குருவிக் கூடு – செ. வர்ஷினி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 99 குருவிக் கூடு – செ. வர்ஷினி

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வரவே குடும்பத்தோடு ஊர் சுற்றிவிட்டு ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வந்து காம்பௌண்ட் கேட்டை திறந்துகொண்டு உள்ளே நுழைந்து நிலை வாசல் முன்பிருந்த சேப்டி கேட்டின் பூட்டை திறக்க சாவியை கையிலெடுத்தபோதுதான் கவனித்தேன்.
நிலை வாசலுக்கு முன்பாக இருந்த சேப்டி கேட்டின் இரண்டு கதவுகளையும் இணைத்துக்கொண்டு ஒரு குருவிக்கூடு.
ஒரு வர கேப்ல வீடு அமைதியா இருக்கவே குருவிங்க வந்து கூடு கட்டி வெச்சிருக்கு போல.
ஒரு கதவைத் திறந்தாலும் கூடு சிதைந்துவிடும்.
அட.. கட்டனதுதான் கட்டுச்சி. ஒரு பக்க கதவுல பார்த்து கட்டியிருக்க கூடாது…
ம்..அதுங்களுக்கு இது தெரியுமா என்ன…
சரி வுடுங்க…வாழுற வீட்டுல குருவிங்க வந்து கூடு கட்டினா நல்லதுன்னு சொல்வாங்க.
இப்படி கதவை அடைச்சிக்கிட்டு நல்லது வரும்னு தெரியாம போச்சி.
இப்போ என்ன பண்ணலாம்..
இன்னாடா இது வம்பாபோச்சி என்றபடி மனைவியிடம் கூப்பிட்டு காட்டினேன் .
மகளும் வந்து பார்த்துவிட்டு இப்போ எப்படிப்பா கதவை திறக்கிறது.
நாம எப்படி வீட்டுக்குள்ளே போறது என்றார்கள்.
நிச்சயமா கதவை திறக்காம போவ முடியாதுங்களே..இப்போ என்ன பண்றது என்றாள் மனைவி.
குருவிக் கூட்டை கலைக்கக்கூடாது அப்புடின்னு சொல்வாங்க..
வாசற்படி கேட்டில் கட்டியிருந்தால் கலைக்காமல் என்ன செய்வது. வீட்டுக்குள்ள போகணுமே…
என்ன பண்ணலாம் என்ன எல்லோரும் வீட்டு போர்டிகோவிலேயே அமர்ந்துகொண்டு யோசித்தோம்.
யோசனைதான் அதிகமானதே தவிர வழி ஏதும் புலப்படவில்லை…
பின்புறம் ஒரு கதவு இருக்கிறது. ஆனால் அதை திறக்கவும் வீட்டின் உள்ளே சென்றால்தான் முடியும்.
என்ன செய்வது என்ன ஒன்னும் புரியவில்லை.
குருவி இக் கூட்டை இப்போதுதான் கட்டிக்கொண்டிருக்கிறதா அல்லது முட்டையிட்டு குஞ்சு பொரித்து எல்லாம் சென்றுவிட்டதா என்றும் தெரியவில்லை.
குஞ்சு பொரித்து எல்லா வேலையும் முடிந்து விட்டிருந்தால் இந்தக் கூட்டை கலைத்துவிடலாம் என்றும் யோசனை இருந்தது.
எப்படி தெரிஞ்சுக்கறது…
அறிந்து கொள்வதற்காக சேப்டி கேட்டின் கம்பிகளைப் பிடித்து ஏறி நின்று கூட்டின் உள்ளே எட்டிப் பார்த்தேன்.
சின்ன சின்னதாய் நான்கு முட்டைகள் இருந்தன.

பகீரென்றது எனக்கு.
மனைவி மற்றும் பிள்ளைகளிடம் சொன்னேன்.

கூட்டுல நாலு முட்டைங்க இருக்கு…வேற வழி யோசிக்கணும்ப்பா.
யோசித்தேன்.
சரி இப்போ நாம நம்ம பின் வாசலையே உபயோகப்படுத்திக்கலாம். நான் வீட்டுக்கு உள்ளே போய் பின் வாசல் கதவை திறக்கறேன் என்று சொல்லிவிட்டு
பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று ஏணி வாங்கி வந்து வீட்டின் அட்டாச் பாத்ரூம் பக்கம் போட்டு ஏறி வென்டிலேஷனுக்கு வைத்திருந்த கண்ணாடிகள் ஒன்னொன்றாய் உருவி எடுத்தேன்.
ஒரு ஆள் நுழையுமளவுக்கு இடம் கிடைத்தது.
ஏறி நுழைந்து குளியலறையின் உள்ளே குதித்தேன்.
பன்னிரண்டு அடி உயரத்தில் இருந்து குதிக்கவே காலின் முட்டி செமத்தியாக வலித்தது.
ஐந்து நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு நன்றாக தேய்த்துக்கொண்டு கதவைத் திறந்தேன்
முடியவில்லை. வெளியே தாழிடப்பட்டிருந்தது.
இன்னாடா இது சோதனை என்ன நினைத்துக்கொண்டு கதவை உள் புறமாக இருந்தபடி ஓங்கி ஒரு உதை விட கழிப்பறை கதவு பி வி சி என்பதால் சட்டென திறந்துகொண்டது.
மெதுவாக வெளியே வந்து சமையல் கட்டுக்குள் நுழைந்து பின் வாசல் கதவின் தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்து முன் பக்க வாசலுக்கு வந்தேன்.
சின் சாங் பார்த்தே பழகிப்போன என் மகள் இப்போது என்னை ஜேம்ஸ் பாண்டாகவே பார்த்தாள்.
ஹையா…சூப்பர்பா.

