தோட்டத்து அணில் – செ. வர்ஷினி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 98 தோட்டத்து அணில் – செ. வர்ஷினி

காலை ஏழு மணிக்கு அலாரம் அடிக்க
ஏழு மணிக்கு எந்திரிக்க எதுக்கு அலாரம்னு எல்லாம் கேட்கக்கூடாது.
ஞாயிற்றுக்கிழமை அப்புடின்னாலே என்னைப்போல எல்லாருக்கும் சூரிய உதயமே பதினோரு மணிக்குத்தான்
அலாரத்தைகை நீட்டி அணைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம் என்றெண்ணி போர்வைக்குள் சுருண்டபோது அந்த சத்தம் கேட்டது.
பச் எனச் சொல்லிவிட்டு மீண்டும் என் தூக்கத்துக்குள் நுழைய முற்படும்போது இடைவிடாமல் அந்த சுத்தம் கீச் கீச்சென கேட்டுக்கொண்டே இருந்தது.

அந்த சத்தத்திற்கு நடுவில் என்னால் அந்த காலைத் தூக்கத்தைத் தொடர முடியவில்லை.
இவள் இருந்திருந்தால் என்ன அங்க சத்தம் போயி பாரு எனலாம்.
இவள் வேறு இல்லை.
இவள் என்பதன் அர்த்தம் என மனைவிதான்.
வேறொண்ணுமில்லை. ஒரு வேலை எனச்சொல்லிவிட்டு பிள்ளைகளோடு அவள் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாள்.
வருவதற்கு மூன்று நாட்களாகும்.

அந்த கீச் கீச் சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டே இருந்தது.
கடுப்பாகிப்போனவனாய் எழுந்து வந்து என்ன சத்தம் எங்கிருந்து வருகிறது எனப் பார்த்தேன்.
சமையலறை பக்க ஜன்னல் திறந்திருக்கவே தோட்டத்துப் பக்கமிருந்து அந்த சத்தம் சுதந்திரமாக வீட்டு உள்ளே வந்துகொண்டிருந்தது.
அது என்ன சத்தம் என்று அறிந்துகொள்ள என் மனைவிபோல் சட்டென்று தோட்டத்துக் கதவைத் திறக்க நமக்கு தைரியமில்லை.
மெதுவாக சமையலறை சாளரத்தின் வழியே தோட்டத்துப் பக்கம் எட்டிப் பார்த்தேன்.
பக்கத்து வீட்டுக்கும் என்வீட்டுக்கும் இடைப்பட்ட மதில் சுவற்றின் மீது அமர்ந்தபடி அந்த அணில் கத்திக் கொண்டிருந்தது.

அடச்சே…
ஒரு அணில் கத்தும் சத்தத்திற்கா இவ்வளவு பயந்து போனோம் என் நினைக்கும்போது எனக்கே சற்று வெக்கமாக இருந்தது.
இதுக்கும் முன்னாடி இந்த மாதிரி ஏதாச்சும் சத்தத்தைக் கேட்டிருந்தாத்தானே…
தெனமும் காலையில எந்திரிக்க வேண்டியது..
குளிச்சிட்டு சட்டையை மாத்திக்கிட்டு வேலைக்கு கெளம்பிட வேண்டியது.
இதெல்லாம் இப்போ வரைக்கும் யாரு கவனிச்சா.
இது வரைக்கும் இந்தத் தோட்டத்துப் பக்கமே நான் வந்ததில்லை.
என் பார்வையையும் தோட்டத்துப்பக்கம் திருப்பிய பெருமை என் ஊருக்குப் போன என் மனைவியையே சாரும்.
ம்…என்று மனதுக்குள் சொல்லியபடி மீண்டும் வந்து கட்டிலில் சாய்ந்தேன்.
தூக்கத்தை தொடர முடியவில்லை
இன்னும் அந்த அணில் சத்தம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இன்று ஞாயிற்றுக் கிழமை..
நல்லாதூங்கலாம் என்று எண்ணி வைத்திருந்த கனவு
இன்னைக்கின்னு பார்த்து இந்த அணில் வந்து மண்ணை அள்ளிப் போட்டுருச்சி.

