மனிதர்கள் விற்பனைக்கு-கார்த்திக் கிருபாகரன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 141 மனிதர்கள் விற்பனைக்கு-கார்த்திக் கிருபாகரன்

அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பக்கிரி மனித ஸ்டால். பத்துக்கு பத்து அளவிலான சிறிய கடை.அதில்
இரண்டு பெரிய கூண்டுகள்  இருந்தன. கடைக்குள்ளே வைக்க இடமில்லாமல் கூண்டு எப்போதும் கடையை ஒட்டி வெளியிலேயே கிடக்கும்.

ஒரு கூண்டிற்கு மேல் இன்னோர் கூண்டு. மேலே உள்ள கூண்டில் சிவப்பு மனிதர்கள், கீழே உள்ள கூண்டில் கருப்பு,வெள்ளை,மாநிறம் கலந்த நாட்டு மனிதர்கள் இருந்தார்கள்.

மேலே உள்ள கூண்டுக்குள் அதிகமான வெள்ளை மனிதர்களை அடைத்து வச்சிருந்தார்கள்.
“மனிதர்கள் விற்பனைக்கு” என்று பெரிய அளவிலான விளம்பர பலகை தொங்கவிடபட்டிருந்தது.
விடியற்காலை 6 மணிக்கு அவசர அவசரமா வந்த டைகர் நாய் கடையை வேக வேகமா சுத்தம் பண்ணி, மரம்,கத்தி எல்லாத்தையும் தயாராக வைத்து வாடிக்கையாளர் வருகைக்கு காத்திருந்தான்.அவன்தான் கடை உரிமையாளர். 10 வருடங்களுக்கு மேல் இந்த கிராமத்தில் கடை வைத்துள்ளான்.நேர்மையானவன்.நன்றியுள்ளவன்.அதனால் கடையிலும் நன்றியுள்ளவர்களையே வேலைக்கு வைத்துள்ளான்.

ஜானி நாய் கூட ஆடி அசைந்து மெதுவாக நடந்து வர ஜிம்மி நாயை பார்த்தவுடனே, கோபமான கடை முதலாளி டைகர் “எல்லா நாளும் லேட்டா வறீங்க. அதுவும் இன்னக்கி ஞாயித்து கிழமையுமா லேட்டா வரது.அறிவில்ல…போங்கடா! சீக்கிரம் மரத்தை,கத்திய எடுத்துட்டு வாங்க” என்று திட்டி கொண்டிருக்க, அந்த கிராமத்து தலைவி மீரா சிங்கம் முதல் வாடிக்கையாளராக கடைக்கு வந்தாள்.
“வாங்கம்மா, வாங்க” என்றான் டைகர்.
“ம்….. கருப்பு மனுஷன் கிலோ எவ்வளவு ?” என்றாள்  மீரா.

“கருப்பு உயிரோடன்னா 1000 ரூபா தான். தோலை உரிச்சு வெட்டுனா கிலோ 800 ரூபாங்க” என்றான் டைகர்.

“அடேங்கப்பா! விலை ரொம்ப ஜாஸ்தி” என்று சலித்து கொண்டாள் மீரா.

“நாட்டு கருப்பு மனுஷன். ஊரை சுத்தி மேய்றவன். ஓடி ஆடி வண்டி இழுத்து வேல செய்றவன்.கொழுப்பு இருக்காது.சாப்புட்டா சத்து” என்றான்.

“சரி.. சிவப்பு மனுஷன் விலை ?”

“அவன் இறைச்சிகாக இருக்கது.அவன் ஓடி அலைய மாட்டான்.உட்காந்து மணி அடிக்கிற மாதிரி தானே. ஊசி போட்டு சதை புடிக்க வைக்கிறது. புல்லு,செடி,கொடி திங்கிற சைவம்.ருசிக்கு சாப்பிடலாம்.அது கிலோ 250 ரூபா தான்”

“நம்ம பட்ஜெட்க்கு அதுதான் வேணும்.இரண்டு கிலோ போடு” என்றாள் மீரா.

