பாகுபலி (உண்மையான அன்பின் பரிசு)

– ஜனனி ரகுநாத்

வெள்ளித்திரையில் நாம் பார்த்த பேரரசன் பாகுபலியின் கதையல்ல இது.

கற்கோட்டையும், பொற்கோவிலும் அமைந்த ஓர் நகரில் இரு அழகான இதயங்களின் கதை!

2012 செப்டம்பர் 18-ஆம் தேதி, ஒரு குட்டி சூப்பர் ஹீரோ அந்த ஊர்ல பிறந்தார். அவருக்கு “பிரணவ்”-னு பெயர். எல்லாக் குட்டிஸ் மாதிரியும், இந்தப் பிரணவ்-க்கும் எல்லா அழகான விஷயங்களும் பிடிக்கும். அதிலும் குறிப்பா…..

சிறகில்லாமல் பறக்க மகிழுந்து (கார்) விளையாட்டும், துணைக்கு செல்ல நாய்குட்டியும் ரொம்பவே பிடிக்கும்.

கார்… அப்பா, மாமா, தாத்தா-னு எல்லார்கிட்டயும் இருக்கர்தால, அதை பற்றிய ஏக்கமோ, கனவோ அவனுக்கு இல்ல. ஆனா அவனப் பொருத்த வரைக்கும் நாய்க்குட்டிங்கிறது ஒரு பெரிய ஆசை, ஏக்கம்…

இப்படியா ரோட்ல யாராவது நாய்க்குட்டிய வாக்கிங் கூட்டிட்டு போனா, கண்கள் இமைக்காம அதோட குறும்பு நடையப் பார்த்தப்படி போறதும், தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடறதுனு, தன்னோட அன்ப வெளிபடுத்திட்டு இருந்தான்.

இப்படியா, அவனுக்கு 6-வயது ஆகுது. பிரணவ் அப்போ ஃப்ர்ஸ்ட் கிரேட் படிச்சிட்டு இருந்தான். அவனோட மாமா அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைச்சு, நியூ இயர் கிஃப்ட் ஒரு நாய்க்குட்டி வாங்கித் தர முடிவு பண்ணாரு.

2018 ஜனவரி 1-ஆம் தேதி மாலை 5 மணி, பிரணவ் வீட்டு வாசல்ல அவன் மாமா கார் வந்து நிக்குது. மாமா-வ பாத்து ஓடி வர, பிரணவ்-க்கு மாமா ஏதோ பெருசா ஒரு பார்சல் எடுத்து வரது தெரிஞ்சது. அது என்ன-னு யோசிக்கும் முன்ன, மாமா கைல குட்டியா, வெள்ளை மேகத்துல சாக்லெட் ஐஸ் க்ரீம் ஸ்ப்ரே பண்ணுனதுப் போல, வெள்ளையும் பிரவுன்-ம் மிக்ஸ் பண்ண கலர்-ல, புசு புசு-னு, கருப்புத் திராட்சைப் போல கண்கள் ரொண்டோடு, கொஞ்சம் நீண்ட காதுகளோடு… ஒரு அழகான குட்டி நாயோடு வீட்டுக்குள்ள வந்தார்.

அதப் பார்த்த பிரணவ்-வோட கண்ணு ரெண்டும் விரிஞ்சி, அவன் மனசுல இந்த நாய்க்குட்டி யாரோடது, ஏன் மாமா இத தூக்கிட்டு வராங்கனு, ஆயிரம் கேள்வி…

மாமா பிரணவ் பக்கத்துல வந்து “ஹேப்பி நியூ இயர்” “சர்ப்ரைஸ் ஃபார் யூ-னு” சொல்லி அவன்கிட்ட அதக் கொடுக்க… இவ்ளோ நாள் எங்கே எங்கேயோ ஆசையா, ஆச்சரியமா பார்த்த ஒரு விஷயம், இன்னைக்கு அவன் கைலயும் இருக்கு… அந்த அழகான நாய்க்குட்டி அவனுக்கே சொந்தமான, அந்த அழகான நிமிஷம் பிரணவ்-விட சந்தோஷமான ஒருத்தர் உலகத்துல இல்ல.

