தலைப்பிரசவம்! -மெய்யாத்தூர் சொ.வேல்முருகன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 145 தலைப்பிரசவம்! -மெய்யாத்தூர்சொ.வேல்முருகன்

“அய்யய்யோ போயிட்டியாடி”
என்று கதறி அழுத ஒரு குரல் அந்த ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போதே
என்னை சென்டிமென்டாய் பாதித்தது.

பிரசவ வலி வந்துவிட்ட எனது மனைவியை அந்த கவர்மென்ட்
ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு
டாக்டர் வந்துவிட்டாரா எனப் பார்க்கச் சென்றபோது இப்படி
ஒரு அழுகுரல்.

எனினும் மனதை திடப்படுத்திக் 
கொண்டு திரும்பி வந்து மனைவியை அழைத்துச்
சென்றேன்.நாங்கள் உள்ளே நுழையும்போதுதான் சற்று தூரத்தில் இருக்கும் அவுட்கேட்
அருகில் கூட்டமாக ஸ்டெரச்சரில் அந்தப் பெண்ணின்உடலை 
எடுத்துச் சென்றார்கள்.

குழந்தைதான் மிச்சம்; பாவம்
அவள்….என்ற முணு முணுப்பும்
முன்னே சென்றுகொண்டிருந்த
எனக்கு அரை குறையாய் கேட்டது.

பின்னால் ஆட்டோவில் இருந்து இறங்கி மெதுவாய் நடந்து வந்த மனைவிக்கு கேட்க வாய்ப்பில்லை
என்று நான் நினைத்த வேளையில்
‘என்னங்க அது’ என்று சற்று அச்சத்தோடு என் மனைவி அவுட் கேட்டைப் பார்த்து  கேட்டபோது எனக்கு சுரீர் என்றது.  

இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு டிஸ்சார்ஜ் ஆகிப் போகிறார்கள் போலிருக்கிறது:டாக்டர் ஸ்டிரிக்டாக ‘பெட்’ ரெஸ்டில்
இருக்கச் சொல்லியிருப்பார் அதான் ஸ்டெரச்சரில்  படுக்க
வைத்து வேனுக்கு அழைத்துப் போகிறார்கள் என்றுஅவள் மனதை கொஞ்சமும் சஞ்சலம் 
அடையாமல் சமாளித்து அழைத்துச் சென்றேன். 

 வார்டில் அட்மிட் செய்தபோது
‘ஏங்க!  ஊசியை வலிக்காமல்
போடச்சொல்லி நர்ஸிடம் சொல்லிட்டுப் போங்க’ என்று என்னை விட்டுப் பிரிய 
மனமில்லாதவளாய் பயத்தோடும் கெஞ்சலோடும் என்னிடம்
சொல்லியபோது எனக்குத்தான்
 ஊசி குத்தியதுபோல் அவளை எண்ணி மனசு வலித்தது. 

இருவருமே ஒருவித பயத்தில் இருந்தாலும் அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாது  
என்முகம் பார்த்து ஏதாவது பேச வேண்டுமென்று பேசுகிறாளே
 என்று எனக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.
இருந்தாலும் அவளிடம் மறைத்துக்
கொண்டு நான் தைரியமாக
இருப்பவனைப்போல பதிலைச் சொன்னேன்.

“அதெல்லாம் நர்ஸ்கிட்டே உனக்கு முன்னாலேதான சொன்னேன்.
அவங்க  கூட வலிக்காமத்தான்
போடுவோம்னு சொன்னாங்கள்ள”
என்று ஒரு குழந்தையிடம் சொல்வதுபோல் சமாதானப் படுத்தினேன்.

நீ மட்டும் பயப்படாமல் இருந்தால்
போதும் என்று நான் அவளைத் 
தேற்றிவிட்டு கனத்த மனதோடு வெளியில் வந்தமர்ந்தேன். 

