கடல்கன்னி-அனுராதா ஜெய்ஷங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 133 கடல்கன்னி-அனுராதா ஜெய்ஷங்கர்

“வான், புவி, மலை, கோள், நிலா, அருவி, ஆறு, கடல்… இயற்கையோட எல்லா பிரம்மாண்டங்களுக்கும் ஏன் நாம சின்ன பேரா வச்சிருக்கோம்… பெரிய கம்பீரமான பேரா வெச்சிருக்கலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?”

அவள் கடலைப் பார்த்துக் கொண்டு என்னை கேட்டபோது நான் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளுக்கு கடல் மேல் உள்ள தீராக் காதலை அலைகள் போன்று ஓயாமல் அவள் சொல்லிக்கொண்டே இருப்பாள். ஆனால் எனக்கு அவள் மேல் உள்ள காதலை நான் இன்னும் அவளிடம்  சொல்லவில்லை.

“ராம், எந்த உலகத்துல இருக்கீங்க?  கேட்ட கேள்விக்கு பதிலே காணோம்?”

“மகாசமுத்திரம், பர்வதம் என்றெல்லாம் பெயர் இருக்கே” என்றேன்.

“ஆமாம், வச்சீங்க” என்றபடி கடலைப் பார்க்க திரும்பிக் கொண்டாள். அவள் பார்வை என்னைத் தொட்டு விட்டு திரும்பிய வேகம் காலைத் தொட்டு விட்டு ஓடுகிற அலை போன்று இருந்தது.

நானும் அவளை போலவே யோசிக்கிறேன்  என்று தோன்றியது. எனக்கு முதன்முதலில் அவளை பார்த்தது நினைவுக்கு வந்தது.

                                                    ***********                                    


“கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடற்கரைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”. கடற்கரைச்சாலையில் காவல்துறை வாகனத்தில்  இருந்தபடியே அறிவித்துக் கொண்டு இருந்தார் ஒரு காவலர். “ஏம்மா,  டிவி, ரேடியோல விடாம சொல்லியும் திரும்பவும் வந்து நின்னா எப்படி?” காவல்காரர் அவளிடம் மெதுவாக சொல்வதாக நினைத்து அதையும் ஒலிபெருக்கியில் கத்தினார் .

கடற்கரைச்சாலைக்கு ஒரு வேலையாக வந்து இருந்த நான் எதிர்ப்புறம் நிறுத்தியிருந்த எனது வண்டியை எடுக்க முற்படும்போதுதான் அந்தப் பெண்ணை பார்த்தேன்.

காவல்காராரிடமிருந்து சட்டென திரும்பி அவள் வேகமாக சாலையைக் கடக்கத் தொடங்கினாள். கடல் நீல நிறத்தில் அணிந்திருந்த அவளது துப்பட்டா அவள் வேகமாக நடந்தபோது காற்றில் மேலும் கீழுமாக அலைகளைப் போல் விழுந்து எழுந்தது. அவள் நேராக நான் நிற்கும் இடம் நோக்கி வரவே எனக்குள் அலைகளின் ஆர்ப்பரிப்பு தொடங்கியது. மிகவும் வசீகரமான பெண்ணை பார்த்தால் அது கூட நடக்கவில்லை என்றால் எனக்கு இருபத்தேழு  வயதாகி என்ன பலன்? அவள் என் வண்டிக்கு பக்கத்தில் இருந்த அவளது ஸ்கூட்டியை எடுக்க முற்பட்டாள்.

“விட்டா கடலுக்கே கதவு போடுவாங்க போல இருக்கு”. அவள் முணுமுணுத்தது என் காதில் விழுந்தது.

“யார் சார் நீங்க? எனக்கு என்ன பிரச்சனையா இருந்தா உங்களுக்கு என்ன?” என்னிடம் கோபமாக சொன்னபடியே அவள் வண்டியில் விருட்டென்று சென்றபோதுதான் நான் மனதில் நினைத்ததை வெளியில் சொல்லி விட்டேன் என்பது புரிந்தது. அழகான பெண்களிடம் அசடு வழிதலும்  மானம் போவதும் இளைஞர்களுக்கு சகஜம்தானே. ஆனால் மறுநாளே அவளை திரும்பவும் பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை .
                                                           **********


மறுநாள் அலுவலகத்தில் மதிய இடைவேளையில்  உணவு விடுதிகள் அமைந்திருக்கும் தளத்தில் நண்பனுடன் உணவருந்துகையில்  அந்தக் குரல் காதில் விழுந்தது.

