காலை ஆறு மணிக்கே சூரியன் தன் கடமையை செய்ய புறப்பட்டுவிட்டான். பளீரென வெளிச்சம் வந்தும் மருதாயியால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை, மூப்பின் காரணமா? இல்லை உடலில் போதிய சத்து இல்லாததின் காரணமா? என தெரியவில்லை.
வாச, தெளித்து கோலம் போட வேண்டுமே என கஷ்டப்பட்டு எழுந்தவள், பொத்தென்று தரையில் விழுந்தாள். அப்படியே உறங்கிப் போனாள்.
பாட்டி … பாட்டி… என்ற கூப்பாடு போட்டபடியே கதவைத் திறந்த அருணா. பாட்டி, இந்தாங்க என்று சூடான சத்துணவை நீட்டினாள்.
லேசாக கண்ணை திறந்து பார்த்த பாட்டியின் அருகில் வந்த அருணா, பாட்டி காய்ச்சலடிக்குதா? ஏன் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்க ஆமாம் என்று மருதாயி தலையாட்டினாள்.
அருணா சொன்னதால், வேலை முடித்து, சத்துணவு ஆயா சரோஜா, மருதாயியை பார்க்க வந்தாள். அம்மா உடம்பு இப்படி அனலாய் கொதிக்குதே நான் போய் நர்ஸ் மல்லிகாவை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டாள்.
நர்ஸ் ஊசி போட்டுவிட்டுச் சென்றபின். சரோஜா கொடுத்த கஞ்சியை குடித்துவிட்டு மருதாயி முடங்கிப்போனாள்.
காலையில் உடல் சற்று தெம்பாகி, முனகிக்கொண்டே எழுந்த மருதாயி, தன் வீட்டு வாசதெளித்து கோலம் போட்டாள், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று கேட்டின் முன்னால் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டு நிமிர்ந்தாள்.
ஏன் பாட்டி, உங்களுக்கு இந்த வேலை, சம்பளமும் கிடையாது என்ற வாட்ச்மேன், கோவில் வாசலில் கோலம் போட்டாலாவது புண்ணியம் கிடைக்கும் என்றான்.
பள்ளிக்கூடமும், ஒரு கோவில் மாதிரிதான் என்று சொன்னபடியே மருதாயி அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளை பார்த்ததும், டிபன் கடை மணி அய்யர், மந்தார இலையில் மூன்று இட்லிகளையும், கெட்டி சட்னியும் வைத்து அவளிடம் கொடுத்துவிட்டு சினேகமாக சிரித்தார்.
வீட்டுக்கு வந்த மருதாயி குளித்து விட்டு, கணவர் மற்றும் ஒரே பெண்ணின் படத்திற்கு பூக்களை வைத்து விளக்கேற்றினாள்.
கைகூப்பி வணங்கும்போது, மருதாயியின், எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றது.
மகள் அமுதா, வீட்டருகே இருக்கும் பெண்கள் மேனிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். பள்ளி விட்டு வந்ததும், எங்கள் நிலத்தையே, விளையாட்டு மைதானமாக கருதி, அங்கே ஈட்டி எறிதல், குண்டு எறிதல் பயிற்சி எடுப்பாள். போட்டிகளில் வென்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பாள்.
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், பொறியியல் கல்வி கற்க அமுதாவிற்கு இடமும் கிடைத்தது, படித்து முடித்தவுடன் நல்ல வேலையும் கிடைத்தது.
ஒருநாள், பள்ளித் தலைமை ஆசிரியை, அமுதாவின் அப்பாவை சந்தித்து, உங்கள் வீட்டருகே இருக்கும் நிலத்தை பள்ளி விளையாட்டு மைதானமாக மாற்றிக்கொள்ள அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்.
அரசாங்கத்திற்கு எழுதி ஒரு கணிசமான தொகையை நஷ்ட ஈடாக பெற்றுத்தருகிறேன் என்றார்.
விவசாய நிலத்தை கேட்கிறாரே என்று மனம் சங்கடப்பட்டாலும், தன் பெண்ணைப் போலவே மற்ற பிள்ளைகளும் பயன் பெறட்டுமே என்று நினைத்து இலவசமாகவே பள்ளிக்கு எழுதித் தருவதாக அமுதாவின் அப்பா சம்மதித்தார்.
தாய் வீட்டு சீதனமாக உன் அப்பா உனக்கு கொடுத்த நிலத்தை உன் அனுமதியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு நான் கொடுக்க சம்மதித்ததில் உனக்கு வருத்தம் இல்லையே என மனைவியிடம் கேட்டார்.