 கொஞ்ச நேரத்திலேயே லேடி டாக்ர்
என்னை அழைப்பதாகச் சொல்ல 
உள்ளே நான் வேகமாக ஓடினேன்
பிரசவமாகிவிட்டதோ என்ற ஆவலோடு.

ஆனால் டாக்டர் என்னிடம் ‘சார் டெலிவரி நாளைக்குதானிருக்கும்:
ஸிஸேரியனாகவும் இருக்கலாம்,
எனறபோது  இன்றே டெலிவரி ஆகிவிடும்  என்ற நம்பிக்கையில் 
இருந்த எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. 
 
நாளைக்கு ‘ரோகினி’ நட்சத்திரம்
குழந்தையின் மாமாவுக்கு ஆகாது
 என்று  மனைவி பயந்துகொண்டே
இருந்தாளே என்று மனதில் குழப்பம் மிகுந்தது. எப்படியாவது இன்றே பிரசவமாகிவிடாதா  என்று  பிரார்த்திக் கொண்டே இருந்தேன்.   

மீண்டும் மனைவி என்னைக் கூப்பிடுவதாக மாமியார் என்னை அழைக்க உள்ளே சென்றபோது  அவள் களைப்புடன் படுத்துக் கிடந்தாள்.

நாளைக்கு ‘ரோகினி’ நட்சத்திரங்க;
டாக்டரிடம் சொல்லி டெலிவரியை ஒரு நாள் தள்ளிப்போடச் சொல்லுங்க, நான் ஒரு நாள் வலியைப் பொறுத்துக் கொள்கிறேன் என்றாள்.

அடி பைத்தியக்காரி! ஒரு ஊசி வலிக்கே பயந்தவள் ஒரு நாள் பிரசவ வலியைப் பொறுத்துக்
கொள்கிறேன என்கிறாளே!
அண்ணன்மீது இவ்வளவு உயிரா
 என்று அவளின் பிறந்த வீட்டுப்
 பாசம் என்னை வியக்க வைத்தது.
‘சரி;தள்ளிவைக்கச் சொல்கிறேன்’
என்று ஒப்புக்கு  சொல்லிவிட்டு
வெளியில் வந்து காத்திருந்தேன்.

சற்று நேரத்தில் அறையிலிருந்து என் மனைவியின் வலி மிகுந்த முனகல் சத்தம்  கேட்டது.

ஐயோ! அம்மா! அம்மா! என்றும்
 என்று வலியால் அவதிப்பட்டு அழும் சத்தம் அதிகம் ஆக ஆக எனக்குஅழுகை வந்தது. திடீரென வலி தாளாமல் வேகமாகக் கத்துவாள்.பிறகு மிகவும் தளர்ந்து சோர்வடைந்து விடுவாள் போலும்.

நிசப்தமாக சில நிமிடங்களை
உணர்வேன்.மீண்டும் வலி வந்து
அவளை வருத்தும். சக்தியின்றி கிடப்பவளை தாங்க முடியாத 
அந்த வலி வந்து வந்து
எழுப்ப தன்னைமறந்து துடித்து 
அம்மா!அம்மா!என்று கத்துவாள்.

இப்படியே அரை மணி நேரத்திற்கு
மேல் அவளுக்கு உடலிலும் எனக்கு
மனதிலும் தாங்க முடியாத வலி
தொடரும். என்னால் சும்மாவே
இருக்க முடியவில்லை. நான் அங்குமிங்கும் வேகமாக நடந்து
கொண்டே இருப்பேன்.இந்த
கஷ்டமான நேரங்களை மிக விரைவில்  என்னையே மறந்து கடந்து விடவேண்டுமென்ற உந்துதலில் இன்னும் வேகமாக
நடப்பேன்.
 
