அறிவுக்கு அப்பால்…

– சோ. சுப்புராஜ்

2016-ஆம் வருஷத்தின் இறுதியில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை நான் என்னுடைய முகநூல் நண்பர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன். இவற்றை நீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் நிகழ்வுகளின் நிதர்சனத்தை என்னாலேயே நம்ப முடியவில்லை.

புனைவுகளில் கூட சாத்தியப்படாத சம்பவங்கள், நிஜத்தில் மிகவும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து விடுகின்றன என்கிற ஆச்சர்யத்தின் வெளிப்பாடே இந்தப்  பதிவு.

என்னை நீங்கள் தாராளமாக நம்பலாம். கண்டிப்பாகக் கடைசியில் என் வங்கிக் கணக்கைக் கொடுத்து, உங்களை அதில் பணம் போடச் சொல்லி ஒருபோதும் நச்சரிக்க மாட்டேன்.

நிகழ்வு – 1 : 07 நவம்பர் 2016

அன்றைக்கும் வழக்கம் போல், பெட்ரோலைக் குடித்து பணத்தை எல்லாம் புகையாகக் கழியும் இருசக்கர வாகனத்தில், வேலை நிமித்தமாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். செண்ட்ரலில் இருந்து அண்ணாசாலை போகிற வழியில், பார்க்டவுன் இரயில் நிலையத்திற்குச் சற்று முன்னதாக, ஒரு வயதான மூதாட்டி என்னை நோக்கிக் கைகாட்டி லிப்ட் கேட்டாள். சில மோசமான முன் அனுபவங்களால், நான் பொதுவாய் யாருக்குமே லிஃப்ட் கொடுப்பதில்லை. அந்த அனுபவங்களை பின்னொரு சமயத்தில் எழுதுகிறேன்.

ஆனால் மூதாட்டியைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ரொம்ப நேரமாக அங்கு நின்றுக்கொண்டு பலபேரிடம் லிஃப்ட் கேட்டு, அதுக் கிடைக்காத சலிப்பும் அவசரமாகப் போக வேண்டிய பதட்டமும், அவளுடைய முகத்தில் தெரிந்தன. அதனால் வண்டியை நிறுத்தி, “எங்க போகனும் பெரியம்மா?” என்றேன் கரிசனத்துடன்.

“அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு….” என்றாள். நான் அந்த வழியாகப் போகவில்லை என்றாலும், அடையார் சிக்னலில் இறக்கிவிடலாம் என்று யோசித்து ஏற்றிக் கொண்டேன்.

மூதாட்டி மடிசார் புடவை அணிந்திருந்தாள். தேவிபாலாவின் தொடர்கதைகளில் மட்டுமே, நான் மடிசார் அணிந்த பெண்களைச் சந்தித்திருக்கிறேன். சென்னையில் எங்குமே பார்த்ததில்லை என்பதால், ஏதோ கிராமத்தில் இருந்து வருகிறாள் என்று நினைத்துக்கொண்டேன்.

“அடையார் ஆஸ்பத்திரிக்கே போகனுமா, இல்ல, அதுக்குப் பக்கத்துல வேற எங்கயாச்சும் போகனுமா பெரியம்மா….?” என்று கேட்டேன். புற்றுநோய் என்றாலே மனசில் ஒரு பாரமும் பயமும் அழுத்தத் தொடங்குகிறதே!

“ஆஸ்பத்திரிக்குத் தான்ப்பா. அங்க என்னோட பொண்ணை சேர்த்துருக்கு…..” என்று மூதாட்டி சொல்லவும், எனக்கு சிலீரென்று இருந்தது. மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கே கொண்டுப்போய் இறக்கி விட்டுவிட்டு, அப்புறம் வேலைக்குப் போய்க்கொள்ளலாம் என்று நினைத்து ஏற்றிக்கொண்டேன்.

வண்டி ஓட்டிக்கொண்டே “அவ்வளவு தூரம் போறதுக்கு எதுக்கு பெரியம்மா லிப்ட் கேட்டுக்கிட்டு நிக்கிறீங்க. பஸ்ஸுல, இல்லன்னா ஆட்டோ புடிச்சுப் போயிருக்கலாமில்ல….” என்று, ஏதாவது ஆறுதலாகப் பேசவேண்டுமே என்பதற்காகத் தான் கேட்டேன்.