“ஜானி இரண்டு கிலோ சிவப்பு மனுஷனை வெட்டு” என்று டைகர் குரல் கொடுக்க,
உடனே, இயந்திரத்தை இயக்கி கூண்டிலிருந்து ஒரு சிவப்பு மனிதனை எடுக்க, மீதி இருக்கும் மனிதர்கள் கத்தி கூப்பாடு போட்டார்கள்.
“சீ…. என்னா கத்து கத்துதுக…” என்று கூண்டை அடைத்து, வெளியே எடுத்த மனிதனின் வாயை பொத்தி கத்தியால் கழுத்தை அறுத்து,தண்ணீரை இயந்திரத்தில் ஊற்றி மூண்டமான மனிதனை உள்ளே போட்டார்கள். இயந்திரம் சுழன்று மனிதனின் இரத்ததை ஊறிஞ்சி தோலை உரித்து கொடுக்கும்.

பின் தோலுரிந்த மனிதனை எடுத்து கை கால் விரலை, கழிவு பாகங்களை வெட்டி எடுத்து ஒரு பகுதியை வெட்டி எடை போட்டு சரி பார்த்து,பின் சிறு சிறு பாகங்களாக வெட்டி கூடையில் போட்டு கொடுத்தான் ஜானி நாய்.

“இந்தப்பா” என்று பணத்தை நீட்டினாள் மீரா சிங்கம்.

“அக்கா… பணம் கம்மியா  இருக்கு.ஜிஎஸ்டி ? ” என்றான் டைகர் நாய்.

“வழக்கமா ஜிஎஸ்டி 5 ரூபா போடுவீங்க ?” என்றாள்.

“இறைச்சிக்கு ஜிஎஸ்டி 10 ரூபா ஆகிட்டாங்க” என்று சிரித்தபடி சொன்னான் டைகர்.

“நல்லா போடுறாங்க ஜிஎஸ்டி” என்று சலித்தபடி பணத்தை கொடுத்தாள்.
“அரசு போடுது.நாங்க என்ன பண்ணுறது” என்று வாடிக்கையாளரிடம் அசடு வழிந்தான் டைகர்.


மேலிருக்கும் சிவப்பு மனிதர்களின் எச்சங்கள் எப்போதும் கீழ் உள்ள கருப்பு,வெள்ளை,மாநிற மனிதர்களின் கூண்டில் வந்து விழும்.

ஏற்கனவே காட்டு பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரிய முடியாமல் கூண்டில் சிக்கி இருக்கிற கடுப்போடு மேலிருந்து விழுகிற சிவப்பு மனிதர்களின் எச்சங்களால் கருப்பு மனிதர்கள் மிகவும் ஆத்திரத்தோடு இருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் சிவப்பு மனிதர்களின் எச்சங்கள் தன் மேல் விழுவதை பொறுக்க முடியாமல் “சும்மா கீழ எச்சம் போட்டுட்டு இருக்குற வேல வச்சுகாத” என்று கோபத்தில் சில கருப்பு மனிதர்கள் கத்தினார்கள்.

கூண்டின் மேல் பகுதியில் சவுகரியமாக அமர்ந்த நிலையில் “எச்சத்தை சுத்தம் பண்ணுறது ஒன்னும் உங்களுக்கு புதுசு இல்ல.தொடச்சிட்டு போங்கடா” என்று திமிராக சிவப்பு மனிதர்கள் சொல்ல, “ஹா…..ஹா….” என்று வெள்ளை,மாநிற மனிதர்கள் சிலரும் கருப்பு மனிதர்களை பார்த்து இளக்காரமாக சிரித்தார்கள்.

சிரிப்பதை பார்த்து கோபத்தில் ,”டேய் அவன்ங்க உங்க மேலயும் தான் எச்சம் போட்டானுங்க.அதுக்கு அவன்களுக்கு வாக்கலத்து வாங்குறீங்க” என்று கருப்பு மனிதர்கள், வெள்ளை மனிதர்கள் மேல் கோபத்தில் திட்டினார்கள்.

“என் மேல விட உன் மேல தான் அதிகம்.அதுவும் இல்லாம அவங்களும், நாங்களும் எல்லாம் ஒன்னு தான்.எங்க மேல வேணும்னு எச்சம் போட மாட்டாங்க” என்று வெள்ளை மனிதர்கள் சொல்ல,

“அப்ப போய் அவன் கூட இருக்க வேண்டியது தானே” என்று கருப்பு மனிதர்கள் பதலடி தந்தார்கள்.

“இவனுங்களா சொல்லுறாங்க.சிவப்பு மனுஷங்க நம்பள சேர்த்துக்க கூட மாட்டாங்க.அவங்களுக்கு உழைச்சு போட இவங்க திரியுறாங்க” என்று மாநிற சில மனிதர்கள் கூச்சல் போட, கீழ் கூண்டுக்குள்ளே கலகமானது.