மேலும் மனதிற்குள் ஒன்று,
இரண்டு, மூன்று என்றுஎண்களை 
எண்ண ஆரம்பிப்பேன். ஐம்பதை முடிப்பதற்குள் பிரசவமாகிடும்:
ஆகிவிடவேண்டுமெனறு நானே
நினைத்துக்கொண்டு எண்களை
வேகமாக எண்ண ஆரம்பிப்பேன். எண்40 வந்தவுடன் பிரசவ அறிகுறி எதுவும் இல்லாதது கண்டு
வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெல்ல மெல்ல மெதுவாக எண்ணி
50 ஐ முடிப்பேன். எண்கள்தான் முடியும்.பிரசவம் முடியாது.

மறுபடியும் ஒரு ஐம்பதை எண்ண ஆரம்பிப்பேன்.இப்படியே என் 
உதடுகளைஅசைத்து  அசைத்து
 உள்ளச் சூட்டினைஆற்றிக்
கொண்டே இருந்தேன்.

நேரம் ஆக ஆக அந்த அரசு ஆஸ்பத்திரியின்மீது அதிக கோபம் வந்தது. கவர்மென்ட் ஆஸ்பத்திரியாய் இருப்பதால்
அலட்சியமாய் இருக்கிறார்களோ என சந்தேகம் வரும்.  எப்படியாவது கடன் வாங்கி முதலிலேயே பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம்  என்றெல்லாம் 
மனதைக் குழப்பிக் கொண்டிருந்த 
நேரத்தில் “சார் உங்களை டாக்டரம்மா கூப்பிடுகிறார்கள்”
என்று நர்ஸ் வந்து சொன்னார்.

” உங்கள் மனைவிக்கு இப்போதுள்ள கன்டிஷனில் முன்பே சொல்லியபடி ஸிஸேரியன் தான் செய்யவேண்டும்;அதுவும் இரவு 11மணிக்குள் செய்ய வேண்டும். உஙகள் மனைவியின் 
பிளட் குரூப் O நெகடிவ்:  இங்கே ஸ்டாக் திடீரென தீர்ந்துவிட்டது ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். 
கிடைப்பது அரிதானதாலும்  அவசரம் என்பதாலும் நீங்களும் முயற்சியுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று டாக்டர்  பொறுப்போடும்
அக்கறையோடும் சொன்னபோது  
மணியைப் பார்த்தேன். அப்போது மாலை 6மணி ஆகியிருந்தது.

பிளட்  டோனர்ஸ் அசோசியேஷன் முகவரி தெரிந்து கொண்டு
ஓடினேன். 

மதுரையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் பெண் போலீஸ் அதிகாரி என் மனைவியின் பிளட் குரூப் ‘O’நெகடிவ் என்றும், 
அவர்கள் தொடர்பு கிடைக்வில்லை என்றும் முயற்சித்துக் கொண்டே இருப்பதாகவும்  சொன்னார்கள்.

அவர்களை  நேரிலேயே சென்றுபார்த்து விடலாம் என சைக்கிளை எடுத்தேன்.
தெருக்களில் டிராஃபிக் இல்லை.
இடையில் ஒருவர் இன்னைக்கு
‘ லாக்டௌன்’ தெரியாதா என்றுகேட்டார்.எதிர் முனையில்
காவல்ஜீப் நின்றது.
மருத்துவத்திற்கானஆதாரம் 
என்னிடம் இருந்தாலும்
நின்று பதில் சொன்னால் நேரமாகிவிடுமென்பதைவிட அவர்கள் ஆதாரம் சரியில்லை என விடமாட்டார்களோ என்ற அச்சமே மேலோங்க வேறு பாதையில் வேகமாகச் சென்றேன்.

அந்த அதிகாரி வீட்டை 7மணிக்கு
நெருங்குகையில் ஜீப் நிற்பதைப்
பார்த்தஉடன் நிம்மதியானது.
அதிகாரியைப் பிடித்து விட்ட திருப்தி.நான் சைக்கிளை 
வெளியில்நிறுத்தும்போது 
ஜீப் புறப்படும் சத்தம்  கேட்க மீண்டும் பயந்து தலைதெறிக்க 
ஓடி ஜீப்பின் முன் நின்றேன்.

