கதிரவனின் ஒளியிலிருந்து இந்தியாவின் நிலங்கள் தப்பித்து கொண்டிருந்த நேரம் அது. பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தின் முன் வாகனங்கள் எழுப்பிய ஹாரன் சத்தம் எங்கும் கேட்டது. எங்கு துவங்கியது இச்சாலை என்று முன்னும் பின்னும் முட்டிக்கொண்டிருக்கும் வாகனங்களிடம் கேட்டால் பதில் கிடைக்கும். அல்லது கிடைக்காமலும் போகலாம். சாலையைவிட்டு நல்ல வேலையாக இருசக்கர வாகனங்கள் இறங்கவில்லை. காரணம் மாடுகளும், கன்றுகளும் அதனோடு பல மனிதர்களும். சாலையை கடக்க தக்க சமயம் இதுவென்று மனிதர்கள் ஓடிகொண்டிருக்க, ஓர் பக்கம் இருந்த கன்றுகள் இரண்டு மறு பக்கம் இருந்த தன் அம்மாவை “மா மா” என்று அழைத்துக் கொண்டு இருந்தது. அக்கன்றுகளின் அருகே அம்மாவை அழைக்காமல் அமைதியாய் நின்றான் இளவேந்தன்.
இன்றோடு அவன் வீட்டைவிட்டு வெளியே வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த சென்னை மாநகரில் பூவிருந்தவல்லி பேருந்து நிலைய ஆர்ச்சின் முன் நின்றபடி மீண்டும் தன் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு செல்லலாம என்று சிந்தித்து சிதைய ஆரம்பித்தான். காரணம் கண் கண்ட உறவும், காதல் உண்டு உயிரும், காமம் மொய்த்த உடலும் அவனைத் தேடி வராமல் போனதாலும், தான் அவர்களை தேடி போகாமல் இருந்ததாலும்.
1
மூன்று வருடங்களுக்கு முன், அந்த மாலை பொழுதில் தன் குடும்பத்தோடு தேநீரை அருந்தி கொண்டிருந்த இளவேந்தன். அப்போது,
“இதுல எது சரின்னு நாதான் முடிவு செய்யனும்”,என்று உறக்க கூறினான் இளவேந்தன்.
“வேண்டாம்னு சொன்ன அப்றம் என்னத முடிவு பண்ணுவ?”, என்று வினவினார் இளவேந்தனின் தந்தை.
“நீங்க வேணாம்னு சொல்றதுக்காக என்ன நம்பி இருக்கவல விட்டுட்டு வந்துட முடியாது. உங்களுக்கு விருப்பமோ இல்லையோ கல்யாணம் செஞ்சுக்கிட்டா அவள மட்டும்தான் செஞ்சுப்ப.”, என்று தேநீர் கோப்பையை கீழே வைத்துவிட்டு வெளியே சென்றான் இளவேந்தன்.
“செஞ்சுகிட்டா அப்டே எங்கையாவது போக வேண்டியாதுதான். திரும்பி வீட்டுப்பக்கம் மட்டும் வந்துடாத.”, என்று இளவேந்தனின் தந்தை சத்தமிட்டது இளவேந்தனிடம் சேரும்முன் மதியழகியைக் காண அவனது இருசக்கர வாகனத்தின் சக்கரங்கள் அவளது வீட்டை நோக்கி சுழல ஆரம்பித்து விட்டது.
படுக்கையில் அரை நிர்வாணமாக இளவேந்தனும் மதியழகியும் களைத்துப் போய் படுத்திருந்தனர். மதியழகி கான்கீரிட் கூரையில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை பார்த்துக்கொண்டிருந்தாள். இளவேந்தன் மதியழகியின் கண்களைப் பார்த்தவாறு பேச துவங்கினான்.
“நம்ப கல்யாணம் செஞ்சுகிட்டு எங்கயாவது போய்டலாமா மதி?”
மதியழகி திரும்பி பார்க்காது,
“எங்க போறது? அப்டே எங்கையாவது போனாலும் என்ன செய்றது?”, என்று கேட்டாள்.
