வெளிச்சம்-செ.வர்ஷினி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 97 வெளிச்சம்-செ.வர்ஷினி

வெளிச்சம் கண்களைக் கூசவே சட்டென்று முழிப்பு வந்துவிட எழுந்து பார்த்தேன்.
டியூப்லைட் எரிந்து கொண்டிருந்தது.
இரவு கரண்ட் நின்றுபோனபோது ஸ்விட்சை நிறுத்தாமல் படுத்துவிட்டது இப்போது நினைவுக்கு வந்தது.
இரவு நின்றுபோன மின்சாரம் இப்போதுதான் வருது போல.
இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமாக எழ வேண்டும் என்று நினைத்திருந்தேன்.நல்ல வேளை நின்று போன மின்சாரம் வந்து நம்மை எழுப்பிவிட்டது.
எழுப்பிவிட வீட்டில் யாருமிலையா என நீங்கள் கேட்கலாம்.
நாற்பது வயதாகியும்கூட இன்னும் கல்யாணமே பண்ணிக்கொள்ளாத இளைஞன் நான்.
அம்மா இருந்திருந்தால் காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருக்குமோ என்னவோ.
இருபது வயதானபோதே இறந்துபோன அம்மாவுக்குப் பிறகு சொல்லிக்கொள்ள எந்த சொந்தமும் பெருசா இல்லை.
கல்லூரி காலத்திலிருந்தே இலக்கியம், புத்தகம்னே காலத்தைக் கழிச்சதுல கல்யாணத்தைப் பத்தி யோசிக்கமலேயே காதலித்துக் கொண்டிருக்கிறேன் தமிழை.
அதிகாலையிலேயே எந்திருக்கணும்னு சொல்லியிருந்தேனில்லையா…
அதுக்கு- இந்தப் புத்தகமும் தமிழும்தான் காரணம்.
ஒரு தனியார் நிறுவனத்துல ஐந்து இலக்க சம்பளத்துல வேலை பாத்துகிட்டே புத்தகங்க மேல உள்ள காதலால ஒரு லெண்டிங் லைப்ரரி நடத்திக்கிட்டு வர்றேன்.
லைப்ரரின்னு சொன்னதும் பெருசா நெனச்சுடாதீங்க.
சுமாரா ஒரு ரெண்டாயிரம் புத்தகங்கள்தான்.
இன்னும் அதை விரிவாக்கணும்னு ஏக்கம் ஒரு பக்கம் ஓடிக்கிட்டிருக்கு.
இன்னைக்கு சீக்கிரமா எழுந்ததுக்குக் காரணம் சொல்லாம என்னென்னவோ சொல்லிக்கிட்டிருக்கேன்.
நண்பன் ஒருத்தன் இது பத்தி பேசிக்கிட்டிருந்தப்போ சொன்னான்.
என்கிட்டே ஒரு முப்பது நாப்பது புத்தகங்க இருக்கு செல்வா. நாளைக்கு சண்டே வீட்டுக்கு வாயேன் தர்றேன்னான்.
நாமதான் புத்தகம்னு சொன்னாலே நாயா பேயா அலைவோமில்லே.
அவன் எங்கியாச்சும் போவரதுக்கு முன்னாடி நாம போயி வாங்கிடலாமுன்னுதான் இன்னைக்கு நேரத்தோட எழுந்த படலம்.
குளிச்சி முடிச்சி மாகி நூடுல்ஸை கொதிக்கவெச்சி சாப்டுட்டு மணியைப் பார்த்தேன்.இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது.
சரிதான் என வாசல்ல கிடந்த செய்தித் தாளை வாசிக்கும்போது கடைசி பக்கத்தில் இருந்த ஒரு பத்துக்குப்பத்து விளம்பரம் கண்ணுல பட்டுச்சு.
புத்தகங்கள் விற்பனைக்கு அப்படின்னு போட்டு ஜோதீஸ்வரன்னு ஒரு பேருக்குக் கீழே சைதாபேட்டையில ஒரு முகவரி,.
ஜாக் பாட் அடிச்சாமாரி இருந்துச்சி எனக்கு.
நண்பனை பார்க்கும் படலத்தை அப்படியே தள்ளி வெச்சுட்டு அந்த முகவரியை குறித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வண்டியை சைதாப்பேட்டைக்கு விரட்டி வந்து பார்த்த விலாசத்துல உள்ள வீட்டு காலிங் பெல்லைத் தேடிகிட்டு இருக்கும்போதே ஜன்னல் கதவைத்திறந்து ஒரு வயதான அம்மா மஞ்சள் பூசிய முகத்தோடு யாருன்னு கேட்க.