நான் ஓடிவந்த நிலையில்மூச்சு இரைக்க இரைக்க அவர்களை வணங்கிய கையோடு  “மேடம்  
ஆஸ்பத்திரியில் ..என் மனைவி பிரசவத்திற்கு…பிளட்  …என்று
 தட்டுத்தடுமாறி பேசுவதைப் புரிந்து கொண்டு என் அருகில் வந்து பிளட் கொடுக்கத்தான் புறப்படுகிறேன் என்றும் பிளட் டோனர்ஸ்அசோஷியேசனிலிருந்து ஆள் அனுப்பியிருந்தார்கள் என்றபோது பேசும் தெய்வமே 
என் எதிரில் நிற்பதாக நினைந்து
நெகிழ்ந்தேன்.

ரத்தம் கொடுக்கும் அமைப்பு இப்படி ஆள் அனுப்பி சேவை  செய்தது என்னை பிரமிக்க வைத்தது.  முகம் தெரியாதவர்களுக்கும் அவர்களின் நற்பணி மிகுந்த
ஆறுதல் தந்தது. 

 போலீஸ் அதிகாரி அவர்கள் மேலும் என்னை துரிதப்படுத்தி
‘ஜீப்பில் ஏறிக்கொள்ளுங்கள்: சைக்கிளை பிறகு அனுப்பி
வைக்கிறேன்’என்று மிகவும்
கரிசனத்தோடு சொன்னபோது
நெகிழ்ந்து போனேன்.

சுமார் 8 மணி  அளவில்  அந்த அதிகாரி பிளட் கொடுத்துவிட்டு
அதே மிடுக்கோடு வெளியே வந்தபோது நான் கண்கள் பனிக்க
கரங்களைக் குவித்து நின்றேன்.
அப்போது அவர் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று என் கைககளை அன்போடு குலுக்கியபோது ஒரு பூ மரம் 
என் உடலெங்கும் பூச்சொறிந்த
உணர்வில் பூரித்துப் போனேன்.

விழிகள் மலர நன்றியோடு அவர்களை வழி அனுப்பி வைத்து
விட்டு  ஆப்ரேஷன் ரூம் அருகே
வந்தபோது ஒரு நர்ஸ் என்னிடத்தில் ஓடிவந்து  ஒரு ஃபாரத்தை நீட்டி  இந்த இடத்தில்
கையெழுத்து போடுங்கள் என்று
அவசரப் படுத்தினார்.
எதற்காக என்று எதுவும் சொல்லாமல்  “சீக்கிரம் ப்ளீஸ்”
என்று கெஞ்சாத குறையாகக்
கேட்டார். எனது மனைவியின் நலனுக்காகத்தான் அவர்
அவசரப்படுத்துகிறார்  என அவரது
முகபாவனையிலிருந்து தெரிந்து
கொண்ட நான் எதையும் படிக்காமல் கையெழுத்திட்டு அனுப்பினேன்.

பக்கத்தில் , முன்பு பிரசவத்திற்கு
வந்து இறந்து போன அந்தப் பெண்ணின் உறவினர்கள் புறப்படுவதற்கு உடைமைகளை எடுத்துக்கொண்டிருந்தபோது
என்னையும் அந்த நர்ஸ் ஓடிவந்து கையெழுத்து வாங்கியதையும்  கூர்ந்து கவனித்துக் கொண்டே
இருந்தார்கள். 

