நகல்கள்-லீலா ராமசாமி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 104 நகல்கள்-லீலா ராமசாமி

வாசலில் பெரிய வெளிநாட்டுக் கார் வந்து நின்றது.

“மிஸ் நிலா இருக்காங்களா?”

வெளியே வரவேற்பில் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் செழிப்பான இளைஞனை என் அறையின் கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தேன்.

வரவேற்பில் இருந்த பெண் என் அறையைக் காட்ட  அவன் என் அறையின் கதவைத் தட்டி நின்றான்.

“கம் இன்”

உள்ளே வந்தவனுக்கு என் எதிரிலிருந்த நாற்காலியைக் காட்டினேன். அழகன்.

“நான் விக்ரம்.”

“நல்லது. என்ன விஷயமா வந்திருக்கீங்க?”

“மிஸ் நிலா! நீங்க ஜெனிடிக் எஞ்சினியரிங் படிச்சவர்னு கேள்விப்பட்டேன்.”

“ஆமா.”

“அந்தப் படிப்புக்கும் பியூட்டி பார்லருக்கும் என்ன சம்பந்தம்?”

“எதுக்குக் கேக்குறீங்க?”

“நீங்க குளோனிங் ஆராய்ச்சியில ஈடுபட்டவர். திடீர்னு அதை விட்டுட்டு பியூட்டி பார்லர்ல இறங்கிட்டீங்க”

“இட் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். உங்களுக்கு என்ன வேணும்? என் நேரத்தை வீணாக்காதீங்க.”

“உங்க நேரத்துக்குப் பத்துக் கோடி குடுக்கலாம்னு இருக்கேன்.”

“இது என்ன புது ரீல்?”

“இண்டஸ்ட்ரியலிஸ்ட் பாண்டியனின் ஒரே மகன் நான். எனக்கு அபர்ணா வேணும்.”

“நீங்க தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்க. நீங்க கேக்க வேண்டியது அபர்ணாகிட்ட.”

“இப்ப இருக்குற அபர்ணாவின் அழகோட ஒரு புது அபர்ணா, ஐ மீன் அவளோட நகல், அவளோட குளோன் வேணும்.”

“ஏன் தலையைச் சுத்தி மூக்கைத் தொடணும்? அவ கிட்ட கேட்டாலே ‘எஸ்’ சொல்வாளே!”

“அவ நிறைய பேருக்கு ‘எஸ்’ சொல்லிட்டா. அதனால அவ வேணாம். புதுசாப் பிறந்த அபர்ணா வேணும்.”

“இந்தியாவுல மனிதக் குளோனிங் தடை செய்யப்பட்ட ஒண்ணு. அப்படியே இருந்தாலும் அந்தப் புதுசாப் பிறக்கற அபர்ணா வளர்ந்து வரும் போது உங்களுக்கு வயசாகி இருக்கும்.”

“எனக்கு இன்னும் அஞ்சு வருடங்கள்ல புது அபர்ணா கிடைக்க மாட்டாளா?”

“குளோனிங்னு சினிமாவுல காட்டுற மாதிரி மந்திரம் போல கொஞ்ச நாள்லயே நடக்கற விஷயமில்லை. இதுவும் மற்ற மனிதக் குழந்தைகள் போலவே முறையா ஒரு பெண்ணின் கருப்பையிலிருந்து பிறந்து  வளரணும். அதனால டைம் எடுக்கும்.”

“யோசிங்க நிலா. உங்க பயோடெக்னாலஜி இதுக்கும் ஏதாவது வழி வச்சிருக்கும். அட்வான்ஸா இதோ ஒரு கோடிக்கு செக்.”

“தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தைச் செஞ்சி ஜெயிலுக்குப் போக நான் தயாரா இல்லை. உங்க செக்கை எடுத்துட்டுப் போங்க”

“இந்தப் பொன்னான வாய்ப்பைத் தவற விட்டதுக்குப் பின்னாலே நீங்க வருந்தக்கூடாது! செக் நாளை வரை இங்கேயே இருக்கட்டும். அது வரை யோசிங்க.”

விக்ரம் சென்று விட்டான்.

