வெற்றுக் கண்ணாடிகள்…-பா. ஏகரசி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 194 வெற்றுக் கண்ணாடிகள்…-பா. ஏகரசி

         தட்டமும் பயமும் உடலெங்கும் வியாபித்திருந்தாலும் ஏதோவொரு தைரியம் எங்கோ ஒரு மூலையிலிருந்து அவளை முன்னோக்கி உந்தியது. கிராமத்துப் பள்ளியில் தன்மொழியோடு உறவாடி மகிழ்ந்து பின் கல்லூரி நாட்களில் புரியாத மொழியோடு போராடிக் கடந்து வந்த பாதை கூட இவ்வளவு அன்னியமாக இல்லை. அவ்வப்போது இரயிலேறி பயணித்த நகரத்து நேர்முகத்தேர்வு பயணம் தரும் அதே அன்னியம் இப்போதும் அவளை இறுக்கப் பற்றியிருப்பதாகத் தோன்றியது.

பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் லாபகரமாக இயங்கும் இந்த நிறுவனத்தில் வேலை என்பது பலருக்குக் கனவாகவே கடந்திருப்பதாகவும் கவிதாவின் விடா முயற்சி இதைச் சாதித்துக் காட்டியிருப்பதாகவும் அவளது ஆசிரியர் ஒருவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கவிதாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. பரவசமூட்டும் நுழைவு வாயிலும் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் விரிந்து கிடந்த தொழிற்சாலையின் பிரம்மாண்டமும் அவரது வார்த்தைகள் மிகையல்ல என்பதையும் தாண்டி அவளது தகுதியைப் பற்றிய சந்தேகத்தை அவளுக்குள் உண்டாக்கியது.

கண்டறிந்திடாத இறுக்கம் தோய்ந்த முகங்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கடந்த தேசத் தலைவர்களின் முகங்கள் அவளை அதே புன்னகையோடு வரவேற்றன. நன்கு பராமரிக்கப்படும் மிகப்பெரிய மியூசியத்திற்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது.

சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின் அவளோடு அன்று வேலையில் சேர்ந்த மேலும் நான்கு பேருக்கும் என அவரவர்களுக்கான துறைகளும் இருக்கைகளும் ஒதுக்கப்பட்டன. கவிதாவிற்கு ஒதுக்கப்பட்டது இன்டர்னல் ஆடிட் துறை. அனைத்து துறையிலும் பணிபுரிந்த அல்லது அனைத்து துறையைப் பற்றிய அறிவும் உள்ளவர்களே இதில் பணிபுரிய முடியும்.

மேலும் கீழுமான ஓர் இளக்கார பார்வையை வீசிய கவிதாவின் மேலாளர் மீனாம்பாள் ” உனக்கு எந்த ஊரு மா ?” என்றார்.

“தஞ்சாவூர் பக்கத்துல வடுவூர்” .

” எப்படி இங்க வேலை கெடச்சது? “

இது என்ன கேள்வி என்பது கவிதாவிற்குப் புரியவில்லை. இருப்பினும் பெருமிதத்தோடு பதிலளித்தாள் ” போட்டித் தேர்வுலையும் இன்டர்வியூலையும் பாஸ் பண்ணித் தான்”.

” உம் பேரு என்ன சொன்ன?”

” கவிதா…”

” முழுப்பெயர் ?”

” கவிதா சுப்பிரமணியன்”.

“….” மீண்டும் ஒரு வித்தியாசமான பார்வை அதன் அர்த்தம் இன்னது என்பதைக் கவிதாவால் ஊகிக்க முடியவில்லை. ஏதோ ஒரு முற்றுப்பெறாத தேடல் மட்டும் அந்தப் பார்வையில் பொதிந்திருந்தது. மேலாளர் தேடலைத் தொடர்ந்தார்.

“அப்பா என்ன வேலை பார்க்கிறார்”.

