உலக நியதி-ரமா ஸ்ரீதர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 132 உலக நியதி-ரமா ஸ்ரீதர்

“என்ன பேசறோம்னு புரிஞ்சுதான் பேசறியா?” என்றார் கிருஷ்ண ப்ரஸாத் கோபத்துடன்.

எதிரே நின்றிருந்த அஜய் புன்னகைத்தான். “அப்பா, கூல், பொண்ணு நம்ம ஜாதிதான். கிட்டத்தட்ட எட்டு – ஒம்போது தலைமுறையா மதுரையிலதான் இருக்காங்க. அவங்கப்பாவுக்கு அங்க லோக்கல் மக்கள்கிட்ட அவ்வளவு செல்வாக்கு இருக்கு. எனக்குப் பாத்தவுடனே யமுனாவைப் பிடிச்சு போச்சு. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. ஸோ, நீங்க கொந்தளிக்க வேண்டாம்” என்றான் மிருதுவான குரலில்.

“இடியட், நம்ம ஜாதிங்கிறது முக்கியமில்ல. நம்ப அந்தஸ்து?….”  கிருஷ்ண ப்ரஸாத் மேலும் தொடரும் முன் அஜய் குறிக்கிட்டான்.

“ஸாரி அப்பா, நான் கல்யாணம் செஞ்சுக்கப் போற யமுனா எப்படி இருந்தாலும் எனக்கு அது பத்தி கவலை கிடையாது. ஸோ, விடுங்க. உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க” என்று சிரித்தான்.

“எப்படிடா உன்னால சிரிக்க முடியறது? இன்னைக்குத் தேதியில நம்ம கம்பெனியோட டர்ன் ஓவர் எவ்வளவு தெரியுமா உனக்கு? ஆடிட்டர் கமலக்கண்ணன் கிட்ட கேளு.  நம்ம கம்பெனி பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமா? உனக்கு வயசு 26. யு ஆர் நாட் எ கிட் எனிமோர் டாமிட்” என்று வெடித்தார் கிருஷ்ண ப்ரஸாத்.

“அப்பா, நீங்க அதெல்லாம் பார்த்துப்பீங்க. சின்ன வயசுல இருந்தே அப்படியே என்னை வளர்த்துட்டீங்க.” என்றான் புன்னகை மாறாமல்.

“சரிடா, அந்தாளு கிட்ட இந்தக் கல்யாணம் பத்தி பேசியாச்சா? என்ன சொல்றா ஒன்னோட யமுனா ?” என்றவரைப் பார்த்து கைகளை உயர்த்தியவன்,

“இன்னைக்கு ஈவ்னிங் அவர் கூட பேசப்போறேன். வீட்டுக்கு வரச் சொல்லி யமுனா நேத்து ராத்திரி சொன்னா. அவரைப் பார்த்துட்டு உங்களுக்கு நிச்சயம் சொல்றேன்” என்றான்.

==============================

மதுரை விமான நிலையத்தை அடைந்த அஜய், .காத்திருந்த அவர்கள் கம்பெனி காரில் ஏறிக் கொண்டு ஹோட்டலை. அடைந்து, குளித்து அரை மணியில் தயாரானவன், மிகவும் படாடோபமில்லாத சாதாரண காட்டன் சட்டையை அணிந்து கொண்டு, சற்றே முகத்தைச் சுழித்துக்கொண்டு யமுனா சொன்னபடி வேட்டியைக் கட்டிக் கொண்டான்.

விலை மிகுந்த உபகரணங்கள் எதுவுமின்றி சாதாரண காட்டன் சட்டையும், எட்டு முழ வேட்டியும், காலில் ஒரு சாதாரணமான செருப்பும் அணிந்து வந்தவனைப் பார்த்து டிரைவர் செல்வம் மிகவும் ஆச்சரியப்பட்டு போனான்.

“சார், ஒரு நிமிஷம் நீங்கதான்னு நம்ப முடியல சார்” என்று சங்கடத்துடன் சிரித்தான்.