“எம்.காம் முடிச்சுருக்க நான். என் பிரண்ட் ஆனந்த் கம்பெனில அக்கோண்ட்ஸ்க்கு ஆள் வேணும்னு சொல்லிருக்காங்கலாம். இன்டர்வியூ அட்டென்ட் பண்ணா போதும்னு சொல்லிருக்கான். மாசம் இருவது ஆயிரம் போதாதா நமக்கு?”
மின்விசிறியின் சுழற்சி நின்றுவிட்டது. இளவேந்தனைப் மெதுவாக திரும்பி பார்த்து புன்னகைத்தவாறே,
“போதாது இளா.”, என்றாள் மதியழகி.
இளவேந்தன் படுக்கையில் இருந்து எழுந்து தன் ஆடையை அணிந்துக் கொண்டு வெளியே சென்றான்.
“எங்க போற?”, என்று படுக்கையில் படுத்தவண்ணமே கேட்டாள் மதியழகி.
“சென்னைக்கு போற. என் மேல நம்பிக்கை இருந்துச்சுனா கூட வா. இல்லனா இங்கையே இரு.”, என்று இளவேந்தன் வெளியே நின்றபடி கூறியது, மதியழகிக்கு நன்றாக கேட்டது.
2
இளவேந்தனின் தொலைபேசி அலறல் ஹாரன் சத்தத்திற்கு இடையில் நன்றாக அவனுக்கு கேட்டது. தொலைபேசி எடுத்து பார்த்தான். அதில் மதி என்று ஆங்கிலத்தில் இருந்தது. தன் நெஞ்சை நிமிர்த்திவிட்டு, பெருமூச்சு விட்டுவிட்டு, அழைப்பை ஏற்றான்.
“ஹாலோ”
“ஹாலோ. கேக்குதா இளா?”
“கேக்குது சொல்லு.”
“எப்டி இருக்க?”
“நல்லா தான் இருக்க.”
“நிஜமாவா?”
“நிஜமாதான்.”
“நீ கஷ்டப்பட்டுட்டு இருக்கனு உன் பிரென்ட் ஆனந்த் சொன்னா.”
“நீ இல்லாம நான் கஷ்ட பட்றன்னு சொன்னானா?”
“இல்ல. காசில்லாமா.”
இளவேந்தன் மதியழகியின் காதிற்கு கேட்கும் வண்ணம் சிரித்தான்.
“ஆமா கஷ்ட தான் பட்ற. சேருப்பு பிஞ்சு போகுற மாதிரி இருக்கு. ஓடுனா கண்டிப்பா பிஞ்சிடும். ஆனா ஆஃபிஸ்க்கு போட்டு போறத்துக்கு ஷு கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாங்க. என்னால ஷு மட்டும்தான் வாங்க முடிஞ்சுது.”
“நான் வேணா உனக்கு காசு போட்டு விடட்டா?”
“இல்ல. வேண்டாம். எதுவா இருந்தாலும் நா பாத்துக்குற. நீ எப்டி இருக்க?”
“நான் நல்லா இருக்க இளா.”
இருவருக்கும் இடையே ஓர் அமைதி உண்டாது. மதியழகி சுவாசிக்கும் சத்தத்தை இளவேந்தனால் கேட்க இயன்றது. அச்சத்ததோடு வானத்தில் இடி சத்தம் கேட்டது. வானத்தை அன்னாந்து பார்த்தான் இளவேந்தன். கருமேகங்கள் பேருந்துநிலையத்தின் மேல் சூழ்ந்ததிருந்தது,
“வச்சுடட்டுமா இளா?”, என்று மதியழகி கேட்டாள்.
“அவ்ளோதான மதி?”
“வேறென்ன?”
“ஒன்னுமில்ல. வச்சுடு.”
அழைப்பு துண்டிக்கப்பட்டது. இளவேந்தன் கண்ட கருமேகங்கள் மழைத்தூராமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டது.
4
அன்று, நகர்ந்து சென்ற மேகங்கள் அவர்கள் செல்லும் சாலையில் நின்று மழைத்தூரியது. இளவேந்தன் தன் இருசக்கர வாகனத்தை சாலையோர புளியமரத்தின் கீழ் நிறுத்தினான். தலைமுடியை சரிசெய்தவாறே,
“நம்ப எங்கையும் போக கூடாதுன்னு இந்த வானம் நினைக்குதோ?”, என்று வினவினாள் மதியழகி.