” விவசாயம்…”

தேடல் ஒரு நிலையை எட்டிவிட்டதை மீனாம்பாளின் முகம் வெளிப்படுத்தியது. கவிதையின் மறை பொருளை அறிந்த பின்பு மொழி ஆளுமையை ரசிக்க விரும்பாத பலருள் மீனாம்பாள் தன்னையும் இணைத்துக் கொண்டவள் போலும். தேடிய பொருளின் இருப்பிடத்தை யூகித்த பின்பு பொருளை எடுக்க என்ன அவசரம் என்ற தொனி அவளது குரலில் வெளிப்பட்டது. ஒரு சில கோப்புகளைக் கவிதாவின் கைகளில் வைத்த மேலாளர் ” இதுல தான் ஆடிட்டிங் பத்தின ஃபேசிக்ஸும் ஃபார்மெட்சும் இருக்கு இத படிங்க எதாவது டவுட்னா கேளுங்க?” என்றவாறு வெளியேறினார். கவிதா மெதுவாக அந்த அறையை நோட்டமிட்டாள் மல்லிகை சரத்தில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் ரோஜா மொட்டுக்களாக விரவிக் கிடந்த ஊழியர்களின் கூட்டத்தில் வெகு சில பெண்களை மட்டுமே காணமுடிந்தது. அதில் ஒருத்தி ராஜி. மெல்லிய புன்னகையில் தொடங்கிப் பரஸ்பர பரிமாற்றங்கள் படிநிலைகளாகத் தொடர்ந்தன.

நாட்களின் ஓட்டத்தில் கவிதா வேலையின் சூட்சுமங்களை அறிந்து கொண்டாள். தனியாக ஆடிட் செய்யும் நேரமும் வந்தது. சில சீரான தரம் மிகுந்த ஆடிட்கள் பாராட்டுகளைத் தருவதற்குப் பதிலாகப் பகைகளையே உருவாக்கியது. அதுவும் மீனாம்பாள் வெளிப்படையாகவே கவிதாவைக் கடிந்திட ஆரம்பித்தாள். கவிதாவின் சில ஆடிட் கமன்ட்டுகள் மேனேஜ்மென்ட் ஆல் பாராட்டப்பட்டதை மீனாம்பாளாள் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. கவிதா ஆடிட்டிற்கு வருகிறாள் என்றாலே அந்தத் துறை முகம் சுழிக்க ஆரம்பித்தது. பகையிலிருந்து காத்துக்கொள்ள ஏதேனும் ஒரு யூனியனுடன் கவிதாவை இணைத்துக் கொள்ளும்படி பணித்தாள் ராஜி.

“நம்ம வேலைய நாம ஒழுங்கா செய்யும் போது என்ன பிரச்சினை வரப்போகுது. இதுக்காக ஒரு யூனியன்ல சேர்வது என்ன நியாயம். சரியான பாதையில பயணிக்கிற, தொழிலாளர் முன்னேற்றத்துக்குப் பாடுபடுகிற அல்லது கொள்கைக்காகப் போராடுகிற யூனியன்… அப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லு அது நியாயம். அத விட்டுட்டு சுயநலத்துக்காக ஒரு யூனியன்ல சேர்றது என்ன நியாயம்”

” கவிதா… நீ பேசுறது எல்லாம் சினிமா படத்துல பாக்க நல்லா இருக்கும். ஆனா எதார்த்தம் வேற. இங்க பல யூனியன்கள் இருக்கு. ஜாதி வாரியா… கட்சி வாரியா… இப்படி நெறைய இருக்கு. இப்படி ஏதாவது ஒரு யூனியன்ல இருக்கது தான் நமக்குப் பாதுகாப்பு” என்றாள் ராஜி.

” இல்ல ராஜி… கொள்கைக்குனு இல்லாம ஒரு காரணத்துக்காகச் சேர என் மனசு…” என்று இழுக்கும் போதே மீனாம்பாளிடம் இருந்து அழைப்பு வந்தது. இதோ வருகிறேன் என்றவாறு அவளது அறைக்குள் சென்ற கவிதா சில நிமிடங்களில் கையில் ஒரு கோப்புடன் வெளியே வந்தாள்.

தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் ஆடிட் செய்யப் பணிக்கப்பட்டிருந்தாள். இதைக் கேட்ட ராஜி சற்றே பதற்றமடைந்தாள்.

” என்ன ஷாஸ்பிடல் ஆடிட்டுக்கா போகச் சேல்லிருக்கு மீனு ?” என்றாள்.

” ஆமா… ஏன் என்ன ஆச்சு?”

“சி.எம்.ஓ ( Chief Medical Officer ) ஒரு சிடு மூஞ்சி. அதோட அவரு இங்க இருக்க ஒரு பெரும்பான்மை சாதியோட யூனியன் தலைவர். இங்க பெரிய பெரிய பதவியில் அவுங்க ஆளுங்க தான் அதிகம் நம்ம மீனுவையும் சேர்த்து. அதையும் தாண்டி வெளியே சில கட்சிகளோடும் அவருக்குப் பழக்கம் இருக்கு. பர்பசா தான் உன்ன இந்த ஆடிட்டுக்கு அவ அனுப்புறா. எந்தப் பெரிய பாய்ண்டும் எழுதாம சுமூகமாக முடிச்சிட்டு வா” என்றாள் ராஜி.

“ஏய் என்ன இது… ஆஃபீஸா இல்ல அரசியல் களமா” என்றவாறு மெல்லிய புன்னகையுடன் அதைக் கடந்து சென்றாள்.

சி.எம்.ஓ அறைக்குள் நுழைய முற்பட்டவளை அவரது தொலைப்பேசி உரையாடல் தடுத்து நிறுத்தியது. பேசி முடிக்கப்படும் எனக் காத்திருந்தாள். அவள் அங்கே நிற்பதை அறியாததாலோ அல்லது அவளும் கேட்கட்டும் என்று வேண்டுமென்றே பேசினாரோ தெரியவில்லை ஆனால் அந்த உரையாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் கவிதாவின் காதுகளில் தெளிவாக விழும்படியாக லேண்ட் லைன் ஸ்பீக்கர் சத்தமாகவே ஒலித்தது.

” என்ன மேடம்… ராஜியத்தான் ஆடிட்டுக்கு அனுப்புறேன்னு சொன்னீங்க இப்ப ஏன் இந்தப் நைட்டிய அனுப்பீருக்கீங்க ?” என்றார் சி.எம்.ஓ.

“எல்லாம் ஒரு காரணமாத்தான். ராஜி மேற்படி ஆளு..‌‌. இப்பல்லாம் அவுங்க யூனியன் அது இதுன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க. அவளுக்கு எதாவதுனா அவுங்க ஆளுங்க வந்து சுத்தி நின்னுப்பாங்க. ஆனா நைட்டி… மேற்படியும் இல்ல நம்ம ஆளும் இல்லை. நியாயம் பேசுற நடுநிலைவாதி கூட்டத்துல ஒருத்தி எப்படி வேணாலும் பந்தாடலாம் கேக்க நாதியில்ல. அதோட அவளோட ஒரு சில ஆடிட் கமண்ட்ஸ என்னோட கமெண்ட்ஸோட கம்பேர் பண்ணி அவளோடத சிறந்ததுனு பாராட்டுது மேனேஜ்மெண்ட். அத ஒடைக்க நீங்க தான் சரியான ஆள். அதான் இவள அனுப்பியிருக்கேன் பாத்துக்கோங்க” என்றவாறு ஃபோனை துண்டித்தார் மீனாம்பாள்.

சில நிமிட தயக்கத்திற்குப் பின் உள்ளே நுழைந்தாள் கவிதா. சிறிதும் சலனமின்றி அவளை இறுகிய முகத்துடன் ஏறிட்டார் சி.எம்.ஓ.