கருப்பு மனிதர்களும்,வெள்ளை மனிதர்களும் தொடர்ந்து இது குறித்து தங்களுக்குள் சண்டை செய்துகொண்டே இருக்க. டைகர் நாய் அவ்வப்போது கூண்டிற்குள் அரிசி,குருணையை சிறிய பாத்திரத்தில் வைத்து உள்ளே வைத்தார்.
அடுத்தடுத்து புலி,நரி,கரடி,நாய் என பல வாடிக்கையாளர்கள் வர பரபரப்பாக மனித கறி வியாபாரமானது.


விலங்கு உலகம் விலங்கு உலகம் என்று ஒன்று உருவானது.அது பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபத்தாறு ஒளியாண்டுகள் அப்பால்.

அங்கே விலங்குகள் ராஜ்யம். ஆறாம் அறிவு,ஏழாம் அறிவை தாண்டி எட்டு, ஒன்பது அறிவு அங்கே இருக்கும் விலங்குகள்.

நாட்டில் சோழபுலி ஆட்சிதான்.ஆனால் கொடுங்கோல் ஆட்சி இல்லை. பெட்ரோல்,கேஸ் விலையிலிருந்து எல்லாம் நியாமான விலை தான்.ஆனால் ஜிஎஸ்டி இருக்கிறது.அதுவும் குறைவாக தான் இருக்கிறது.

புலிகளுக்குள்ளே அமூர் புலி,வரி புலி என வகைகள் இருந்தாலும், பெயரளவில் புலி என்று மட்டும் வைத்து கொள்வார்கள்.மற்ற விலங்குகளும் அது போல தான்.
நாட்டையும் கண்ணியமாக நடத்துகிறது.மற்ற நாட்டவர்களை பஞ்சம் பிழைக்க விட்டதில்லை. வேற்று மொழிகாரனை ஆள விட்டதுமில்லை.

விலங்குகளுக்கு பிரியமான உணவே நர மாமிசம்.

இங்கே தலைகீழாக ஸ்கூட்டர்,மோட்டார் பைக்கில் கோழிகளை,ஆடுகளை அள்ளிக் கொண்டு மனிதாபிமானம் இல்லாமல் போனார்களே!, அது போல விலங்கு உலகில் வெற்று உடல் மனுஷங்களை மனுஷ பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.
கம்பிக் கூண்டுகளில் மனுஷனை அடைத்து சில்லறை வியாபாரம் செய்யும் கோழி குரூப்ஸ் இருக்கிறார்கள்.

தலைகீழாக மனுஷனைக் கட்டி தொங்கப் போட்டு அவர்கள் ஊர் வண்டியில் கொஞ்சம் கூட ஆட்டுதாபிமானம் இல்லாமல் ஆட்டு குருப்ஸ்ம் மனுஷக் கறி கடைகளை  நடத்திட்டு வராங்க.
யானை குருப்ஸ் சைவ உணவு கடைகள்,பலசரக்கு கடைகளும் நடத்தி வருகிறார்கள்.
ஓநாய்கள், பூனைகள் எல்லாம் ஐடி கம்பெனி,பல முக்கிய நிறுவனம் நடத்தி கொண்டும்,பணிபுரிந்தும் வந்துள்ளனர்.