“ஒருவேள என்னவிட்டுட்டு போறீங்களேனு மேகம் அழுவுதோ என்னவோ?”, என்று கண்களைத் துடைத்துக்கொண்டே கூறினான் இளவேந்தன்.
“அழுவும் அழுவும்.”
சில நேரத்தில் மழைநின்றது. அவர்களது பயணம் மீண்டும் துவங்கியது. மதியழகியும் இளவேந்தனும் சென்னையில் குடிப்பெயர்ந்தனர். இருவருக்கும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நண்பர்கள் சிலரின் முன்னிலையில் திருமணம் நிகழ்ந்தது. திருமணமான இரண்டாம் வாரம் மதியழகி கருவுற்றாள்.
“நான் அப்பா ஆக போற. நான் அப்பா ஆக போற.”, என்று அன்றிரவு முழுவதும் மதியழகியிடம் கூறிக்கொண்டு தூங்காமல் படுத்திருந்தான் இளவேந்தன். மறுதினம் இளவேந்தன் அலுவலகத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்புகையில், மருத்துவனையில் கருவை களைத்துவிட்டு வந்திருந்தாள் மதியழகி.
“ஏன் களச்ச மதி?”
“நம்பலால குழந்தைய பாத்துக்க முடியாது இளா.”
“என்னால முடிஞ்சுருக்கும்.”
“இல்ல முடிஞ்சுருக்காது.”
“என்னால முடிஞ்சுருக்கும். கண்டிப்பா முடிஞ்சுருக்கும் மதி. கண்டிப்பா முடிஞ்சுருக்கும்.”
“முடிஞ்சுருக்காது!”
“எத வச்சு என்னால முடிஞ்சுருக்காதுனு சொல்ற?”
“இரண்டு நாளா நா சரியா சாப்டல இளா. ஏன் தெரியுமா?”
“ஏன்?”
“நம்பக்கிட்ட போதுமான பணம் இல்ல.”
“இப்போ இல்லாததால இனிமேலும் இருக்காதுன்னு எப்டி முடிவு பண்ண? நம்ப நிலம இப்டே இருக்கும்னு நீ நினைக்குறியா?”
“இல்ல. கண்டிப்பா மாறும். ஆனா அதுக்கு கொறஞ்சது மூனு வர்ஷமாவது ஆகும் இளா. ஃபினாஷியலா நாம ஸ்டேபுல் ஆகுற வரைக்கும் கொழந்த வேண்டாம் இளா. நம்ப கஷ்டம் நம்பலோடையே போகட்டும்.”
“நீ என்ன காரணம் சொன்னாலும் நீ செஞ்சத என்னால ஏத்துக்கவே முடியாது மதி. எல்லாத்துக்கும் தயாராகிட்டுத்தான் ஒரு விஷயத்த செய்யனும்னா நம்பலால எதையுமே செய்ய முடியாது. மகனோ மகளோ வரப்போறானு நிறைய சம்பாதிக்க என்ன வழின்னு பாக்க ஆரம்பிச்ச. எப்டியும் வழி கிடைச்சுருக்கும். நீ இப்டி பன்னிருக்க வேண்டிய அவசியம் இல்ல.”
“இளா! நம்ப நெலம மட்டும் காரணம் இல்ல.”
“வேற?”
“நான் அதுக்கு தயாரா இல்ல இளா.”
“எதுக்கு?”
“கொழந்தைய சுமக்க. கொழந்தைய பெத்துக்க. கொழந்தைய வளக்க. எதுக்கும் நான் உடல் ரீதியாவோ மன ரீதியாவோ தயரா இல்ல.”
இளவேந்தன் சில நொடிகள் மதியழகியையே பார்த்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் திரும்பி நின்று,
“எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லிருங்கலாம் மதி. நம்ப சேர்ந்து என்ன பண்ணலாம்னு முடிவெடுத்துருக்கலாம்.”, என்று கூறினான்.
“சொல்லிருந்தா நீ நா சொல்றதையே கேட்ருக்க மாட்ட இளா. என்னோடு அப்பா அம்மா நமக்கு நல்ல படியா கல்யாணம் நடக்கனும்னு நினைச்சாங்க. உன்ன உன் வீட்ல பேசி சம்மதம் வாங்க சொன்ன. நான் எவ்ளோ வருஷம் ஆனாலும் காத்துட்டு இருக்குன்னு சொன்னா. ஆனா நீ எதுக்குமே ஒத்து வரல.”