கவிதாவே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பின்னரும் முகத்திலிருந்த இறுக்கம் குறையாது அவரது பி.எஸ் ஐ (personal secretary) அழைத்துச் சற்றே கரகரத்த குரலில்… “இவங்கள கோஆடினேட் பண்ணிக்க… ஆடிட்டிங் முடிந்ததும் என்ன வந்து பாருங்க” என்று பொதுப்படையாகப் பேசிவிட்டு கணினித் திரையில் மூழ்கியதான பாவனையில் அவளை அலட்சியம் செய்தார்.

ஆடிட்டிங்கிற்குத் தேவையான கோப்புகளை எடுத்துவரப் பணித்துவிட்டு அருகே இருந்த “அவள்” உள்ளே அவள் பிரவேசித்தாள். அவளது உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. குழாயைத் திறந்து ஒழுகிய நீரில் கை வைத்ததும் வீட்டின் கொல்லையில் அங்கங்கு நூலிலையாக வழியும் ஆடிக் காவிரியின் ஞாபகம் மேலோங்கியது. “நன்னிலம் தொட்டுத் தெரிக்கும் முன் துளிகளிலும் தெரிவதில்லை தன்னுள் கரைத்துக்கொண்ட பின் கடலுக்கும் தெரிவதில்லை… ஆயினும் இடையே எத்தனை வளைவுகள் அதில் தவழும் அவளுக்கும் தான் எத்தனை எத்தனை பெயர்கள். மனித ஆக்கமே இப்படிதானோ. ” நைட்டி… ” என்ன காரணமாக இருக்க முடியும். இதே வார்த்தையைப் பல முறை கடந்து வந்திருக்கிறேன் ஆனால் என்னைக் குறிக்கத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை யூகிக்காமல் போனேனே”…

உடனடியாக ராஜிக்கு ஃபோன் செய்தாள். ” ஹலோ…” மறுமுனையிலிருந்து பேச்சு முடிவதற்குள் இவள் ஆரம்பித்தாள்.

” ராஜி… நான் ஒன்னு கேட்பேன் மறைக்காம பதில் சொல்லனும். என்னை ஏன் “நைட்டி” னு கூப்பிடுறாங்க”.

” அது… வந்து….”

” மறைக்காம சொல்லு”.

” அது… நீ… “

” நான்…”

” நீ… நைட்டி மாதிரி தொல தொலனு டிரஸ் போடுற நாட்டுப்புறமாம் அதுனால தான்…” என்றாள் ராஜி.

” ஓ… அவ்வளவுதானா. சரி நான் திரும்பவும் கூப்பிடுறேன்”. என்றவாறு கைப்பேசியைத் துண்டித்தாள்.

அகத் தூய்மையையும் செயல் திறனையும் அடையாளம் காணமுடியாது அங்கங்களையும் ஆடைகளையும் மட்டுமே இருப்பிடத்தோடு பிரதிபலித்த கண்ணாடியை மேலும் கீழுமாக ஒருமுறை அளந்தவள் “வெற்றுக் கண்ணாடிகள்” என்று முணுமுணுத்தவாறு கம்பீரமாக அங்கிருந்து வெளியேறினாள்‌.

எந்தச் சிந்தை பிறழ்ச்சிக்கும் இடமின்றி நான்கு மணிநேர ஆடிட்டுக்குப் பின் சில குறிப்பிடத்தகுந்த ஆலோசனைகளையும் இரண்டு மாற்றப்பட வேண்டிய இணக்கமின்மை( Nonconformity) செயல் முறைகளையும் பதிவு செய்துவிட்டுச் சி.எம்.ஓ வின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தாள். நாற்பது நிமிட காத்திருப்பிற்குப் பின்பும் எந்தப் பதிலும் இல்லாததால் எழுந்து அவரது அறைக்குள் அதிரடியாக நுழைந்தாள். அங்கு இருந்த கணினித் திரையில் சீட்டு ஆட்டமும் கைகளில் ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையுமாக அமர்ந்திருந்த சி.எம்.ஓ சற்று சுதாரிப்பதற்குள் இவள் தெளிந்த நீரோடை யாக ஓடத் தொடங்கினாள்.

