– பெ.ஆனந்த்

பூங்காவனம் பாட்டிக்கு “அன்னம்பால்” ஊட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, பூங்காவனம் பாட்டியின் உயிர் “ஊசலாடிக்” கொண்டிருக்குது. உயிர் நல்லபடியா போய் சேரும் என அனைத்து உறவினர்கள் சோகத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனாலும் பாட்டி உயிர் இன்னும் இழுத்துக்கிட்டு இருக்குது.
“அந்த உயிர் கயல்காகத்தான் காத்துருக்கு.”
அனைவருமே கயல்விழி வரும் காரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கவேல் ஊருக்கு வரும் பாதையில் எதிர்பார்த்து பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் கல்லில் உட்கார்ந்துக்கொண்டே, கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தன் பூங்காவனத்துடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டே கண்களில் கண்ணீர் வந்தவாறு அமர்ந்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு…..
காவிரி ஆற்றின் துணை கால்வாய் கரையில் தென்னை மரத்தோப்பு நிறைந்த வீட்டில் தங்கவேலும், பூங்காவனமும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண் என 5 குழந்தைகள் பிறந்தது. எல்லோருக்கும் காலகாலத்தில் ஒருவழியாக கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள்.
ஆனால் யாருவிட்ட சாபமோ, இல்ல முன்ஜென்ம பாவமோ தெரியல… யாருக்குமே குழந்தை இல்லை.
எல்லாம் இருந்தும் நம்ம பிள்ளைகளுக்கு குழந்தை இல்லையே என போகாத கோயில் இல்லை… வேண்டாத சாமியும் இல்லை.
பூங்காவனம், தங்கவேல் ஐயா இருவரும் குலச்சாமி அய்யனார வேண்டி என் பிள்ளைகளுக்கு ஒரு வாரிசுக் கொடு, உனக்கு ஊரறிய முப்பூசை விட்டு சாமி விழா எடுக்கிறேன் என வேண்டிக்கொண்டனர். அதன்பின்பு ஒரு வருடம் கழித்து நடுமகன் கதிர்வேலுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. வீட்டிற்கு மகாலட்சுமி பிறந்துவிட்டதால் ஊரே வாழ்த்தியது. அந்தப்பெண் குழந்தைக்கு “கயல்விழி” என்று பெயர் வைத்தனர். வீட்டிற்கு முதல் குழந்தை… அனைவருக்குமே ஒரே சந்தோசம். வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்தாள்.
“கயல்விழி பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் பூங்காவனம் போல் இருப்பாள்.”
தங்கவேலுக்கும் பூங்காவனத்துக்கும் எல்லையில்லா சந்தோசம். இவர்களின் உலகமாகவே மாறிப்போனாள் கயல்விழி. தன் அம்மாவை விட பாட்டியிடம் தான் அதிகம் இருப்பாள், தூங்குவாள், பாட்டியுடன் விளையாடுவாள், பாட்டியுடன் எங்கே போனாலும் போவாள். சொல்லப்போனால் பூங்காவனமும் கயல்விழியும் அப்படி இருப்பார்கள். மற்ற எல்லாப் பிள்ளைகளுக்கும், குழந்தைகள் வருடம் கடந்து ஒன்றன்பின் ஒன்றாகப் பிறந்தது. அதேப்போல் வேண்டிய அய்யனார் கோவிலுக்கு முப்பூசை கொடுத்து, வந்த அனைவருக்கும் கறிச்சோறு போட்டு கயல்விழிக்கும் மற்ற பேரக் குழந்தைகளுக்கும் காதுகுத்தி, மொட்டை அடித்து ஒரே அமர்க்களம் படுத்திவிட்டார்கள்.
“நிலாவட்டம் போல் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சி, பார்ப்பதற்கு அவ்வளவு பேரானந்தமாக இருக்கும்.”
எல்லோரிடமும் அன்பு ததும்பும். இருக்கும் அனைவரும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். ஊரே பொறாமைப்படும் அளவிற்கு ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பம். அப்படி இருந்த குடும்பத்தில் யார் கண்ணுப்பட்டு போச்சு தெரியல. ஒருநாள் தன் மகன்களுக்கு இடையே சண்டை வர, அது பெரும் சண்டையாக மாறிப்போக, தங்கவேல் ஐயா முதலில் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியேப் போங்க என கத்திவிட்டார். எல்லோரும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
“கதிர்வேல் தனது மகளை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றுவிட்டான்.”
