பூங்கொத்து

– விக்ரமாதித்யா (எ) கவின்குமார்
bouquet
bridal
flower
poongotthu

அவலாஞ்சி சாலையில் பத்தோடு பதினொன்றாய் அமைந்திருந்தது……. மன்னிக்கவும், அஃறிணையாவதால் அமைக்கப்பட்டிருந்தது என்று தானே சொல்ல வேண்டும் அந்த வீட்டை. சாதாரணமான ஒரு நடுத்தர ஓட்டு வீடு. சம்பவம் நடந்த தினத்தன்று காலை சுமார் ஒன்பது மணி இருபத்தி நான்கு நிமிடம் பத்து நொடிகள் இருக்கலாம். தன்னுடைய பதின்மூன்று வயதில் அப்பா எடுத்துக்கொடுத்த கெளவுன் அளவுள்ள உடை ஒன்றை அணிந்துக் கொண்டிருந்த அந்த இளவயது பெண், மேற்கூறிய வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தாள்.

“டொக்……டொக்……டொக்” அல்லது “டக்……டக்…….டக்”

வீட்டிற்குள்ளிருந்து கதவைத் திறக்க ஒரு ஜோடி கால்கள் (பெண் கால்கள்) வேகமாக நடந்து வந்தது அல்லது மெதுவாக ஓடி வந்தது. கதவும் திறக்கப்பட்டது.

“பெலிஷியா!” என்று ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனாள், கதவைத் திறந்தவள்.

“ஹாய் செளமியா!” என்றாள் பெலிஷியா.

“எதிர்பார்க்கவேயில்ல. காலேஜ் படிக்கும்போது அத்தனை தடவ கூப்பிட்டும் வீட்டுக்கு வரவேயில்ல. டிகிரி முடிச்சு ஒரு வருஷம் கழிச்சு நீயே வீடு தேடி வந்திருக்கிறாய்”

“அப்ப வராதவள் இப்ப மட்டும் எதுக்கு வந்தேனு மறைமுகமாக கேட்கிறாய்”

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல. திடீர்னு வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கியே”

பெலிஷியாவிற்கு நாற்காலியைக் காட்டிவிட்டு, அக்காவை அழைத்து வர உள்ளே சென்றாள் செளமியா. பெலிஷியா வீட்டை நோட்டமிட்டாள். காரை பெயர்ந்த சுவர்கள்; அதிலே ஆணியடித்த தழும்புகள். செளமியாவின் அப்பா புகைப்படமாய் மாலையோடு தொங்கிக்கொண்டு இருந்தார். அலமாரியில் புத்தகங்கள், ஒன்றிரண்டு வெற்றிக் கோப்பைகள், அழகழகான……. அனைத்தையும் பார்ப்பதற்குள் செளமியாவும், அவள் அக்காவும் வந்துவிட்டனர்.

“பெலிஷியா, இது என் அக்கா ரத்னா”

பெலிஷியா தன் பார்வையை ரத்னா மேல் பதித்தாள். செளமியா அதற்கு முன் பலமுறை அவள் அக்காவைப் பற்றிc சொல்லியிருக்கிறாள். நேரில் சந்திப்பது அதுவே முதல்முறை. ரத்னா பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே வரவேற்றாள். பெலிஷியாவும் சிரித்து வைத்தாள்.

“செளக்கியமா? செளமியா உன்னப் பத்தி நிறையா சொல்லியிருக்கா. நீ காப்பி குடிப்ப தானே?”

“ஓ யெஸ்” என்றவள் சொன்னதும், ரத்னா காப்பி போட உள்ளே சென்றுவிட்டாள். ரத்னா(38+) ஒரு முதிர்கன்னி; சினிமாவில் காட்டப்படுவது போன்று எந்தச் செயற்கைத் தனங்களும் அவளிடம் இல்லை; சருமம் கொஞ்சம் கருமை; கண்களுக்குக் கீழே நிரந்தரமான கருவளையங்கள்; சுருங்கத் தொடங்கும் தோல்கள் மற்றும், மிக முக்கியமாக முகத்தில் எப்போதுமே ஒரு சோகம்.