“நெஜத்தச் சொல்றதுன்னா, என்கிட்ட பஸ்ஸுக்குக் கூடப் பணம் இல்லப்பா; ஊருக்குப் போயிட்டு இரயில்ல வந்துக்கிட்டு இருந்தேன். ரிஸர்வ் பண்ணாத பொதுப்பெட்டியில தான் பயணம். கூட்டமான கூட்டம். ஏதோ கிடைச்ச இடத்துல உட்கார்ந்துருந்தேன். லேசா கண் அசந்துட்டேன் போலருக்கு. என்னோட பைய எவனோ ஒருத்தன் திருடிக்கிட்டு, பாதி வழியில எங்கயோ இறங்கிப் போயிட்டான். அதுலதான் எல்லாமே இருந்துச்சு….” என்று அழுகிற தொனியில் சொன்னாள். எனக்கு மூதாட்டியின் மீது மேலும் பரிதாபம் சூழ்ந்தது.

ஒரே ஒரு கணம், இவையெல்லாம் பொய்யாக நம்மிடமிருந்து இரக்கத்தை வரவழைத்து, இறங்கப் போகும்போது ஏதாவது உதவி பண்ணுப்பா என்று கேட்பாளோ என்கிற சந்தேகமும் வந்தது. அதனால் மேற்கொண்டு எதுவும் கேட்காமல், வண்டி ஓட்டுவதில் மட்டும் கவனமாய் இருந்தேன்.

“உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்காப்பா……” என்றாள் மூதாட்டி திடீரென்று. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ள ஆசாமி நான். கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற கமலஹாசனின் கட்சி நான். அதனால் மூதாட்டியின் கேள்வியில் கொஞ்சம் தடுமாறினாலும், அவளுடைய தோற்றம், அவளின் இப்போதைய துக்ககரமான மனநிலை எல்லாவற்றையும் உத்தேசித்து, “அதெல்லாம் இருக்கு பெரியம்மா….” என்றேன், அவளுக்கு ஆறுதலாய் இருக்கட்டுமே என்று.

“எனக்கென்னவோ, கடவுள்-னு ஒருத்தர் இல்லவே இல்லைன்னு தோணுதுப்பா இப்பல்லாம். நாஸ்திகவாதிகள் எல்லாம் சொல்றாப்புல, கடவுள்ங்குறது மனுஷாளோட மிகப்பெரிய கற்பனைதானோன்னு நினைக்கிறேன்….” என்றாள் அதிர்ச்சியூட்டும் விதமாக.

ஒரு பிராமண மாமியிடமிருந்து, இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மூதாட்டி பெரிதும் விரக்தியில் பேசுகிறாள் என்று எனக்குத் தோன்றியதால், “ஏன் பெரியம்மா, கடவுள நம்பாத அளவுக்கு, உங்களுக்கு அப்படி என்ன பிரச்னை? இரயில்-ல பை திருட்டுப் போறதுக்கெல்லாமா கடவுளக் காரணமாக்குவீங்க….” என்றேன்.

“அதுக்கில்லப்பா… லோகத்துல ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்குது. எல்லாத்தையும் இயக்குறது கடவுள்னா, அவர் எவ்வளவு குரூரமானவரா இருக்கனும். கடவுளே கதின்னு அவருக்கான கைங்கர்யங்கள் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்குற எங்கள மாதிரியானவங்களையே இப்படி அல்லல் படுத்துனா, அப்புறம் கடவுளும் வேறொன்னும் என்னத்துக்கு…..”

மூதாட்டி ஸ்பஷ்டமாக ஒவ்வொரு வார்த்தையையும், பிராமண பாஷையின் கொச்சையில் தான் பேசினாள். ஆனால் ஞாபகத்திலிருந்து இதை எழுதுகிற எனக்கு, பிராமண பாஷை அத்தனை பரிச்சயமில்லை என்பதால், என்னுடைய மொழியில் எழுதிப் போகிறேன். ஞாபகமிருக்கும் இடங்களில் அங்கங்கு அவளுடைய வார்த்தைகளையும் போட்டிருக்கிறேன். வாசிக்கும் நண்பர்கள் பொறுத்தருள்வீர்களாக.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், அவளாகவே தங்களுடைய குடும்பத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினாள். “எங்களோட பூர்வீகம், கும்பகோணம் பக்கத்துல சிவபுரம்ங்கிற கிராமம். காலம் காலமாக கடவுளுக்குக் கைங்கர்யங்கள் பண்ணுகிற குடும்பம் எங்களோடது. தஞ்சாவூர்ப் பக்கத்துல வேறொரு கிராமத்துக்கு வாழ்க்கைப்பட்டு போனேன். அவரோடதும் கடவுளுக்குக் கைங்கர்யம் பண்ணுகிற குடும்பம் தான்.