******

“முட்டாளா நீ? தானா வர்ற பத்துக் கோடியை  யாராவது விடுவாங்களா? ஏற்கனவே உனக்கு இந்தக் குளோனிங் சோதனையில நிறைய அனுபவம் இருக்கு. சோதனைக்கு வேண்டிய சகல வசதிகளையும் செலவையும் விக்ரம் பாத்துக்குவான். நமக்குப் பத்துக் கோடி சுளையா வர்றதை ஏன் வேணாங்கறே?”

“இல்லே வினோத்! விக்ரம் நாய்க்குட்டிக்கோ பூனைக்குட்டிக்கோ குளோன் கேக்கலை. அவன் அபர்ணாவின் நகல் கேக்கறான். மனிதக் குளோனிங் சட்டத்துக்குப் புறம்பானது.   எங்க புரொஃபசர் மனிதக் குளோனிங் செய்ததைக் கண்டு பிடிச்சதாலே அவர் இப்போ  ஜெயில்ல இருக்கார்! அதனாலதான் நான் இந்த பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருக்கேன். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி புது வாழ்க்கையைத் தொடங்கும் கனவுல இருக்கேன்.”

“நம்ம புது வாழ்க்கையைப் பத்துக் கோடியோட தொடங்குனா எப்படி இருக்கும்னு யோசிச்சிப் பாரு நிலா!
இந்தியாவுலதானே மனிதக் குளோனிங் தடை செய்யப் பட்டிருக்கு? அதுக்குத் தடையில்லாத வேற நாட்டுல போயி அதைச் செஞ்சி முடிச்சுட்டு வரலாமே!”

“அப்போ சீனாவுக்குத்தான் போகணும். அங்கேதான் எங்க புரொஃபசருக்குத் தெரிஞ்ச சீன புரொஃபசர் வாங்லீ இருக்கார்.”

“அப்போ புரொஃபசர் வாங்லீ கிட்ட பேசு. அபர்ணாவோட திசுக்களுக்கு ஏற்பாடு பண்ணு. நான் சீனா போறதுக்கு ஏற்பாடு பண்றேன்.”

நான் புரொஃபசர் வாங் லீயுடன்  பேசினேன். மனிதக் குளோனிங் செய்வதற்கு அவருடைய சம்மதத்தைப் பெற மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

அடுத்த வாரத்தில் எனது அழகு நிலையத்துக்கு வந்த அபர்ணாவின் உடல் செல்கள் அவளறியாமலேயே சேகரிக்கப்பட்டன.

எல்லாச் செலவுகளையும் விக்ரம் ஏற்றுக்கொள்ள நானும் வினோத்தும் அபர்ணாவின் பாதுகாக்கப்பட்ட திசுக்களுடன் சீனா ஏர்லைன்ஸில் பறந்து  பெய்ஜிங் விமான நிலையத்தில்  இறங்கினோம்.

******

வாங்லீயின் ஆராய்ச்சிக் கூடம்.  அங்கே அபர்ணாவின் குளோனுக்கான ‘கரு’ உருவாக்கப்பட்டது.

அந்தக் ‘கரு’ ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும் வரை அது இன்குபேட்டரில் சீரான வெப்ப நிலையில் வைக்கப்பட்டது.

மூன்றாம் நாள்.

வாடகைத் தாய் ஏற்பாடு செய்துவிட்டு இன்குபேட்டரிலிருந்து  சோதனைக் குழாய்களை எடுத்துப் பார்த்த எங்களுக்கு வியப்பு!

ஒவ்வொரு சோதனைக் குழாயிலிருந்த தனித்த கருச்செல்லும் மகாபாரத காந்தாரியின் கரு நூறாகப் பிரிந்ததைப் போல ஆறாகப் பிரிந்து இருந்தன.

அதில் ஒன்றை வாங்கிப் பார்க்கத் தமது கையை நீட்டினார் வாங்லீ. அவருடைய விரலில் அங்கிருந்த கம்பி குத்தி சிவப்பு முத்துப் போல் ரத்தத் துளி வெளிப்பட்டது.

அந்த ஒரு துளி ரத்தம் அந்தச் சோதனைக் குழாயினுள் விழுந்து திசு வளர்ப்புத் திரவம் இளஞ்சிவப்பாகியது.

“இப்போது  நாம் ஆறு வாடகைத் தாய்களைத் தேட வேண்டும்.”