பூங்காவனம், வேண்டாம் இங்கேயே இருக்கட்டும்… கோவத்துல சொல்லிட்டாரு… யாரும் போகாதீங்க என எல்லோரிடமும் கெஞ்சிப் பார்த்தாள், ஆனால் யாரும் கேட்கவில்லை. கோபத்தில் அவரவர் ஒவ்வொரு திசையாக சென்றுவிட்டனர். பூங்காவனம் தவிர யாரும் வீட்டிலில்லை.
“எல்லா உறவுகளும் உடைந்த கண்ணாடி வளையல் போல் சிதறிபோய் விட்டன.”
அனைவரும் விட்டுப்போன பின்பும், கயல்விழி போன பின்பும் வீடு வெறிச்சோடி ஆனது.
“கயல்விழி இல்லாத வீடு கலையிழந்து காணப்பட்டது.”
பூங்காவனம் தன் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு துயரத்தை அனுபவித்ததில்லை. பாட்டிக்கு பேருந்தில் போனால் மயக்கமும், வாந்தியும் வரும். அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறாமல் வாழ்க்கையை கடத்திவிட்டார். தங்கவேல் மட்டும் வருடத்திற்கு ஒருமுறை சென்னை போய் வருவார். சாவதற்குள் தன் அனைத்துப் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அழைத்து வந்து தன்னோடு இருக்கவைக்க எல்லா முயற்சியும் எடுத்துப் பார்த்தார். ஆனால் யாரும் வரவில்லை. பாட்டி படுத்தப் படுக்கையில். பாட்டிக்கு வேலைக்காரிதான் பார்த்துக் கவனித்து வந்தாள்.
பாட்டிக்கு திடீரென்று ஒரு நாள் மூச்சு விட முடியாமல் போனது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டது. டாக்டர் பாட்டியை பரிசோதனை செய்துவிட்டு, இது மைல்ட் அட்டாக்… இதற்கு முன் இது மாதிரி வந்திருக்கா? எனக் கேட்டார். அப்படி எல்லாம் ஒன்றும் வரவில்லை என்றார் தங்கவேல். இன்னொரு முறை அட்டாக் வந்தால், காப்பாத்த முடியாது. ஏற்கனவே இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து விட்டது. எனவே பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றி வையுங்கள், பாட்டி இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோடு இருப்பார் என்று டாக்டர் கைவிரித்து விட்டார்.
ஒருவழியாக மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். பாட்டிக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. தங்கவேல் ஐயாவை கூப்பிட்டு எனது கடைசியாசை என் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்க்கணும்… ஏற்பாடு செய்யுங்கள், என்ன செய்வீர்களோ தெரியாது. அவர்கள் எல்லோரையும் ஒருமுறை பார்க்க வேண்டும் என அழுதபடி சொல்லிவிட்டார்.
தங்கவேல் ஐயா என்ன பண்றதுனு தெரியாமல், ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருக்கின்ற ஃபோனில் தனது மகனுக்கும், மகளுக்கும் தகவல் சொன்னார். ஒவ்வொருவரும் என்னை மன்னிச்சுடுங்க. உங்க அம்மா மரணப்படுக்கையில் இருக்கிறா. டாக்டர் அவரது கடைசி ஆசையை நிறைவேற்றச் சொல்லிட்டாங்க. உங்கம்மா கடைசியாக உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் பார்க்கணும் என ஆசைப்படுறா. உடனே வாங்கப்பா எனக் கதறி அழுதார்.
“உங்க அம்மா வேற எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவேன்.” ஆனால், அவ உங்களைக் கேட்கிறா… நான் என்ன பண்ணட்டும் என அழுதார்.
உங்களையும் உங்க அம்மாவையும் விட்டால், எனக்கு யார் இருக்கா எனச் சொல்லி அழுதார்.
அடுத்த சில மணி நேரத்தில் கோயம்புத்தூரில் இருந்த இரண்டு மகள்களும் அடித்துக்கொண்டு காரில் ஓடிவந்தனர். ஓடி வந்து தன் அம்மாவின் காலைப் பிடித்துக்கொண்டு அழுதார்கள். பாட்டி இருவரையும் அழைத்து கண்களை துடைத்துவிட்டு, அழக்கூடாது என்று மெல்லியக்குரலில் பேசினாள். அதன்பின் ஒருவழியாக மூன்று மகன்களும், பேரக்குழந்தைகளும் எல்லோரும் வந்துவிட்டனர். எல்லோரையும் பார்த்தக் கணத்தில், பூங்காவனம் பாட்டியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாட்டியை பார்த்து அழுததும், எல்லோரும் கூடி அழுதுவிட்டார்கள். ஒருவழியாக அழுது தீர்த்தப்பின் அனைவரையும் கூப்பிட்டுக் கைகளைப் பிடித்து, மெல்லிய குரலில் நல்லா இருக்கிங்களா என கண்களையும் கன்னத்தையும் தடவிப் பார்த்தாள். பெரும்பாலும் அனைவரும் வந்துவிட்டனர்.