“உனக்கு அப்போ நம்ப கல்யாணம் பண்ணுனதுல இஷ்டமில்லையா?”
“எனக்கு இஷ்டமிருந்துச்சு. ஆனா இந்த மாதிரி ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல இல்ல.”
“இப்ப பண்ண மாதிரி நீ அப்பவும் பண்ணிருக்க வேண்டியது தான.”
“என்ன பண்ணிருக்க முடியும் என்னால?”
“எதாவது பண்ணிருக்கலாம். என்ன விட்டு நீ விலகி பொய்ருக்கலாம். இல்ல நான் கெஞ்சுன மாதிரியோ கோபப்பட்ட மாதிரியோ நீயும் பண்ணி எனக்கு அத புரிய வச்சுருக்காலம்.”
“முடிஞ்சது முடிஞ்சு போச்சு இளா. நம்ப ஒரு நல்ல நிலமைக்கு வந்த அப்றம். நான் மன ரீதியா தயாரான அப்றம் நம்ப கொழந்த பெத்துக்கலாம் சரியா?”, என்று மதியழகி கேட்டதற்கு இளவேந்தன் எதுவும் பேசாது நின்றான். அவன் கண்கள் சிவந்திருந்தது, சிறிதளவு கண்ணீர் தேங்கி நின்றது.
“என்ன சொல்ற இளா?”, என்று இளவேந்தனின் கன்னங்களைப் பிடித்து கேட்டாள் மதியழகி.
“நீ கெளம்பு மதி. உன்ன பாக்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் எப்போ நல்ல நிலைக்கு வரனோ, நீ எப்போ மன ரீதியா கொழந்த பெத்துக்க தயாரா இருக்கியோ, அதுவரைக்கும் நீ உங்க வீட்லையே இரு.”, என்று அவளைப் பார்க்காமல் பதில் கூறினான் இளவேந்தன்.
மறுதினமே மதியழகி காஞ்சிபுரத்தில் இருக்கும் அவளது வீட்டிற்கு சென்றுவிட்டாள். இன்றுவரை திரும்பி அவளும் சென்னைக்கு வரவில்லை. அவனும் அவளை அழைத்துவர காஞ்சிபுரத்திற்கு செல்லவில்லை.
5
என்றும் போல் அன்றும் இளவேந்தனுக்கு மதியழகியை அழைத்துவர வேண்டும் என்று தோன்றியது. அப்போது அவன் எதிரே பச்சைநிற பேருந்தொன்று வந்து நின்றது. இறங்கும்படி வழியாக கீழ் இறங்கிய அப்பேருந்தின் நடத்துநர்,
“காஞ்சிபுரம்! காஞ்சிபுரம்!”, என்று சத்தமிட்டார்.
பேருத்தின் ஏறும்படி வழியாக ஓர் குடும்பம் ஏறியது. அதில் வயதானவர் ஒருவர் தான் எடுத்துவந்த கட்டைப்பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஏற அதை கவனித்த இளவேந்தன்,
“ஏங்க இங்க கொடுங்க. நான் உள்ள எடுத்துட்டுவந்து தர.”, என்று கூறி பையை வாங்கி பேருந்தின் உள்சென்று கொடுத்தான்.
அந்த வயதானவரின் மனைவி,
“ரொம்ப தேங்க்ஸ் பா”, என்று கூறினாள்.
“பரவாயில்லங்க”, என்று இளவேந்தன் கூறியபோது, பேருந்து அசைய ஆரம்பித்தது.
சாலையைவிட்டு சற்று கீழிறங்கி நின்ற அப்பேருந்து சாலையில் ஏறியபோது, பேருந்தின் உள்ளிருந்து இளவேந்தன் கீழிறங்கினான். சாலை ஓரமாக சென்று நின்று அப்பேருந்தை பார்த்தான் இளவேந்தன். அப்பேருந்திலே வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே தனது காலணிகளைப் பார்த்தான். இரண்டில் இரண்டுமே பிய்ந்து விட்டது. அவைகளை அங்கேயே கிழட்டி விட்டுவிட்டு வெறும் காலில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டை நோக்கி நடந்தான் இளவேந்தன்.