு என்று ஓட்டி பள்ளிக்கூடம் போனா, அவளை பார்த்து கரிகாலன். “ஏன்மா , எவ்ளோ நேரம் Wait பண்றது..ஒரு நாளாச்சும் Coorect Time க்கு வர்றீயா..அப்படி என்னதான்மா பண்ணுவ?” அப்பாவுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு, ஏன் அந்த சைக்கிள் 11 ஆயிரம் கொடுத்து நின்னது, நிக்க வாங்கனான், வாங்கி, ரெண்டு நாள் ஓட்னதோட சரி.. அப்புறம் அத எடுக்கறதே இல்ல. அந்த சைக்கிள்ல வந்து போனா என்ன? சைக்கிள்ல வந்து போனா Tired ஆ இருக்காம் நொண்டி சாக்கு வேற,

மனதுக்குள் பொருமிக் கொண்டே இரண்டு புள்ளைகளையும் வீட்டுக்கு கூட்டி வந்து, அவர்களுக்கு Tea, Snacks என கொடுத்து அவர்களை Home Work செய்ய வைத்து,  புரியாததை சொல்லிக் கொடுத்து, இதற்கு நடுவுல கிரைண்டர்ல மாவாட்டி அப்பாடா என உட்கார போனா மணி 7. எப்பா ஒரு Half an Hour Gap இருக்கு என News Paper யை எடுத்து படிக்க, அதில் ஆசிரியர் பணிகளுக்கான TRB நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 30. என இருக்கிறது.  அவள் அந்த செய்தியையே உத்து, உத்து பார்க்கிறாள்.

“இந்த தரம் எப்படியாவது வேலை வாங்கிடணும்…போன தரம் 2 Mark ல Miss ஆயிடுச்சு… பார்ப்போம் …”

என அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே “ஹேய்.. இங்க வாடி” என்று தெருவிலிருந்து விருமாண்டியின்  குரல்,  கையில் வைத்திருந்த பேப்பரை போட்டுவிட்டு செல்லா ஓட, 25 கிலோ அரிசி மூட்டையை பைக்கிலிருந்து கீழே இறக்கி விருமாண்டி பைக்கை Stand போடுகிறான்,

செல்லா அந்த அரிசி மூட்டையை அசக்கி, அசக்கி, வாசலில் தூக்கி வைத்து அதை அப்படியே இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல, விருமாண்டி அவளைப் பார்த்தபடி , தாண்டி செல்கின்றான்.  (தன் மனைவி அந்த அரிசி மூட்டையை எப்படி தூக்குவாள் என்ற பதைபதைப்புக் கூட இல்லாமல்). 

அதன் பிறகு, மதியம் வைத்திருந்த சிக்கன் குழம்புடன், கொஞ்சம் சட்னி அரைத்து , தோசையை ஊற்றி அனைவரும் சாப்பிட்டு முடித்து, மீண்டும் சாப்பிட்ட  பாத்திரங்களை எல்லாம் கழுவி, மறுநாள் குருமாவிற்கு பட்டாணி  ஊற வைத்து அவள் வந்து விருமாண்டி அருகில் படுக்க இரவு மணி 11. விருமாண்டி கால் மேல் கால் போட்டுக்கொண்டு  மொபைலில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தான்.  செல்லா, அவனையும், அந்த மொபைலையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் எவ்வித Reaction யும் கொடுக்காமல் ரம்மி விளையாடுவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். அவள் தயங்கியபடி,

“ஏங்க, TRB Exam Announce பண்ணியிருக்காங்க Apply பண்ணனும்..பண்ணட்டுமா?” எனக் கேட்க,

அவளை ஏற, இறங்க பார்த்துவிட்டு,

“ஏற்கனவே நீ எழுதி கிழிச்சது பத்தாதா?4 முறை எழுதியாச்சு இன்னும் பாஸ் பண்ண கதையை காணோம், பொண்ணு பெரியவளாகற வயசாச்சு இன்னும் படிக்கறேன்னு நடிச்சுக்கிட்டு இருக்க.இதலாம் விட்டுட்டு வீட்டையும், புள்ளைங்களையும் ஒழுங்கா  பாத்துக்கற வழிய பாரு..”

 என சொல்லி மொபைலை வைத்து திரும்பி படுத்துக் கொண்டான்.

