பித்தேறிய காதல்-நிலவுமொழி செந்தாமரை

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 119 பித்தேறிய காதல்-நிலவுமொழி செந்தாமரை

இருளில் தனிமையில் நிற்பதாய் ஓர் கனவு. திடீரென விழித்தாள். கனவினை மீளக்கொணரும் சில மணித்துளிப் போராட்டத்தில் தனிமையைத் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. நேரம் பார்க்க கைப்பேசியை எடுத்தாள். தவற விட்ட அழைப்புகள் 37 எனக் காட்டியது. யாரென அறிவாள். மெதுவாக எழுந்து யாரையும் மிதித்துவிடாமல் சென்று கதவினை அடைந்தாள். மெல்லியதான கிறீச் சத்தம், மின்விசிறியின் சப்ததற்கு எடுபடவில்லை. வெளிப்புறம் தாழிட்டு, பால்கனியின் இறுதியில் வந்து, கீழே எட்டிப் பார்த்தாள். அங்கும் இங்குமாய், வெகுவேகமாய் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல நடந்துகொண்டிருந்தான். அப்பொழுதிட்ட குட்டி, நோயுற்றதோ அல்லது தப்பிப் பிழைக்காதோ என்னும் உணர்வு மேலிட, பிரசவத்தினூடாகவே அக்குட்டியை உண்டுத் தேறும் தாய்ப் பூனையின் கண்களை உடையவள். எந்தச் சலனமுமின்றி நின்றிருந்தாள். மெதுவாய் படுத்திருந்த இடத்திற்கு திரும்பினாள். இன்னும் கொஞ்ச நேரம், இரவு நீள வேண்டிய அவளது பிரார்த்தனைக்கு செவிகொடுக்கவில்லை சூரியன். பூக்களை மலர்த்தும் ஒளி வீச ஆரம்பித்தது. 

கதவினைத் திறந்தவுடன் இருக்கும் முதல் அறையிலும், சாப்பிடும் அறையிலுமாக அங்கேயும் இங்கேயுமென பெண்கள் உறங்கிக் கொண்டிருக்க, காலை உணவிற்கான முன் தயாரிப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். ஒவ்வொருவராக எழுந்து ஒவ்வொரு வேலையாகச் செய்ய ஆரம்பித்ததும், பின் தங்கி வெளியே சென்று பாசி பிடித்திருந்த கரிய தடயங்கள் தென்பட்ட படிக்கட்டில் கடுங்காபியுடன் அமர்ந்தாள். காலைச் சிற்றுண்டிக்கு அவன் வரவில்லை. முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்காக உதவி செய்யும் தொண்டு நிறுவனம் அது. அவளைப் போன்றே கல்லூரி பயிலும் பெண்கள் முதல் மாடியில் உள்ள வீட்டிலும், ஆண்கள் கீழே இருந்த வீட்டிலும் வசித்தனர். அவனுடன் சேர்த்து, மேலும் இரண்டு நபர்கள் மட்டும் சமூக சேவை எனத் தங்கியிருந்தார்கள். அத்தொண்டு நிறுவனம் பெண் தலைமையில் நடந்ததால், கல்லூரிப் பெண்கள் சிலர் அங்கே நம்பிக்கையுடன் தங்கியிருந்தனர். அங்கிருக்கும் கல்லூரிப் பெண்களைப் படிக்க வைப்பது, அவர்களுக்கான வகுப்பெடுப்பது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள்.

