மாய்வு- மில்லத் அகமது

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 140 மாய்வு மில்லத் அகமது

சனிக்கிழமை மந்தமாக விடிய, விடியலை முந்திக்கொண்டு தமிழரசன் மறைந்த செய்தி, கொரோனா தொற்றைப் போல அதிவேகமாய் பரவியது.

தலைவி தலைமாட்டில் தலைவிரி கோலமாய், தன்னிலை மறந்தவளாய் மீளா துயரத்தின் மாய வலையில் சிக்கி, சின்னாபின்னமாகி கிடந்தாள். அவள் மடியில் தமிழரசனின் மறுபதிப்பாய் செந்தமிழ்ச் செல்வன் அப்பாவைப் பற்றிக் கேட்க, அந்த ஆறு வயது பாலகனுக்கு யார் தான் ஆறுதல் சொல்ல முடியும்?

நான் மட்டும் தமிழரசனின் அருகில் மிக நெருக்கமாக இருந்தேன். இவர்கள் எல்லாம் இடையில் வந்தவர்கள், பாடை சென்ற பின், தங்கள் பாதையில் மீண்டும் பயணிப்பார்கள். ஆனால் நான்.. அப்படியா? இவன் இல்லை என்றால் என்னால் தனித்து  வாழ முடியுமா? முடியவே முடியாது. இங்கே இவன் உடல் மட்டும் தான் கிடக்கிறது. இன்னும் சில மணித்துளிகளில் தோலாக இருந்தவன், தூளாகப் போகிறான். என்ன செய்வது? என்று புரியாமல் சுற்றிலும் நோக்கினேன். நான் ஆன்மாவும் இல்லை, ஆவியும் இல்லை… ஆன்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாற சென்றுவிட்டது. நான் யார்? என்பதை போக போக நீங்கள் தெரிந்துக்கொள்வீர்கள்.

தமிழ் அமைப்பைச் சார்ந்த அனைத்து பிரமுகர்களும் இறுதி யாத்திரைக்கு முடிவுரை எழுத வந்திருந்தனர். வந்தவர்கள் தங்கள் சோகத்தை பலவாறு வெளிப்படுத்த, அதில் சில என் காது மடல்களைத் தட்டி அனுமதிப் பெற்று உள் நுழைந்தது. என் மனத்தை பிசைந்தது.

“தமிழ் இறந்துவிட்டாரா?” முதலில் என்னால் நம்ப முடியவில்லை. இந்த புலன செய்தியை நம்பவும் முடியல, நம்பாமல் இருக்கவும் முடியல…”

“சரியா சொன்னீங்க, நேற்று காலையில பிரபல திரைப்பட இயக்குநர் இறந்துட்டார்னு புலனத்தில் செய்தி வந்தது, அப்புறம் மாலையிலே நான் சாகவில்லை பொய்யான தகவல்னு சம்பந்தப்பட்டவரே பேட்டி கொடுக்கிறாரு…”

“இதே மாதிரி இன்னொரு புலன செய்தியால, ஒரு குழந்தையோட படிப்பே பாழாப் போச்சு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி அண்டை வீட்டுல விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைச் சரியாகத் தேடாமல், காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று புலனத்தில் செய்தி தீயா பறந்து, இப்ப அந்தக் குழந்தை பள்ளிக்குப் போகும்போது பார்க்கிற யாராவது, உடனே கூட்டிகிட்டுப் போய் வீட்டுல விட்டுடுறாங்களாம். அவங்க அப்பா “குழந்தை கிடைத்துவிட்டது” என்று தகவல் அனுப்பியும், இன்னிய தேதி வரைக்கும் அந்தச் செய்தி பரவிகிட்டேதான் இருக்குது. இதை எப்படி நிறுத்துவது?”