இங்க ஜோதீஸ்வரன்னு…?
நீங்க…?
இல்லே…புத்தகம் விற்பனைக்குன்னு அப்புடின்னு….. நான் இழுத்தப்பவே அந்தம்மா இடை மறித்து உள்ளதான் இருக்காரு வாங்க என்று கதவைத் திறந்தார்கள்.
ஏங்க யாரோ புஸ்தகம் வாங்க வந்திருக்காங்க என்று சொன்னதும் அறையிலிருந்தது வந்த ஜோதீஸ்வரனுக்கு வயது அறுபது இருக்கலாம்.
வாங்க தம்பி சொல்லுங்க.எங்கிருந்து வரீங்க.
லஷ்மி ஒரு காபி குடுமா தம்பிக்கு என்றடி நாற்காலியை இழுத்துப் போட்டார் அவர்.
உட்காருங்க தம்பி.
அப்போதுதான் கவனித்தேன் அறை முழுதும் புத்தகங்கள்.
சார். எம் பேரு செல்வா. வேளச்சேரியில் இருந்து வரேன். புக்ஸ் விற்பனைக்குன்னு விளம்பரம் பார்த்தேன் அதான் என்றேன்.
நல்லது நல்லது.. உக்காருங்க மொதல்ல. இந்தாங்க காபி சாப்பிடுங்க.
கொஞ்சம் என்கிட்டே புத்தகங்க இருக்கு தம்பி. என்னோட காலத்துலதான் இதெல்லாம் வாங்கினது. அதென்னவோ தெரியல…பள்ளிக்கூடம் படிச்ச காலத்துல இருந்தே புத்தகம்னா உசுரு.அப்படியே வாங்கி வாங்கி இப்போ புத்தகம் வைக்கவே வீடு பத்தலை. ரெட்டைர்டு வேற ஆகிட்டேன் வருமானமில்லே.மருந்து மாத்திரைன்னே வாங்கற பென்ஷன் பணம் போயிருது.இதுல என்ன பண்றது. சரி இருக்குற புத்தங்களையாவது வித்துட்டு வர்ற காசுல பெட்டிக் கடையாச்சும் வைக்கலாமேன்னு யோசனை.
சாப்பாட்டுக்கே வழியில்லாம இவ்வளவு புத்தகங்களையும் வெச்சிக்கிட்டு என்ன பண்றது.
புத்திக்குப் பசிச்சா புக்ஸ் தீனி போடும்.
வயித்துப் பசிக்கு அதால என்ன பண்ண முடியும்…?
பிள்ளைங்க யாரும் இல்லீங்களா சார்.
அதெல்லாம் இருக்காங்க தம்பி. சுய நலத்தோட ஒன்னும் பிரயோசனமில்லே. இல்லேன்னா நான் ஏன் இந்த விளம்பரம் குடுக்கப் போறேன்.
நான் வாங்கிக்கறேங்க ஐயா. புத்தகங்களை பார்க்கலாமா என்றேன்.
மொத்தம் அந்த வீட்டில் உள்ள.மூன்று அறைகளிலும் புத்தகங்களாகவே இருந்தது. தவிர பரணில், கட்டிலின் கீழ் என எங்கு பார்த்தாலும் புத்தகங்கள்தான் இருந்தன.
தோராயமாக கணக்குப் போட்டுப் பார்த்தேன்.
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஐந்தாயிரம் புத்தங்களாவது இருக்கும்.
ஜோதீஸ்வரனின் மனைவி வந்து சாப்டீங்களா தம்பி. சாப்பிடறீங்களா என்றபோது அந்த மஞ்சள் பூசிய முகத்தை வணங்க வேண்டும் என்றே தோன்றியது எனக்கு.
இவருக்கு அறுபது வயதென்றால் இந்த அம்மாவுக்கு எப்படியும் ஐந்து வயது குறைவாக இருக்க வேண்டும்
இருபது வயதில் இவரோடு கல்யாணம் ஆகியிருக்கும் என வைத்துக் கொண்டாலும் ஏறக்குறைய முப்பத்தியைந்து வருஷம் இந்தப் புத்தகங்களோடும் மனுசனோடும் வாழ்ந்துகொண்டு வந்திருக்கிறாள் என்றால் அவரைப் போலவே இவரும் புத்தகங்களை நேசிப்பவளாகத்தான் இருக்க வேண்டும்.
இல்லேம்மா…சாப்பிட்டுத்தான் வந்தேன் பரவாயில்லை என்றேன்.
உடு லஷ்மி தம்பி புது இடத்துல சாப்பிடறதுக்கு கூச்சப்படறாப்ல.. சொல்லுங்க தம்பி .ஒங்களுக்கு எவ்வளவு புத்தகம் தேவைப்படும்.?
