புத்தம் புதிய ரோஜா-லிடியா இம்மானுவேல்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 168 புத்தம் புதிய ரோஜா-லிடியா இம்மானுவேல்

           வருவாய்த் துறையில் வேலை செய்து ரிட்டையர் ஆன அறுபத்தி எட்டு வயது விஜயராகவன் , பார்ப்பதற்கு 50 வயது போல் ஸ்மார்ட்டாக இருப்பார் !, வெள்ளை நிற டீ சர்ட் , கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு, வழக்கம் போல் காலை நேர நடைப் பயிற்சியைத் தொடங்கினார் ! மலைக்கோட்டை மாநகரில், காவேரி ஆற்றின் கிழக்கு கரையில் கல்லணையை நோக்கி செல்லும் அந்த சிறிய சாலையில் , அவருக்கு முன்பே அங்கு வந்து விட்ட, விஜயராகவனின் நடைபயிற்சி நண்பர்களான, வங்கி முன்னாள் ஊழியர் வள்ளியப்பன், ரயில்வே யிலிருந்து வி.ஆர். எஸ். விடுப்பில்   வந்த சேதுமாதவன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வேல்முருகன், மூவரும் விஜயராகவனுக்காக காத்திருந்தார்கள் !.

             விஜயராகவன் அவர்களைப் பார்த்து குட்மார்னிங் என்றார், அவர்களும் பதிலுக்கு குட்மார்னிங் என்றனர் !. மூவரும் அங்கே சாலையோரம் இருந்த அந்த சிறிய டீக்கடையில் சுக்குமல்லி காபி குடித்து விட்டு நடக்கத் தொடங்கினார் ! . கடந்த ஆறு மாதமாக தான், வாக்கிங் வந்த இடத்தில், அவர்கள் விஜய ராகவனுக்கு நண்பர்கள் ஆனார்கள் !. அவர்கள் மூவரும் ஏற்கனவே நண்பர்கள் ! நடந்து கொண்டே வீட்டு நடப்பிலிருந்து, நாட்டு நடப்பு வரை பேசிக்கொண்டே போவார்கள் ! விஜயராகவன் மட்டும் வீட்டு விஷயங்கள் எதுவும் பேச மாட்டார்! அவர்களும் கேட்க மாட்டார்கள் !. கொரோனாவில் தொடங்கி, குறும்படங்கள் வரை பேசுவார்கள் ! அவ்வப்போது அரசியலும், வாக்குவாதம் செய்யாமல் பேசுவார்கள் !.

            அந்த கல்லணை செல்லும் சாலையில், நால்வரும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்ததும், திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கினார்கள் ! அப்பொழுது விஜயராகவன் அருகில் ஒரு வெள்ளை நிற ஸ்கூட்டி வந்து நின்றது ! விஜயராகவனுடைய ஒரே மகன் சந்திரசேகரும், 10 வயது பேரன் அரவிந்தும், ஸ்கூட்டியி லிருந்து இறங்கினார்கள்!. அரவிந்த் “குட்மார்னிங் தாத்தா” என்று கூறிக்கொண்டு ஓடிவந்து தாத்தாவை அணைத்துக்

கொண்டான் ! “அப்பா ஆபீஸ்ல புது ப்ராஜெக்ட் ,  அதான் சீக்கிரம் கிளம்பி விட்டேன் ! உங்க செல்பில் நீங்க சொன்ன இருமல் மருந்தும், மல்டி விட்டமின் டேப்லட்டும் வச்சிருக்கேன் !” என்று சந்திரசேகர் கூறவும், “சரிப்பா எடுத்துக் கொள்கிறேன்” என்றார் விஜயராகவன் !. ” தாத்தா நீங்க வச்ச ரோஜா செடியில் எப்போ பூ பூக்கும் ?” என்று கேள்வி கேட்ட பேரனிடம், “சீக்கிரம் புது ரோஜாப் பூ  பூக்கும்!” என்று கூறி சிரித்தார் விஜயராகவன் !. “அப்பா  நான் கிளம்புகிறேன் ” என்று கூறிவிட்டு , ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சந்திரசேகர் கிளம்பும்போது ,

அரவிந்த் தாத்தாவைப் பார்த்து , சிரித்துக்கொண்டே கைகளை ஆட்டிக் கொண்டு டா…டா காண்பித்தான் ! .விஜயராகவன் “பை” என்று கூறினார் ! .                       