“இந்த அட்ரஸ் மேல ஆவணி மூல வீதில இருக்கு. அங்க போகலாம்” என்று சொல்லி உள்ளே அமர்ந்தான் அஜய்.

வீட்டின் கதவு மணியை அடித்தபோது, திறந்தவரைப் பார்த்தவுடன் விநாயகமூர்த்தி என்று தெரிந்தது.

“நீங்க……?” என்றார்.

“வணக்கம் சார்….நான் அஜய். உங்க மக யமுனா சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்று புன்னகைத்தான்.

நெற்றியைச் சுருக்கிக்கொண்டு அவன் பேசுவதைக் கேட்டவர், “ஆ, ஆமாம், ஆமாம்….உள்ள வாங்க தம்பி” என்றார்.

உள்ளே நுழைந்தவன் திகைத்தான். பழைய கால ரெட் ஆக்ஸைட் தரை, ஃபர்னிச்சர் என்று பார்த்தால் ஒரு பழைய ஈஸி சேர் மட்டுமே இருந்தது. தரையில் ஒரு புதிய பாய் விரிக்கப்பட்டிருந்தது.

மிகவும் சிரமத்துடன் பாயில் அமர்ந்தவன், “நீங்களும் உட்காருங்க சார்” என்றான்.

எதிரே அமர்ந்த விநாயகமூர்த்தி “கூட பெரியவங்க யாரும் வரலியா? அது சரி, அப்பா மட்டும்தான்னு யமுனா சொல்லிச்சு…அவர் இங்கெல்லாம் வரமாட்டாருன்னு தெரியும், நீங்க நெனச்சா பெரிய பெரிய கோடீஸ்வரங்க வீட்டுப் பொண்ணுங்க வரிசைல நிப்பாங்க. எதுக்கு எம் பொண்ணு மேல காதல்? உங்களுக்கு எனக்கும் ஒத்து வராது. யமுனாகிட்ட தெளிவா ஏற்கனவே சொல்லிட்டேனே? நீங்க இங்க வர்றதைத் தவிர்த்திருக்கலாம்” என்றார் சற்றே தடித்த குரலில்.

“ஐயா, உங்க பொண்ணுனாலும் கட்டாயப் படுத்தாதீங்க. யமுனா கிட்ட அவங்க சம்மதத்தைக் கேளுங்க. நீங்க இப்படி இருக்கிறதால யமுனாவும் இதே மாதிரி கஷ்டப்படணுமா என்ன?” தொடர்ந்து தமிழில் பேசுவதும் மிகவும் கடினமாக இருந்தது.”கூடுமானவரை ஆங்கில வார்த்தை கலப்பில்லாம பேசுங்க” என்று யமுனா சொன்னது காதில் ஒலித்தது.

‘யமுனா, இங்க வாம்மா….தம்பி வந்திருக்காரு”…என்று அழைத்தார்.  

யமுனா ஒன்றும் ஐஸ்வர்யா ராய் இல்லை என்றாலும் சிம்பிளான காட்டன் புடைவையில், மேக்கப் எதுவும் இல்லாமல் பளிச்சென்றே இருந்தாள். அஜய்யைப் பார்த்துப் புன்னகைத்தவள், ‘வாங்க அஜய், 3.20 இண்டிகோ வா?” என்றாள்.

அந்தக் கேள்விக்கு உடனே விநாயகமூர்த்தி பதிலளித்தார். “நாங்க ஒரு 10 பேரு அந்தக் காசுல பஸ்ல வந்திருப்போம் தம்பி” என்றார்.

அஜய்க்குச் சற்று ஆயாசமாக இருந்தது. “சார், உங்க வெறுப்பு எம்மேலா இல்ல என் சொத்து மேலா?” என்றான் எரிச்சலுடன்.

“அளவுக்கு அதிகமான பணத்துக்கு நான் எதிரி தம்பி. அவ்வளவுதான். பணக்காரங்க எப்பவுமே நல்லவங்க இல்லை. அது உலக நியதி. எம் பொண்ணு உங்க வீட்டுல ஒரு நா தாங்கமாட்டா.”