” சார் எனக்கு அடுத்த ஆடிட் இருக்கு நீங்க அத படிச்சு கையெழுத்து போட்டா நான் கிளம்பிடுவேன். இல்லை ஏதாவது சந்தேகம்னா கேளுங்க” என்றாள்.

” நான் ஒரு சி.எம்.ஓ என்னோட பிசி ஸெடுல்ல எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும் என்பது எனக்குத் தெரியும் நீங்க வெளியே காத்திருங்கள்” என்றார்.

“நீங்க பிசியா இருந்தா உங்க கீழ இருக்க யாராவது இந்த வேலைய பார்க்கலாம். நீங்க தான் கையெழுத்து போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை”

“எந்த வேலைய யாருக்கிட்ட குடுக்கனும் என்பது எனக்குத் தெரியும் நீங்க காத்திருங்கள்”

” சார். ஆடிட்டுக்கான நேரத்தை தேர்வு செய்தது நீங்க தான். நீங்க பிசியாக இருக்கும் நேரத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்.  அது போகட்டும் இப்போ எவ்வளவு நேரமாகும் நான் மதியம் இரண்டு மணிக்கு அடுத்த ஆடிட்டுக்குப் போக வேண்டும் “.

” அது உங்க பிரச்சினை. வேற சில முக்கிய வேலைகளை முடித்தபின்பு தான் இதைப் பார்க்க முடியும். இவ்வளவு நேரம் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது” என்றவாறு மீண்டும் கணினியில் சீட்டாடத் தொடங்கினார். அவரது முகத்தில் அலட்சியம் தறிகெட்டோடியது.

சற்றே கோபமுற்ற கவிதா அவரே எதிர்பார்க்காத வகையில் ஆடிட் செய்த தாள்களை அவரது மேசையிலிருந்து எடுத்து அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் refuse to sign என எழுதி நகலை அவரது மேசையில் வைத்து விட்டு வெளியேற எத்தனித்தாள். இதைச் சற்றும் எதிர்பாராத சி.எம்.ஓ விடம் முதல் முறையாகத் தடுமாற்றம் தெரிந்தது.

” இது நியாயம் இல்லை மிஸ் கவிதா”

முதல் முறையாக மிஸ் கவிதா அங்கு வந்து அமர்ந்தாள்.

” எனக்குப் படிக்கத் தேவையான நேரத்தை நீங்கள் தரவேண்டும்”

“இரண்டு பக்கங்களைப் படித்துக் கையெழுத்திட ஒரு மணிநேரம் போதவில்லை என்பது எனக்குப் புதிதாகவே உள்ளது”.

“படிப்பதற்கு அல்ல உங்களது கமண்ட்டினை மறுத்திட”

” என்னுடைய ஆடிட் கமண்ட்ஸ் பக்கத்துலையே நீங்க உங்க மறுப்பை எழுதலாமே”

” எழுதுவது இருக்கட்டும். இந்த நாலாவது ஃபாய்ண்ட் ஒன்னு எழுதியிருக்கிறீர்களே அதன் விளைவு என்னவாக இருக்கும் தெரியுமா?”.

அந்த ஆடிட் பேப்பரை எடுத்து அவர் குறிப்பிட்ட அந்த வரிகளைப் பார்வையிட்டாள் அதன் சாரம் இதுவே…. “ஊழியர்களுக்கான மருத்துவமனையில் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்ற விதி எண் மெ.பு22 சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை முறையும் தேர்ந்த மருத்துவர்களும் இருந்தும் சில குறிப்பிட்ட நபர்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிகச் செலவில் சிகிச்சையைப் பெற்று அந்தச் செலவு பணத்தைத் திரும்பப் பெற ( reimbursement ) அனுமதிக்கப்பட்டிருப்பது விதி மீறலாகக் கருதப்படுகிறது”.