அரைக்காணி நிலத்தில் அப்படி ஒன்றும் பெரிதாக வருமானம் வருவதில்லையே? இருவரும், வேலைக்குச் சென்று சம்பாதித்து தானே குடும்பம் நடத்துகிறோம்? பிறகென்ன? உங்க முடிவில் எனக்கும் சம்மதமே, என்றாள் மருதாயி.
சில வருடங்களிலேயே, மருதாயி குடும்பம் சற்று உயர்ந்த நிலைக்கு வந்தது. அமுதா நான்கு சக்கர வாகனம் வாங்க முடிவெடுத்து, தன் அப்பாவை அழைத்துக் கொண்டு பக்கத்து நகருக்கு சென்றாள். வீடு திரும்பும் பொழுது, வழியில் விபத்து என்ற பெயரில் காலன் அவர்கள் உயிரை பறித்துக் கொண்டான்.
எப்பொழுதுமே, தனக்கு ஆண் வாரிசு இல்லையே என்று வருந்தாமல் வாழ்ந்து வந்தவர் மருதாயியின் கணவர். தன் அண்ணன் இறந்தவுடன், அவருடைய மகன் குமரனை தன் மகனாகவே பாவித்து வளர்த்து வந்தார்.
சித்தப்பாவும், தங்கையும் இல்லாத நிலையில், சித்திக்கு, நாம் தானே இனி துணை என்று எண்ணாமல், அவரின் அரைக்காணி நிலத்தை அபகரிப்பது பற்றியே சிந்தித்தான். நிலத்தை தன் பெயருக்கு எழுதித் தருமாறு அடிக்கடி,மருதாயியிடம் வற்புறுத்தினான்.
நிலத்தை உனக்கு எழுதிக் கொடுத்தால், நீ ஒருவன் மட்டுமே பயனடைவாய், ஆனால் பள்ளிக்கு எழுதிக் கொடுத்தால் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பெண் பிள்ளைகள் பயனடைவார்கள், உன் சித்தப்பாவின் ஆசையும் அதுதான் என்று கூறி மருதாயி மறுத்துவிட்டாள்.
மருதாயியின் மேல் அதீத கோபம் கொண்ட குமரன், அவளை தனிமையில் தவிக்க விட்டுவிட்டு சென்று விட்டான்.
பாட்டி என்ற குரல் கேட்டு நினைவு திரும்பிய மருதாயி, வெளியே நின்றிருந்த மல்லிகாவை பார்த்து, நர்சு பாப்பாவா, வாம்மா என்று வரவேற்றாள்.
பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு சொட்டு மருந்து போட வந்தேன் என்றவள் பாட்டி! சத்தான பழங்கள், பால் நிறைய சாப்பிடுங்கள் என்றாள்.
கணவரும், மகளும் போனபின், தினமும் மருதாயியின் உணவுப் பழக்கம் மாற்றமில்லாமல் ஒரே விதமாகத்தான் இருக்கும். காலையில் மணி அய்யர் தரும் மூன்று இட்லி, மதியம் பள்ளிக்கூட சத்துணவுதான்.
மதியம் மூன்று மணிக்கு மேல்தான் மருதாயி வீட்டு அடுப்புக்கு வேலை. தினம் ஏதாவது ஒரு சுண்டலை வேகவைத்து, தாளித்து வாழை இலையில் பொட்டலமாக்குவாள். நான்கு மணிக்கு பள்ளியில் மணி அடிக்கும் பொழுது மருதாயி வீட்டு வாசலில் சுண்டல் விற்பனைக்கு வந்துவிடும். மைதானத்திற்கு வரும் பெண் பிள்ளைகள் சுண்டலை வாங்கி பசியாற்றிக் கொள்வார்கள். மீதமாகும் சுண்டலே பெரும்பாலும் மருதாயிக்கு இரவு உணவாக அமைந்துவிடும்.
எல்லா மாணவிகளையும் தன் பேத்திகளாக பாவித்து அவர்களிடம் வாஞ்சையாக பழகுவாள். அவர்களில் அருணா என்ற மாணவி மட்டும் மருதாயியிடம் அன்பாக பேசிப் பழகுவாள். நாள்தோறும் தனக்கு பள்ளியில் வழங்கும் சத்துணவின் ஒரு பகுதியை பாட்டிக்கு கொண்டு வந்து கொடுப்பாள்.
பகல் பொழுதை இப்படி கழிக்கும் மருதாயியை, இரவில் தனிமை வாட்டி எடுக்கும். வெறுமை மனதை பாரமாக அழுத்தும்.
