ஒரு தீராநதி

– “இளவல்” ஹரிஹரன்

“உங்க அக்கா ஒரு குருடி……. நீ ஒரு மலடி….. உங்க ரெண்டு பேரையும் எந்தலையிலே கட்டிட்டு நிம்மதியாப் போயிட்டான் உங்கப்பன்….”

வார்த்தைகள் தீக்கங்குகளாய் வந்து விழுந்தன, கேட்கக் காதுகள் கூசும் அளவிற்குப் பேசிக் கொண்டே… இல்லையில்லை…… ஏசிக் கொண்டே இருந்தான், பாஸ்கர்.

குடித்திருக்கிறான்……. போதை தலைக்கேறியிருந்தது. இப்போதெல்லாம் தினமும் அப்படித்தான் வருகிறான். வரும்போதே திட்டவேண்டும் என்ற கங்கணத்தோடு வருகிறான்.

இன்று இதுவரை இல்லாத வார்த்தைப் பிரயோகம். அவன் முகத்தைப் பார்க்கவே கூசுகிறது. தள்ளாடியபடி நின்றிருந்தான்.

அவன் செய்த செயலால், அமுதாவின் மனம் ரணமாகிப் போயிருந்தது. அக்காவைப் பார்த்தாள். நடுங்கியபடி, மூலையில் சுவரோரம் ஒடுங்கி இருந்தாள். கண்களில் தாரைதாரையாக வழியும் கண்ணீர்.

தலைமுடியை அள்ளி முடித்தபடி, ஒரு முடிவுக்கு வந்தவளாய் அமுதா எழுந்து நின்றாள். கையில் கிடைத்த துணிகளைக் கொஞ்சம் எடுத்து, ஒரு கட்டைப்பையில் திணித்துக் கொண்டாள்.

அகிலாவை நோக்கிச் சென்றாள்.

“அக்கா…… எழுந்திருக்கா……. நாம போகலாம். இனி இங்கே இருந்தா நல்லா இருக்காது. நமக்கும் தன்மானம் இருக்கில்லே…. வா…. எங்கேயாச்சும் போகலாம்……..”

பாஸ்கர் கத்த ஆரம்பித்தான்.

“போங்கடி ஓடுகாலிகளா…… இங்கே இருந்தீங்கன்னா… மானங்கெட்டுப் போயிடும்… எங் கண்ணு முன்னாடி நிக்காதீங்க. சனியன் தொலைஞ்சதுன்னு தலைமுழுகிட்டுப் போறேன்….”

அகிலாவை எழுப்பிக்கொண்டு கையைப்பிடித்து இழுத்தபடி வெளியே வந்துவிட்டாள் அமுதா.

தெருவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அழுகையைக் கட்டுப்படுத்த இயலாமல், விரைவாக நடைபோட்டாள் அகிலாவுடன்.

“அமுதா….. வேணான்டி….. கொஞ்சம் பொறுமையா இரு….. என்னால தானே உனக்கு இந்தத் துன்பமெல்லாம்…. நான் வேணா எங்கியாவது போயித் தொலையறேன்….. நீ வீட்டிலே இரு…… எனக்காக  நீ கஷ்டப்படாதே அமுதா…”

“அகி… அழாம…. பேசாம வா….. எங்கியாவது போவோம். இனி பொறுமையா இருக்கமுடியாது….. எவ்வளவுதான் பொறுத்துப் போக முடியும்….. இன்னிக்குக் கேட்டேல்ல…… மலடி குருடின்னு…. எப்படி இருக்கமுடியும் இந்த மனுசனோட….. பேசாம வா….. அழாதே…….”

தன் கண்களிலிருந்து வழியும் நீரைத் துடைத்துக் கொண்டாள்.

“வெளியே வந்துவிட்டோம்….. எங்கே போவது….. என்ன
செய்வது…… ஒன்றும் தெரியவில்லை. கையில் ஒரு ரூபாய்
கூட இல்லையே…… அப்படியே வந்து விட்டோமே……”

“இப்ப என்னடி பண்றது………!”

கேட்ட அகிலாவை இழுத்துக்கொண்டு, பக்கத்திலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்றாள் அமுதா.

“அமுதா….. கோவிலுக்குள்ளே வந்திருக்கோமா…… மணிச்சத்தம் கேக்குதே…….”

