சூதாட்டம்-சேலம் சுபா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 142 சூதாட்டம்-சேலம் சுபா

அத்தை மாமா நாங்க போயிட்டு வரோம் .உங்க உடம்பைப் பார்த்துக்குங்க ..ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க..” மதனின் அத்தை பொண்ணும் மகன்களும் மாமனாரிடமும் மாமியாரிடமும் சொல்லியதைக் கவனித்தாள் சுனிதா .

     கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவள் அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக எழ “இருக்கட்டும் ,,நீ வந்த நேரம் ஏதேதோ நடந்து முடிஞ்சிடுச்சு..எங்க அத்தை மாமாவுக்கு இனி யாரு ஆறுதல்னு தெரியல ..வரோம் “ வார்த்தைகளால் ரணமாக்கி விட்டு விடை பெற்றனர்  

       மதன் இறந்து முப்பதாம் நாள் படையலும் முடிந்து வந்திருந்த உறவினர்கள் ஆளாளுக்கு ஒரு வார்த்தைக் கணையை விட்டெறிந்து விட்டு வந்த வழியே திரும்பினர் .சுனிதாவின் அழகிய முகம் அழுது அழுது வற்றிய விழிகளுடனும் வெற்று நெற்றியுடனும் கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவைப்போல் களை இழந்து இருந்தது.       

     “அம்மா சுனிதா நாங்களும் கிளம்பறோம் நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா ..நீ எடுக்கும் எந்த முடிவானாலும் நாங்க உனக்கு ஆதரவாக இருப்போம் கண்ணு ..” கண்களில் நீர் வழிய “வரோம் அண்ணி..” என்று சம்பந்தியிடம் சொல்லிக்  கிளம்பிய சுனிதாவின் பெற்றோர் செல்ல மகளை இப்படி  விட்டுச்செல்கிறோமே எனும் வேதனையுடன் மனமே இல்லாமல் சென்றதைப் பார்த்த சுனிதாவின் கண்கள் மீண்டும் கண்ணீரால் நிறைந்தது .

      அவள் பார்வை மாலைகளுடன் அழகாக புன்னகைத்துக்கொண்டு இருந்த மதனின் புகைப்படத்தில் நிலைத்தது.

       பத்தாம் வகுப்பில் முதன் முதலாக வகுப்பறைக்குள் நுழைந்தவளின் கண்களில் பட்டவன் மதன். தந்தையின் வேலை மாற்றம் காரணமாக பாதியில் வந்து சேர்ந்து கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்த சுனிதாவுக்கு நல்ல தோழனாக மாறினான் .இருவரும் போட்டி போட்டுக்கொண்டு படித்ததில் இருவருமே ஒரே மதிப்பெண் எடுத்து பள்ளியையே அசத்தினர் .மதனின் மரியாதையான போக்கும் பண்பும் சுனிதாவின் வீடு வரை வந்து பழகும் சலுகையைத் தந்தது .பேசிப் பேசியே சுனிதாவுடைய பெற்றோரின் மனதையும் கவர்ந்தவனானான் மதன் .

      அதே போல் மதனின் வீட்டிலும் சுனிதாவின் கொடி பறந்தது .வீட்டுக்கு ஒரே மகனான மதனின் பெற்றோருக்கு பெண் இல்லை எனும் குறை எப்போதும் இருந்தது  அந்தக் குறையை போக்கினாள் சுனிதா .பள்ளி இறுதி வரை ஒன்றாக பள்ளி சென்றவர்கள் எங்கே கல்லூரி தங்களைப் பிரித்து விடக்கூடாது என்று எப்படியோ ஒரே கல்லூரியில் சேர்ந்து இன்ஜீனியரிங் படிப்பை முடித்தனர் .