தொண்டு நிறுவனத்தில் அவள் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அவனுடைய வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார்கள் என வந்து தங்க ஆரம்பித்தான். பின்னர் சினிமாக் கனவுகளுடன் சென்னை வந்த அவன், அங்கேயே வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அவளிடம் எந்த சம்மந்தத்தையும் பெறாமல், சிலரிடம் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாய் சொல்ல ஆரம்பித்தான். அதன் நீட்சியாய் அவள் தனியே இருந்தபொழுது, வலுக்கட்டாயமாக உறவு கொள்ள ஆரம்பித்தான். யாருடனும் பகிர்ந்து வெளிப்படுத்த முடியாத வலி. ஒருவேளை பகிர்ந்தால், அவனையே திருமணம் செய்து கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவாளோ என்னும் பயம் அவளுக்குள் நடுங்கியது. வன்புணர்வு செய்தவனுக்கே திருமணம் செய்து வைக்கும் கலாச்சாரம் தான் இந்தியாவின் கலாச்சாரம். திருமணம் செய்தவன் என்ன கொடுமைகள் செய்தாலும், கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என கற்றுக்கொடுத்த சமூகமல்லவா நம்முடையது? அவள் உடலளவிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பலவீனமாக இருந்தாள். ஆனால், கல்வியில் அப்படி இல்லை. அவனுடனான உறவிலிருந்து அவள் வெளியேற நினைக்கும் பொழுதெல்லாம், அது குறித்து பேசும் பொழுதெல்லாம் அவன் கண்ணீரையும் வன்முறையையும் ஆயுதமாக எடுத்தான். கல்லூரிக்கு உடன் வருவது; அவளது நண்பர்களை அவனது நண்பர்களாக்கிக்கொள்வது; கைப்பேசியைப் பிடுங்கி வைத்துக்கொண்டு இரவில் மட்டும் கொடுப்பது என வளர்ப்பு பிராணியைப் போல் பின் தொடர்ந்தது அவனின் காதல்.

மிகவும் குறுகலான அடுப்பறையில், இருவராய் நின்று கொண்டு, விடுமுறை நாளின், மதிய உணவிற்கான வேலைகளை ஆரம்பித்த பொழுது சந்தியா வந்தாள். கல்லூரி முதலாமாண்டு படிப்பவள். “அக்கா, உங்களை அண்ணா உடனே கூப்பிட்டார்; வாங்க” என கையைப் பிடித்து இழுத்துக்கொண்டுப் பறந்தாள். படபடப்பாய் இருந்தது அவளுக்கு. “நேற்று கொடுத்த புத்தகத்தைப் படித்தியா?” அனல் தெறித்த கேள்வி. எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். அனைவர் முன்னிலையிலும் ஓங்கி அறைந்தான். பலமுறை அவளது உடலெங்கும் சிவந்து பதிந்த அதே கைரேகைகள் தான், இன்று கன்னத்தில் அமர்ந்து அவளைப் பார்த்து ஏளனச் சிரிப்பொன்றை அவிழ்த்தது. சந்தியா அருகே ஓடி வந்தாள். “அண்ணா, நேத்து அக்கா தான் எல்லா வேலையும் பார்த்தாங்க; டைம் இல்லை” என அவளது கைகளைப் பற்றினாள். “அக்கா, அண்ணாக்கு நீங்க படிக்கணும்னு எவ்ளோ அக்கறை” எனச் சொல்லியவாறே இழுத்துச் சென்று அவளை அமர வைத்தாள்.  திகுதிகுவெனப் பற்றியெறிந்த அந்த அறை எதற்காக விழுந்தது என அவள் மட்டுமே அறிவாள். அவனின் அத்தனை தாழ்வு மனப்பான்மைகளுக்கும் அவளையே மருந்தாக்கினான். துருதுருவென கடை வாசலின் முன்பு ஓடி வரும் நாய்க்குட்டியைக் கட்டை எடுத்து வீச, அது ஓலக்குரல் இட்டுக்கொண்டு, ஒரு காலை தூக்கி வைத்துக்கொண்டே ஓடுவதை எந்தச் சலனமுன்றி வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் சூழ வாழ்கிறோம். எங்கோ, யாரோ, யார் மீதோ செலுத்தும் வன்முறைகளைத் தவறு என மணிக்கணக்கில் பேசும் மனிதர்கள், தன் கண்ணெதிரில் நிகழும் வன்முறைகளுக்கு காரணமாகவோ அல்லது வேடிக்கை பார்த்தோ எந்தக் குற்ற உணர்வுமின்றி நகர்கின்றனர். 

இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு கல்லூரி இரண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வு ஆரம்பிக்க இருந்தது. தொண்டு நிறுவனத்தின் வேலைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் மத்தியில் எதற்காக மாநகரம் நோக்கி ஓடி வந்தாளோ, அதற்கான நேரம் ஒதுக்குவது சிரமமான காரியமாக இருந்தது. இருப்பினும் கல்லூரிப் படிப்பும், அதனை அடுத்து சுய பொருளாதாரமும் பெண்கள் வாழ்வில் மிகவும் முக்கியமானவை என்பதை அவள் அறிவாள்.

