இறகைத் தேடும் இரவிகள்…-பா. ஏகரசி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 153 இறகைத் தேடும் இரவிகள்… பா. ஏகரசி

குறுக்கும் நெடுக்குமான ஒழுங்கற்ற மக்கள் கூட்டமும், கூட்டத்தில் எல்லோர் முகத்திலும் குடிகொண்டிருந்த பதட்டமும் ஏதோ விபரீதம் என்பதைப் படம்பிடித்துக் காட்டியது. வளைந்து வளைந்து நீண்டு கொண்டிருந்த கருஞ் சாலைத் துண்டும் ஆங்காங்கே முளைத்திருந்த சிறு சிறு உணவகங்களும் அதனோடு ஒட்டிக் கொண்டிருந்த பெட்டிக் கடைகளும் அந்த இயற்கை அழகை ரசித்தவாறு உண்டு களிக்க ஓர் அற்புத வாய்ப்பு. ஆனால் இன்று ஏனோ கடைகள் இழுத்து மூடப்பட்டன. கடையைச் சுற்றிச் சிதறிக்கிடந்த நெகிழிகள் குப்பைகளைக் கிளறி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு செவலை நாக்குட்டிகள் தவிர வேறு யாரும் அங்கு இயல்பாய் இல்லை. வனத்துறையினரும் அந்த இடத்தை கடந்து செல்ல நீண்ட வரிசையில் சாரை சாரையாக காத்திருந்த  வாகனங்களிலிருந்த மக்களும் இருண்ட முகத்தோடு ஆங்காங்கே கூடி கூடி கிசு கிசுத்துக் கொண்டிருந்தனர்.

“ராத்திரி நேரத்துல ரோட்டுல அங்க இங்கனு பார்த்ததா சொல்லுவாங்க ஆனா இன்னைக்கு இங்க வர வந்து அட்டூழியம் பண்ணிட்டு போயிடுச்சே…” என்றவாறு ஆட்டோவை மரத்தடி நோக்கி பின்புறமாக இழுத்து நிறுத்தினான் பாலு.

“அட்டூழியந்தான்”… என்றதோடு நிறுத்திய சூரன் எங்கோ தூரத்தில் எதையோ வெறித்துக் கொண்டிருந்தான். ஏதோ சொல்ல எத்தனிப்பவன் போல் தொடங்கினாலும் அதற்கு மேல் எதுவும் பேசாது மௌனமாக தனது விழியை வானத்து வெளியில் உலாவ விட்டுக் கொண்டிருந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த பாலுவும் காசியும் அவன் மேற்கொண்டு எதுவும் பேசாததால் தங்களது புலம்பலைத் தொடர்ந்தனர்…

“அட இவ்வளவு நாளா, காட்டத் திருத்தி அரும்பாடுபட்டு உருவாக்குன மலை பண்ணையம் பூராவும் முழுசா வூடு வந்து சேர விடாம உசுர எடுத்துச்சுங்க… இப்ப என்னடான்னா அவனவன் வயித்த கட்டி வாயக்கட்டி கட்டுன வீட்டுல நிம்மதியா குந்தியிருக்க முடியமாட்டுது, பொழுது விடுஞ்சு கதவ தெறந்ததும் யானைக் கூட்டமாவுல கெடக்கு எப்படி நிம்மதியா பொழப்புகள பாக்குறது… ” என இவைகளால் தங்களது விவசாயத்தில் ஏற்படும் கஷ்டத்தையும் சேர்த்துப் புலம்பினான் காசி.

அதுவரை எங்கோ தூரத்து மலை உச்சியும் வெளுத்த வானத்தில் சிதறிக் கிடந்த கீற்று மேகமும் ஒன்றோடொன்று முத்தமிட்டுக் கொண்டிருப்பதை வாஞ்சையோடு வெறித்துக் கொண்டிருந்த சூரனை இவர்களது புலம்பலின் சாரம் நிஜத்தில நிறுத்திட, உள்ளக் குமுறலை வார்த்தையால் விவரிக்க முயன்றான், “சும்மா அதுங்களையே கொற சொல்லாதிங்க… நாம…… ” என்று பேச ஆரம்பித்த சூரனைத் தடுத்து நிறுத்தினான் பாலு.