       கல்லூரியின் கடைசிநாள் பிரிவில் கைகளில் இருந்த சிவப்பு ரோஜாக்கள் வழியே தன் காதலை சொன்னான் மதன் .சுனிதாவுக்கு மனசெல்லாம் நிறைந்தது .நல்ல தோழனே வாழ்க்கை முழுவதும் உடன் வரும் பாக்கியம் எத்தனை பெண்களுக்குக் கிடைக்கும் ? அது மட்டுமின்றி இவர்களின் காதல் முற்றிலுமாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வந்த பக்குவமானது என்பதால் இருவரின் பெற்றோரும் இதற்கு பச்சைக்கொடி காட்டி ஆசிர்வதித்தனர் .

     உடன் படித்த தோழிகள் தோழர்கள் உற்றார் உறவுகளுடன் ஜாம் ஜாமென்று நடந்தது மதன் சுனிதாவின் திருமணம் .பள்ளி சென்றது முதல் இவர்களை அறிந்தவர்கள் சற்றே வியப்புடன் இவர்களுக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றனர் .

      முதலிரவில் மதன் இவள் மடி சாய்ந்து கிசுகிசுத்தது நினைவுக்கு வந்தது…இருவரும் கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் என்பதால் சொகுசுக்கு எந்தக் குறையும் இல்லை .

      ஐயோ மதன் உதடு மடித்து சிரிக்கும் உனது அழகான முகத்தை இனி இந்தக் கனண்டி சட்டத்திற்குள் மட்டும்தான் காண முடியுமா ? ..

      வெளிர்மஞ்சள் நிற சேலை கட்டும் போதெல்லாம் பின் வந்து உரசி வம்பு செய்யும் மதன் , தலைக்கு நீர் உற்றிக்காய வைக்கும் போது முடிகளைக் கோதி வாசம் நுகரும் மதன் ..பிள்ளை இல்லை என்று கலங்கும் போது நான் உன் பிள்ளை என்று மார்பு சாயும் மதன் ..நீ சாப்பிட்டாயா என்று வார்த்தையில் கனிவு பொங்க தாயுமானவனாக கேட்கும் மதன் ..அந்த மூன்று நாட்களிலும் காபி முதல் படுக்கை வரை ஆறுதலாக தோள் தரும் மதன் ..யார் கண் பட்டது ?  

     “ஏன் ஏன் இந்த அவசரம் மதன் ? பள்ளி முதல் கல்லூரி பணியிடம் என  எல்லாவற்றிலும் ஒன்றாக பயணித்த என் நண்பனே ? எப்படி மனம் வந்தது இப்படி என்னைத் தனியே விட்டுச் செல்ல ? உன்னிடம் எனக்குப் பிடித்த விசயமே உன் தன்னம்பிக்கைதானே? அதே தன்னம்பிக்கை உன் உயிரை களவாடும் அளவுக்குச் சென்று விட்டதே ? காதலன் உன்னை முழுவதுமாக அறிவேன் என கர்வத்துடன் திரிந்தேனே ..உன் மறுபக்கத்தை அறியாமல் ..” மனதிற்குள் அரற்றினாள் .

        “அம்மா சுனிதா இங்க பாரு..மதனோட பிரண்டாம் ..வந்துருக்காரு “ ..மாமியாரின் குரல் கேட்க கண்களைத் துடைத்துக்கொண்டு  வந்திருந்தவரை ஏறெடுத்துப் பார்த்தாள்.

        “வணக்கம் மேடம் ..சார் என்னிடம்தான் இன்சூரன்ஸ் எடுத்துருக்காரு.. இந்த விசயம் உங்களுக்கு தெரியாதுன்னும் சொன்னாரு .பேப்பர்ல வந்த செய்தியைப் படித்தேன் ..ஊருக்குப் போனதால இந்த விஷயம் எனக்கு இன்னிக்குத் தான் தெரிந்தது .. அவர் இப்படி செய்வாருன்னு கொஞ்சம் கூடஎதிர்பார்க்க வில்லை.உங்களுக்கு காலம்தான் ஆறுதல் தரமுடியும் .நான் என்னால் ஆன முயற்சிகளை செய்து  பார்க்கிறேன்…உதவி தேவைப்பட்டால் கேளுங்கள் மேடம் ..”..

