பிண்டி சப்ஜி…

– லலிதா சங்கர்

“அம்மா! வர வர உன் கைமணம் எங்கப் போச்சு? முன்னெல்லாம் வெஜிடபிள் புலாவ் பண்ணினா அவ்வளவு அருமையா இருக்கும்.  இப்போ பாரு! அந்த டேஸ்ட் இல்லவே இல்ல!”

“நானும் நீ சொல்றேன்னு மாத்தி மாத்தி பண்ணிப்பார்க்கறேன்.  எந்த மாதிரி டேஸ்ட் நீ எதிர்பார்க்கறேன்னு தெரியலையே.” ரேவதி பரிதாபமாக தன் மகனைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்து சிவா, “என்னம்மா இப்படி சொல்ற? நீ டெல்லில நாம இருக்கும்போது எவ்வளவு அருமையா எல்லாம் பண்ணுவ?  இப்போ பாரு! அந்த ருசி உனக்கு வரவே இல்லை. வரவர எனக்கு சாப்பிடவே பிடிக்கல.” அவன் சொல்லும் டெல்லியில் இருந்தப்போது, அவனுக்கு வயது எட்டு. இப்போது இருபத்தி இரண்டு.

சிவா, “நான் நினைக்கறேன்… உனக்குக் கல்யாண வயசு வந்துடுத்தோ? அதுக்குக் கூட இன்னும் ரெண்டு மூணு வருஷம் இருக்கேடா?” “கல்யாண வயசு வந்துட்டா, அம்மா சாப்பாடு பிடிக்காதுன்னு சொல்லுவா.” ஒருவேளை அப்படிக்கூட இருக்குமோ? 

லூசு மாதிரி பேசாதம்மா. எனக்கு உன் சாப்பாடுதான் பிடிக்கும்.  நான் என்ன சொல்றேன்? நீ முன்ன மாதிரி பண்றது இல்லேன்னுதானே? வேற யாரோட சமையலும் எனக்குப் பிடிக்காது.  உன்னோட சமயலுக்குத்தான் நான் அடிமை. அந்தக் கைப்பக்குவம் உன்னைவிட்டுப் போயிடுத்து போலயே?

இதைக் கேட்டு ரேவதிக்கு பெருமிதமாக இருந்தது. நம்மப் பையன் நம்ம சாப்பாட்டுக்கு அடிமையாமே? அய்யோ பாவம்!… இன்னிக்கு அவனை அசத்திட வேண்டியதுதான். யோசித்து, யோசித்து அவனுக்குப் பிடிக்கும் என்று நல்லக் காரமான வெங்காய சட்னி செய்து, சுடசுட நெய் தோசை வார்த்து அவனுக்குப் பரிமாறினாள். 

அம்மா! என்னம்மா! வெங்காய சட்னியை இப்படி சொதப்பி வெச்சுருக்க? முன்னாடில்லாம் எப்படி ஆரஞ்சு கலர்ல மொழுமொழுன்னு வெண்ணை மாதிரி அரைச்சு அசத்தலா பண்ணுவியே! இது பாரு நறநறன்னு… ரெண்டுகெட்டான் கலர்ல.  எவ்வளவு ஆசையா சாப்பிட வந்தேன்! போம்மா! எனக்குச் சட்னி வேண்டாம். மிளகாய்ப்பொடி போதும்.

ரேவதி துக்கம் தொண்டை அடைக்க, அந்தச் சட்னியை அப்படியே ஃபிரிட்ஜ்ல் தூக்கி வைத்தாள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த சட்னி பிடிக்கவில்லை. ரேவதியும் ஒரு ஸ்பூனோடு நிறுத்திவிட்டாள். அந்தச் சட்னி கொஞ்சம் உப்பு கரித்ததும் அதற்கு ஒரு காரணம்.

ரெண்டு நாள் கழித்து… “நைட் என்னடா பண்ணட்டும்?” 

என்ன இருக்கு?

வெண்டைக்காய் இருக்கு.