எங்க ஆத்துக்காரர் ஒரு செட்டியார் கட்டியிருந்த சின்னப் பெருமாள் கோயில்ல, கைங்கர்யம் பண்ணீண்டு, கூடவே அங்கிருந்த ஒரு இஸ்கூலுல, ஒன்னாம் வகுப்புப் பிள்ளைங்களுக்கு வாத்தியாராவும் இருந்தார்.

கோயிலுக்கு பாத்யதையாக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதக் குத்தகைக்கு விட்டு, அதுல வர்ற வரும்படியில, கோயில் செலவுகளைச் சமாளிச்சுண்டு, அவருக்கு வர்ற வாத்தியார் சம்பாத்யத்துல குடும்பத்தையும் ஓட்டிண்டு சந்தோஷமாத்தான் இருந்தோம்.

எங்களுக்கு ஒரே ஒரு பொண் குழந்தை. ருக்குமணின்னு பேரு வச்சோம். ருக்கு, மூக்கும் முழியுமா… நல்லா சேப்பா… அவங்க அப்பாவைப் போல அழகா இருப்பாள். தஞ்சாவூர்ல காலேசுக்கு வாசிக்கப் போனவள், ஒரு கிறிஸ்துவப் பையன லவ் பண்றேன்னுட்டு வந்து நின்னாள்.

நானும் அவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல், கல்யாணம்னு ஒன்னு பண்ணினா அவனைத்தான் பண்ணிப்பேன்; இல்லைன்னா செத்துப் போயிடுவேன்னு ஒரே அழுகை.    சரி எங்கயாவது போய் ஷேமமா வாழ்ந்தா போதுமின்னு, அவனோடவே அனுப்பி வச்சுண்டார்.

ருக்குவுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, அவங்க மதத்துக்கு மாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அந்த புள்ளையாண்டான். அவ பேரக்கூட கிறிஸ்துவப் பேரா மாத்திக்கிட்டா. அது என் வாயில நுழையாததால, நான் எப்பவுமே அவள ருக்குன்னுதான் கூப்புடுறது.

பையனோடது கொஞ்சம் வசதியான குடும்பம் தான். அவன் அவங்களுக்கு ரொம்ப வருஷங்கழிச்சு கர்த்தரோட கிருபையால பிறந்ததால, அவங்க அவன கிறிஸ்துவ ஊழியத்துக்குன்னு அனுப்பி வச்சிட்டாள். ஊரூராய்ப் போயி மதப்பிரச்சாரம் பண்ணிக்கிட்டு எப்பவாவது தான் வீட்டுக்கு வருவான்.

அவனுக்கு அம்மா மட்டும் தான். மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்து வரல. லோகத்துல எந்த மாமியாரும் மருமகளும் தான் ஒத்துமையா குடும்பம் நடத்துறா? என்னாச்சோ, ஒருநாள் ருக்கு அவளோட மாமியார்கிட்ட பெருசாய் சண்டை போட்டுண்டு, எங்க ஆத்துக்கே வந்துட்டாள். சும்மா சொல்லப்பிடாது; செய்தி கேள்விப்பட்டதுமே பதறி அடிச்சிக்கிட்டு, அந்தப் புள்ளையாண்டான் அவளத் தேடிக்கிட்டு வந்துட்டான்.

ருக்கு பிடிவாதமா அவளோட மாமியாரோட சேர்ந்து வாழவே முடியாதுன்னுட்டு சொல்லவும், எங்க கிராமத்துலயே அவளக் குடித்தனம் வச்சிக்கிட்டான். அவங்களுக்கு ஒரு குழந்தையும் பொறந்துச்சு. பொம்பளக் கொழந்தை. ஆனால் வளர வளரத் தான் தெரிஞ்சது; அது மன வளர்ச்சி இல்லாத குழந்தைன்னு.