” உங்க ஹோட்டலுக்கு பின்னாடியே கடற்கரை இருக்கா, உப்பை அள்ளிக் கொட்டி இருக்கீங்க?” தொடர்ந்து பெண்கள் கலகலவென்று சிரிப்பது கேட்டது. அவள்தான். என்னையும் அறியாமல் மனம் துள்ளியது.

“யாருடா அந்த பொண்ணு?” என்றேன் நண்பனிடம். “நம்ம ஆபீஸ்தான். அக்கவுண்ட் செக்ஷனுக்கு மாற்றல்ல வந்து இருக்காங்க” என்றான்.

அன்று மாலை ஏதோ ஒரு உந்துதலில் நான் கடற்கரைக்குச் சென்றபோது அவள் அங்கு அமர்ந்து இருப்பதை பார்த்தேன். நான் அவளை பார்க்காத மாதிரி ஆனால் அவள் என்னை பார்க்கும்படியாக அமர்ந்தேன் . சில நிமிடங்களில் அவள் குரல் கேட்டது.

“ரொம்ப சாரி சார். நேத்து ஏதோ கோவத்துல உங்ககிட்ட தேவையில்லாம கடுமையா பேசிட்டேன்” என்றாள்.

“பரவாயில்லைங்க, நானும் மனசுக்குள்ள நினைச்சதை வெளியில சத்தமா கேட்டுட்டேன் போல இருக்கு. முன்னபின்ன தெரியாதவங்க கேட்டால் கோபம் வரத்தானே செய்யும்” என்றேன்.


மெலிதாகப் புன்னகைத்தாள்.

” ஏன் கடற்கரைக்கு போக முடியாததுக்கு உங்களுக்கு அவ்வளவு கோபம்?” என்றேன்.

மிகவும் இலகுவாகி விட்டாள்.

“சின்ன வயசுல பூகோள  வகுப்பில் பூமி உருண்டை என்றும், பூமியின் முக்கால்வாசிப் பகுதி கடல் நீரால் ஆனது என்றும் தெரிந்துகொண்டபோது எழுந்த சந்தேகம் இன்னும் நினைவில இருக்கு. அப்படியென்றால் பூமியின் கீழ்ப்பக்கம் உள்ள நீர் எல்லாம் கீழே கொட்டி விடாதா?அப்போது உண்டான கடல் மீதான பிரமிப்பு இன்று வரை எனக்கு வளர்ந்து கொண்டேதான் இருக்கு. நான் வளர்ந்த குழந்தைகள் காப்பகத்தில் ஒரு சுற்றுலா வந்த போது, பனிரெண்டு வயசுல முதல் முதலாக கடலை பார்த்தேன். அந்த நிமிஷத்தை என்னால் மறக்கவே முடியாது. மூணு வருஷம் முன்னர் இந்த ஊருக்கு வேலைக்கு வந்ததில் இருந்து வாரம் நாலு நாளாவது இங்கே வந்துடுவேன். கடல் எனக்கு எல்லாமும்… அம்மா, தோழி, என் குழந்தை, ஆசான், தெய்வம் எல்லாம்” என்றாள்.

பிரமிப்புடன் அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தேன்.

எல்லோருக்கும் கடலை பார்ப்பதில்  இருக்கும் ஆர்வம்தான் எனக்கும் என்றாலும் அவளை பார்ப்பதற்காக அடிக்கடி  கடற்கரைக்கு போக ஆரம்பித்தேன். நாளடைவில் எங்களது நட்பு பலப்பட்டது. ஒருநாள் விளையாட்டாக அவளிடம் கடலைப் பற்றி ஒரு நிமிடம் விடாமல் பேச முடியுமா என்று கேட்டேன். சிறிய உரையே நிகழ்த்தி விட்டாள்.