” அப்பா சாமி… யானை, பறவை, காடு, வாழ்வாதாரம், உலகம் எல்லாத்துக்குமானதுனு உடனே நீ ஆரம்பிக்காதா… என்னமோ காட்டையும் மிருகங்களையும் இவன்தான் கண்டுபுடிச்ச மாதிரி…” என்று பாலுவும் காசியும் சூரனை வழக்கம் போல் கிண்டலடித்தனர். பால்ய நண்பர்களான இவர்களுக்கு இது வழக்கமான ஒன்றுதான். மூவருக்கும் ஆட்டோ ஓட்டுவதும் பூர்வீக மலை நிலத்து விவசாயமும் தான் தொழில். அவர்கள் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போதே வண்டிகள் ஒவ்வொன்றாக நகர ஆரம்பித்தன.

யானை இழுத்துப் போட்டிருந்த கரும்பு லாரி ஒருவழியாக அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள் நகரத் தொடங்கியது. ஆனாலும் அங்கிருந்த கடைகள் ஏனோ இயல்புக்குத் திரும்ப முடியாமல் தவித்தன. நாட்களின் ஓட்டத்தில் யானைகளின் வரவு அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து கொண்டே இருந்தது. அப்படி காட்டை ஒட்டிய குடியிருப்புக்குள் அவை நுழையும் போது அந்த பகுதி முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டது. சில நாட்கள் தொடர்ந்து இதே பேச்சாக இருக்கும். மக்கள் அனைவரும் யானைகளைக் கரித்துக் கொட்டும் போது சூரன் போன்ற ஒன்றிரண்டு பேர் அவைகளுக்கு வக்காலத்து வாங்கித் திரிந்தனர். எப்படி விலங்குகள் இங்கு வருவதைத் தடுப்பது என்று பேசி பேசி சில பல விபரீத யோசனைகளுக்குப் பின் வழக்கம் போல எதுவும் செய்யாது கடந்து போவது வாடிக்கையானது.

என்றைக்கும் போல அன்றைக்கும் இனிமையாகவே விடிந்தது. இரவெல்லாம் பனிப் போர்வை போர்த்தி உறங்கிய அந்தக் காடு இளஞ்சூரியனின் கதகதப்பில் சோம்பல் முறித்துக் கொண்டிருக்க, மென்மையாக ஓடிய ஆற்று நீர் ஷட்ஜம் ஆகத் தொடங்கிட… மயில், காட்டெருமை, வரையாடு, நாரை, குயில், குதிரை என ஒவ்வொன்றின் சப்தமும் ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம் என் ஆரோகண ஸ்வரங்களாகத் தொடர்ந்து வர அந்த கம்பீரமான யானையின் பிளிறல் நிஷாதமாக முழுமை பெற்றது. ஆயிரமாயிரம் இசைக் கலைஞர்கள் அதி நவீன இசைக் கருவிகளுடன் சிரத்தையோடு நடத்தும் இன்னிசைக் கச்சேரிகளனைத்தும் இங்கு நடக்கும் இயற்கை கச்சேரிக்கு இடாகுமா என்பது கேள்விக்குறியே…

பெரும்பாலும் இயற்கை கச்சேரிகளுக்கு மௌன கீதங்களாகக் கடந்து செல்லும் அவளும் அவளது குடும்பமும் சில சமயங்களில் தூம்பொலியாக உச்ச சாயலில் பிளிறத் தவறுவதில்லை.

தொலைந்து போவது எப்போதும் கவலை நிறைந்ததாகவோ அல்லது பயம் தொற்றிக் கொண்டதாகவோ இருப்பதில்லை. சில சமயங்களில் தொலைந்து போவது கூட அலாதியானது தான். அவளும் தொலைந்து போவதில் ஆனந்தம் கொண்டவளாகவே இருந்தாள். காடுகளின் கச்சேரிக்குள் தொலைந்து அவ்வப்போது அவள் வாசிக்கும் தூம்பு முல்லையின் மணிமகுடம். இப்படிப் பல முறை தொலைந்து தொலைந்து திரும்பினாலும் மீண்டும் மீண்டும் தொலைந்திட இடம் தந்த அந்தக் காடு அவளுக்கு எப்போதும் பெரும் வியப்பு‌ தான் ஆனால் இன்று இந்த நொடி பார்த்து பார்த்து குதூகலித்த  அக்காட்டின் பெரும்பகுதி எங்கே தொலைந்து போனது என்பது தான் அவளது இப்போதைய விந்தை.