“வீடு தேடி வந்ததால உள்ள உட்கார வச்சு பேசறேன். நீங்க கிளம்புங்க. எம் பொண்ணு உங்க அந்தஸ்துக்குத் தோது படமாட்டா. என்னை ஈர்க்கணும்னு எம் பொண்ணு சொன்ன யோசனைப்படி கேவலமா ஒரு பருத்தி சட்டையும், கட்டத் தெரியாம வேட்டியும் கட்டிக்கிட்டு வந்துட்டா நான் அசந்துடுவேனா? வேறு ஆளைப் பாருங்க” என்றார் தீர்மானமாக.

பருத்தி சட்டை…..அஜய் கோபம் சரசரவென எகிறியது. அவன் பேச ஆரம்பிக்கும் முன், யமுனா வெடித்தாள்,

“அப்பா, ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”ன்னு நானும் படிச்சிருக்கேன்பா. ஆனா, பண விஷயத்துல உங்களுக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு வேற நியாயம்னு நீங்க செயல்படறது சுத்தமா நல்லா இல்ல. போதும்பா, உங்க பழைய புராணம். எளிமையா இருக்கணும்னா உங்கள மாதிரிதான் இருக்கணும்னு சட்டம் ஏதாவது இருக்கா? இத்தனை வருஷம் ஒரு நல்ல டிரஸ் வாங்கிக் கொடுத்திருப்பீங்களா? நல்ல சாப்பாடு சாப்பிட்டிருப்போமா? ஏதாவது ரெண்டு இடத்துக்கு சுற்றுலா போயிருப்போமா? காசு இல்லாம கஷ்டப்படறவங்க சமாச்சாரம் வேற. அவங்களை நான் கிண்டல் செய்யல. ஆனா, உங்கள மாதிரி கஞ்சனுங்களைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு. சோழவந்தான் / சமயநல்லூர்னு பரம்பரைச் சொத்தா நமக்கு விவசாய பூமி ஒரு 200 ஏக்கர் தேறாது? அதுல இருந்து வர்ற வருமானம் எவ்வளவுன்னு எனக்குத் தெரியும். இருந்தும் நீங்க ஒரு வேலை பார்க்கிறதுதான் ஆம்பளைங்களுக்கு அழகுன்னு கோர்ட் குமாஸ்தா வேலை பார்த்தீங்க. அதுக்கு உங்களை நான் ரொம்ப மதிக்கிறேன். நீங்க வருஷாவருஷம் ஒரு 50 ஏழைப் பசங்க படிப்புக்கு செலவு செய்றீங்க, அதுல எனக்கு ரொம்ப திருப்தி, மகிழ்ச்சி. ஆனா, எனக்குன்னு ஏதாவது நான் ஆசைப்பட்டு கேட்டு வாங்கிக் கொடுத்த ஞாபகம் இருக்கா?”

“வள்ளலார் ஒரு மகான். அவரோட பக்தரா நீங்க கல்யாணமே செஞ்சிருக்கக் கூடாது. வைத்தியம் செஞ்சா செலவு ஆயிடும்னு கஞ்சத்தனப்பட்டு, ஒரு சாதாரண ஆஸ்துமாவுக்கு என் அம்மாவை பலி கொடுத்தீங்க. சின்ன வயசுல இருந்து உங்களைப் பாத்து நான் கத்துகிட்ட ஒரு விஷயம் சத்தியமா உங்களை மாதிரி எனக்கு ஒரு ஆள் கணவரா வரக்கூடாதுங்கிறது என்னோட பிரார்த்தனை, ஆசை, எண்ணம் எல்லாம்”.

“நல்ல வேளையா அஜய் என் வாழ்க்கைல வந்தாரு. அவரோட பணத்தை விட, அவர் எந்தவித பந்தாவும் இல்லாம எளிமையா இருந்தது எனக்குப் பிடிச்சது. எனக்குப் பிறக்கிற குழந்தையாவது ஆசைப்பட்டது எல்லாம் கிடைச்சு சந்தோஷமா இருக்கட்டுமே? என்னை மாதிரி பராரியா இருக்க வேண்டாமே? நீங்க மறுத்தாலும் அஜய் கூட போய் என்னால நல்லா இருக்க முடியும். ஆனா, என் அப்பா, வயசான காலத்துல மனசு வருத்தப்படக்கூடாது. அதுனால தான் இவ்ளோ வருஷம் உங்களை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசாம இருந்துட்டேன்”.