   அடுத்த நாள்  , அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு , உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்த சந்திரசேகருக்கு இன்று பிறந்தநாள் ! அதனால் இன்று வேலைக்கு லீவு போட்டாச்சு !  “இன்று உங்களுக்கு பிடித்ததை கேளுங்க, எல்லோருக்கும் பிறந்தநாள் பரிசு நான் வாங்கித்தருகிறேன் !” என்று கூறிய சந்திரசேகரிடம் , ப்ளஸ் டூ படிக்கும் சந்திரசேகரின் ஒரே மகள் புனிதா, “அப்பா நான் ஏற்கனவே சொன்ன, அந்த மொபைலை வாங்கி தாங்க” என்று கூறினாள் !. “உனக்கு என்ன வேண்டும்?, பட்டுப் புடவை, நகை , தவிர எது வேண்டுமானாலும் கேட்கலாம் !” என்று தன் மனைவி புவனாவிடம் சந்திரசேகர் கேட்க , “அது என்ன? எனக்கு மட்டும் , பட்டுப் புடவை , நகை தவிரன்னு உள்குத்து? எனக்கு  எதுவும் வேண்டாம் சாமி ! பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுங்க !” என்று புவனாவிடம் இருந்த பதில் வந்தது !.  புவனா கூறியதைக் கேட்டு சிரித்துக்கொண்ட சந்திரசேகர் ,”அரவிந்த் உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்க, செல்போனில்  “கேம்” விளையாடிக்கொண்டு இருந்த அரவிந்த் ,” எனக்கு முதியோர் இல்லத்தில் இருக்கும் தாத்தா வேண்டும் ! “என்று போகிற போக்கில் சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு  சென்று விட்டான் !. அரவிந்த் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் , அப்படியே உறைந்து போய் நின்று விட்டான் !. அருகில் சிலையாக நின்று பார்த்து கொண்டிருக்கும் , தன் மனைவி புவனாவை பார்த்தான் !. சந்திரசேகரின் கண்களில் பனித்துளியாய் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது!  ” இப்பவே கிளம்புங்க , நீங்களும், அரவிந்தும், சென்று மாமாவை கூட்டிட்டு வாங்க !, இல்லை, இல்லை, வேண்டாம் ! காரை எடுங்க, எல்லோரும் போய் மாமாவை அழைத்துக் கொண்டு வரலாம் !” என்று உடைந்து போன குரலில் கூறிய புவனாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது !

                 காவேரிக் கரையில் உள்ள அந்த முதியோர் இல்ல வாசலில் , சந்திரசேகரின் கார் நின்றது !. காரிலிருந்து  இறங்கிய சந்திரசேகருடன் , புவனா, புனிதா , அரவிந்த் , மூவரும் அந்த முதியோர் இல்லத்தின் உள்ளே நுழைந்தனர் !

சந்திரசேகர் தான் கொண்டு வந்த இரண்டு பெரிய அட்டை பெட்டிகளை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு, அங்கிருந்த ஊழியரிடம் ,” இதில்  கேக் இருக்கு, எல்லோருக்கும்  கொடுங்கள் “! என்று கூறினான் ! “ரொம்ப நன்றி” என்று கூறிய அந்த ஊழியர், “விஜயராகவன் சார், தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்கின்றார்!” என்று கூறினார் !. முதியோர் இல்லத்தில் இருந்த அந்த சிறிய தோட்டத்தில் ,  நிறைய காய்கறி செடிகளும் , கொஞ்சம் மா மரங்களும் இருந்தன! .  சுவரோரமாக விஜயராகவன் வைத்த ரோஜா செடிகள் இருந்தன ! அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி விட்டு , விஜய ராகவன் கீழே தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டிக்கொண்டு , சுவற்றில் சாய்ந்தபடி கண்ணை மூடிக்கொண்டு இருந்தார் !

              அவர் அருகில் சென்று “அப்பா ” என்று கூறியபடி சந்திரசேகர் விஜயராகவன்

தோளை  தொடவும் , உட்கார்ந்திருந்த விஜயராகவன் மெதுவாக பக்கவாட்டில் சரிந்து விழுந்தார் !. விஜயராகவன்  உயிர்

காவேரிக்கரை காற்றோடு கலந்துவிட்டது !  பக்கத்தில் அவர் தண்ணீர் ஊற்றிய ஒரு செடியில் ,   “புத்தம் புதிய ரோஜா பூ ஒன்று ! ” மலர்ந்து இருந்தது ! …

                               *****************

Exit mobile version