அப்போ பிண்டி சப்ஜி பண்ணி, ரொட்டி பண்ணுறயா?

சரி பண்றேன். மனதிற்குள் (எப்படியும் சொதப்பப் போறேன்… ம்ம்ம்ம்….)

ஏனோ தானோவென்று பிண்டி சப்ஜியும், ரொட்டியும் செய்து வைத்தாள். அவளுக்கு விட்டுப்போய்விட்டது. எதைச் செய்தாலும் நல்லா இல்லை, நல்லா இல்லை என்று குடும்பத்தில் எல்லோரும் கோரஸாக சொன்னால் எப்படி இருக்கும்? சமைக்கப் பிடிக்கத்தான் இல்லை.

என்ன செய்வது? அனைவரின் வயிற்றை நிரப்ப வேண்டுமே?  இதில் நம் சமையல் எதிர்வீடு, பக்கத்துக்கு வீடுகளுக்கு ரொம்பப் பிடிக்கிறது. அவர்கள் ஏக்கத்தோடு நம் செய்முறை குறிப்பை கேக்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. நாம் தான் நம் வீட்டு மனிதர்களின் வாய்களை வளர்த்து விட்டுவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு சம்சயம்.

அனைவரும் வந்தனர். ரொட்டியையும் பிண்டி சப்ஜியும் வாயில் வைத்தவுடன், ஒருசேர எல்லோரும் அதை சிலாகிக்க. சிவா அதைத் தொடர்ந்து “அருமை, அருமை அம்மா! உன் கைமணம் திரும்பிடுத்து. சூப்பரா பண்ணிருக்கம்மா.”

சிவா ஒவ்வொரு வாய் சாப்பிடும்போதும் பாராட்டிக்கொண்டே சாப்பிட்டான். “இதே மாதிரி செய்மா, சூப்பர்மா.” அடுத்தமுறை வேறு மாதிரி செஞ்சு சொதப்பிடாத. உன் கைமணத்தை தக்க வெச்சுக்கோ.

அவன் திரும்ப திரும்ப சொல்லவும், ரேவதிக்கு பொறுக்க முடியல.  “சிவா! பிண்டி சப்ஜியும், ரொட்டியும் நல்லா இருக்கா?”

அதைத்தானே இவ்வளவு நேரமா சொல்லிண்டிருக்கேன்? சூப்பரா பண்ணிருக்க! “கீப் இட் அப் மா.” இனிமே பிண்டி சப்ஜி இப்படியே பண்ணு. 

சிவா! “சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லு ஒத்துக்கறேன்.  ஆனால் அடுத்த முறை இதே மாதிரி செய்னு சொல்லிடாதேடா!”…  அது ரொம்ப கஷ்டம்.

இதே மாதிரி பிண்டி சப்ஜி பண்ணனும்னா… வெங்காயச் சட்னியை கொஞ்சம் உப்பு தூக்கலா போட்டு சொதப்பி பண்ணி, அதை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெச்சுட்டு, ரெண்டு நாள் கழிச்சு வெண்டைக்காயை நறுக்கி வதக்கும்போது, அந்த மொத்த சட்னியையும் அதில் கொட்டி செய்யறது கஷ்டம் இல்லையா? நீயே சொல்லு?… அதனால பிண்டி சப்ஜி இதே மாதிரி செய்யமுடியாது கண்ணா புரிஞ்சுக்கோ. 

முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு பேசும் ரேவதியைப் பார்த்து,  சிவா குலுங்கி சிரிக்க ஆரம்பிக்க… அதைத் தொடர்ந்து மொத்தக் குடும்பமும் கண்ணில் நீர் வர சிரித்தது. பின் ரேவதியும் அதை தொடர்ந்து வெட்கச் சிரிப்பு சிரித்தாள்.

– கதைப் படிக்கலாம் – 90

இதையும் படியுங்கள் : என்னால் ‘முடி’யும்..!”

Exit mobile version