அகிலாவிற்குப் பார்வை தான் இல்லையே தவிர, மற்ற புலன்களின் கூர்மை அதிகம். கோவிலுக்குள் இருப்பதை உணர்ந்துக்கொண்டாளே…..

“ஆமாக்கா…… கொஞ்ச நேரம் உக்காந்திருப்போம்….. ஏதாவது வழி பிறக்கும். இரு….. குடிக்கத் தண்ணிக் கொண்டு வர்றேன்…. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கலாம்…….”

வாழ்க்கையின் பாதை சீராகத்தான் இருந்தது, அப்பா இருக்கும் வரை.

ராமன் தமிழாசிரியர்….. எப்போதும் கலகலப்பாகவும் சிரிக்கச்சிரிக்கவும் பேசுவார். முப்பது வயதிலேயே மனைவியைப் பறிகொடுத்தவர். இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவருக்குச் சேர்ந்தது. அதிலும், மூத்தவள் அகிலாவிற்குப் பார்வைக் குறைபாடு….. இரண்டாவது அமுதா, படுசுட்டி. சுறுசுறுப்புங் கூட…

எவ்வளவோ வற்புறுத்தியும், மீண்டும் ஒரு திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகள்…… வருபவள் எப்படி இருப்பாளோ….. இரண்டும் என்ன பாடுபடுமோ.. வேண்டவே வேண்டாம் மறுமணம் எனப்பிடிவாதமாய் மறுத்துவிட்டார்.

அக்கம் பக்கத்தார், உறவினர் உதவியோடு பிள்ளைகளை வளர்த்து விட்டார். வயது வளர, வளர பெண்களுக்குச் செய்ய வேண்டியதைக் காலாகாலத்தில் செய்ய வேண்டுமே….. அதிலும் அகிலாவை என்ன செய்வது…. தனக்குப் பின்னால் அவள் நிராதரவாகிவிடக் கூடாதே என்ற கவலை நாளுக்கு நாள் வளர்ந்தது.

அப்போது தான் பாஸ்கரனின் அறிமுகம் கிடைத்தது. ஏதோ ஓர் இலக்கியக்கூட்டத்தில் ராமனின் நகைச்சுவைப் பேச்சிற்குக் கவரப்பட்டு, அவரிடம் அறிமுகம் செய்துக்கொண்டான்.

அடிக்கடி அவனுக்குத் தெரிந்த விழாக்களில், கூட்டங்களில் பேசக்கூடிய வாய்ப்புகளை ராமனுக்குப் பெற்றுத் தந்தான். அதனால் வீட்டிற்கு அடிக்கடி வரவும் போகவும் செய்து, ராமனின் குடும்பத்தில் ஒருவனாக ஐக்கியமாகிப் போனான்.

“பாஸ்கர்…..என்னோட கவலையெல்லாம் இந்த ரெண்டு பொண்ணுகளோட எதிர்காலம் பத்தித்தான்…… நான் இருக்குற வரைக்கும் சரி….. எனக்குப் பின்னாடி என்ன ஆகும்னு தெரியலியே…. எனக்கும் ரிட்டயர்மென்ட் நெருங்கியிருச்சு… அதிலே வர்ற பணத்த வச்சி சிம்பிளா அமுதாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு தான் இருக்கேன்…. ஆனா அகிலா….. அந்தக் கவலைதான்பா என்னை வாட்டுது…..”

“சார்….. நானும் கவனிச்சிருக்கேன்……. நீங்க நகைச்சுவையாப் பேசினாலும் அதுக்குப் பின்னாடி ஒரு சோகம் இழையோடுவதை…… உங்கக் குடும்ப சூழலப் பாத்தப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது, உங்க மேல எவ்வளவு பாரம் இருக்குன்னு….. அதுக்கு நான் ஏதாவது ஆறுதலா உங்களுக்குப் பயன்பட்டேன்னா எனக்கு மகிழ்ச்சியா இருக்கும் சார்…….”

இப்படி ஆதரவான பேச்சைத் தான் ராமன் எதிர்பார்த்தார்.

அவனே ஒருநாள் திடீரென்று ராமனிடம் இப்படிச் சொல்வான் என்று ராமனே எதிர்பார்க்கவில்லை.