“இப்போ நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நம்ம வீட்டுக்கு வந்த அஜய்யை, அசிங்கமா ஒரு பாயில உட்கார வச்சதோட இல்லாம, அவரோட டிரெஸ்ஸைக் கிண்டல் செய்யறீங்க. இவ்வளவு பேசற நீங்க நமக்கு இருக்கிற நிலத்தை எல்லாம் வித்து வள்ளலாரோட ஆஸ்ரமத்துக்கு எழுதிக் கொடுக்க முடியுமா? முடியாது. காரணம் ஒங்களோட வரட்டுப் பிடிவாதம், வேஷம், தேவையில்லாத பேச்சு……”

“அஜய் வீட்டுல அவங்க அப்பா ஒரு வருஷத்துக்கு குறைஞ்சது 200 பேருக்கு திருமணம் செஞ்சு வைக்கறாரு. அதோட இல்ல, அத்தனை சீர்வரிசையும் செஞ்சு, மணமக்கள் வாழ ஒரு வருஷதுக்கு  அவங்களுக்குத் தேவையான அத்தனை மளிகைச் சாமானும் வாங்கிக் கொடுக்கிறாரு. வருஷாவருஷம் அவங்களோட பல நிறுவனங்கள்ல வேலை பார்க்கிற பல ஊழியர்களுக்கு விலை உயர்ந்த கார் வாங்கிப் பரிசா கொடுக்கிறாரு. தன்னோட சேர்ந்தவங்க வாழ்க்கைத் தரத்தை ஒசத்தப் பாடுபடற அவர் எவ்வளவோ மேல்.. பணக்காரங்க எல்லாருமே கெட்டவங்க இல்லை. அஜய் அப்பா கிருஷ்ண ப்ரஸாத் மாதிரி சத்தம் போடாம நல்ல காரியங்கள் செய்யற பணக்காரங்க நிறையப் பேரு இருக்காங்க”.

“நீங்க உங்ககிட்ட வயல்ல வேலை பார்க்கிற விவசாயி யாராவது வீட்டுல கல்யாணம்னு வந்து பணம் கேட்டா குடுப்பீங்களா? மாட்டீங்க. என்னை மாதிரி உழச்சு சம்பாதிக்கணும்பான்னு சொல்லிட்டு, கல்யாணத்துக்குப் போயி மொய் 1001 ரூபாய் எழுதிட்டு வந்திடுவீங்க. திருந்துங்கப்பா. இப்போ, அஜய் வேண்டாம்னு நீங்க பிடிவாதம் செஞ்சா நான் உங்களை மீறிப் போயி அவரைத் திருமணம் செஞ்சுக்க மாட்டேன். ஆனா, லைஃப்ல எனக்கு வேற யாரோடவும் திருமணம் நடக்காது. உங்க கூடவே தான் இருப்பேன். அது மட்டும் நிச்சயம்” என்று சொல்லி பெருமூச்சு வாங்கியவளை மிகுந்த ஆச்சரியத்தோடு அஜய்யும், விநாயகமூர்த்தியும் பார்த்தார்கள்.

“உன் மனசுல இவ்வளவு இருக்காம்மா? என்னை மன்னிச்சுடு. அப்படியே செலவு செய்யாம இருந்து பழகிட்டேன். அதுனால எம் பொண்ணு என்ன ஆசைப்படறாங்கிறதைக் கூட உணராம இருந்துட்டேன். உன்கிட்ட மன்னிப்பு கேட்கறதுல எனக்கு வெட்கம் எதுவுமில்லமா. நீ ஆசைப்படற மாதிரியே எல்லாம் நடக்கும். வாழ்க வளமுடன்” என்று விநாயகமூர்த்தி. சொல்லும்போது அவர் குரல் தழுதழுத்தது  

Exit mobile version