மாலை தனியே “மன்னிச்சுரு பாப்பா; கோவம் அதிகமாயிற்று” என அருகே வந்தான். சீர்குலைந்து வந்த வறண்ட குரலில் அவனின் சோகத்தைக் கூட்டிக் கொண்டான். இப்படி ஒரு வாழ்வினை என்னால் வாழ முடியவில்லை என அழுத அவளை மீண்டும் ஓங்கி அறைந்தான். மங்கலான அவனது உருவத்திடமிருந்து வெளியேறிச் சென்றாள் அவள். மாநகரத்தின் தூசிகளேறிய ஒரு சுவரின் ஓரமாய்ச் சாய்ந்து நின்றாள். எந்த நம்பிக்கையின் பொருட்டு, வாழ்தலின் நிமித்தம் அவள் இம்மாநகரத்திற்கு வந்தாளோ, அந்த நம்பிக்கை மெதுமெதுவாய் கூடியது. இந்தச் சூழலிலிருந்து வெளியேறி, மேம்பட்டதொரு சூழலுக்கு செல்லும் கட்டாயம் குக்கிராமத்திலிருந்து மாநகரம் வந்த அவளுக்கு இருந்தது.

மறுநாள் காலை தேர்வெழுத வேண்டியிருந்ததால், இரவு முழுவதும் படிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள். கேபேசியில் இரண்டு முறை அவன் அழைத்ததைப் பொருட்படுத்தாமல் இருந்தாள். மூன்றாவது அழைப்பைத் துண்டித்து, மெதுவாக மொட்டை மாடியை அடைந்தாள். இருளில் கரிய பெருத்த உருவம் அவளது கைகளைப் பற்றிச் சென்று, தரையில் படுக்க வைத்தது. கீழாடையை உருவி மேல் ஏறி ஒரு முதலையைப் போல் அழுந்தத் தேய்த்துப் பின் வேகம் கூட்டியது. சில நிமிட நரகத்தை முடித்ததும், அவன் கீழே சென்றுவிட்டான். மாசுக்கற்றினால் நட்சத்திரங்கள் தெரியாத வானத்தை வெறித்துக்கிடந்தாள்.  மெதுமெதுவாய் ஏறும் நஞ்சினைப் போல் அவள் உடல்வலி கூட ஆரம்பித்தது. அது வெறும் உடல்வலி மட்டுமில்லை. யாரிடமும் பகிர முடியாது; வெளியேற்றவும் முடியாது தகிக்கும் அவமானம். பறக்கச் சிறகிருந்தும், விரிந்த வானம் இருந்தும் வளர்ப்புக் கோழிகளால் பறக்க முடியாததே அதன் சிறை.

நாள் முழுவதும் கரையைக் கடக்க முயற்சிக்கும் அலைகளுடன் விளையாடியதைப் போன்ற சோர்வு மேலிட்டது அவளுக்கு. சில நாட்களாகவே சோர்வும் அலுப்புமேறிய அவளது முகத்தை அனைவரும் உற்றுநோக்குவதாகவே அவள் உணர்ந்தாள். காலைக் கடுங்காபியிலிருந்து, உணவு வரை எதையும் சாப்பிடப் பிடிக்கவில்லை அவளுக்கு. சமயலறையில் வேலை செய்வதைக் கூட புறக்கணிக்க ஆரம்பித்தாள். தனிமை உணர்வும், வீட்டின் நினைவும் ஒருசேர சோகத்தில் ஆழ்ந்தாள். காய்ச்சலுற்ற ஒரு காலையில், திடீரெனஒரு கையில் மாத்திரையுடனும், மறு கையில் தண்ணீருடனும் வந்தான். அவன் எதிரிலேயே அம்மாத்திரையைப் போட வைத்தான். பிறகு அவளிடம் சொன்னான், நீ கருவுற்றுக்கிறாய் என்று. மாலையின் கீழ்வானச் சிகப்பு பற்றி எரிந்தது. 