இந்த அணில் சத்தம் இன்னைக்கு மட்டுமா…இல்லை தினந்தோறுமா என்று ஒரு யோசனை உள்ளுக்குள் ஓடியது.
தினந்தோறும் அப்படியின்னா நமக்குத்தெரியாம இருக்காது.
இன்னைக்கு மட்டும் ஏன் இந்த சத்தம் கேக்குது…
புத்தி பல விதமாய் யோசித்தது.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.
எனக்குத்தெரிந்து ஞாயிற்றுக் கிழமை அதுவுமா ஏழு மணிக்கே எழுந்தவன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
சரிதான்..இனிமே தூங்க முடியாது என் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து வந்து காபி போடலாம் என் சமையலறை பக்கம் வந்து பிரிட்ஜை திறந்து பால் பாக்கெட்டை எடுக்கும் போது மீண்டும் அந்த அணில் சத்தம்

இன்னாடா இது என் மனதுக்குள் நினைத்தபடி பாலைப் பிரித்து பாத்திரத்தில் ஊற்றி ஸ்டவ்வைப் பற்றவைத்து வைத்தேன்.
இன்னும் அந்த சத்தம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

வர்றேன் வர்றேன்
என்னோட தூக்கத்தைக் கெடுத்தேயில்லே…
வந்து ஒன்ன ஒரு வழிப் பண்றேன் என்று சொல்லியபடி காபியைப் போட்டுக்கொண்டு ஒரு சிப் உறிஞ்சியபடி தோட்டத்துக் கதவைத்திறந்தேன்.
கதவு திறந்த சத்தத்தில் அணில் ஓட்டம் பிடித்தது.
என்னைப் பார்த்ததும் அணிலுக்கு பயம் வந்திருக்க வேண்டும். அதான் ஓடி விட்டது.
தோட்டத்துப் பக்கம் இப்போ அமைதியோ அமைதி.
அணில் ஓடிவிட்டிருந்ததில் சத்தம் இல்லை.
ரிலாக்ஸாக அமர்ந்து காபியைக் குடித்தேன்.

ஒரு வழியாக குடித்து முடிந்து..
சமையலறைக்கு வந்து குடித்த காபி கோப்பையைக் கழுவும் போது மீண்டும் அந்த அணிலின் கீச் கீச் சத்தம்.
கொய்யால இதோ வர்றேன் என் மீண்டும் நான் தோட்டத்துப் பக்கம் தலை காட்டியபோது அந்த அணில் என்னைக் கண்டு ஓடிக்கொண்டிருந்தது.

ஓடுறியா..ஓடு..இரு இரு உன்னை வெச்சுக்கறேன் என் மனதுக்குள் சொல்லியபடி தோட்டத்துக் கதவை சாத்திவிட்டு என் ஞாயிற்றுக் கிழமை வேலைகளுக்குள் மூழ்கிப்போனேன்.
என்ன பெரிய முழுகிப் போகிற வேலை.
மிஞ்சி மிஞ்சிப் போனாக்கா முகநூல் பக்கம் வந்து ரெண்டு மூணு பேருக்கு லைக்கு போட்டுட்டு நானும் எம் பங்குக்கு ஏதாச்சும் ஒரு பதிவு போட்டுட்டு தொலைக்காட்சியை ஆன் பண்றதுதான் மிகப்பெரிய ஞாயிற்றுக்கிழமையில் என்னோட வேலை.

அதை செவ்வனே செய்துக்கொண்டிருக்கும்போது…
மனைவியிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வரவே எடுத்துப் பேசினேன்.
என்னங்க…என்ன பண்றீங்க.
டிவி பார்த்துக்கிட்டிருக்கேன்னு சொன்னா கண்டிப்பா திட்டுவா.
அதனால சும்மானாச்சுக்கும் பொய் சொன்னேன். இல்லடி ஆபீஸ் வேலை ஒண்ணு அதான் லேப்டாப்பல வேலை பார்த்துக்கிட்டிருக்கேன் என்றேன்.

அவளோட பொறந்த வீட்டுப் பெருமை அது இதுன்னு எல்லாத்தையும் பேசிட்டு கடைசியா ஒண்ணு சொன்னா
ஏங்க சாப்பிடறதுக்கு ஏதாச்சும் இருந்தா தோட்டத்துப் பக்கம் மதில் மேல வெச்சுட்டு வாங்க என்று.

எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு..அடியேய் இன்னா சொல்றே நீ என விளங்காதவனாய் கேட்டேன்.
ஆமாங்க…அணில் ஒண்ணு தெனைக்கும் காலையிலேயே அந்த மதில் மேல வரும்.
ஏதாச்சும் வைப்பேன் சாப்பிட்டுட்டுப் போவும் இன்னைக்கு நானில்லையா…அதான் ஒங்களுக்கு ஞாபகப் படுத்தினேன் என்றாள்.
அடேய் பாவி..இத நீ எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாமில்லே.என் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
சரி சரி வைக்கிறேன் என் சொல்லிவிட்டு லைனை கட். பண்ணிவிட்டு
நேற்றைய மிச்சம் மீதி ஏதாச்சும் இருக்குமா என் பிரிட்ஜை திறந்து பார்த்தேன்.