புள்ளையாண்டான் குடிக்கத் தொடங்கி, பொண்டாட்டியையும் புள்ளையையும் வெறுத்து ஒதுக்கத் தொடங்கினான். அவாளோட கடவுளின் மேலயும் கோபம் வந்து, கிறிஸ்துவ ஊழியத்துலருந்தும் விலகி, எங்கயோ கண்காணாமப் போயிட்டான். வீட்டுக்கே வர்றதில்ல. எங்க போனான்ங்குற விபரமும் தெரியல. நாங்களும் தேடாத இடமில்ல; ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியல. அவங்க அம்மாவோட சாவுக்கும் கூட அவன் வரலைன்னா பார்த்துக்குங்களேன். சாவுச் செய்தி அவனுக்குத் தெரியுமான்னே தெரியல.

கொஞ்ச நாள்ல எங்க ஆத்துக்காரரும் இறந்து போயிடவே, வருமானத்துக்கு வழி இல்லாம, ருக்கு மனுப்போட்டு வேலைதேடத் தொடங்கினாள். பெங்களூருல ஒரு கம்பெனியில தான் வேலை கிடைச்சது. நாங்க பெங்களூருல போய்க் குடியேறி, ருக்கு அங்கருந்து வேலைக்குப் போகத் தொடங்கினாள்.

அவளோட மூளை வளர்ச்சி இல்லாத பொண்ணை, அதுக்கான சிறப்புப் பள்ளியில சேர்த்து நான் தான் பார்த்துக்கிட்டேன். அதுப் பெரிய மனுஷியா ஆயிருச்சு. ஆனா இன்னும் எதுவும் தெரியாம, எல்லாத்தையும் அதுக்கு நான் தான் பண்ண வேண்டி இருக்கு. கொடுமைப்பா அது. நம்மளொட எதிராளுக்குக் கூட அதுமாதிரி வரப்பிடாது. கடவுள் இத்தோடயாவது எங்கள விட்டுருக்கலாம். ஆனா இப்ப ருக்குக்கு கர்ப்பப்பை-ல புத்துன்னு கண்டுப்பிடிச்சு, அவள இங்க கொண்டுவந்து சேர்த்து அல்லாடிக்கிட்டு இருக்கேன்.

நானும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு உயிர் பொழச்சுக் கெடப்பேன்னு தெரியல. என் மகளும் புத்துநோய் வந்து சாவாளா பிழைப்பாளான்னே தெரியாமக் கெடக்குறா. எங்களுக்கப்புறம் மனவளர்ச்சி இல்லாத எங்க குழந்தைய யாரு பார்த்துப்பா? சொல்லுப்பா…

கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தால், இப்படியெல்லாம் நடக்குமா? வாழ்நாளெல்லாம் பூஜை, புனஸ்காரம்னு அவன வணங்குனதுக்கு, ஏதாச்சும் அர்த்தம் இருக்கா…..? என் பொண்ணு, ஒன்னுக்கு ரெண்டு மதத்தோட கடவுள்கள வணங்குனாள். ஆனா ரெண்டு சாமிகளுமே அவளக் கைவிட்டுடுச்சு.….!” மூதாட்டி அழுகிறாள் என்பது, என்னுடைய வண்டியின் குலுக்களில் தெரிந்தது எனக்கு.

“ரமண மகரிஷியே புத்துநோயில தான் இறந்தார்னு படிச்சிருக்கேன், பெரியம்மா. ஒரு மகானுக்கே அப்படி ஒரு தண்டனைன்னா, சாமான்யர்களான  நாம எல்லாம் எம்மாத்திரம் பெரியம்மா…..?”

“அதான், கடவுள்ன்னு ஒருத்தர் இல்லியோன்னு தோணுது எனக்கு. இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா சொல்லு?” மூதாட்டி மறுபடியும் குலுங்குவதை உணர்ந்து, நான் அமைதியாக எதுவும் பேசாமல் வண்டியோட்டத் தொடங்கினேன்.