நீங்க விலை சொல்லுங்க..
புத்தகம் புத்தகம்னே வாழ்ந்துட்டேன் தம்பி. இப்போ புத்தகங்க எல்லாத்தையும் என்னோட வறுமையினால பிரியரமோன்னு நினைக்கும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யுது.
(கண்ணைத் துடைத்துக்கொண்டார்)
எனக்குக் கொஞ்சம் சங்கடமாக என்னவோ போலிருந்தது.
பக்கத்தில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.
என்ன பாக்குறீங்க….பத்து ரூபா புத்தகத்துல இருந்து ஆயிரம் ரூபா புத்தகம் வரைக்கும் இருக்குங்க தம்பி. ஒவ்வொண்ணையும் புரட்டிப் பார்த்து விலை குறிக்கிறதுக்குள்ளே உங்களுக்கும் என்னைப்போல வயசாயிடும்.
ஆவரேஜா ஒரு புக்குக்கு இவ்வளவுன்னு கணக்குப் போட்டுக்குங்க என்றார்.
பிரமிப்பாக இருந்தது எனக்கு.
பள்ளிகூடப் பருவத்திலிருந்தே புத்தகங்களை நேசிப்பவனாகவே வளர்ந்துவிட்டவன் நான்.
முதன் முதலாக ஒரு புத்தகத்திற்கு விலை பேசிக்கொண்டிருப்பது எனக்கே சற்று நெருடலாக இருந்தது.
ஒரு புத்தகம் நூறு ரூபாய் என்று கணக்குப் போட்டாலும் இங்கிருக்கும் புத்தகங்களுக்கு தோராயமாக ஐந்து லட்சம் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.
என்ன தம்பி யோசனை என ஜோதீஸ்வரன் கேட்க…
ஒண்ணுமில்லைங்க.புத்தகம் எல்லாத்தையும் வாங்கிக்கறேன்.
ஒங்களுக்கு பணம் இரண்டொரு நாள்ல தரேன்.
அப்போ வந்து எல்லாத்தையும் எடுத்துக்கறேன் என்றேன்.
நீங்க இப்பவே எடுத்துகிட்டுப் போனாக்கூட சந்தோசம்தான். பணம் ரெண்டு நாலு கழிச்சிகூட குடுங்க என்றார்
இல்லீங்க ஐயா.. நாமபாட்டுக்கு பணமே குடுக்காம எல்லாத்தையும் ஏத்திகிட்டுப் போறது முறையில்லை. அதனாலதான் என்று இழுத்தேன்.
தம்பி ஒண்ணு சொல்லட்டுங்களா…? இலக்கியத்தை நேசிக்கிறவன் கண்டிப்பா பிராடா இருக்க மாட்டான். இது நானறிஞ்சது. தாராளமா எடுத்துகிட்டுப் போங்க பணம் ரெண்டு நாலு கழிச்சே குடுங்க..இது என்னோட போன் நம்பர் தம்பி.பணம் ரெடி பண்ணிட்டு வரும்போது போன் பண்ணுங்க என்றார்.
கண்கள் கலங்கியது எனக்கு.
இலக்கியம் ஒரே எடத்துல தேங்கி நிக்கக்கூடாது.அது பயணப்பட்டுக்கிட்டே இருக்கனும். இம்மா நாளு சைதாப்பேட்டையில. நாளையில இருந்து வேளச்சேரியில் அவ்வளவுதான் என்றபோது…
அவருடைய கற்றலின் முதிர்ச்சி பேச்சில் வெளிப்படுவதை பெருமையாகவே உணர முடிந்தது என்னால்.
ஜோதீஸ்வரன் மேலிருந்த மதிப்பு இன்னும் உயர்ந்துகொண்டே போவதை என்னால் உணர முடிந்தது.
அன்று மாலையே மினி லாரி அமர்த்தி புத்தகங்களை வேளச்சேரியிலுள்ள லெண்டிங் லைப்ரரிக்கு கொண்டு வந்துவிட்டேன்.
இரவு படுக்கும்போது அசதியாக இருந்தது.
காலையில் எழுந்ததும் முடிவு செய்தவனாக என் அதிகாரிக்கு போன் செய்து விடுப்பு சொல்லிட்டு சைதாப்பேட்டை ஜோதீஸ்வரனுக்கு போன் செய்தேன்
ஐயா நாளைக்குக் காலையில பதினோரு மணிக்கு வேளச்சேரி வரமுடியுங்களா என்றேன்.
சரிங்க தம்பி என்று வைத்துவிட்டார்.