“எந்த ஒரு அதிசயத்தக்க இடமோ, பொருளோ, நிகழ்வோ, மனிதரோ ஏற்படுத்துகிற பிரமிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கும்? சில மணித்துளிகள்? சில நாட்கள்? சில மாதங்கள்? ஆனால் கடல் ஏற்படுத்துகிற பிரமிப்பு ஒருவரின் ஆயுட்காலத்தில் தீரக்கூடியதா? வாழ்நாளில் முதன்முறையாக கடலை பார்க்கிற பரவசத்தை எவரேனும்  மறக்கமுடியுமா? கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிற நீர்ப்பரப்பின் பிரம்மாண்டத்தின் முன் தன்னை ஒரு சிறு துகளாக உணர்ந்த தருணத்தை மறுக்கமுடியுமா? ஒரு நியதிக்குக்  கட்டுப்பட்டு சீராக எழும்பி விழுகிற அலைகளின் ஒழுங்கை வியக்காமல் இருக்கமுடியுமா? தொட்டுச் செல்கிற அலைகளின் ஸ்பரிசம் தருகிற சிலிர்ப்பை உணராமல் இருக்கமுடியுமா? தொடுவானத்தை எட்டிப் பிடித்து பூமியின் விளிம்பை காண்பிக்கின்ற தூரக்கடலின் வித்தையைக் கண்டு மலைக்காமல் இருக்கமுடியுமா? கடலை பார்க்கச் செல்வதற்கு காரணம் தேடுபவரை காண்பிக்க முடியுமா? எல்லா இடத்திலும் ஒரே கடல்தானே என்று போகிற  ஊரில் இருக்கிற கடலைத் தரிசிக்காமல் வர முடியுமா?”

படபடவென்று கை தட்டினேன். “உன்னை கடல்கன்னி என்றுதான் கூப்பிட போகிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“தெரியல ராம். எனக்கு கடல் மேல அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கு. அப்படியே அதுக்குள்ள போய் அமிழ்ந்து மீன்போல  பயணிச்சு, ஆனால் மனுஷனோட மூளையோட நினைவோட கடலை உணரணும் போல எனக்கு ஆசையா இருக்கு” என்றாள்.

“நீ எங்கே போனாலும் அங்கு  வந்து  உன்னோடு சேர்ந்து வாழணும் என்று எனக்கு விருப்பம் இருக்கு. வரலாமா? என்றேன்.

ஆழ்கடல் போல் அமைதியானாள். “என்னோட வாழறது அவ்வளவு சுலபமில்லை ராம். நான் கொஞ்சம்… என்ன சொல்றது… எக்ஸன்டரிக்” என்றபடியே என்னை பார்த்தாள். எனக்கு சவால்கள் பிடிக்கும் என்றேன்.


“சவாலை அப்பப்போ சந்திக்கலாம். சமாளிக்கலாம். வாழ்க்கையே சவாலா ஆயிட்டா? வேண்டாம்” என்றாள்.

எதுவும் பேசாமல் என் இரு கைகளையும் அவளை நோக்கி இறைஞ்சுகிற விதத்தில் நீட்டினேன். பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தவள் பின் மெல்ல அவள் கைகளை என் கைகள் மேலே வைத்தாள். அப்படியே மென்மையாக அவள் விரல்களை பற்றிக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் என் அம்மா, மற்றும்  நண்பர்களின் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து, அவள் விருப்பப்படி கடற்கரைக்கு வந்து மாலை மாற்றிக்கொண்டோம். தேனிலவுக்கு கடற்கரை உள்ள ஊருக்குத்தான் சென்றோம்.

“ராம், நீங்க எத்தனை விதமான கடலை பார்த்து இருக்கீங்க?”


“உன் கேள்வி புரியலையே. எப்போதும்  கடல் ஒரே மாதிரிதானே”.

“இல்லை, கடல் விதவிதமா இருக்கும். எனக்குத் தெரிஞ்ச கடலை எல்லாம் எழுதி இருக்கேன். படிங்களேன்” என்று அவளது டைரி ஒன்றைக் கொடுத்து அதில்  ஒரு குறிப்பிட்ட பக்கத்தை காண்பித்தாள்.