“செய்தி கிடைத்தவுடன், சரியான தகவல் தானான்னு தெரிஞ்சுக்கத்தான் உமக்குப் போன் செஞ்சேன்… போன மாசம் நண்பரோட நூல் வெளியீட்டு விழாவுல, அவருடன் சேர்ந்து ஒரு சுயப்படம் பிடித்து எனது முகநூலில் பக்கத்தில் பதிவு செய்த அடுத்த அரை மணி நேரத்தில் அறுபத்தி மூன்று லைக்குகள் கிடைத்ததை என்னால் எப்படி மறக்க முடியும். சிங்கப்பூரின் தமிழ் அடையாளம் அல்லவா! தமிழரசன்” 

“சாகக்கூடிய வயதா? சாவே உனக்கு சாவு வராதா? எமனே உனக்கு அவரின் சிம்மக்குரலைக் கேட்க, அழைத்துச் சென்றாயோ? கேட்டுவிட்டு சீக்கிரம் அனுப்பிவிடு, அவருக்காக தமிழ்மொழி மாதம் காத்துக்கொண்டு இருக்கிறது”

“முப்பத்தி எட்டு வயதில் எண்பது வயதிற்குரிய சாதனைகளை செய்துவிட்டு, இனி சாதிக்க ஒன்றுமில்லை என்று சிவலோகம் செல்லப் புறப்பட்டாயா தமிழரசா?”

“நான், கேள்விப்பட்டவுடனே ஓடி வந்துட்டேன். திறமைசாலிகளை படைத்து அனுப்பி விட்டு, அற்ப ஆயுசுல தன்னிடம் அழைத்துச் செல்வதே கடவுளுக்குப் பொழப்பா  போச்சு.  எத்தனையோ அநியாயக்காரன்களும், கொலைக்காரன்களும் இருக்கிறார்கள் அவர்களைக் கொண்டு போ… எங்க தமிழைத் திருப்பி அனுப்பு…” என்று கடவுளுக்குக் கட்டளையிட்டார் ஒருவர்.

“மாரடைப்பா இருக்குமோ?”

“ஆஸ்துமாவினால மூச்சுத் தடை வந்து திணறி… அதுனால…”

“ஏம்ப்பா, போன மாசம் இந்தியாவுக்குப் போயி கலைமாமணி விருது வாங்கிகிட்டு வந்தாரே, கூடவே கொரோனாவையும் வாங்கிட்டு வந்திருப்பாரோ?”

“ஓய், முட்டாள்தனமாக பேசாதீர். சிங்கப்பூருக்குத் திரும்பி வரும்போது கட்டாயமாக பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவரு, அந்த நட்சத்திர விடுதியில் தனிமைப்பட்டிருந்தபோது கூட, சூமில் நடந்த பட்டிமன்றத்தில் பேசினாரே, பார்க்கலையா?” 

“ஆமாம், ஆமாம், மறந்துவிட்டேன்… நான் கூட, தனிமையில் இனிமை காணும் தமிழை, நாலு சுவற்றுக்குள் அடைத்து வைத்தாலும், வெடித்து வெளிவரும் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்”

“மன உளைச்சல் தான் காரணமா இருக்கணும்…”

“அவரு ஏதாவது ஒரு துறையில் கவனம் செலுத்திருந்தா… இத்தனை மன உளைச்சல் வந்திருக்காது. கவியரங்கமா? அங்கே கவிதைப் பாடுவார். பட்டிமன்றமா? அங்கே நடுவராக இருப்பார். சமயச் சொற்பொழிவா? அங்கே தலைவராக இருப்பார். வாரத்தில் ஒரு நாள் இவரது ஒலியை ஒலிக்காமல் இருக்காது ஒலி 96.8, வசந்தத்தில் ஏதாவது ஒரு நாடகத்தில் நடித்துக்  கொண்டிருப்பார். தமிழ்முரசு நாளிதழில் அடிக்கடி இவரது சிறுகதை வாசகர்களைச் சிந்திக்க வைக்கும். இவ்வளவையும் ஒரு மனுசனால செய்ய முடியுமா? மன உளைச்சல் தான் காரணம்”

“ஆமாம், நானும் கேள்விப்பட்டேன், இவரு இலக்கியம், இலக்கியமும்னு இருந்ததினால… இவருக்கும் இல்லத்தாளுக்கும் இல் வாழ்க்கையில் தினமும் சண்டைச் சச்சரவாம்! மனுசனுக்கு வீட்டிலாவது நிம்மதி வேண்டாமா? ம்..ம்   கொடுத்து வைத்த மனுசன் நிம்மதியை தேடிப் போய்விட்டார்”

“உங்க வீட்டுப் பிரச்சனையை அடுத்தவங்க வீட்டுப் பிரச்சனை மாதிரி திருத்தி பேசுறதே பொழப்பாப் போச்சு உமக்கு”