“பொண்ணுங்க கல்யாணத்துக்கப்புறம் புருஷன், புள்ளைங்கனு மட்டுமே வாழணுமா? அவங்களுக்கு சுய விருப்பு, வெறுப்புகள் எல்லாம் இருக்க கூடாதா?ஆயிரம் கனவுகளோடுதான பள்ளிக்கூடம் போனோம்..படிச்சோம்.. இப்படி அடுப்பங்கரையில குப்பைக் கொட்டவா? இதலாம்..”

என அவள் மனசு பொருமிக் கொண்டே அந்த இரவு முழுவதும் தூங்காமலேயே விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா…அம்மா…” என அறந்தாங்கி கத்தும் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்த செல்லா என்னவா இருக்கும் என்று பதறியடித்துக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கி சென்று பார்த்தால் பாத்ரூமில் அறந்தாங்கி வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.அந்தாள் சொல்லி ரெண்டு மணிநேரம் கூட ஆகவில்லை பொண்ணு வயசுக்கு வந்துட்டா.. அவளை குளிப்பாட்டி, வீட்டின் தாழ்வாரத்தில் அவளை தனிமைப்படுத்தி உட்கார வைத்துவிட்டு விருமாண்டியை எழுப்பி விஷயத்தை சொல்லி, அங்காளி, பங்காளி,மாமன், மச்சான் என அனைவருக்கும் தகவல் சொல்ல, காலைல 9 மணிக்கெல்லாம் ஊரே வந்துடுச்சு, பொண்ணுக்கு மஞ்சத்தண்ணி ஊத்தி, தென்னங்கீத்து கட்டி, முகமெல்லாம் மஞ்சள் பூசி , அறந்தாங்கியை அழகுப்படுத்தி பார்க்கும் போது தேவதையா தெரிஞ்சா. உண்மையிலே என் மக அழகுதான் எனப் பூரிப்போடு செல்லா வந்தவர்களுக்கு காப்பித் தண்ணி, டிபன்னு பயங்கர பிஸியாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தாள்.

“3ஆம் நாள், ஊரைக் கூட்டி தண்ணி ஊத்தி, கெடா வெட்டி சடங்கு செய்திடுவோம்..” என பெரிய நாத்தனார் வீராயி சொல்ல , விருமாண்டியும் சரியென  தலையாட்டினான்.

3 ஆம் நாள் மொட்டை மாடியில் சார்மினார் போட்டு , வீட்டுக்கு வெளியே வாழைமரம், தோரணம் கட்டி, காதல் படத்தில் வரும் “தண்டட்டி கருப்பாயி” பாடல் ஒலிக்க, மகளுக்கு வீராயி, உள்ளிட்ட அனைத்து உறவுகளும் சடங்கு செய்தனர். கை நிறைய வளையல், கன்னம் முழுவதும் மஞ்சள், தலையில் ஜடை,என அறந்தாங்கி அழகோ, அழகு. சடங்கெல்லாம் முடிந்து கெடா விருந்து தடபுடலா ஆரம்பித்தது.காலையிலிருந்து, நிக்கறதுக்குக் கூட நேரம் இல்லாமல் செல்லா இங்கிட்டும், அங்கிட்டும் அலைந்து கொண்டிருந்தாள். விருமாண்டி அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்தான், ஊர் தர்மகத்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வர, விருமாண்டி அவர்களை எல்லாம் வரவேற்று உட்கார வைத்து,

“ஹேய் …இங்க வாடி..அங்கிட்டு என்ன பண்ற.” எனக் குரல் கொடுக்க செல்லா ஓடி வந்து “என்னங்க” “இவங்களுக்கு பரிமாறு” என விருமாண்டி சொல்லி அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். செல்லா அவர்களுக்கு இலைப் போட்டு, ஒவ்வொன்றாய் வைக்கும் போது செல்லம்மாவின் கை Slip ஆகி சம்பார் தர்மகாத்தாவின் சட்டையில் சிறிது ஊற்றிக் கொள்ள, விருமாண்டி கடுப்பாகி, செல்லாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து,

“ஹேய் எருமை..உனக்கு அறிவே இல்லையா.. இப்படியா பரிமாறுவ.. நெனப்புலாம் எங்க வெச்சுக்கிட்டு வேலை செய்யறையோ …”