மாமா அந்த நாய்க்குட்டிய பற்றி சொல்ல ஆரம்பிச்சார்… அது பிகல் வகை நாய்-னும், உயர் ரக நாய்-னும், அதோட சாப்பாடு, இருக்க ஒரு கூண்டு-னு மாமா சொல்ல சொல்ல… பிரணவ்-வோட அந்த நாய்க்குட்டி, ஒரு கிரீடம் வைச்சக் குட்டி ராஜா போல தெரிஞ்சது அவனுக்கு. எல்லாரும், புது இடத்துல அந்த நாய்க்குட்டி செய்யற குறும்புகளை ஆச்சரியமா பார்த்து ரசிச்சுட்டு இருந்த நேரம்…

வீட்ல இருந்த ஒரு ஆள் மட்டும், “இப்போ எதுக்கு நாய் எல்லாம்… வீட்ல எல்லா சின்னக் குழந்தைங்களா இருக்காங்க… வயசானவங்களால எப்படி மெயின்டைன் பண்ண முடியும்!… அதுவும் இல்லாம, இன்னோரு குழந்தை வரப் போகுது (மாமா-வின் குழந்தை)… நாய் முடி எல்லாம் ஆகாது… நாய் வேண்டாம்!-னு சொன்னாங்க.” அது வேற யாரும் இல்ல, பிரணவ்வோட அம்மா தான்.

இப்படி ஆர்க்கியூமென்ட்ஸ் போக, பிரணவ்-வும், மாமாவும், குட்டிக்கு பெயர் வைக்றது-ல பிஸியா இருந்தாங்க. பிரணவ் Shinchan-னு சொல்ல… மாமாவோ “போடா நாம என்ன சைனீஸானு சொல்ல, மாமா டாமி-னு சொல்ல… பிரணவ்-வோ அது போரா இருக்கு மாமா-னு சொல்ல”. கடைசியா, அப்போ ரிலீஸ் ஆன “பாகுபலி” யோட ரசகர்களான இவங்க, இந்த நாய்குட்டி இந்த வீட்டோட ராஜா-வா இருக்கணும்-னு சொல்லி – “பாகுபலி” அப்படி-னு பெயர் வைச்சாங்க…

இதுக்கு இடையில சின்ன ஆர்க்கியூமென்டா இருந்த நாய்க்குட்டி விஷயம்,  கொஞ்சம் பெரிய ஆர்க்கியூமென்ட் ஆகி, குட்டிக் கோபமும், சின்ன சண்டையும் வந்தது. வீட்ல இப்படி ஒரு விஷயும் நடக்கிறது. பாத்தா பிரணவ் பாட்டி-க்கு ஒரு ஐடியா வந்துச்சு.

“அவ சொல்றதும் கரெக்ட் தான். ஆனா குழந்தைங்களோட சந்தோஷத்துக்காக வாங்கின அன்புப் பரிசு, அதனால அந்த நாய்க்குட்டி-க்கு நல்ல பாதுகாப்பான வீடு கிடைக்கிற வரைக்கும், இங்க இருக்கட்டும்-னு சொன்னாங்க. இந்த ஐடியாவுக்கு எல்லாரும் ஓகே சொன்னாங்க.

மறுநாள் காலை-ல, மாமா சென்னை கிளம்பும் முன்ன பாகு-வ குளிக்க வக்க… பிரணவ், அவன் தம்பி சித்து-னு மூணு பேரும் சேர்ந்து வேலை-ய ஆரம்பிச்சாங்க. ஜனவரி மாச குளிர்-ல நடுங்கின பாகுவுக்கு பிரணவ் அவனோட துண்டுல போர்த்தி அணைச்சு துவட்ட… டாஃக் பவுடர் போட்டு… இன்ஃபெக்‌ஷன், கோல்டுக்கு டானிக் போட்டு, சாப்பாடு குடுத்து ஒரு பிறந்தக் குழந்தையப் போல பாத்துக்க ஆரம்பிச்சாங்க. அடுத்த சில நாட்கள்-ல, பாகு-வுக்கு அந்த வீட்டு ஆட்கள் முகம் மனசுல பதிய… துவங்குச்சு.