அந்தப் பார்வையே கொஞ்சம்
அச்சமாய் இருந்தது.அவர்கள்
பார்வையிலிருந்து
கையெழுத்திற்கான காரணம்
அவர்களுக்குத் தெரிந்திருக்குமென யூகிக்க முடிந்தது.
இருந்தும் எனக்கு சற்று யோசனை.
நான் கேட்டு அவர்கள் ஏதாவது
சொல்ல அது இன்னும் என்னை 
 பாதித்துவிடுமோ என்ற பயத்தோடும், காரணத்தை அறியுமுன் குழந்தை பிறந்து
விட்டால் நல்லது என்ற
துடிப்போடும் ஒவ்வொரு விநாடியையும் ஒரு யுகமாகக்
கழித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் தாமதம் ஆக ஆக அவர்களும் புறப்பட்டுப் போய்விட்டால் காரணத்தை அறிய மற்றவர்களைத் தேடுவதைவிட
இவர்களிடமே கேட்டு
விடலாமென்று  நானே வலியச்
சென்று பேசி காரணத்தைக் கேட்டேன்.

” ஆப்பரேஷன் சமயத்தில் தாய்க்கோ சேய்க்கோ உயிருக்கு
ரிஸ்க் இருக்கலாம். அதற்கான
பொறுப்பு நம்முடையது”என்ற
வாசகமே அது என்று
அவர்கள் விளக்கம் சொல்ல எனக்கு இதயத்துடிப்பு அதிகமானது.

விழிநீர் வழிந்திடாமல் கன்ட்ரோல்
செய்து கொண்டு ‘சரிங்க’ என்று
கண்ணீரை அடக்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள மறைவிடத்திற்கு
ஓடி தேம்பித் தேம்பி அழுதேன்.

அவர்களிடத்திலும் இப்படித்தான்
கையெழுத்து வாங்கினார்களாம்.
அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை ஒருவேளை என் மனைவிக்கும்……..
நினைக்கக் கூடாததையெல்லாம் பாழும் மனது நினைத்து
நினைத்து …பைத்தியம் 
பிடித்ததுபோல் சத்தமாகஅழுது கொண்டிருந்தேன்.

அப்போதுதான் என்அழுகுரலையும்
 மீறி வேகமாக என் காதில் வந்து ஒலித்தது அந்த அழுகுரல் .

ஆம்! என் குழந்தையின் முதல்
சப்தம் அது.என்னை அறியாமல்
மனதுக்குள் பொங்கி வந்தது 
மகிழ்ச்சி! எனது ஆற்றாமை கண்டு என் குழந்தை எனக்காக அழுவது
போல் இருந்தது. இவ்வளவு நேரம்
தனக்காக இன்னலுற்றுக் கிடந்த
தன் தாய்க்காக அழுவது போலிருந்தது.இப் பூ உலகில்
அடியெடுத்து வைத்த முதல் கணமே எங்கள் சுக துக்கங்களில்
சமமாகப் பங்கெடுக்க வந்திருப்பதுபோல் அந்தப் புதிய 
ஜீவனின் புதுக்குரல் ஒலித்தது.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு
மகிழ்ச்சியோடு மனைவியையும் குழந்தையையும் பார்க்க நான்
ஓடியபோது எதிரில்வந்த டாக்டர் 
புன்முறுவலோடு “வாழ்த்துகள்! 
உங்கள் மனைவியும் குழந்தையும் நலமே” என்றபோது  நன்றியோடு அவர்களை வணங்க ‘போய் முதல்ல குழந்தையைப் பாருங்க’ 
என்று பெருந்தன்மையோடு அனுப்ப மகிழ்ச்சி எல்லை மீறியது.

மாப்பிள்ளை “நீங்கள் லீவு எடுத்து வந்து அருகிலேயே இருந்ததால்
தான் என் மகள் உயிர் பிழைத்தாள்”
என்று என்னை என் மாமனார் பெருமைப்படுத்த”உயிர் பிழைத்தது என்மனைவி அல்லவா” என்று உற்சாகத்துடன் நான்
உரிமைக் குரலெழுப்ப அனைவர்
முகத்திலும் ஆனந்த வெள்ளம்.
      ***************************

Exit mobile version