தன் வறுமையினாலும், தானும் தம் மனைவியும் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே என்ற ஒரு நிலையில் காலமெல்லாம் நேசித்தப் புத்தகங்களை ஒரு மனிதன் விற்கிறான் என்றால் அந்த மனிதரின் மன அழுத்தங்கள் என்னுள்ளும் பரவி பாரமாகியதை பின்னிரவு தாண்டியும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும்போது உணர முடிந்தது என்னால்.
ஒவ்வொரு புத்தகத்தையும் அந்த மனிதன் வாங்கும்போது எத்தகைய மன நிலையில் இருந்திருப்பான். எத்தனை எத்தனை கடைகளை அலைந்திருப்பான்.
யோசனைதான் அதிகமானதே தவிர தூக்கமே வரவில்லை.
காலையில் வேளச்சேரி செல்வா லெண்டிங் லைப்ரரிக்கு சென்று பார்த்தால்
எனக்கு முன்னமே ஜோதீஸ்வரன் அங்கே வந்து காத்திருந்தார்.
வாங்க ஐயா. வணக்கம். வந்து ரொம்ப நேரமாச்சா. வந்துட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.
உங்களைக் காக்க வெச்சிட்டு சாவகாசமா வர்றேன் பாருங்க… வாங்க உள்ளே போய்பேசலாம்.
நூலகம் முழுக்கப் பார்த்தவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார்
தேநீர் வரவழைத்து இருவருமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே சொன்னேன்.
ஐயா…ஒண்ணு சொல்லட்டுமா. தப்பா நெனசுக்க மாட்டீங்களே…
என்னா தம்பி நீங்க..சும்மா சொல்லுங்க. நானு ஒன்னும் நெனைக்க மாட்டேன்.
இது லெண்டிங் லைப்ரரின்னு உங்களுக்கே தெரியும். இதுக்காகத்தான் நானு உங்ககிட்டே புத்தங்கங்க வாங்கினேன்னு இப்போ புரிஞ்சிருக்கும் நானு ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்யுறேன். சாயங்காலம் ஒரு மூணு மணி நேரம்தான் இந்த லைப்ரரிய திறக்கிறேன். இந்த லைப்ரரி முழு நேரமா இயங்கணும்னு ஆசை எனக்கு. என்னால முழு நேரம் இங்க ஒக்காரவும் முடியாது.உங்களுக்கும் வருமானத்துக்கு வழி தேவைன்னு சொல்லறீங்க.
ஜோதீஸ்வரன் அமைதியாக இருந்தார்.
ஐயா உங்க பணம் நாளைக்கு ரெடியாய்டும் தந்துருவேன். நீங்க நேத்து சொன்னதுபோல பெட்டிக்கடைதான் முடிவா என்றேன்
ஆமாம் தம்பி..ரெண்டு லட்சரூபா கடன் இருக்கு.
அதை அடைச்சிட்டு மீதி இருக்குற பணத்தை வெச்சி இன்னா பண்றது எப்படி பண்றதுன்னு பாக்கணும்.
நான் ஒரு யோசனை சொல்லட்டுங்களா… தப்பா நெனைக்க வேணாம் .இந்த லைப்ரரிய நீங்க முழு நேரமா இருந்து பார்த்துக்கோங்க
இந்தப் புத்தகங்களுக்கு நானு தர பணத்தை பேங்குல போட்டு வச்சா மாசா மாசம் ஒரு வட்டி கிடைக்கும். இங்க நீங்க லைப்ரரியனா ஒக்காந்து பாத்துக்கோங்க.மாசம் ஒங்களுக்கு என்ன சம்பளம் வேணுமோ அதை இங்க வர வருமானத்துல இருந்து நீங்களே முடிவு பண்ணிக்கிட்டு சொல்லுங்க என்றேன்.
சற்று நேரம் அமைதியாக இருந்த ஜோதீஸ்வரன் நீண்ட ஒரு யோசனைக்குப்பிறகு கேட்டார்.
தம்பி..தீப்பெட்டி இருந்தா குடுங்க…
எடுத்துக் கொடுத்தேன்
வாங்கிக்கொண்டு நேரே லைப்ரரி அறையிலிருந்த சாமி மாடத்திற்குச் சென்று இன்னைக்குத் திங்கட்கிழமை ஏழரை ஒம்போது ராகு காலம். இப்போ நல்ல நேரம்தான் என்று சொல்லி சாமி மாடத்திலிருந்த விளக்கை ஏற்றினார்.
அறை முழுதும் பரவியது அகல் விளக்கின் வெளிச்சம்.

Exit mobile version