பிரணவ்-வோட தாத்தா-வ பாத்ததும், பாகு… அத வாக்கிங் கூட்டிட்டு போக ஆள் வந்த சந்தோஷத்துல, குதிச்சி தாத்தா-வ சுத்தி சுத்தி வந்து அதோட அன்ப வெளிப்படுத்தும்.

தாத்தாவுக்கோ பாகு பன்றதெல்லாம் பார்த்தா, அவரோட பேர பிள்ளைகள் போல தோண ஆரம்பிச்சது.

பிரணவ் பாட்டி போகும் போதும், வரும் போதும் அவங்க சேலை-ய கடிச்சி இழுத்து பார்க்கும் பார்வை-ல, சின்ன பேரன் சித்து-வ ஞாபகப்படுத்தி, அவங்க மனுசுலையும் இடம் பிடிச்சது. இப்படியா நாட்கள் கடக்க… ஒரு நாள் பிரணவ் ஸ்கூல் முடிச்சி வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, பாகு கண்-ல ஏதோ பூச்சி கடிச்சி சிவந்து வீங்கி இருந்தது. இதப் பாத்து மொத்தக் குடும்பமும் எல்லா வேலையையும் அப்படியே விட்டுட்டு, வெட்னரி ஹாஸ்பிடல்-க்கு போனாங்க. அங்க பாகு-வுக்கு குடுத்த மருந்துல சரியாச்சு. திரும்ப வரும்போது, கார் வின்டோ-ல காத்துல முடி அசைய… அந்த அழகான ஊர ரசித்தப்படியே வந்தது.

இப்படியா அந்தக் குடும்பத்தோட ஒரு முக்கியமான ஆளாகவே பாகுபலி மாறிடுச்சு. ஆனாலும் பிரணவ்-வோட அம்மா மட்டும் அவங்க முடிவுல இருந்து பின் வாங்கல.

அடுத்த சில நாட்கள்-ல பிரணவ் வீட்ல இன்னொரு குட்டி பாப்பா பிறக்க(மாமாவுக்கு)… அந்தக் குழந்தை-க்கு பெயர் சூட்டு விழா நடந்தது. அப்போது அங்கு வந்த, பிரணவ் தாத்தாவோட ஃபிரண்டு பாகுபலியோட குறும்பு-லயும், அழகுலயும் மயங்கி, அவங்கக் கூட்டிட்டு போறதா சொல்லி… பிரணவ்-க்கு ஷாக்கு குடுத்தாங்க.

2018 பிப்ரவரி 15-ஆம் தேதி, அந்த நாள் பிரணவ் லைஃப்ல ரொம்ப மோசமான நாளா இருந்தது. ஆமா அன்னிக்கு தான் பாகு-வ அதோட புது வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க தாத்தாவும், பிரணவ்வும்…

எப்பவும் போல தாத்தாவோட கார்-ல ஏறி ரவுண்ட் போக போற ஆசைல, பாகு வின்டோ காத்துல முடி அசைய வேடிக்கை பார்த்தபடியே அதோட புது வீட்டுக்கு வந்து சேர்ந்தது. தான் வேற எங்கேயோ வந்தத உணர்ந்தப் பாகு, அது ஃபிரெண்ட் ஆன பிரணவ்-வ சுத்தி சுத்தி வந்து, “நானும் உன் கூடவே வரேன்… என்னை விட்டுட்டு போயிடாதனு” சொல்லாம சொல்லுச்சு… இதப் பார்த்த பிரணவ் சின்ன சின்ன கண்கள்-ல இருந்து, நீர் முத்துக்கள் உதிர ஆரம்பிச்சது…

பாகுபலி-ய பிரிய மனமில்லாம அதப் பார்த்தபடியே அந்த இடத்துல இருந்து வீட்டுக்கு வந்தாங்க. வீட்டுக்கு வந்தப் பாகு இருந்த இடத்தப் பார்த்து, அது கடிச்சி கிழிச்ச பொருள்களும், அது விளையாடின பந்துகளும் அத நினைவுபடுத்த லைஃப்ல முதல் முறையா “மிஸ்ஸிங்”-னா இதுதான்னு அப்போது அவனுக்கு புரிஞ்சுது…