     இது மட்டுமா எனக்குத் தெரியாது ? என்பது போல் ஒரு சலிப்பு தோன்ற “ஓ அப்படியா ? மிக்க நன்றி நீங்கள் வந்ததற்கு ..தேவைப்பட்டால் அழைக்கிறேன் ..”என்று சொல்லி அனுப்பி வைத்தாள் அந்த நபரை .

      இரவு வந்தது ..வீட்டிலிருந்த அனைத்து உறவுகளும் கிளம்பி விட சுனிதாவும் மதனின் பெற்றோர் மட்டும் அமர்ந்து இருந்தனர் .

     “நினைக்க நினைக்க மனசே ஆற மாட்டேங்குது ..எவ்வளவு நல்ல புள்ளை ..எப்படி அதுக்கு அடிமையானான்? உனக்கு கூடத் தெரியலையே ?எவ்வளவு கவனமா இருந்துருக்கான் பாவிப் பய ..என்ன படிக்க வெச்சு என்னா பிரயோசனம் ? போம்மா சுனிதா போய் ரெஸ்ட் எடுத்துக்கோ ..சும்மா மனசப் போட்டுக் குழப்பிக்காத .போனவன் போய்ட்டான் ..நம்மளை கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்திருந்தானா இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க மாட்டான்…இவனுக்காக நாம கவலைப்பட்டா நமக்குத்தான் உடம்பு கெடும் ..”   

       மாமியார் பிள்ளை இறந்த சோகத்திலும் மருமகளின் உடல் நலனில் அக்கறையுடன் மகன் மீதுள்ள கோபத்தில் நிதானமாக பேசினார் .

        “சரிங்க அத்தை “..சுனிதா அவர்களை ஏறெடுத்துப் பார்த்துத் தலை குனிந்து தன்அறைக்குச் சென்றாள். களைப்பில் அவளையும் அறியாமல் கண் மூடியவளை அழைத்தது அலைபேசியின் ஒலி. எடுத்துப் பார்த்தாள்…அவள்       

      கல்லூரித்தோழி மாலதி ..அவளின் சகலத்தையும் பகிர்த்து தோள் தரும் அன்பானவள் ..மதனுடனான காதல் முதல் குழந்தை இல்லாத ஏக்கம் வரை கவலைகள் சந்தோசங்களை மாலதியிடம் கொட்டி விட்டு லேசாவாள் சுனிதா… வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து ஒரு ஒழுங்கு முறைக் கோட்டுக்குள் வாழ்பவள் ..தற்சமயம் ஐந்து மாத கர்ப்பிணியான மாலதி செக்கப் இருந்ததால் முப்பதாம் நாள் சாமி கும்பிட வர இயலவில்லை .       

       “என்ன சுனி ..முப்பது கும்பிட்டாச்சா ?  நாளைக்கு நான் வரேன் ..வெளியே போயிட்டு வரலாம் வா .. “

        மனம் ஆறுதலுக்கு அலைந்தது .அடுத்த நாள் பெரியவர்களிடம் சொல்லி விட்டு வந்திருந்த மாலதியுடன் கிளம்பினாள். இருவரும் அருகிலிருந்த காபி ஹவுசில் அமர்ந்தனர் .

      “சொல்லு சுனி ..இனி உன் பிளான் என்ன ? உன் அம்மா வீட்டுக்குப் போகிறாயா ? நேற்று ஆன்ட்டி என்னிடம் போனில் பேசினார்கள் ..நடந்ததையே நினைக்காமல் சுனிதாவை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லும்மா ..நாமளே அவளைக் கண்கலங்காம பார்த்துக்கலாம் .எல்லா வசதியும் நம்மகிட்ட இருக்கு அண்ணன் அண்ணி கூட இருக்கப் பிடிக்கலைனா தனி வீடு பார்த்துப் போகலாம்னு நாங்க சொன்னோம்னு சொல்லு மாலதி என்று சொன்னார்கள் .உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம உன்னிடமே நேர்ல பேச யாருக்கும் மனம் வரல..” ..