அவள் அழுது முடிக்கவும், “பயப்படாதீங்க பெரியம்மா. உங்க மகளுக்கு சரியாயிடும். இப்பல்லாம் புத்துநோய்க்கு வீரியமான மருந்துகள் கண்டுபிடிச்சிட்டாங்க. கண்டிப்பா டாக்டருங்க குணப்படுத்திடுவாங்க. அதனால தைரியமா இருங்க. உங்க மருமகனும் கூடிய விரைவில் உங்களத் தேடீட்டு வந்துடுவார்….” நான் ஆறுதலாகப் பேசவும் மூதாட்டிக்கு அத்தணை சந்தோஷம்.

“கடவுளே நேர்ல வந்து சொன்ன மாதிரி இருக்குப்பா. உன் வாக்குப் பலிக்கட்டும்ப்பா..” என்றாள். அவளின் குரலில் மலர்ச்சியும், சந்தோஷமும் கூத்தாடுவதை உணர்ந்தேன். ஒரு சாதாரணமான ஆறுதல் வார்த்தைக்கு, இத்தனை வலிமையா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

மயிலாப்பூருக்குள் வண்டி நுழைகையில், “அதென்னப்பா பெரிய கோபுரம் தெரியுது….” என்றாள் மூதாட்டி, பவ்யமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டபடி.  “அது மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் பெரியம்மா. ரொம்ப ஃபேமஸ் ஆச்சே, உங்களுக்குத் தெரியாதா?”என்றேன் ஆச்சர்யமாய் வண்டி ஓட்டியபடி.

“நான் இந்தப் பக்கமெல்லாம் ஒருநாளும் வந்ததில்லைப்பா….” என்றவள், வண்டி தெப்பக்குளத்திற்கு அருகில் வரவும், வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டாள்.

“என்னாச்சு பெரியம்மா, அடையார் ஆஸ்பத்திரிக்கு இன்னும் போகனுமே…..!”

“ரெண்டொரு நாள்ல ருக்குக்கு ஆபரேசன்னு டாக்டர் சொல்லியிருக்கார். கோயிலப் பார்த்துட்டு சும்மா போக மனசு வரலப்பா. நீ போய்க்கோ. நான் பிச்சை எடுத்தாவது, கடவுளுக்கு ஒரே ஒரு நைவேத்தியம் பண்ணீட்டு, உன்னப்போல வேற மகராசன் யார்கிட்டயாவது லிஃப்ட் கேட்டுப் போய்க்கிறேன்…..” என்றாள்.

இந்த நிமிஷம் வரைக் கடவுளைத் திட்டிக்கொண்டு வந்தவள், கோயிலைப் பார்த்ததும் இறங்கி பூஜை பண்ணப் போவதாய்ச் சொல்லவும், நான் சிரித்துக் கொண்டேன். கடவுள் எந்தக் காலத்திலும் காலாவதி ஆக மாட்டார் என்று, அப்போது தோன்றியது எனக்கு. அவசரமாய் நடக்கத் தொடங்கியவளை “ஓரு நிமிஷம் நில்லுங்க பெரியம்மா….” என்று சொல்லவும், நின்று தயக்கத்துடன் என்னைப் பார்த்தாள்.

பர்ஸைத் திறந்துப் பார்த்தேன். அதிகம் பணமில்லை. மூன்று ஐநூறு ரூபாய்களும், சில நூறு ரூபாய்நோட்டுக்களும் மட்டுமே இருந்தன. ஐநூறு ரூபாய்த் தாட்களையும், இரண்டு நூறுரூபாய் நோட்டுக்களையும் எடுத்துக் கொடுத்தேன். மூதாட்டி மிகவும் பிடிவாதமாக வேண்டவே வேண்டாம் என்று தான் மறுத்தாள்.

வற்புறுத்தித் திணித்துவிட்டு, “வழிச் செலவுகளுக்கும், இப்ப செய்யப்போற பூஜைச் செலவுகளுக்கும் வச்சுக்குங்கம்மா. பூஜை முடிஞ்சதும் பஸ்ஸுலயோ ஆட்டோலயோ போய்க்குங்க பெரியம்மா….” என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுப் போய்விட்டேன்.

மூதாட்டி நான் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டுக்களை, அன்றைக்கே செலவளித்திருப்பாளா என்று தெரியவில்லை. செலவளித்திருக்கவில்லை என்றால், அதற்கப்புறம் அது செல்லுபடி ஆகியிருக்காது.