ஒரு மரணத்திற்கு ஆயிரம் காரணங்களைக் கண்டுப் பிடிக்கும் மனிதனின் மூளைக்கு, பிறப்பு மாதிரி இறப்பும் ஒரு சம்பவம் என்பதை ஏன் ஒத்துக் கொள்ள மறுக்கிறது? சிலருக்கு மரணம் மூப்பெய்தப் பிறகு வருகிறது. சிலருக்கு இவரைப் போல இளம் வயதில் வருகிறது. சிலருக்கு கருவில் இருக்கும் போதும், பிறந்த சில நிமிடங்களில் கூட அன்னைத் தழுவுமுன் பாலகனை காலன் தழுவுகிறான். ஒவ்வொரு ஆன்மாவும் இத்தனை ஆண்டுகள் தான் வாழவேண்டும் என்பது இறைவனின் நியதி என்பதை மனிதன் அறிந்திருந்திருந்தும், பகுத்தறிவு காரணம் காட்டி ஒத்துக்கொள்ள மறுக்கிறான். என்று நான் என் மனத்தில் நினைத்துக் கொண்டேன். அப்போது.

“எங்க அமைப்பு மூலமா அவருக்கு கலைப்புலி விருது கொடுக்கலாம்னு இருந்தோம். அதுக்குள்ள… போய் சேர்ந்துட்டாரு…”

“ஆமா, உயிரோடு இருக்கும்போது உடனே கொடுக்காதீங்க, போனப் பிறகு ஆயிரத்தெட்டு லொட்டச் சொல்லு வேற…”

“என்ன ஓய், வெடைக்கிறீரா? உமக்கென்ன வாய்க்கு வந்தபடி பேசுவீங்க… ஒரு அமைப்பு வச்சு நடத்திப் பாரும் அப்பத் தெரியும் எங்க கஷ்டம், செயலவை கூட்டத்துக்கு வர்ற எட்டுப் பேருல நாலு பேரு ஒத்துக்கிட்டா… அடுத்த நாலு பேரு அவனுக்குப் பிடிச்ச ஆளுக்கு கொடுக்கச் சொல்லுவான்… இவங்க எல்லோரையும் சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள ஆறு மாசம் ஓடிடும்… தெரியுமா?”

“நான் அதுக்கு சொல்லலை, நமக்கு சாவு சொல்லிட்டா வருது? நல்லது செய்ய காலதாமதம் செய்யக்கூடாது. மகாகவி பாரதியை வறுமை கொண்டாடிய அளவுக்கு,  போன தலைமுறை ஆளுங்க கொண்டாடவில்லை. இப்ப, எல்லா அமைப்பும் போட்டி போட்டுக்கிட்டு பாரதியார் விழாவை நடத்துறாங்க, அந்த ஆதங்கத்துல சொன்னேன்…”

சங்கு ஊதப்பட்டது.

கூடி இருந்தவர்கள் சுறுசுறுப்பானார்கள். புளொக்கின் கீழ்த்தளத்தில் அமரர் ஊர்தி வண்டி காத்துக் கொண்டிருந்தது. அனைவரும் பார்த்தபின் அந்த மரப்பேழையின் கதவு மூடப்பட்டது.

சவப்பெட்டி தூக்கப்பட்டது. மின்தூக்கியில் கொண்டு செல்ல இயலாது என்பதால் படிக்கட்டுகள் வழியே தூக்கிக் கொண்டு மெல்ல ஒவ்வொரு படியாகப் பார்த்துப் பார்த்து மூன்றாவது தளத்திலிருந்து மந்திரம் பாடிக் கொண்டு படி இறங்கினார்கள். மூச்சு வாங்கி, மூச்சியில்லா உடலைச் சுமந்தனர்.

“நாமளும், மலாய் சமூகம் ரெண்டு பேரும் தான் பிணத்தை வீட்டில் வைத்து எடுக்கிறோம். இதனால் எத்தனைச் சிரமம் தெரியுமா?”