ஒரு காரசேவ் பாக்கெட் பிரிக்காமல் இருந்தது.
பிரித்து எடுத்துக் கொண்டுபோய் தோட்டது மதில் மீது வைத்துவிட்டு வந்து;.
என் தொலைக்க காட்சியைத் தொடர்ந்துவிட்டு வாட்சப்பைப் பார்த்துவிட்டு, முகநூலையும் மேய்ந்துவிட்டு.
பதினோரு மணிபோல் மீண்டும் ஒரு காபியைப் போட்டுகொண்டு தோட்டத்துப் பக்கம் வந்தேன்.

காலையில் நான் வைத்த காராசேவ் மதில் மேலே அப்படியே இருந்தது.
அந்த அணில் வந்து கொறித்த அடையாளம் எதுவும் இல்லை.
அணிலுக்கு காராசேவ் பிடிக்காதோ…
மணி பதினொன்று காட்டியது…
இது வரைக்கும் ஏன் இந்த அணில் வரவில்லை…
முதன் முறையாக ஒரு ஐந்தறிவின் மீது அக்கறை வந்ததில் எனக்கே சற்று வியப்பாக இருந்தது.
மனைவிக்கு போன் செய்து இதைச் சொல்லலாமா என் மனசுக்குள் ஓடியது..
வேணாம்…வேணாம்… சொன்னாக்கா திட்டுவா என்ற பயம் வேறு வந்தது.
என்ன செய்யலாம் என எனக்கே புரியவில்லை.
சற்று நேரம் தோட்டத்துப் பக்கம் அமைதியாக நின்றிருந்தேன்
இப்படிப்பட்ட சூழலை முதன்முறையாக இப்போதுதான் உணர்கிறேன் என்பதில் எனக்கே சற்று குழப்பமாக இருந்தது…

இன்னாடா இது..
ஒரு அணில் வந்து உன் ஞாயிறை பாடாய்ப் படுத்துகிறது என…

சரி உடு என சொல்லிவிட்டு மதியம் என் சாப்பாட்டுக்கு ஓட்டலில் இருந்து ஒரு சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு இப்படியே அன்றைய இரவும் கழிந்துபோக
ஞாயிறு என்பதன் ஒருநாள்
நரகமாகக் கழிந்துபோக மறுநாள் திங்கட்கிழமை அலுவலகம் போகணும்;.
அதனால காலையிலேயே எழுந்திரிச்சி
வேலைக்குப் போக தயாராகிக்கிட்டிருக்கும்போது அதே கீச் கீச் சத்தம்

சரிதான் லாலையிலேயே வந்துட்டியா நீ.
இன்னைக்கும் சோறு வைக்கலேன்னு சொன்னா கண்டிப்பா அவள் வந்து திட்டுவாள் என நினைத்தபடி அதே காராசேவை எடுத்துக்கொண்டு தோட்டத்து மதில் சுவர் பக்கம் போன எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அணில் ஒன்று அந்த மதிற் சுவற்றின் மீது இறந்து கிடந்தது.
இன்னொரு அணில் என்னைப் பார்த்துவிட்டு சற்று தள்ளிப் போய் கத்திக்கொண்டிருந்தது.

இந்த அணிலுக்கு எதோ ஒரு காரணத்திற்க்காக கூட இதன் மரணம் நிகழ்ந்திருக்கலாம்…

அணிலுக்கு உணவு உண்ண எத்தனையோ வழிகள் உண்டு.
எனோ எனக்கு நான் சோறு வைக்காமல் போனதால என்னவோ என எனக்கே ஒரு பயம் வந்துவிட்டது.
எனக்குத் தெரிந்து இதுபோல் ஒரு பதட்டத்தை இருவரைக்கும் உணர்ந்ததில்லை.
அந்த அணிலின் இறப்பை விடவும் என்னை அதிகம் குடைவது என் மனைவியின் கேள்விகள்தான்.
அவளுக்கு இது தெரிந்தால் சத்தியமாக நான் காலி.
எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
இன்னைக்கு திங்கட் கிழமை. அலுவலகம் வேறு…
என்ன செய்வது..என என் அலுவலக அக்கறைகளைக் கடந்து குழப்பிக் கொண்டிருந்தேன்.
சரி…சொல்லிவிடுவதுதான் நல்லது என ஒரு முடிவுக்கு வந்தவனாக என் மனைவிக்கு போன் செய்து நடந்தது எல்லாம் சொன்னேன்;

அடேய் பாவி மனுசா.. ஞாயிற்றுக் கிழமை அதுவுமா நல்லா தூங்கி அணிலைக் கொன்னுட்டியா அப்புடியான்னு எல்லாமும் என்னைத் திட்டித் தீர்த்த அடுத்த நாள் வந்து நின்றாள் வீட்டுக்கு.
ஒரு அணிலுக்கு கூட சோறு வைக்கத் துப்பில்லை …என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க நீக்க – என்று அவள் கேட்கும் போது எந்த பதிலும் இல்லை என்னிடம்.