ஏனென்றால் அன்றைக்கு இரவுதான், புழக்கத்தில் இருந்த ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் எல்லாம், அடுத்தநாள் பகலில் இருந்துச் செல்லாது என்று, நம்முடைய பாரதப் பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள், தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

வங்கிகளின் மைல்நீள வரிசைகளில் நின்று, வங்கி அதிகாரிகள் கேட்கும் டாக்குமெண்ட்களை எல்லாம் சமர்ப்பித்து, பணத்தை மாற்றுவதற்கு அவளுக்கு அவகாசமும் பொறுமையும் இருந்திருக்குமா என்று, எனக்கு இப்போதும் எதுவும் உறுதியாக சொல்லத் தெரியவில்லை. அவள் நம்புகிற கடவுள், எப்படியெல்லாம் அவளைக் கஷ்டப்படுத்துகிறார் என்று தான், அப்போதும் எண்ண வேண்டியிருந்தது.

அப்புறம் அவர்களை நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தும் போனேன்.

நிகழ்வு – 2 : 31 டிசம்பர் 2016

அடுத்த சம்பவம், டிசம்பர் இறுதி நாள் இரவில் நிகழ்ந்தது. என் மனைவி கிறிஸ்துவர் என்பதால், அவளையும் மகளையும் அன்று இரவு சர்ச்சிற்கு அழைத்துப் போயிருந்தேன். நான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, கடவுள் விஷயத்தில் நானொரு ரெண்டாங்கெட்டான். கடவுளை நம்பியும் நம்பாத ஒரு திரிசங்கு நிலை.

ஞாயிற்றுக் கிழமைகளில், மனைவியையும் மகளையும் சர்ச்சில் விட்டுவிட்டு நான் மார்க்கெட்டிற்குப் போய், வாரத்திற்குத் தேவையான மளிகை, காய்கறிகள், பழங்கள், அசைவம் எல்லாம் வாங்கிக் கொண்டு, அதற்குள் பிரார்த்தனை முடிந்து, சர்ச் வாசலில் காத்திருக்கும் மனைவியையும் மகளையும் வீட்டிற்கு அழைத்துப் போவேன்.

ஆனால், டிசம்பர் இறுதி இரவுகளில், அது சாத்தியமில்லை. வெளியிலே பயங்கராமாய்க் குளிரும் என்பதாலும், ராத்திரியில் வெளியிலே உலாத்திக் கொண்டிருந்தால் சந்தேகக் கேஸில் போலீஸ் பிடித்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது என்கிற பயத்தினாலும், நானும் மனைவி மகளுடன் சர்ச்சில் தான் இருந்தாக வேண்டும். சில சமயங்களில் சர்ச் நிகழ்வுகள் சுவாரஸ்யமாகவும் இருப்பதுண்டு.

அன்றைய இரவில் பழைய வருஷத்திற்கான பிரார்த்தனை தொடங்குவதற்கு முன்பாக, கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வொன்றும் நடக்கும். அந்த வருஷத்தில் தங்களின் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதுகளை மேடையில் ஏறி ஒவ்வொருவராகச் சொல்லி, அவை நிகழ ஆசிர்வதித்த கர்த்தருக்கு நன்றி என்று தெரிவிப்பார்கள். சிலர் மனதுருகி அழவும் செய்வார்கள்.

பெரும்பாலும், தங்களுடைய மகன் பரீட்சையில் பாஸாகி விட்டான் என்றோ, தங்களுக்கோ தங்களைச் சேர்ந்தவர்களுக்கோ வேலை கிடைத்து விட்டது என்றோ, அல்லது ஏதாவது கடுமையான நோயின் பாதிப்பிலிருந்து சொஸ்தமாகி விட்டது என்றோ, தங்களின் குடும்பத்தினர் ஒருவரைக் கர்த்தர் தன்னிடம் அழைத்துக் கொண்டார் என்றோ, தங்களின் குடும்பத்திற்கு புதிதாய் ஒரு குழந்தையை கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் என்றோ சொல்லி, மகிழ்ச்சியையும் துக்கத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

2016-ஆம் வருஷமும் அப்படித்தான் பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மேடையில் ஒருத்தர் ஏறினார். நேர்த்தியாய் உடை அணிந்திருந்தாலும், அவைக் கசங்கி, ஆளும் மிகவும் சோர்ந்துப் போய்த்தான் தெரிந்தார்.