அன்றைய தினம் டைகர் பக்கிரி ஸ்டால் பரபரப்பாக போனது.
மாலை நெருங்கியது.கடையில்  சிவப்பு மனிதர்கள் மட்டும் அதிகம் விற்று போனது.கருப்பு,வெள்ளை,மாநிறம் எல்லாம் ஒன்றிரண்டு தான் விற்பனை ஆனது. ஆனால் கூண்டுக்குள் சண்டை ஓய்ந்தபடில்லை.
சட்டென்று கார் வந்து நின்றது. ஒருபக்கம் கார் கதவை திறந்து ரங்கு சிறுத்தை இறங்க,மற்றொரு பக்கம் காளி ஒட்டகம் இறங்கியது.
புது மாடல்  காரை பார்த்து அழகில் வாயடைத்து போய் நின்றான் டைகர்.
இருவரையும் பார்த்த ஜானி, “வா சார் என்ன வேணும் ?” என்றான்.
“உயிர் கருப்பு மனுஷன் ஒன்னு” என்றான் ரங்கு.
“ஒன்னு போதுமா ?” என்றான் ஜானி.
“ம்….” என்றவாறு டைகரை பார்த்து,”என்ன சார் காரை வெறுச்சு பாக்குறீங்க” என்றான் காளி.
“ஆமாப்பா… புது மாடல் கார் நல்லா இருக்கு” என்றான் டைகர்.
“ஓட்டி பாக்குறீங்களா ?” என்றான் காளி.
“அட வேணாம்பா” என்று சிரித்தபடி மறுத்தான் டைகர்.
“நமக்குள்ள என்ன சும்மா ஓட்டி பாருங்க” என்று சாவியை நீட்டினான் காளி.
“இல்ல வேணாம்” என்று பெருந்தன்மையாக மறுத்தான் டைகர்.
ஒரு உயிர் கருப்பு மனிதனை ஜானி பார்சல் கட்டி கொடுக்க,காளி பணம் கொடுத்துவிட்டு காரில் ஏறி சென்றார்கள்.
கார் சென்றவுடனே,”அண்ணே! கார்ல ரவுண்டு போகலாம்ல” என்றான் ஜானி.
“டேய், பணமிருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாம அவங்க இருக்காங்க.நாமலும் பெருந்தன்மையா நடந்துக்கனும்” என்றான் டைகர்.

அந்த நேரத்தில் முத்து காளை அவசர அவசரமாக வந்து, “நாளைக்கு வீட்டுல விஷேசம் எனக்கு கருப்பு,வெள்ளை, மாநிறம் கலந்து 20 வேணும்” என்றான்.

“அதெல்லாம் எப்பவும் இருக்கு” என்று முத்து காளையிடம் டைகர் பேரம் பேசி கொண்டிருக்க,
“டேய் நாளைக்கு நம்மல அறுத்துருவானுங்க” என்று கவலைபட்டான் வெள்ளை மனிதன்.

“ஆமா…எப்படியாவது தப்பிச்சு காட்டுக்குள்ள போயிட்டா…சுதந்திரமா திரியலாம்” என்று வருத்தமாக மற்றொரு வெள்ளை மனிதனும் சொல்ல,
“அது நடக்குறப்ப பாக்கலாம்” என்று கருப்பு மனிதன் நக்கலாக சொல்லி சிரிக்க, மேல் கூண்டிலிருந்து சிவப்பு மனிதன் எச்சம் போட, அது கருப்பு மனிதன் மேல் விழுந்தது.

எரிச்சலான கருப்பு மனிதன் “எத்தன முறை சொல்லுறது.திரும்ப திரும்ப எச்சம் போட்டுட்டே இருக்க” என்று கத்தினான்.

“உசரமா ,சௌக்கரியமா இருந்துகிட்டு கீழ இருக்கவன் மேல எச்சம் போட்டுறது தப்பு. கீழ இருக்கவன் மேல வந்து உன் மேல  எச்சம் போட ரொம்ப நேரம் ஆவாது” என்று மாநிற மனிதர்கள் சிலர் குரல் கொடுத்தார்கள்.

இப்படியே கூச்சல் குழப்பம் போய் கொண்டே இருந்தது. இரவு நெருங்க, கடையை மூட பொருட்களை உள்ளே எடுத்து வைத்துவிட்டு கூண்டுகளை மூடிவிட்டு ஜானியோடு ஜிம்மி கிளம்பி சென்றான்.
‘வீட்டிற்கு பொருட்கள் வாங்கி போக வேண்டும்’ என்று அவசரமாக கருப்பு,வெள்ளை மனிதர்கள் இருக்கும் கூண்டுகளை சரியாக மூடாமல் சென்றான் டைகர்.