சரி..சரி…வாங்க எல்லாரும் உள்ளே என்று பின் வாசல் வழியாக எல்லோரும் வீட்டுக்குப்போனோம்.
தெரு பக்க கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் சற்று லேசாக திறந்துவைத்தபடி எங்கள் வீட்டில் எல்லா பணிகளும் நடந்து கொண்டிருந்தது.

ஒரு மணி நேரம் கடந்திருந்த நிலையில்
வாசற்படியருகே கேட்டது குருவிகளின் சத்தம்
என் மகள்தான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துவிட்டு மெல்லமாக என்னைக் கூப்பிட்டு சொன்னாள்..
உஷ்.. அப்பா.. சத்தம் போடாதீங்க.ரெண்டு குருவிங்க வந்திருக்குப்பா. குட்டியோண்டுதான் இருக்கு அது என்றாள்.
எங்க காட்டு என்ன நானும் பார்த்தேன்.
இரண்டு குருவிகளும் ஒரு விரல் அளவே அழகாக வண்ணமாய் இருந்தன.
அதில் ஒரு குருவி கேட்டின் கம்பியில் அமர்ந்திருக்க இன்னொரு குருவி கூட்டின் உள்ளே சென்று அமர்ந்துகொண்டது.
சரிதான் அடைகாக்கிறதுபோல என்ன நினைத்துக்கொண்டேன்.
ரெண்டு நாள்ள குஞ்சு பொரிச்சுருமாங்க என்றாள் மனைவி
தெரியலையேப்பா. எதுக்கும் பாப்போம் என்று சொல்லிவிட்டு எங்கள் வேலைகளில் மூழ்கிவிட்டோம்.
நல்லபடியாக குஞ்சுகள் பொரித்து எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நல்லது என்ன நினைத்துக்கொண்டோம்.
மறு நாள் நான் அலுவலகம் சென்றுவிட்டேன்.
எல்லாம் பின் வாசல் வழியாகத்தான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அவ்வப்போது என் மகள் கொஞ்சம் தானியங்களை எடுத்துவந்து போர்டிகோவில் போட்டுவிட்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துவிட்டு வருவாள்.

அந்த இரு பறவைகளும் அதை பயன்படுத்திக்கொண்டதில் ஏக சந்தோஷம் எங்களுக்கு.

மூன்று நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அதற்கு அடுத்த நாள் மதியம் நான் அலுவலகத்தில் இருக்கும்போது என் மனைவி அலைபேசியில் கூப்பிட்டு சொன்னாள்.
என்னங்க…குஞ்சி பொரிஞ்சிருச்சி என்றாள்.
எப்படி.
நான் கேட்டில் ஏறிப் பார்த்தேனே…என்றாள்.
சரி சரி எப்படியோ…கேட்டை தொறக்க வழிகெடைச்சா சரி என்றேன்.

மாலை வீட்டுக்கு வந்தபோது பாயாசம் கொடுத்த மனைவி சொன்னாள் ஸ்வீட் எடுத்துக்கோங்க நம்ம வீட்ல இன்னைக்கு நாலு டெலிவரி நடந்திருக்கு என்று.
எங்க நானும் போயி பார்த்துட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு
சென்று கேட்டின் மேலே ஏறி சென்று பார்த்துவிட்டு சத்தம் காட்டாமல் இறங்கி வந்து மனைவியிடமும் மகளிடமும் சொன்னேன் எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாள்ல எல்லாமும் பறந்து போய்டும் பாரு என்று.
அப்புறமாத்தான் நாம கதவை திறக்க முடியும்.

காத்திருந்தோம்
நான்கு நாட்கள் கழிந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
முதல் நாள் இரவு வரை கேட்டுக்கொண்டிருந்த குருவிகளின் சத்தம் இன்று காலை இல்லை.
மெதுவாக முன் வாசல் பக்கம் வந்து கேட்டின் மேலே ஏறி நின்று கூட்டின் உள்ளே பார்த்தேன்.
எதுவும் இல்லை.
வந்து சொன்னே மனைவிடம்.
ம்..குருவிகளுக்கு றெக்கை முளைச்சுடுச்சி.ஆத்த விட்டே பறந்துபோய்டுச்சி என்றேன்.
அப்படியாப்பா. அய்யய்யோ…நம்ம வீட்லையே இருக்காதா அது.
இப்போ நாம இன்னா பண்றது.என்றாள் என் மகள் சோகமாக.
ம்…கேட்டை திறக்கிறது.அதான் இப்போ நம்ம வேலை என்றபடி சேப்டி கேட்டில் இருந்த கூட்டை அப்படியே அலுங்காமல் எடுத்து ஒரு கேட்டில் மட்டும் தொங்கும்படி கட்டி வைத்துவிட்டு கதவுகளைத் திறந்தேன்.

தெரு பக்க வாசல் வழியாக புது வெளிச்சம் உள்ளே பாய்ந்தது.
அன்பு இல்லம் என்ற என் வீட்டின் பெயர் பலகையை துடைத்துக்கொண்டிருந்தாள் என் மனைவி.

*******

Exit mobile version