“கர்த்தருக்கு நான் நன்றி சொல்ல வரவில்லை. அவரிடம் நியாயம் கேட்கவே வந்திருக்கிறேன். நான் ஒருநாளும் கர்த்தரை ஸ்தோத்தரிக்காமல் இருந்ததில்லை. வாழ்நாளெல்லாம் அவருடைய ஊழியனாக அவருடைய கிருபைகளைப் பேசி, பலரைக் கிறிஸ்துவ மதத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையை கர்த்தர் சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.

எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். நான் பிறந்த கொஞ்ச நாளிலேயே, அப்பா இறந்து விட்டார். அம்மா தான் என்னை வளர்த்தார்கள். கல்லூரியில் படிக்கும் போது காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இதுவரை என்னை ஆசீர்வதித்த கர்த்தர், அதற்கப்புறம் என்னுடைய வாழ்க்கையை சூறையாடத் தொடங்கி விட்டார்.

எங்களுக்குப் போய் மூளை வளர்ச்சி அடையாத ஒரு குழந்தையைக் கொடுத்தார் கர்த்தர். அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம்,  நான் என்ன பாவம் செய்தேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்புறம் கர்த்தரிடம் முறையிட்டேன். பதிலே இல்லை. என்னால் நிம்மதியாய்க் குடும்பத்தில் இருக்க முடியவில்லை. வாழ்க்கையை வெறுத்து, எல்லாவற்றையும் உதறிவிட்டு ஓடிப் போனேன்.

கால் போன திசையெல்லாம் போனேன். அலைச்சலும் அவதியும் தான் மிச்சம். என்னுடைய எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் மனந்திருந்தி, பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம் என்று ஊருக்குப் போனால், அம்மா இறந்துப் போனாளாம். மனைவியும் குழந்தையும் அவர்களுடைய ஊரிலும் இல்லை. அவர்கள் எங்குப் போனார்கள் அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்று எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை.

தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராய்ப் போய், ஒவ்வொரு சர்ச் வாசலுக்கும் போய், மனைவியையும் குழந்தையையும் தேடிக் கொண்டிருக்கிறேன். பேப்பர்களில் விளம்பரம் கொடுத்தேன். எதற்கும் ஒரு பலனும் இல்லை. அதனால் நான் கர்த்தரின் மீது நம்பிக்கை இழந்துப் போனேன். எல்லோருக்கும் நியாயம் செய்வதாய்ச் சொல்லும் கர்த்தர், எனக்கு மட்டும் நியாயம் செய்யவே இல்லை. அது ஏன் என்று அவரிடம் கேட்கவே வந்தேன்…..”

முழங்கிவிட்டு மேடையிலிருந்து கிழே இறங்கியவர், தள்ளாடி விழப்போனார். ஓடிப்போய் அவரை நான் தாங்கிப் பிடித்துக் கொண்டேன்.

இரண்டு நிகழ்வுகளிலும் நான் ஏன் பார்வையாளனாக… அவை ஏன் என்னுடைய கண்களுக்கு முன் நிகழ வேண்டும்…? எல்லா நிகழ்வுகளையும் அறிவால் மட்டுமே அலசிப் புரிந்துக்கொள்ள முடியாது என்கிற பேருண்மையும், புலனறிவுக்கு எட்டாத ஏதோ ஒரு சக்தி, இரண்டு நிகழ்வுகளையும் இணைக்கும் சங்கிலியின் ஒரு கண்ணியாக இருக்கும்படி என்னைப் பணித்திருக்கிறதோ என்கிற சந்தேகம், எனக்குள் துளிர்த்தது.

“பயப்படாதீர்கள். உங்களின் குடும்பம் இப்போது எங்கிருக்கிறது என்கிற தகவல் எனக்குத் தெரியும். நான் உங்களை அவர்களிடம் அழைத்துப் போகிறேன்…..” என்று சொல்லவும், அவர் ஆச்சரியமாய் என்னைப் பார்த்து, தேவாலயத்தை நோக்கித் திரும்பி வணங்கி “ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்….” என்றார்.

– கதைப் படிக்கலாம் – 36

இதையும் படியுங்கள்தாய்க்கோழி

Exit mobile version