ஆண்டுகள் சில மறைந்தோடினும் நினைவினில் பசுமையாய் பதிந்த பாதையைத் தேடி தேடித் தோற்ற அவள் கண்களில் ஓங்கி உயர்ந்த பெரு மரங்கள் கான்கிரீட் கட்டிடங்களாக ஆங்காங்கே குவிந்து கிடக்க மேலும் குழம்பிப்போனாள்.

விரல்கள் வெட்டப்பட்ட மிருதங்க வித்துவானைப் போல் அவள் துடி துடித்தாள். உண்டு மகிழ்ந்து சிறகடித்த கூடும், கூடு இருந்த மரமும் மாலையில் வீடு திரும்பும் போது தடம் தெரியாது பெயர்க்கப்பட்டதைப் போல் பதறிப் போனாள். தனது ஒவ்வொரு அடியிலும் மெல்லதிர்வை பிறப்பிக்கும் அவளது மூளைக்குள் வன்னதிர்வாய் பாய்ந்த காந்த அலைகளால் குழம்பித் தவித்தாள். பயணித்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் வலம் வர அமைதி இழந்து ஆக்ரோஷம் கொண்டிட எல்லை மீறியதற்காக அவளை அடித்துத் துரத்தியது மக்கள் கூட்டம். குழம்பித் தவித்தவளுக்கு உணவின் தேவையை, பசியுணர்வும் வயிற்றிலிருந்த சிசுவின் முண்டலும் ஞாபகப்படுத்தின. ஆனால் எங்கு எப்படி உணவைத் தேடுவது என்பதறியாது தவித்தாள். வழி மறந்து சொந்தம் துறந்து பசி மிகுதியால் அலைந்தவளது ஒரே ஆறுதலான உள்ளே உதைத்துக் கொண்டிருந்த தன் குட்டியைப் பாதுகாக்க விரட்டிய கூட்டத்திலிருந்து விலகியவள் எங்கே எப்படி மறைந்தாளோ தெரியவில்லை ஆனால் எங்கோ மறைந்தாள்.

இரவெல்லாம் மக்கள் கூட்டம் அவளைத் துரத்தத் தீப்பந்தம் கொண்டு காத்துக் கிடந்தது.

சூரன் மட்டுமே அவளுக்காகப் பரிதவித்தான். யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படாததோடு யானைக்கும் எந்த பிரச்சனையும் இன்றி காட்டுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று புலம்பினான்.

அந்த நேரத்து அவனது புலம்பல் பெரும்பாண்மை கூட்டத்துக்கு எரிச்சலை உண்டு பண்ணியது… ” ஏன்டா, இங்க இத்தனை பேரு தூங்காம கொள்ளாம காத்துக் கெடக்கோம் நீ என்னடான்னா அந்த யானை பத்திரமா போகனுங்கிற… உனக்கு ஏன் அந்த யானை மேல இவ்வளவு கரிசனம் ” என்ற பாலுவை அசட்டை செய்த சூரன் அந்த இருட்டிலும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு இண்டு இடுக்கெல்லாம் யானையைத் தேடி அலைந்தான். யானைக்கும் எதுவும் நடந்திடக் கூடாது என்ற உண்மையான அக்கறை அவனது தேடலில் வெளிப்பட்டது. பாலுவும் காசியும் மட்டுமின்றி அத்துணை மக்களும் யானையோடு சேர்த்து சூரனையும் கரித்துக் கொட்டினர்.

என்னதான் மறைந்திருந்தாலும் கரையேற முடியாது, பாதை பிடிபடாமல் இரவெல்லாம் தவித்தவளுக்கு அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. எவ்வளவு நேரம் மறைந்தே கடந்து போகும். என்ன தான் விரட்டினாலும் செல்வதற்கு இடமேது. பொழுது அடங்கியதாக எண்ணி மறைவிலிருந்து வெளிப்பட்டவள், பாதையை மறந்து உணவைத் தேடத் தொடங்கினாள். வீடுகளும் தார்ச் சாலைகளுமாய் மாறிப்போன காடுகளில் உணவை எங்குத் தேடுவது என்று புரியாது குழம்பிய தருணம் அவளது பார்வையில் உணவுச் சிதறல்கள் சில தென்பட்டன. வயிற்றிலிருக்கும் குட்டியின் பசியை போக்கிடும் ஆவலில் அசைந்து நகர்ந்திடும் மென்னடை அழகுத் துள்ளலாக மாறிப்போனது. அங்கங்கு சிதறிக் கிடந்த பழங்களில் ஒன்றை ஆசையாய் அள்ளி அவளுக்கே உரிய அழகோடு வாயினுள் இட்டுச் சுவைக்கத் தொடங்கினாள்.