“சார் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா…… நான் அமுதாவைக் கட்டிக்கிறேன் சார்….. அகிலாவும் எங்களோட இருக்கட்டும். அதிலே ஒண்ணும் பிரச்சினையில்லே…. நான் எங்க அம்மாகிட்டே பேசிட்டேன். அவங்களும் சரின்னுட்டாங்க. எனக்கும் அம்மாவத் தவிர யாரிருக்கா…. நானும் என்னாலான சின்னச்சின்ன வியாபாரம் பண்ணி, கொஞ்சம் பணம் சேத்திருக்கேன்…… ஏதோ மாசாமாசம் குடும்பத்துக்கு வேண்டிய அளவு வருமானம் வரும் சார்….. அதிலே வாழ்க்கைய நடத்திருவேன் சார்……. நீங்க என்ன சொல்றீங்க சார்……..”

ராமனுக்கும் சரியெனப்பட்டது. அகிலாவின் கவலை தீர்ந்தது. தனக்குப் பின்னால் அவளைப் பார்த்துக்கொள்ள ஒரு பொறுப்பானவன் கிடைத்தான் என்ற மகிழ்வில் ரிட்டயர்மெண்ட் பணத்தில் கல்யாணத்தை நடத்தி முடித்தார். அந்த நிம்மதியிலேயே ஒரு வருடத்திற்குள் கண்ணை மூடினார்.

“அமுதா…….அமுதா…….!”
            
அகிலா அழைக்கவும் நினைவிலிருந்து மீண்டாள்.

“என்னக்கா….. ஏன் கூப்பிட்றே…..” அகிலாவின் கையைப் பிடித்தபடி அமுதா கேட்க,
            
“அமுதா…. பசிக்குதடி… பசி தாங்க முடியலே…. நீயும் என்ன செய்வே…. உனக்கும் பசிக்குமே அமுதா….” என அகிலா சொல்ல, அழுகையினைக் கட்டுப்படுத்திக் கொண்ட அமுதா கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி…     

“இதோ வர்றேன்க்கா…….. கொஞ்சம் பொறு………” என்றவாறே எழுந்தாள்.

கோவில் அரச்சகரை நோக்கிப் போனாள். “சாமி… சாமி…. மடப்பள்ளியிலே ஏதும் பிரசாதம் கிடைக்குமா… அக்காவுக்கு ரொம்பப் பசிங்கறா……..” என்று அகிலாவைக் காட்டியபடி வேண்டினாள்.

ஏறிட்டுப் பார்த்த அர்ச்சகர், அமுதாவையும் அகிலாவையும் மாறி மாறிப் பார்த்தார். அகிலாவின் நிலை புரிய, “இதோ வர்றேன்மா……” என்று மடப்பள்ளி நோக்கிச் சென்றார்.

ஒரு இலை நிறைய வெண்பொங்கலையும், சர்க்கரைப் பொங்கலையும் அமுதாவிடம் கொடுத்தார்.

“ஏம்மா…. குடும்பத்திலே எதுனா பிரச்சினையாம்மா…. அம்மனை வேண்டிக்கோ எல்லாம் சரியாயிடும்…. போம்மா…. பிரசாதத்தை உன் அக்காகிட்டே கொடுத்திட்டு வாம்மா….”

“இந்தா அகி….. பிரசாதம் சாப்பிடு…”

“உனக்கு…?”

“நானும் சாப்பிட்றேன்………..”

எல்லாம் நல்லபடியாய்த் தான் போய்க் கொண்டிருந்தது. கல்யாணமான புதிதில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தனர் பாஸ்கரும், அமுதாவும். அகிலாவும் தங்கைக்குக் கூடமாட ஒத்தாசைப் புரிந்தாள். ராமனும் தனக்குக் கிடைத்த மாப்பிள்ளை குறித்துப் பெருமிதம் கொண்டார்.
 
ராமனின் காலத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாய் மாறியது. பாஸ்கரன் போக்கில் பெரும் மாற்றம்….. அமுதாவிற்கு ஏமாற்றம்.
   
செய்யும் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது. சரி செய்ய முடியாத பாஸ்கர், கெட்ட சகவாசத்தால் குடிப்பழக்கத்திற்கு ஆளானான்.  குடும்பச் செலவை ஈடுகட்ட முடியவில்லை. சுற்றிலும் கடன்….. கடன்காரர்கள் நெருக்க, வீட்டில் இருந்தவற்றையெல்லாம் விற்றுக் குடித்தான்…. மேலும் கடனை வாங்கிக், கடனை அடைத்து பெருஞ்சுமைக்காளானான்.