பாட்டி கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தது. நடு மகனைக் கூப்பிட்டு எங்கே என் பேத்தி கயல்விழி என்று கேட்டதும், அவ மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளாள். அவளுக்கு தகவல் சொல்லப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவாள் என்று சொன்னதும், பாட்டியின் கண்கள் மீண்டும் மூடிக்கொண்டன. மகன் பாட்டியின் காலைப் பிடித்துக்கொண்டு, என்னை மன்னித்துவிடு என்று கதறி அழுதார். அதேப்போல் அனைத்து மகன்களும், மகள்களும் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டனர். கண்களைத் திறந்து அனைவரையும் தனது இருகைகளால் அணைத்துக் கொண்டாள்.
தங்கவேல் ஓரமாக உட்கார்ந்துக்கொண்டு கண்களை துண்டால் துடைத்தார். பாட்டி அதிக உணர்ச்சி வசப்பட்டாதால், அவளது உடம்பு மேலும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மீண்டும் பாட்டிக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு இழுக்கப்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது, உடனே அருகில் உள்ள அனைத்து மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் கூப்பிட்டு, அன்னம்பால் கொடுத்து ஊட்டச் சொன்னார்கள். எல்லோரும் பாட்டிக்கு அன்னம்பால் ஊட்டுவதற்கு அருகில் செல்கிறார்கள். மகன்களும், மகள்களும் அழுதபடி அன்னம்பால் கொடுத்தார்கள்.
ஆனாலும் பாட்டியின் உயிர், ஏதோ கொஞ்சம் ஈரம் ஒட்டிக்கொண்டே உள்ளது.
உடனே தங்கவேல் ஐயாவை கூப்பிட்டு வரச்சொல்லி, ஆள் அனுப்பப்பட்டது. அதுக்குள்ளே ஊருக்குள் ஒரு கார் வந்தது. அந்தக் கார் அநேகமாக கயல்விழியுடையதாக இருக்கும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த நாள் காலை பாட்டிக்கு எந்த அசைவும் இல்லாமல் இருந்தது, பாட்டிக்கு உயிர் போய்விட்டது எனக் கதறி அழுதார்கள், ஆனால் வேலைக்காரி சரோஜா பாட்டி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவ்வளவு சீக்கிரமாக சாகமாட்டாங்க.
கயல்விழி வந்தப்பிறகுதான், அவக் கையால் அன்னம்பால் கொடுத்தப் பிறகுதான் பாட்டியின் உயிர் உடலை விட்டுப்போகும் என சரோஜா திட்டவட்டமாக சொல்லி விட்டாள்.
பாட்டியின் உயிர் இன்னும் ஊசல் ஆடிக்கொண்டும், அந்த உயிர் உடம்பில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டும் இருப்பதைக் காண முடிந்தது. ஒரு நிமிடத்திற்கு ஐந்து முறை கண்சிமிட்டி, அவள் உயிரோடு இருப்பதை உறுதிச் செய்தாள். அட இந்தப் பாட்டி உயிர் இவ்வளவு காத்து இருக்கு.
“நாம யாரு மீது உயிராய் இருக்கிறோமோ அவங்க வந்து அன்னம்பால் கொடுத்தா உயிர் அடங்கிவிடும்”
எனப் பக்கத்து வீட்டுக்காரப் பெருசுகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உறவினர்கள், ஊர்க்காரர்கள் எல்லோரும் பாட்டி இறந்துவிட்டால் என்ன என்ன செய்யணும்… என்ன சடங்கு செய்ய வேண்டும்… என ஏற்பாடு செய்யப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கு.
தென்னைமரத்தின் அடியில் ஒரு சில ஊர் முக்கியஸ்தர்கள், பாட்டி உயிரோடு இருக்கும்போதே யாருக்கு எவ்வளவு சொத்து எனப் பேசி முடிவெடுத்து விடுங்கள் எனப் பேச்சைத் தொடங்கினார்கள். ஊர் பஞ்சாயத்து தலைவர் தங்கவேலுவை கூப்பிட்டு, அய்யா நீங்க என்ன சொல்றீங்க, சரிபாதியாக பிரித்துக் கொடுத்து விடலாமா என்று கேட்டதற்கு, நான் என்ன செய்யபோகிறேன் என்றார்.