எனக் காட்டுக் கத்தல் கத்த, சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனைப் பேரும் செல்லாவை பார்த்தனர், செல்லா கண்கள் குளமாகி கையில் வைத்திருந்த சாம்பார் வாளியை அப்படியே டமால் எனக் கீழே போட்டுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு விருட்டென கீழே சென்றாள், “ஹேய்… எங்கடி போற.. உனக்கு கொழுப்பேறி போயிருக்கா” என  அதட்டிக் கொண்டே விருமாண்டி அவள் பின்னாலேயே செல்ல,  தன் Room கதவை செல்லா சடாரென சாத்துகிறாள், கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்த விருமாண்டி, “ஹேய்…என்னாக் கொழுப்பிருந்தா எல்லார் முன்னாடியும் வாளியைக் கீழே போட்டுட்டு வருவ..” என மீண்டும் அடிக்க கை நோக்க, அவள், அவன் கையை தடுத்து,

“உனக்கு இவ்வளவுதான் மரியாத..”

“ஏய் என்னடி வாய் நீளுது…”

“டேய்…வாயை மூடுடா…உனக்கு என்னடா அவ்ளோ ஆம்பிளைத் திமிரு.. எப்ப பாத்தாலும், “ஹேய்..ஹேய்..”னு கூப்பிடற, ஏன் எனக்கு பேர் இல்ல..?செல்லம்மானு பேரை வெச்சி எங்கப்பா,செல்லம்..செல்லம் னு கூப்பிடுவாரு.. என்னைக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ அன்னைக்கே என் பேரே எனக்கு மறந்துடுச்சு.. இப்பலாம் யார் என்ன செல்லம்மானு கூப்பிட்டாலும் நான் திரும்பறதே இல்ல, ஹேய்னு கூப்பிட்டாதான் திரும்பி பாக்கறேன். இதுக்கு காரணம் நீ… நான் என்ன ஊர்வனவா, பறப்பனவா..எப்ப பாத்தாலும், அது, இதுனு கூப்பிடற.. நாலுப் பேர் முன்னாடி தன் பொண்டாட்டியை கவுரமா நடத்தறவன் தான் உண்மையான ஆம்பளை.. இதே நான் அந்த மாறி நாலு பேர் முன்னாடி உன்ன அடிச்சிருந்தா உன் மூஞ்சியைய எங்க போய் வெச்சுப்ப..ஆனா, நான் அப்படி பண்ண மாட்டேன்..ஏன்னா எனக்கு அறிவு இருக்கு.. கல்யாண ஆயிட்டா என் கனவு, இலட்சியம் எல்லாத்தையும் மூட்டைக் கட்டி போட்டுட்டு, புருஷனே கதினு கெடக்கணுமா என்ன?

விருமாண்டி அவளையே வெறித்துப் பார்க்கிறான்.

என்னடா இவ என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு இப்படி பேசறாளே னு பாக்கறீயா எவ்ளோ நாள் தான் என் சுயமரியாதையை விட்டுட்டு வாழறது.. இதுக்கப்புறமும் நீ என்னை “ஹேய், எருமை..”ணு கூப்பிட்ட… இல்ல…இல்ல..நீ கூப்பிட்டுத்தான் பாரேன்…

என அவள் பேச, பேச விருமாண்டி முகம் கருத்துப் போனது. அவன் என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் ரூம் கதவைத் திறந்து வெளியே வருகிறாள், ஓட்டு மொத்த கூட்டமும் வெளியே  காதை தீட்டி காத்திருக்கிறது… வெளியே வந்தவள் அங்கு தன் மகன் கரிகாலன் அவன் சித்தப்பா மகளை “ஹேய் இங்க வாடி எருமை” என கூப்பிட, அவன்  அருகே சென்ற செல்லம்மா  அவனை அடி, அடி என்று அடித்து,

“அக்கா, தங்கச்சி, எந்த பொம்பளை புள்ளையா இருந்தாலும் வாம்மா, போம்மானு  மரியாதையோடு தான் கூப்பிடணும், இன்னொரு தடவை “ஹேய்.. எருமை…” னு கூப்பிட்ட, கொன்னுடுவேன்..” என சொல்லி அவள் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அனைவரும் அவள் செல்வதை வியப்புடன் பார்த்தனர். அறந்தாங்கி புன்னகையுடன் அம்மாவை நினைத்து பெருமைப் பட்டாள். பொண்ணுக்குத்தானே தெரியும் அம்மாவின் மனசு.. செல்லமா சென்ற இடம் NET CENTRE – TRB EXAM க்கு Apply பண்ண..

செல்லம்மாவின் இலட்சிய பயணம் தொடங்கியது…..

Exit mobile version