மனித மதியின் சுயநல விளையாட்டால் சிதறிக் கிடந்த பழங்களில் ஒன்று கடித்த மாத்திரத்தில் வெடித்துச் சிதறியது. கட்டற்ற வலிமைக்குச் சொந்தக்காரியான அவளுக்கு எதிர்க்கும் புலியும் கர்ஜிக்கும் சிங்கமும் சர்வ சாதாரணம் ஆனால் இந்த வஞ்சக செயலை எதிர்பாராத அந்த இளம் அன்னை நிலைகுலைந்து போனாள்.

யானையால் மிரண்டு கிடந்த மக்களை வெடிச் சத்தம் மேலும் பயமுறுத்தியது…

மருந்தின் நெடியும் பிய்ந்து தொங்கிய தாடையும் கொடுத்த வலியை விட வயிற்றில் இருக்கும் குட்டியின் பசியைப் போக்க முடியா துயரம் அவளை மேலும் குழப்பியது. அங்கும் இங்குமாக ஓடி ஓடி அலைந்தவள் ஆற்று நீரில் நின்றபோது ஏற்பட்ட குளிர்ச்சி அனைத்தையும் சரிசெய்யும் என்ற நினைப்பில் அங்கேயே நிற்கத் தொடங்கினாள்.

நீருக்குள் யானை தொடர்ந்து அசையாது நிற்பது ஊருக்குள் பரவியது. ஆம் இப்போது அது ஊர்… அடுத்த நிமிடம் சூரனது ஆட்டோ ஆற்றுக் கரையை அடைந்தது. உடனடியாக சூரன் வனத்துறைக்குத் தகவல் தந்தான். மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது… அத்துணை கூட்டத்திற்கு மத்தியிலும் அவள் அந்த ஆற்று நீரை விட்டு வெளியேறவேயில்லை. கூட்டத்தை வெறித்த அவளது கண்கள், கசாப்புக் கடையில் விலை பேசி விற்றுத் திரும்பும் வளர்த்தவனை வாஞ்சையோடு வெறிக்கும் ஆட்டின் பரிதாப பார்வையை ஒத்திருந்தது.  அந்த பார்வையைக் கண்டு சூரன் கலங்கினான். நிமிடங்கள் நாழிகைகளாக, நாழிகைகள் நாட்களாக மாறிப்போயின ஆனால் நீர் தாய் அவளது அணைப்பு கரத்தைத் தளர்த்தவேயில்லை… நின்ற இடத்திலேயே அவளது உடல் தளர்ந்து உயிர் பிரிந்தது… கூட்டத்தைத் தொடர்ந்து வெறித்த அவளது கலங்கிய கண்களில் சூரனின் கண்ணீர் பிரதிபலித்தது. காலங்கடந்து வந்திறங்கிய மனிதம் அறுத்து எடுத்த குட்டியும் காலனிடம் சேர்ந்திருந்தது. வக்ர நிஜத்தின் நீள் சரடை எதார்த்த வாழ்வின் படுகுழியில் தொலைத்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு குரல் துவண்டு கிடந்த  சூரனை தட்டி எழுப்பியது…

” தம்பி ஆட்டோ வருமா? “

அவன் அனிச்சையாய் கேட்டான் ” எங்க போகணும்? “

” ஊருக்குள்ள “…

ஆம் இப்போது அது ஊர்…

இறந்த குட்டியையும் அறுபட்ட யானையையும் ஒரு சேர வெறித்தபடி சூரனின் ஆட்டோ சவாரியோடு அங்கிருந்து திரும்பியது “பிரசவத்திற்கு இலவசம்” என்ற வாசகத்தைத் தாங்கியபடி…

*******

Exit mobile version