அவர்கள் சென்ற பிறகு கூண்டுக்குள் டப்பாவில் இருந்த அரிசியை தின்று கொண்டு இருந்தார்கள்.மறுநாள் விடியற்காலை காற்றில் தற்செயலாக கூண்டு கதவு மெல்ல ஆடி கொண்டிருப்பதை   கவனித்தான் வெள்ளை மனிதன். கூச்சல் எதுவும் போடாமல் “தப்பிக்க சரியான வாய்ப்பு” என்று திறந்து குதித்து ஓட ஆரம்பித்தான்.அவனை பார்த்த வெள்ளை மனிதர்களும் குதித்து ஓடினார்கள்.
மேல் கூண்டிலிருந்த சிகப்பு மனிதர்களுக்கு இவர்கள் தப்பித்து போவதை பார்த்து பொறாமையும்,எரிச்சலுமாக இருந்தது. கத்தி பார்த்தார்கள்.அவர்கள் கூண்டு கதவை திறக்க முயற்சி செய்தும் பயனில்லாமல் போக,ஒப்பாரி வைத்தபடியும்,தப்பித்து காட்டுக்குள் புகுந்தவர்களை பழித்தும்,இழித்தும் பேசினார்கள்.
கடைசியிலிருந்த மாநிற, கருப்பு நிற மனிதர்களும் கூண்டை விட்டு தப்பிக்க வெளியே வந்தார்கள்.
அவைகளில் ஒரு மாநிற மனிதன் திரும்பி சிகப்பு மனிதர்களின் புலம்பலை கவனித்து, “நாம் தப்பித்துப் போவது அப்புறம் இருக்கட்டும். இதுவரை நம்மீது எச்சம் இட்டுக் கொண்டிருந்த சிவப்பு மனிதர்களை நாம் பழி வாங்கவேண்டும்” என்று கருப்பு மனிதர்களிடம் சொன்னான்.
அவன் சொன்னதும், பல நாட்களுக்கான கோபம், பழிவாங்குகிற நோக்கத்தில்,”என்ன செய்யலாம்” என்று கருப்பு மனிதர்கள் கேட்க,”அவர்கள் மேல உட்கார்ந்து எச்சம் போடுவோம்” என்று மாநிற மனிதர்கள் யோசனை சொன்னார்கள்.

” சரி தான்” என்று சிவப்பு மனிதர்களின் கூண்டிக்கு மேலே அமர்ந்து எச்சமிட ஆரம்பித்தார்கள்.

“படுபாவிகளா,சண்டலர்களா” என்று கருப்பு மனிதர்களின் எச்சம் மேலே படபட ஆத்திரத்தில் சிவப்பு மனிதர்கள் கத்தினார்கள்.

“அப்படிதான்….” என்று மாநிற மனிதர்களும் அவர்களோடு சேர்ந்து எச்சமிட்டனர்.

தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்க காலை ஆறு மணி ஆனது. டைகர் நாய் கடைக்கு வந்து சேர்ந்தான்.அவன் திரும்பி வந்ததை கருப்பு மனிதர்கள் கவனிக்க மறந்து விட்டனர்.

வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்த டைகர். பின்னர் எல்லா கருப்பு நிற,மாநிற மனிதர்களை பிடித்து

பழைய படி  கீழே உள்ள கூண்டில் அடித்து அடைத்து விட்டான்.
வெள்ளை மனிதர்கள் ஓடியது அதிர்ச்சியாக இருந்தது.

கூண்டுக்குள் அடைபட்டதும்,” இப்ப நம்ம பவரை பார்த்துட்டானுங்க.இனிதான் உங்க கிட்ட ரொம்ப பிரச்சனை பண்ணுவாங்க.ஆனா பயப்புடாதீங்க நாங்க உங்க கூட இருக்கோம்” என்று மாநிற மனிதர்கள், கருப்பு மனிதர்களுக்கு ஆறுதல் சொல்லவும், அவர்களுக்கு சிவப்பு மனிதர்களை பழிவாங்கிய கர்வம்,மாநிற மனிதர்களின் அன்பையும் நினைத்து பெருமையாக சிரித்தார்கள் கருப்பு மனிதர்கள்.

அப்போது வந்த ஜிம்மி,ஜானியிடம், “கூண்டு கதவு திறந்து கிடக்குது.டேய் காட்டு பக்கமா போய் வெள்ளை மனுஷங்க எல்லாம் தப்பிச்சிருக்கு.போய் காட்டுக்குள்ள தான் சுத்தும். போய் பிடிச்சிட்டு வா” என்று டைகர் கத்தினான்.

கூண்டையும்,சுத்தியிருப்பதை பார்த்து,”எம்புட்டு தூரம் போயிருக்கும் தெரியலயே” என்றான் ஜானி.

“அட ஆறறிவு மனுஷங்க தானே.காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போயிருக்க மாட்டானுங்க.இங்க தான் எங்கயாவது சண்டை போட்டுகிட்டு நிப்பானுங்க.சீக்கிரமா போய் புடி” என்றான் டைகர்.

“சரி” என்றவாறு வெள்ளை மனுஷங்களை பிடிக்க ஜானியும்,ஜிம்மியும் ஒரே பாய்ச்சலில் தாவி ஓடினார்கள்.

Exit mobile version