தன் கையாலாகாத்தனத்தை வீட்டில் காண்பிக்க ஆரம்பித்தான். அமுதாவும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். ஒரு நாள் குடிபோதையில் அகிலா குளிக்கும்போது பாத்ரூமை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தபோது அமுதா பாஸ்கரைப் பார்த்துவிட்டாள். அதிர்ந்து போனாள்.

பாஸ்கரின் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்து வந்தாள்.

“ச்சீ……. மானங்கெட்ட மனுஷா…….. என்ன காரியம் பண்றேன்னு ஏதாவது உணர்விருக்கா……. இது அக்காவுக்குத் தெரிஞ்சதுன்னா……..”

“அவளுக்கு எங்கேடி தெரியப் போகுது……கண்ணு தெரிஞ்சாத் தானே….”

“நீயெல்லாம் ஒரு புருசன்…. கேடுகெட்ட சென்மம்யா… உனக்கெல்லாம் பொண்டாட்டி கேக்குதா…….”

“ஆமாடி……. நான் புருசன் தான்…. ஆம்பள தான்….. ஆனா
உன்னால புள்ளையப் பெத்துக் கொடுக்கமுடியாத மலடியா
இருக்கே நீ…..” என்றவாறு அசிங்க அசிங்கமாய் திட்டலானான்.

பதிலுக்கு அமுதாவும் வார்த்தைகளை அள்ளி வீச, அகிலாவிற்கு விஷயம் தெரிந்து, மூலையில் முடங்கினாள்.

அன்றெல்லாம் வார்த்தைகள் தடித்துக் கொண்டேப் போயின. அப்பாவையும் தரக்குறைவாகப் பேசியபடி, “நீ ஒரு மலடி, உங்கக்கா ஒரு குருடி……” என்று கடுமையைக் காட்டினான்.

“இதுக்கு மேலே அங்கேயிருந்தா அவமானம் தான். சூடு சொரணையுள்ள எந்தப் பெண்ணும் தாங்குவாளா…. அதான் வெளியே வந்துட்டோம்…..”

“அடப்பாவி….. இப்படியும் இருப்பானா…. சரி….. இனி என்ன செய்யப் போறீங்க……?” என்ற அர்ச்சகருக்கு, என்ன பதில் சொல்வதென அறியாத அமுதா திகைத்தாள்.

“கோயில் நடைச் சாத்தற நேரமாயிருச்சி….. நான் ஒன்னு சொன்னாக் கேப்பீங்களா….”

“என்ன சாமி….. இப்ப எது சொன்னாலும் நாங்க கேக்குற நிலையிலே தான் இருக்கோம்….. தயவு செஞ்சி, அந்தக் கேடுகெட்டவன் வீட்டுக்கு மட்டும் போகச் சொல்லிடாதீங்க……..!”

“நடையைச் சாத்திட்டு வர்றேன்…. என்னோடு வாங்க…”

அர்ச்சகர் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்ற இடம்…..

“அன்பகம்” என்ற பெயர்ப்பலகை தாங்கிய கட்டடம். விழியற்றோருக்கான வேடந்தாங்கல் உங்களை வரவேற்கிறது
என்ற நம்பிக்கை வாசகம் கண்களில் பட்டது.

அமுதாவின் முகம் மலர்ந்தது. நிச்சயம் இங்கேப் புகலிடம் கிடைக்கும், ஒரு புதுவாழ்வைத் தொடங்குவோம் என்ற நம்பிக்கையில், அகிலாவின் கையைப்பிடித்து வலதுகாலை எடுத்து வாசலில் வைத்தாள்.

உள்ளிருந்து பாட்டுக் கச்சேரிக்கான ஒத்திகையில், ஒரு பெண் பாடும் குரல் கேட்டது.

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே….. வாழ்வென்றால் போராடும் போர்க்களமென்று……”

வாழ்க்கை ஒரு தீராநதி. அது யாரையும் கைவிடுவதில்லை, விட்டு விலகுவதுமில்லை. அதற்குத் தெரியும் யார் யாரை… எங்கெங்கே… எந்தெந்த நேரத்தில்… சரியாகச் சேர்க்கவேண்டுமென்று.

– கதைப் படிக்கலாம் – 45

இதையும் படியுங்கள்ரேடியோ குருவி

Exit mobile version