       சுனிதா சில நிமிடங்கள் மவுனமாக “பார்த்தாயா என் நிலையை” என்பது போல் மாலதியைப் பார்த்தாள்…பின் பேசினாள்..

        “மாலதி உனக்கே தெரியும் மதனை நான் எப்படி விரும்பினேன் என்று..எல்லாவற்றையும் மறைக்காமல் என்னிடம் சொன்னவர் இந்த விசயத்தைமட்டும் ஏன் சொல்லவில்லை ? இதில் என் தவறும் இருக்கிறது மாலதி .அவரை நன்றாக கவனிக்கத் தவறி விட்டேன் .ஆபிஸ் விட்டு தாமதமாக அவர் வந்த போது கேட்டிருக்க வேண்டும் ..சமீபமா என்னுடன் அதிக நேரம் செலவிடாமல் எப்போதும் அறைக்குள்ளேயே இருந்த போது கேட்டிருக்க வேண்டும் ..அவர் தற்கொலை செய்துகொண்ட நாளுக்கு முன் பதட்டமாக உலாவிய போதாவது கேட்டிருக்க வேண்டும் ..ஐ டி வேலையில்இப்படி இருப்பது சகஜமான ஒன்று என நினைத்து கேட்காமல் விட்டது என் தவறுதான் .ஒரு வேளை நான் கேட்டிருந்தால் ..அவர் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு இருப்பாரோ ?

      ஆன்லைன் ரம்மி எனும் புதைகுழியில் விழுந்து மீள முடியாமல் சேர்த்த லட்சங்களை எல்லாம் இழந்து அதை என்னிடம் சொல்லும் தைரியமின்றி தற்கொலையை தேர்ந்தடுத்த மதனைப் போன்றவர்கள் இன்னும் எத்தனை பேர் இங்கு உள்ளனரோ? யார் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி சாவிலிருந்து அவர்களை மீட்பார்கள் ?

      சூதாட்டம் என்பது வெறும் மாயை என்பதை இனி நான் சொல்லப் போகிறேன் ..எந்த சோசியல் மீடியாவின் மூலம் இதற்கு அடிமையாகிறார்களோ அதே சோசியல் மீடியாவில் இனி என் விழிப்புணர்வுப் பதிவுகள் இருக்கும் .எங்கெங்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இதைப் பற்றி பேசுவேன் ..ஆன்லைனில் கவுன்சிலிங் சென்டர் துவங்கி ஆலோசனை தருவேன் .இபப்டி என்னால் முடிந்த ஆயுதங்களை ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக நகர்த்துவேன் .

     என்னால் முழுமையாக நீக்க முடியாது என்பது தெரியும் .அட்லீஸ்ட் என்னால் ஒருவர் திருந்தினால் கூடப் போதும் இறந்த மதனின் ஆன்மாவிற்கு அமைதி கிடைக்கும் .அப்புறம் ..இன்னொன்னு ..என் அம்மா அப்பாவிடம் சொல்லி விடு ..மதனின் கரங்களை என்று பற்றினேனோ அன்றே அவர் பெற்றோர் எனக்கும் பெற்றோர் ஆகி விட்டனர் என்று ..இனி அவர்களை முழுமையாக மதனின் இடத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கிருக்கிறது என்று சொல்லி விடு .

     அப்புறம் மாலதி வேறு கம்பெனியில் ஒரு நல்ல வேலை இருந்தால் சொல்லு … அப்ளிகேசன் போடறேன் ..”

     தீர்க்கமாக பேசி முடித்த சுனிதாவைப் பார்த்து ஆச்சர்யத்துடன் பெருமையும் கொண்டாள் மாலதி .ஒரு துன்பமே பெரும்பாலான பெண்களின் வலிமையைப் புரிய வைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்து சுனிதாவைக் கட்டிப்பிடித்து தனது ஆதரவைத் தெரிவித்து  இனி சூதாட்டத்துக்கு எதிரான போரில் உயிர்த் தோழி சுனிதாவின் பங்கும் இருக்கும் எனும் பெருமையுடன் விலகினாள் மாலதி .

Exit mobile version