‘எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக அனுபவிப்பதற்கு ஆழத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால் கரையிலிருந்து பார்க்கும்போது கடல் காண்பிக்கிற ஜாலங்களே அனுபவித்து தீரக்கூடியவை அல்லவே? சூரியோதயத்தின் போது தகதகக்கிற தங்கக் கடலை பார்த்திருப்பீர்கள். பூர்ண சந்திரனின் தண்ணொளிக் கதிர்களோடு கண்ணாமூச்சி ஆடுகிற வெள்ளிக் கடலையும்  கூட பார்த்திருப்பீர்கள். சுட்டெரிக்கும் உச்சிவெயிலில் கண்ணை கூசவைக்கிற வெள்ளைக் கடலை  பார்த்திருக்கிறீர்களா? அடர்ந்த அமாவாசை இருளில் இரைச்சலால் மட்டுமே தன் இருப்பை உணர்த்துகிற கரும்பூதக்  கடலை? அடித்துக் கொட்டும்  மழையில் நனைகிற கடலை? சற்று தொலைவிலேயே நனைய முடியாமல் தவிக்கிற கடலை? அலைகளை   தாண்டியவுடன் பேரமைதியை உணர்த்துகிற நிச்சலனக் கடலை?ஆனந்தத்தை இரட்டிப்பாக்கி நம்  துக்கத்தை உள்வாங்கிக் கொள்கிற மாயக் கடலை? முதல் நாள் போய் மறுநாள் வந்தால், முன்வந்து தேடியதின் தடயத்தை விட்டுச் சென்றிருக்கும் ஈரக்கடலை ?  பார்க்கா விட்டால் முறைத்துக் கொண்டு உள்வாங்கும் கோபக்கடலை? தென்றலாய் தாலாட்டும் தாய்மைக்  கடலை? சுழன்றடிக்கும் சூறாவளியுடன் பொங்கிச் சீறும் முரட்டுக் கடலை? “

ஆச்சரியமாக அவளை நிமிர்ந்து பார்த்தேன்.  கடலை விட அழகாகவும் ஆழமாகவும் வசீகரமாகவும் தோன்றினாள். இன்னும் அவள்பால் ஈர்க்கப் பட்டேன். அலைகளின் தாலோட்டோடு படகில் செல்வது போல் நாங்கள் கழித்த அந்த இரவில் ஆழ்கடலின் அமைதியை அடைந்தபோது விடியற்காலை மணி மூன்று இருக்கும்.

மறுநாள் ஆறு மணி போல் என்னை எழுப்பினாள்.


“கடற்கரைக்கு வரிங்களா ராம்?”

“எனக்கு அசதியாக இருக்கு.  நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன்” என்றேன்.

எவ்வளவு நேரம் சென்றது  என்று தெரியவில்லை. அலைபேசி ஒலித்தது . அவள்தான். காணொளியில் … மிக மகிழ்ச்சியாக இருந்தாள்.

“ராம், உனக்கு கடலைப் பிடிக்கிற அளவுக்கு கடலுக்கும் உன்னை பிடிக்கும் என்று எப்படி தெரியும்ன்னு கேப்பீங்கதானே, இங்கே பாருங்க. கடலுக்கும் என்னைப்  பிடிக்கும் என்று நான் உணர்கிற தருணம்…மகாபாரதக் கண்ணனாய் கடல் மண்ணுக்கும் விண்ணுக்குமாய் எழும்பி விஸ்வரூப தரிசனம் தருகிறது… பாருங்க”.

அவளது அலைபேசியில் கடல் தெரிந்தது. அதிர்ந்து போனேன். நான் கத்தியது அவளுக்கு கேட்கவில்லை. அவள் குரல் தொடர்ந்தது. “என்னே உன் கருணை! கை  கூப்பி வணங்குகிறேன். எவ்வளவு வேகமாய் என்னை நோக்கி வருகிறாய்! பக்தனை ஆட்கொண்ட இறைவன் போல கடலும் என்னை வாரிச் சுருட்டி ஆட்கொ………!

தினந்தோறும் கடற்கரைக்கு போய்க்கொண்டு இருக்கிறேன்.                  

****************************************

Exit mobile version