என்று சொல்லிக்கொண்டே அக்குழாயைப் பார்த்தார் புரொஃபசர் வாங்லீ. என்ன ஆச்சரியம்!  திசு வளர்ப்புத் திரவம் படிப்படியாக நிறமற்ற திரவமாக மாறிக் கொண்டிருந்தது.

“இதெப்படி சாத்தியம் புரொஃபசர்? ஒரு கருச்செல் எப்படி ஆறு கருச்செல்களாயின?”

“நேற்றிரவு இன்குபேட்டரில் திடீரென்று அதிக மின்சாரம், அல்லது வெப்பநிலை மாற்றத்தால் ஒரு கருமுட்டை  ஆறு கருமுட்டைகளாகப் பிரிந்திருக்கலாம். என் கவலை இப்போது அது இல்லை.”

“வேறென்ன?”

“இந்தக் குழாயில் விழுந்த என் ரத்தத் துளி எங்கே?”

ஆம்; அந்த ரத்தத் துளியைக் காணோம். அப்படியானால்..

அதை இந்தக் கருச் செல்கள் உறிஞ்சிக் கொண்டனவா?

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கருச் செல்கள் ஒவ்வொன்றும்  சுறுசுறுப்பாகப் பிரிய ஆரம்பித்து கருவளர்ச்சியின் அடுத்த நிலையை அடைந்தன.

இது அசுர வேக வளர்ச்சி! 

ப்ரொஃபசர் வாங்லீ ஒரு விநோதமான காரியம் செய்தார்.
தன் காயம்பட்ட விரலை அழுத்தி ஒருதுளி ரத்தத்தை அந்தச் சோதனைக் குழாயில் விட்டார்.

இப்போது மீண்டும் கரு வளர்ச்சி சுறுசுறுப்பானது.
இயற்கைக் கருவளர்ச்சியை விட
அந்த வளர்ச்சிவேகம் வியப்பளித்தது.

வாங்லீ அமைதியாக, ஆனால் அழுத்தமாகத் கூறினார்:

“இவை ஆபத்தான, அழிக்கப்பட வேண்டிய கருச்செல்கள். இவை வளர வாடகைத் தாய் தேவை இல்லை. இவற்றுக்கு ரத்தத்தை நேரடியாக எடுத்துக் கொண்டு வளரும் தன்மை வந்திருக்கிறது.‌ இன்குபேட்டரில் உள்ள அத்தனைக் கருச்செல்களையும் அழித்து விடுவோம். நாளை புதிய குளோன்களை உருவாக்குவோம்.”

வினோத் அவசரமாகக் கேட்டான்:
“இது சீக்கிரமாக வளர்ந்தால் நல்லதுதானே ப்ரொஃபசர்? நமக்குச் சீக்கிரம் பணம் வருமே?”

“இல்லை. இது உருவத்தில் ஒத்திருந்தாலும் மனிதப் பண்புகளே இல்லாத ஆபத்தான விலங்குகள் போன்றவை. இவை அழிக்கப்பட வேண்டியவை. நிலா! இன்குபேட்டரில் இருக்கும் எல்லாவற்றையும் நானே அழித்து விடுகிறேன். ஒவ்வொன்றாக எடுங்கள்.”

நான் ஒவ்வொரு சோதனைக் குழாயாக எடுத்துக் கொடுக்க, வாங்லீ அதைக் கழிவு நீர்த்தொட்டியில் கொட்டி அழித்தார்.

அடுத்தச் சில நாட்களில் அபர்ணாவின் புதிய குளோன் செல்கள் கவனமாக உருவாக்கப்பட்டு வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டது.

******

“நிலா! பத்து மாசம் இங்கே ஏன் நாம உக்காந்திருக்கணும்? புரொஃபசர் வாங்லீ மேற்கொண்டு பாத்துப்பார். நாம குழந்தை பிறக்கும் சமயத்துல வந்தா போதாது?”

எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது. நாங்கள் கேட்டவுடன் வாங்லீ தயக்கத்துடன் சம்மதித்தார். நாங்கள் இருவரும் இந்தியா திரும்பினோம்.

******

அலைபேசி விடாமல் அழைத்தது. வினோத்!

அவன் குரலில் பரபரப்பு, ஆர்வம், மகிழ்ச்சி!