காலாகாலத்துல காடு வா வா என்கிறது. இதோ! பூங்காவனம் போன பிறகு, எனக்கு என்ன இருக்கு? நானும் சீக்கிரம் போய்விடுவேன். ஏதோ செஞ்சிட்டுப் போங்க எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
அதற்குள்ளே கார் ஒன்று வேகமாக வந்தது. எல்லோரும் ஒரு வழியாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கயல்விழி அமெரிக்காவிலிருந்து வந்து விட்டாள். கயல்விழி இறங்கியதும், ஒரே அழுகை சத்தமும் கூடியது.
சரோஜா ஓடிப்போய் பாட்டியின் காதில் கயல்விழி வந்துவிட்டா என்றதும், பாட்டியின் கை அசைத்து, மெல்ல மெல்ல இரண்டு முறை துடித்தது. வாய், உதடு மேலும்கீழும் அடித்து, கயல்விழி வாசப்படி நின்றதும், பாட்டி கால்கள் படபடவென அடிக்கத் தொடங்கியது, உடல் இரண்டு முறை தூக்கிப்போட்டது. கண்களில் கண்ணீர்துளி வந்தது.
கயல்விழி அருகில் வந்ததும், மூச்சுக்காற்று அதிகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் பாட்டி காதில் சென்று, கயல்விழி வந்துவிட்டாள். அம்மா என்றும்… அப்பா என்றும்… பாட்டி என்றும்… மாறிமாறி சொல்லிக்கொண்டும், அழுதுக்கொண்டும் இருந்தார்கள்.
கயல்விழியை சிறுக் குழந்தையாக இருக்கும்பொழுது தூக்கி அணைத்தக் கைகளும், உடலும் கயல்விழிக்காக காத்துக்கிடக்கு.
ஒரு வழியாக கயல்விழி அருகில் சென்று, பாட்டி நான் கயல்விழி வந்திருக்கேன் என்றுச் சொன்னதும்… பாட்டியின் கண்களில் கண்ணீர் சொட்டு சொட்டாய் விழுந்தது. எல்லோர் கண்களிலும் கண்ணீர் தாரையாக வந்தது. ஒருவழியாக பாட்டியின் அருகில் அமர்ந்து கயல்விழி, கையைப் பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் அழுத்திப் பார்த்தாள். பாட்டி அதிக உணர்ச்சி வசப்பட்டதால் அவளது மூச்சுக்காற்று தடுமாறியது. உடனே அனைவரும் பாலெடுத்து கயல்விழி கையில் அன்னம்பால் கொடுத்தனர்.
கயல்விழி அழுதுக்கொண்டே, தன் பாட்டியின் வாயில் அன்னம்பால் ஊட்டினாள். பாட்டில் உயிர் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது. ஒப்பாரிக்கட்டி பாட்டி உடல் சுற்றி அழுதனர். கயல்விழி அழுதுக்கொண்டே மெல்ல மெல்ல நடந்து, வீட்டின் வாசலில் ஒரு சேரில் உட்கார்ந்தா. தங்கவேலு அழுதுக்கொண்டே நடந்து பூங்காவின் அருகில் உட்கார்ந்து கொண்டார். ஒருவழியாக பாட்டியை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோரும் இறுதிச்சடங்கை கயல்விழி தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பாட்டியின் ஆன்மா சாந்தி அடையும் என்றனர். எல்லோரும் மயானம் புறப்பட்டு அங்குப் பாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. எல்லோரும் கத்தி அழுது தீர்த்தனர். பூங்காவனம் குடும்பம் துக்கத்தில் உறைந்துப் போனது.
கயல்விழி, பாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். நாட்கள் கடந்தன. எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். கயல்விழி மட்டும் அங்கே இருக்கா, தன் பூங்காவனம் பாட்டி அணிந்தச் சேலையை அணிந்துக் கொண்டும்… கைகளில் நிறைய மலர்களை எடுத்துக்கொண்டும்… பூங்காவனம் பாட்டிக்கு மரியாதை செலுத்தக் கல்லறை நோக்கிப் புறப்பட்டாள்.
கயல்விழி பூங்காவனம் பாட்டியின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டும்… பாட்டியின் சுருக்குப்பையை கையில் வைத்துக்கொண்டும்… நினைத்து, வாழ்ந்து வருகிறாள். பூங்காவனம் பாட்டியின் ஆன்மா, கயல்விழி… பூங்காவனம் பாட்டியும், கயல்விழியும் ஒரு அன்பின் ஜீவநதி….
– கதைப் படிக்கலாம் – 89
இதையும் படியுங்கள் : பிண்டி சப்ஜி…