“உண்மைதான், மலாய் சமூகம் பரவாயில்லை, இரண்டு, மூன்று   தளங்களுக்கு மேல் வசிப்பதில்லை, ஆனால் நாம், எல்லாத் தளங்களிலும் வசிக்கிறோம். அவர்கள் இறந்த உடலை பாலித்தீன் துணியில் வைத்து இறக்கி, பின் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் நாம், பெட்டியோடு இறக்குகிறோம். அதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது”

“அதுவும் இல்லாமல், ஊரு மாதிரி வீட்டில் வைத்து நிம்மதியாக பூசை செய்ய முடியவில்லை, அண்டை வீட்டுக்காரர்கள் சத்தம் வருகிறது, சாம்பிராணி வாசனை வீட்டிற்குள் வருகிறது. பூக்களை வாசலுக்கு வெளியே போட்டு, மிதித்து இடத்தை அசுத்தமாக்குகிறீர்கள் என்று பல புகார்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது”

“இதுவாவது பரவாயில்லை, இவருக்கு முப்பதாவது தளத்தில் வீடு இருந்திருந்தால் நம்ம நிலமையை நினைத்துப் பாரு? இந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்குவது சாத்தியமா? வெளியிருந்து  பாரந்தூக்கும் கருவியை வைத்து தான் இறக்கணும். அதுக்கு எவ்வளவு செலவோ?”

“இதுக்கு ஒரே வழி, வீடமைப்பு கழகம், மின்தூக்கியை பெரிதாக கட்ட வேண்டும், அப்போது தான் நமக்கு எளிதாக இருக்கும்”

“தம்பி, அறிவோட தான் பேசுறீங்களா? வீடமைப்புக் கழகம் தான் புளோக்குக்கு புளோக் ‘பல்நோக்கு மண்டபம்’ கட்டி வச்சிருக்காங்களே! அதைப் பயன்படுத்த வேண்டியது தானே? முறையாக அதைப் பயன்படுத்துவது சீனச் சமூகம் மட்டும் தான்…”

அனைவரும் கீழ்த்தளத்தை வந்தடைய, மெதுவாக சவப்பெட்டியை அமரர் ஊர்தியில் ஏற்றினார்கள். பின் ஊர்தியின் கதவை மூடப் போகுமுன் நானும் ஏறிக்கொண்டேன். யாரும் தடுக்கவில்லை.

“ஏம்ப்பா, சனி பொணம் தனியா போவாது என்று சொல்லுவாங்க… யாரைக் கூட்டிக்கிட்டு போகப்போறாரோ?”

“பூத உடலை ஊருக்குக் கொண்டு போறாங்களாம், இவரோட அப்பா, அம்மா… இவரு பிறந்த ஊருல தான் காரியம் பண்ணனும்னு ஆசைப்படுறாங்களாம். இறந்தப் பிறகாவது எங்களுடன் இருக்கட்டும்னு சொல்லுறாங்களாம்”

“ஆமாம்பா, ஒரே மகன், இவரோட இழப்பை பெற்றவர்களும், மனைவியும் எப்படி தான் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ? கடவுள் தான் மன வலிமையை கொடுக்கவேண்டும்”

“இப்ப அமரர் ஊர்தி, விமான நிலையத்துக்கா போகப்போகுது?”

“இல்ல, காஸ்கெட் நிறுவனத்துக்கு, அங்கே இவருடைய உடலை பதப்படுத்தி, சவப்பெட்டியில் வைத்து அனுப்புவார்களாம்”

“விமானம் எத்தனை மணிக்கு, யாரெல்லாம் போகிறார்கள்?”

“திருச்சிக்கு, நேரடி விமானம் இன்றைக்கு இல்லையாம்? அதுனால கொழும்பு போயி, அங்கிருந்து மாறி போகணுமாம். இவரோட மனைவியும், மகனும் போறாங்களாம். இவரு இல்லாம, இனி இவங்க இங்கே இருக்க போறதில்லையாம், திரும்பி வந்து, நிரந்தர குடியுரிமையை ரத்து செய்துட்டு, வீட்டை விற்றுவிட்டு ஊரிலேயே வாழப் போறாங்களாம்”

“ஆம்! இதுதான் மனித வாழ்க்கை… பிறந்தது ஓரிடம், இறப்பது ஓரிடம், வாழ்வது ஓரிடம், ஆனா… அந்த இடத்தை நிர்ணயிப்பது அவன்” என்று ஆள்காட்டி விரலை மேலே தூக்கி காட்டினார்.

அங்கிருந்து அமரர் ஊர்தி புறப்பட்டது.