இங்க புதைச்சிட்டேன் என ஒரு இடத்தைக் காட்டினேன்
மண் நெகிழ்ந்து ஈரமாக இருந்த அந்த இடத்தில நின்று வணங்கினாள்.
அன்று காலை பத்து மணிக்குள்ளாகவே அந்த இடம் ரணகளமாகிவிட்டிருந்தது.

பால் தெளித்து, அணில் புதைத்த மேட்டின் மேல் பூ வைத்து, ஊது வத்தி ஏற்றி வைத்து, ஒரு இலையில் கொஞ்சம் சாதம் வைத்து படையல் போடப்பட்டிருந்தது.
என வீடே ஒரு ஒரு இழவு வீடு போல் ஆகிவிட்டிருந்தது.
ஒரு அணிலின் மரணம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாய் இப்போதுதான் பார்க்கிறேன்.
நல்ல வேலை நேற்று அந்த இறந்துபோன அணிலை புதைத்தது.
இல்லையெனில் நான் என்ன ஆகியிருந்திருப்பேனோ எனக்கே தெரியவில்லை.

அணிலுக்கு துக்கம் அனுஷ்டித்த அந்த நாளிலிருந்து என மனைவி கொஞ்சம் சோர்ந்துபோனவளாகவே காணும்போது கொஞ்சம் கஷ்டமாக உணர்ந்தேன்.
தினமும் காலையில் தோட்டத்து அணில் புதைக்கப்பட்ட இடத்தில சோறு வைப்பது இன்றும் தொடர்கிறது.
காலையில் தேநீர் போட்டு எடுத்துவந்து கொடுக்கும் சமயத்திலேயே அணில் கதை தொடங்கிவிடும்.
ஏங்க.. ராத்திரி கனவுல அந்த அணில் வந்துதுங்க என அவள் சொல்லும்போது கொஞ்சம் என் மனைவியை நினைத்து பாவமாகவே இருந்தது.

ஒரு வாரம் இப்படியே அவள் அணில் புராணம் பாடிக்கொண்டிருந்ததில் எனக்கென்னவோ இது பைத்தியக்காரத்தனமாகவே பட்டது.
இல்லாத அணிலுக்கு தினமும் சோறு வைப்பது.
அந்த இடத்தில தினமும் வத்தி ஏற்றுவது…
சதா காலமும் அந்த அணிலைப் பற்றியே பேசுவது என தினமும் தொடர்கிறது.
பேசாம இவளை ஒரு நல்ல மன நல மருத்துவர்கிட்டே கூட்டிகிட்டுப் போகலாமா என மனத்துக்குள்ள ஒரு வாரமாக பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தேன்.

என் நண்பனான மன நல மருத்துவர் ராமகிருஷ்ணனிடம் நேற்றே இது பற்றி பேசி வைத்திருந்தேன்
நாளை இவளை அங்க அழைத்துக்கொண்டு போகவேண்டும்
ஒரு வாரம் ஓடிப்போயிருந்தது.

இன்று காலையில் நான் அலுவலகம் கிளம்ப வண்டியை கேட்டுக்கு வெளியே தள்ளிக்கொண்டிருந்த சமயத்தில்…
என்னங்ககககககக என்று ஒரு சத்தம்…
என் மனைவிதான்.தோட்டத்திலிருந்து இவ்வளவு சத்தமாக என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
என்னவோ ஏதோ என தள்ளிக்கொண்டிருந்த வண்டியை அப்படியே சாய்த்துவிட்டு தோட்டத்துப் பக்கம் ஓடினேன்.
பார்த்தேன்.
அதே பழைய இடத்தில இவள் வைத்த சோற்றை ஒரு அணில் சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

ம்…
புது அணில் கெடைச்சுடுச்சி போலிருக்கு. நடத்துங்க…நடத்துங்க… என சொல்லிவிட்டு அங்கே அதிகமாக எதையும் காட்டிக்கொள்ளாமல் வெளியே வந்து வண்டியைக் கிளப்பினேன்.
பெருத்த நிம்மதியாக இருந்தது எனக்கு.
இனி அவள் இயல்பாகிவிடுவாள் என்ற நினைப்பில்.
அலுவலகம் போன அரை மணி நேரத்தில் நண்பனும் டாக்டருமான ராமகிருஷ்ணனிடமிருந்து அழைப்பு. டேய் செல்வா சாயங்காலம் ஆறு மணிக்கு வாடா. என்றான்
இல்லே கிருஷ்ணா வேண்டாம் என்றேன்
ஏண்டா இன்னா ஆச்சி என்றான்

அணில் கெடைச்சிருச்சு என்றேன்.

*******

Exit mobile version