“நிலா! அபர்ணாவோட குளோன்கள் எவ்வளவு சீக்கிரமா வளருதுன்னு இங்கே வந்து பாரேன். இந்த வேகத்தில வளர்ந்தா இன்னும் பத்து நாள்ல விக்ரம் கிட்ட ஒரு அபர்ணாவை ஒப்படைச்சிட்டுப் பத்துக் கோடியை வாங்கிடலாம்.”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அபர்ணாவின் குளோன்கள் அவனிடம் எப்படி வந்தன?

பயம், கவலை, கோபம் எல்லாம் என் மண்டையில் மாறி மாறித் தாக்க வினோத்தின் வீட்டை அடைந்தேன்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த வினோத் வீட்டு வாசலுக்கே வந்து என்னை வரவேற்றான்.

அவனுடன் உள்ளே சென்று பார்த்த நான் அதிர்ந்தேன்.

அவனது வீட்டின் உள் அறையை ஒரு ஆராய்ச்சிக் கூடமாகவே உருவாக்கி இருந்தான். நாங்கள் உள்ளே சென்றதும் கதவைத் தாழிட்டான்.

பெரிய இன்குபேட்டர்களில் தனித்தனியாக ஒரே மாதிரியான ஆறு குழந்தைகள்!

எப்படி இது சாத்தியம்?

“எப்படி வினோத் எனக்குக் கூடச் சொல்லாம இதை எடுத்துட்டு வந்தே?

“நீயும் ப்ரொஃபசர் வாங்லீயும் தப்பான எல்லாக் குளோன்களையும் அழிக்கும் போது ஒரு சோதனைக் குழாயை நான் மறைச்சி எடுத்துட்டு வந்துட்டேன்.”

“பெரிய தப்புப் பண்ணிட்டே வினோத். எப்படி அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்தே?”

“உயிர் காக்கும் மருந்து லேபிள்லே தக்கப் பாதுகாப்போட சீனாவிலிருந்து நாம கிளம்புறதுக்கு முன்னாலேயே என் முகவரிக்கு அனுப்பிட்டேன். நாம வந்தவுடன் அதை வாங்கி முதலில் விலங்குகளோட ரத்தமும் பிறகு அசைவ உணவுகளையும் குடுத்து வளர்த்தேன். எவ்வளவு குடுத்தாலும் சாப்பிட்டுடும். சாப்பிட்டவுடனேயே எதோ மாயாஜாலம் போல பெரிசாகறதைப் பாக்கத்தானே போறே!

விக்ரம் கேட்டது போலவே சீக்கிரமே அவனுக்கு ஒரு அபர்ணா கிடைச்சிடுவா. நமக்குப் பத்துக் கோடி கிடைக்கும். இன்னிக்கு வெளியே எடுத்து சாப்பாடு குடுக்கப் போறேன்.”

“ஐயோ..வெளியே எடுக்காதே வினோத்! அதெல்லாம் மனிதக் குழந்தைகளே இல்லை. அரக்கக் குழந்தைகள்!”

நான் தடுத்தும் கேட்காமல் வினோத் ஆறு குழந்தைகளையும் இன்குபேட்டரிலிருந்து எடுத்து அங்கிருந்த அசைவ உணவுகளை ஊட்டினான்.

அது தீர்ந்ததும் ஒரு குழந்தை அவன் கையைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சியது. வினோத் அலறினான்.

மற்றவை அவன் மேல் தொற்றிக் கிடைத்த பகுதிகளைக் கடித்தன.  பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெரிய உருவங்களாயின. சற்று நேரத்தில் அவனது அலறல் நின்றது. வினோத் இருந்த இடத்தில் ஒரு மண்டை ஓடும் சில எலும்புத் துண்டுகளும்தான் கிடந்தன.

அச்சத்தில் உறைந்திருந்த நான் சுற்றிலும் பார்த்தேன். அறையின் ஓரத்தில் ஒரு கேஸ் அடுப்பும் இரண்டு எரிவாயு சிலிண்டர்களும்  இருந்தன. அங்கு ஓடினேன்.

எரிவாயு சிலிண்டர்களைத் திறந்தேன். அறை முழுவதும் எரிவாயுவால் நிரம்பியது. அருகிலிருந்த லைட்டரைக் கையில் எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

அந்த ஆறு பேர் என்னை நோக்கி  வந்து கொண்டிருந்தார்கள்!

நான் லைட்டரை அழுத்தினேன்.                          

******

Exit mobile version