பிரணவ் அவன் அம்மாக்கிட்ட ஓடிப் போய் “எனக்கு பாகு வேணும்னு” தேம்பி அழ, அப்போ அம்மா அவனுக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணாங்க. “நீ 8th கிரேட் போனதும் உனக்கு பாகுபலி வாங்கித்தரேன்… இது Promise” அப்படினு… ஆனா எவ்வளவு சொல்லியும் பிரணவ் சமாதானம் ஆகல…

ஏன்னா, வெறும் மூணு வேளை சாப்பாடு போட்டாலே, ஒரு நாய் ஒரு வாரம் வரை அந்த மனிதரை மரக்காதாம்…

இங்கப் பிரணவும், பாகுபலியும் 1 மாசம், 15 நாட்கள் ஒன்னா இருந்திருக்காங்க. அந்த அன்ப எப்படி மறக்க முடியும்…

அதுக்குப் பிறகு ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது, டெய்லி தாத்தா கூட போய் பாகு-வ பார்த்து, அதுக் கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரது ஆறுதலா இருந்தது பிரணவ்-க்கு. பாகு-வும் தன்னோட புது வீட்ல பழக ஆரம்பிச்சது.

வருஷங்கள் உருண்டோட…

அன்னிக்கு, செப்டம்பர் 18, பிரணவ்-க்கு 13 வயது ஆகி இருந்தது. 8th கிரேட் படிச்சிட்டு இருந்தான். காலை 7.30 மணி. வாசல் காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து வெளியில் வந்த பிரணவ், வாசல்-ல ஒரு பெரிய பெட்டி-ய பார்த்தான். அது நெருங்கிப் போக போக, அதுல ஏதோ அசையருத பார்த்தான்.

கிட்டப் போய் பார்த்த அவனுக்கு ஒரு ஷாக்… அது என்னனா வெண்மேகத்து-ல சாக்லேட் ஐஸ்கிரீம் ஸ்ப்ரே பண்ண மாதிரி,  வெள்ளையும் பிரவுன்-ம் மிக்ஸ் பண்ண கலர்-ல, கருப்புத் திராட்சைப் போல கரு கரு-னு கண்களோடு, கொஞ்சம் நீண்ட காதுகளோட, துறு துறு-னு அழகா ஒரு குட்டி நாய்…

அதப் பார்த்த அவனோட கண்கள் விரிஞ்சி என்ன நடக்குது-னு புரியும் முன்னே, அவன் அம்மா பின்னிருந்து “ஹேப்பி பர்த்டே” “சர்ப்ரைஸ் ஃபார் யூ-னு” சொல்லி, அந்த நாய்குட்டிய அவன் கைலக் குடுத்தாங்க.

அப்போ தான் பிரணவ்-க்கு ஞாபகம் வந்தது… அம்மா அவனுக்கு பண்ண ப்ராமிஸ்… சும்மா சமாதானம் இல்ல-னு, மறுபடியும் பாகுபலி அவனுக்கு கிடச்சிது.

இன்று 2020-ல இருக்குற நமக்கு, 2026-ல நடக்கப் போற இது, ஒரு கற்பனை தான். ஆனா இந்தக் கற்பனை நனவாகும். அந்த அழகான கண்கள்-ல மீண்டும் கியூட்டான சந்தோஷம் வரும் என்று

2026-ன் இந்த நொடிக்காக, 2020-ல இருந்து காத்துக் கொண்டிருக்கும் பிரணவ்-வின் அம்மா…

அப்போ யாரும் பிரணவ்வையும், பாகுபலியையும் பிரிக்க முடியாது என்ன…

பாகுபலி – உண்மையான அன்பின் பரிசு…

– கதைப் படிக்கலாம் – 48

இதையும் படியுங்கள்சிரிச்சுகிட்டே அழுறேன்!

Exit mobile version