வயிற்றுவலி பிசைந்தெடுக்க ஒரு மூலையில் சென்று அமர்ந்தாள். கொடூரமாய்த் தொடர்ந்த வலி, வெளியேறத் துடித்தது. கழிவறையின் வாசலை மெதுவாய் அடைந்த அவள் தடுமாறினாள். அங்கிருந்த பெண்கள் பதறி கையைப் பிடிக்க, மாதவிடாய் எனச் சொல்லி உள்நுழைந்தாள். கட்டி கட்டியாய் இரத்தம் வெளியேறி, சிவந்த உறுப்பொன்று கீழே விழு, அதனைப் பற்றியிருந்த கொடியினை கையால் இழுத்து அறுத்து, கழிவறையினுள் இட்டு தண்ணீர் ஊற்றினாள். கைகளில் பரவிய நடுக்கம், உடல் முழுவதும் ஆட்கொண்டது. உரைந்த நிமிடங்கள். எதற்கென தெரியாமல், தண்ணீரை முகத்தில் ஊற்றி, நிற்காமல் சுரக்கும் கண்ணீரை மட்டுப்படுத்தி வெளியேறினாள். யாரிடமும் பேச மறுத்து, சுருண்டு கிடந்தாள். இது கொலையா? பாலியல் வன்புணர்விற்கு ஆட்பட்டவர்களால், எப்படி அக்குழந்தையைச் சுமக்க முடியும்? மனிதர்கள் தங்கள் மீதான கழிவிரக்கம் கொள்ளவோ அல்லது தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணரவோ ஏதாவதொரு குற்ற உணர்வை வைத்துக்கொள்கிறார்கள்.  ஒரு மாதம் வரை தொடர்ந்த உதிரப்போக்கில் வெளிறியிருந்தாள். மருத்துவ உதவியுடனே  உதிரப்போக்கு நிறுத்தப்பட்டது. இருப்பினும், மனநிலையிலும் உடல்நிலையிலும் தேர்ச்சி இல்லாமலிருந்தாள். சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளுமே மனித வாழ்வினை நகர்த்திச் செல்கிறது.

தன்னுணர்வை இழந்து, சுய அடையாளம் இழந்து எதுவுமற்ற வெறுமையை மட்டுமே உணரும் நாட்கள். எல்லாவற்றில் இருந்தும் ஓட எத்தனிக்கும் பைத்தியக்காரத்தனத்தையே அவளது மனம் ஓட்டிப்பார்க்கிறது. உடலெல்லாம் நடுக்கம் எடுத்து, பின் மண்டை வலித்து, மூச்சினை உள்ளிழுத்து வெளியே தள்ள சிரமப்பட்டு, ஒன்றுமே இல்லையென ஆகும் வரையிலும் சிந்தனைகளைக் கைவிடுவதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் தவறிக் கொட்ட எத்தனிக்கும் அவளது கண்ணீரை கெட்டியாக இழுத்துப் பிடித்து, நீண்ட பெரும் மூச்சினை விடுகிறாள். நினைவுகளிலிருந்து விடுவித்துக் கொள்வது அவ்வளவு சுலபமில்லை. கிளறப்படும் பழங்கதைகளில் அவமானங்களும் வலிகளுமே மிஞ்சி நிற்கும் வாழ்வு. யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத நினைவுகள்; பகிர்ந்தால் நிறங்கள் கூடும் நினைவுகள் அவை. 

உதிரப்போக்கு நின்ற மறுநாள் இரவு கைபேசியில் அழைப்பு வந்தது. தொடர்ச்சியாக வந்த அழைப்புகளை பார்த்துக்கொண்டே இருந்தாள். பின்னர் கைபேசியை அணைத்துவைத்து உறங்கினாள். “பாப்பா, உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா? உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றவாறு மறுநாள் அருகே வந்தான். “எதை மிஸ் பண்ண?” என்ற கேள்விக்கு கையை ஓங்கினான். ஒங்கிய கையை அழுந்தப்பிடித்து, பளாரென ஒன்று வைத்தாள் அவள். “அவ்வளவு திமிராயிற்றா உனக்கு!” எனச் சொல்லியவாறே அவளை அடித்துத் துவைத்தான். அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இம்முறை வலியின் பொருட்டு கூட அவளது கண்கள் கலங்கவில்லை.  இக்கோரப் பிடியிலிருந்து வேளியேறுவது அவ்வளவு சுலபமில்லை என்பதை அவள் அறிவாள். அனுமதிக்கப்படும் வரை தான் அவமானம்; மீறியெழும் பொழுது அவை போராட்டம். அவளது கண்களில் ஒளி தகித்தது.

———–

Exit mobile version