ஒருநாள் மூச்சிரைக்க, மருதாயி வீட்டிற்குள் நுழைந்த அருணா, பாட்டி, நாளைக்கு பள்ளி ஆண்டு விழா. எங்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிப்பார்கள். நீங்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வந்து நான் பரிசு வாங்குவதை பார்க்க வேண்டும், உங்களுக்கும் பொழுது போகும் என்றாள்.
விழாவிற்கு தலைமை தாங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரேவதி ஐ.பி.எஸ் வந்திருந்தார். மைக்கைப் பிடித்த அதிகாரி, நானும் இதே பள்ளியில் ப்ளஸ் டூ படித்தவள் தான் என்று பேச்சை ஆரம்பிக்க கூடியிருந்த அனைவரும் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.
நானும், இதே விளையாட்டு மைதானத்தில்தான் பயிற்சி செய்தேன். என் அப்பா ஆபீஸ் விட்டு வந்து என்னை அழைத்துச் செல்லும் வரை, விளையாடிக் கொண்டிருப்பேன். சில நேரம் மருதாயி அம்மா வீட்டு வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். அவர் தான் எனக்கு துணையாக என்னருகே உட்கார்ந்திருப்பார் என்றார்.
இந்த மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்த உடனே மருதாயி அம்மாவைப் பற்றி கேட்டறிந்தேன். இருபதாண்டு தனிமை வாழ்க்கை என்பது மிக மிகக் கொடுமையானது. ஆயுள் தண்டனை கைதி கூட பதினான்கு ஆண்டுகள் கழித்து வெளியே வந்து விடுவர். ராமர் வனவாசம் கூட பதினான்கு ஆண்டு காலம்தான் என ரேவதி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
குமாஸ்தா மகள் ரேவதியா பேசுறது என்று குரலை அடையாளம் கண்டு, மருதாயி கண்களை சுருக்கி மேடையை உற்றுப் பார்த்தாள்.
ரேவதி, கூட்டத்தைப் பார்த்து நீங்களெல்லாம் இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் மைதானம் யாருக்குச் சொந்தமான இடம் என்று தெரியுமா? என்று கேட்டாள்.
கூட்டத்தின் சலசலப்பு அடங்கியவுடன், சுண்டல் விற்கும் மருதாயி அம்மாவிற்கு சொந்தமான இடம்தான் அது என்றார்.
மருதாயி அம்மா, இந்த ஊருக்கு மேலும் ஒரு உதவி செய்யப் போகிறார் தான் வாழ்ந்து வரும் வீட்டை, அவருடைய இறப்பிற்கு பின் நூலகமாக மாற்ற வேண்டும் என்று அரசாங்கத்திடம் மனு கொடுத்துள்ளார் என்றதும் அரங்கில் ஏற்பட்ட ஆரவாரம் அடங்க வெகு நேரமானது.
பாட்டி உங்களைப் பற்றித்தான் கூறுகிறார்கள் என்று எல்லோரும் மருதாயியை சூழ்ந்து கொண்டனர். இதுநாள் வரை அவரை சுண்டல் விற்கும் ஆயா என்று மட்டுமே அறிந்திருந்தவர்களுக்கு, மருதாயி மீது மதிப்பு கூடியது.
இங்கே, உங்களிடம் நான் என்னுடைய ஆசையை கூற விரும்புகிறேன். மருதாயி அம்மாவின் இறுதிக்காலம் வரை அவரை என்னுடன் வைத்துக்கொள்ளப் போகிறேன் என்றவர் கூட்டத்தில் மருதாயியை தேடினார்.
தலைமை ஆசிரியை இறங்கிவந்து, மருதாயி பாட்டியை மேடைக்கு அழைத்துச் சென்றார்.
ரேவதி ஐ.பி.எஸ், மருதாயியின் காலில் விழுந்து வணங்கினாள். ரேவதியை எழுப்பி ஆரத்தழுவிய மருதாயி, உன் அன்பான வார்த்தைகளே என்னை மேலும் சில ஆண்டுகள் உயிரோடு வாழ வைக்கும். ஆனால் என் உயிர் இந்த கிராமத்தில் தான் பிரியவேண்டும் என விரும்புகிறேன். என்னை மன்னித்து விடம்மா என்றார்.
தன்னலம் கருதாத, ஊரார்க்கு உதவும் நல்லெண்ணம் கொண்ட மருதாயி அவையோரின் வாழ்த்தொலி கேட்டு பூரிப்படைந்தாள்.
—————