“விளைவுகள பத்தி நீங்கக் கவலை படுக்க என்னோட கவலை நம்ம ஊழியர்கள் எல்லாருக்கும் சமமான தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் அவ்வளவே. இதை மறுத்தும் நீங்க உங்க கமண்ட்ஸ எழுதலாம்”

” நிச்சயமா அதைத் தான் செய்யப்போறேன். ஆனால் இந்தக் காகிதத்தில இல்லை உங்களுக்கு மறுப்பு மெயில் வரும். இதுக்கிடையில உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஆனால் அதற்கு முன் தவறாகச் சலுகைகளை அனுபவித்தவர்களாக நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சில நபர்கள் யார் யார் என்பதையும் பாருங்கள். அப்புறம் இந்தக் கமெண்ட்டை நீங்களே நீக்கிவிடுவீர்கள்” என்றவாறு ஒரு காகிதத்தைத் தூக்கி அந்த மேசை மீது வைத்தார்.

அதில் கம்பெனியின் பெரிய பெரிய பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களின் பெயரும் (அவர்களது பதவியும் குறிப்பிடப் பட்டிருந்தது) அது மட்டுமின்றிச் சில குறிப்பிட்ட யூனியன்களின் முக்கியஸ்தர்கள் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவர்கள் அனைவரும் சில இலட்சங்களை ஊதியமாகப் பெறுபவர்கள். மறந்து கூட ஒரு வெல்டரோ, ஃபிட்டரோ அல்லது வேறு எந்த அடிப்படை ஊழியரின் பெயரோ அதில் இல்லை. அந்தக் காகிதத்தையும் தனது கோப்புக்களையும் எடுத்துக்கொண்டு

” மெயிலாவது சீக்கிரம் அனுப்புங்கள்” என்றவாறு அவரது பதிலுக்காகக் காத்திராமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். அவள் அந்த இடத்திலிருந்து சென்றதும் புயலுக்குப் பின்பான ஓர் அமைதி அங்கு நிலவியது. சி.எம்.ஓ வின் இதயத் துடிப்பு அவரது காதுகளுக்கே கேட்டன. கைக்குட்டையால் வியர்த்து வழிந்த முகத்தைத் துடைத்துக்கொண்டு யாருக்கோ போன் செய்தார்… கவிதாவின் வழியெங்கும் கிசு கிசு பேச்சுக்கள் தொடர்ந்தன. பெரும்பாலும் அவள் காதுகளில் விழுந்தது “ஒரு பொம்பளை அதுவும் சின்னப் பிள்ளை…” அதற்கு மேல் அதில் காது கொடுக்க அவள் விரும்பவில்லை.

அவளது இருக்கையில் அமர்ந்து அந்த ஆய்வின் அறிக்கைகளை இ-மெயிலில் இணைத்துக்கொண்டிருக்கும் போதே இரண்டு மெயில்கள் மனிதவள மேம்பாட்டு மேலாளரிடமிருந்து வந்தது.

மெயிலைத் திறந்தாள்…
“சில நிர்வாகக் காரணங்களுக்காக நீங்கள் பில்லிங் துறைக்கு மாற்றப்படுகிறீர்கள். உடனடியாக அங்குத் தங்களின் வருகையைப் பதிவு செய்யுங்கள்”. நேற்றைய தேதியிட்டு உருவாக்கப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட்டிருந்தது.

இரண்டு நிமிட அமைதிக்குப் பின் சிறிய புன்னகையோடு கையிலிருந்த ஆய்வு அறிக்கையைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு தனக்குள் முணு முணுத்துக்கொண்டே
பில்லிங் துறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ” இவர்களது பார்வையை உடைக்க முற்படுபவர்களது தோல்தனை பதம் பார்க்கவும் தவறுவதில்லை… வெற்றுக் கண்ணாடிகள்”…

Exit mobile version