இப்போது நான் என்னைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு வெறுமை என்னுள் பூக்கத் தொடங்கியது. இவ்வுலகில் இவ்வளவு தான் வாழ்க்கை… உண்மையில் நிரந்தரமான வாழ்க்கை இன்றிலிருந்து தான் அவ்வுலகில் தொடங்குகிறது. இறைவன் வைக்கும் தேர்வில்  வெற்றி பெரும் ஆன்மாக்கள் சீக்கிரமே இறைவனிடம் சென்று சேர்க்கிறது. இதை அறியாத மனிதர்கள், நிலையில்லாத வாழ்க்கைக்காக எத்தனை சண்டைகள், சச்சரவுகள், கொலை, கொள்ளை, போட்டி, பொறாமை. அட எனக்குள் ஞானம் எட்டிப் பார்த்தது.

அமரர் ஊர்தி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள, பின்பக்க கதவுக்கு அருகில் தள்ளு வண்டியை கொண்டு வந்தனர் சில ஊழியர்கள். சவப்பெட்டி தள்ளு வண்டிக்கு இடம் பெயர்ந்தது. உள்ளே கொண்டு சென்றனர். நானும் பின் தொடர்ந்தேன்.

உடலை பதனிடும் அறைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மேசையில் உடலை வைத்து ஆடைகளை களைந்தனர். விறைத்து இறுக்கமாக இருந்த உடல், கை கால்கள், தசைகளை உருவி விட்டு விறைப்பை போக்கினர். பின் உடலில் இருந்து இரத்தம் மற்றும் திரவங்களை வெளியேற்றினர். மூன்று லிட்டர் பார்மலின், மூன்று லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் சாராயம், அரை லிட்டர் கிளிசரின் மற்றும் நூறு கிராம் போரிக் அமிலத் தூள் கலந்த ஏழு  லிட்டர்  திரவம் தயாராக இருந்தது. மார்பு பகுதியை உயர்த்தி, கழுத்தில் இருந்து தலை வரை கீழே தொங்குமாறு வைத்தனர். கழுத்தின் மையப் பகுதிக்கு சற்று தள்ளி, கத்தியால் இரத்த நரம்புகளில் படாமல் ஆறு சென்டிமீட்டர் நீளத்திற்கு கீறி, மெதுவாக கரோடிட் (CAROTID ARTERY) தமனியை வெளியே எடுத்து, அதில் ஒரு சிறு துளையிட்டு, 50 சென்டிமீட்டர் நீளமுள்ள குழலை சொருகி, மறுமுனையை கனுலா குழாயுடன் (CANNULA TUBE) இணைத்தனர். தயாராக இருந்த பதனிடும் கரைசலை, ஒரு இயந்திரத்தின் உதவியால் கனுலா குழாய் மூலம் செலுத்தினர். கரைசல் உள்ளே சென்று, நரம்பு மற்றும் குடல்களில் சென்று நிரம்பியது. சிறிது நேரத்தில் இறந்த உடல் புதுப்பிக்கப்பட்டது.

உடனடி பசை மூலம், கண் இமைகள், வாய் ஆகிய பகுதிகளில் தடவி மூடினர். மீசையை அழகாக கத்தரித்து, முகத்தில் இருந்த முடிகளை சவரம் செய்தனர். பின் தலைக்கு எண்ணெய், உடல் மற்றும் முகத்தில் ஈரப்பத பாலேடு வைத்து பூசினர். முகத்திற்கு அழகு பொருட்கள் கொண்டு ஒப்பனை செய்து, ஆடைகளை அணிவித்து, சவப்பெட்டியில் வைத்தனர். இப்போது இவர் இயற்கையாக உறங்குவது போல தோற்றமளித்தார்.

நான் உயர்திணை, அஃறிணை என அனைத்திலும் இருக்கின்றேன். வெளிச்சத்தில் என்னைக் காணலாம். நான் தான் நிழல் உருவம் என்றவுடன் சவப்பெட்டி மூடப்பட்டது. நிழலும் மறைந்தது.

மாலை 6 மணிக்கு, சுங்க அனுமதி பெற்று, தமிழரசனின் சவப்பெட்டி  விமானத்தில் சரக்கு வைக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.            7 மணிக்கு விமானம் புறப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்தில்…

சனிக்கிழமை மொத்தமாக இரவு என்ற குகைக்குள் நுழைய, இருளைக் கிழித்துக் கொண்டு தமிழரசனின் பிணம் சென்ற விமானம் மாயமாய் மறைந்த செய்தி, கொரோனா தொற்றின் இரண்டாவது அலை போல மீண்டும் பரவ தொடங்கியது.

******************

Exit mobile version