பெலிஷியாவுக்கும் செளமியாவுக்கும் விவாதிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. இந்த ஒரு வருஷ இடைவெளியில் இருவர் வாழ்க்கையிலும் பரிமாறிக்கொள்ள பல கதைகள் இருந்தன. அரட்டை சுவாரஸ்யமாய்ப் போய்க் கொண்டிருந்தபோது அதி பயங்கர இருமல் எழுந்து, சில நிமிடங்கள் நீடித்தது.

பெலிஷியா வீட்டிற்குள் எட்டிப்பார்த்துவிட்டு செளமியாவைப் பார்த்தாள். “என் அம்மா, ஆஸ்துமா நோயாளி, படுக்கைவாதி” என்று சன்னமான குரலில் தெரிவித்தாள். இருமலுக்குப் பின் இருவரும் மெளனிகளாகிவிட்டனர். அதன்பின் ரத்னா காப்பியோடு வந்தாள். காப்பியைப் பருகியவாரே, தான் வந்ததன் நோக்கத்தைத் தெரிவித்தாள் பெலிஷியா.

“செளமியா, வர்ற ஞாயித்துக்கிழமை எனக்குக் கல்யாணம். பத்திரிகைக் கொடுக்கத்தான் வந்தேன். மறக்காம வந்துரு” என்று கூறிவிட்டு ரத்னாவிடம் திரும்பி “அக்கா, நீங்களும் வந்துருங்க” என்றாள்.

“பலே, என்னோட திருமண வாழ்த்துகள். நிச்சயமா நாங்கள் வந்துருவோம்” என்று கூறிக்கொண்டே பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தாள். ஸ்டீபன் ஜார்ஜ் வெட்ஸ் பெலிஷியா ராஜ் என்பதற்குக் கீழே, இடமும் நேரமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

தோழிக்குப் பிரிவுபசாரம் நடத்தப்பட்ட பின், பெலிஷியா வெளியே வந்து செருப்பை மாட்டும் போது எதேச்சையாக தான் பார்த்தாள், தன்னுடைய கல்யாணப் பத்திரிகையை ரத்னா ஏக்கத்தோடு தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டிருப்பதை. பெலிஷியா கண்டும், காணாமல் சென்றுவிட்டாள்.

செயின்ட் தாமஸ் சர்ச் அவ்வளவு அலங்காரத்தோடு காட்சியளித்தது. அந்தத் தேவனின் ஆலயம் முழுவதும் பூக்கள். உலகில் அன்று ஒரு நாள் பூத்திருந்த மலர்கள் அனைத்தையும் அள்ளி வைத்திருந்தனர். ஸ்டீபன் நேற்றே வந்துவிட்டான் போல; எவ்வளவு நேரம் காத்திருந்தானோ? அவன் பொறுமை தகரும் முன்னமே, பெலிஷியா வந்துவிட்டாள். கல்யாணப் பந்தலில் கையில் பூங்கொத்துடன் அவள் தேவதைகளின் தலைவியாய் நடந்து வந்தாள். பின் ஸ்டீபனும் பெலிஷியாவும் கைக்கோர்த்து, கர்த்தர் முன் நிற்க, பாதிரியார் தொடர்ந்தார்.

“அன்புமிக்க மணமக்களே, திருச்சபையின் திருப்பணியாளர் முன்பாகவும் திருக்கூட்டத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கின்றீர். உங்கள் அன்பைக் கிறிஸ்து நிறைவாக ஆசிர்வதிக்கிறார். ஏற்கனவே அவர் உங்களை ஞானஸ்தானத்தால் அர்ச்சித்துள்ளார். இப்பொழுது மற்றொரு திருவருட்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள் வளம் ஈந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கிறார். எனவே உங்கள் கருத்தை அறிந்துக்கொள்ள திருச்சபையின் முன் உங்களை வினவுகிறேன். நீங்கள் இருவரும் முழு மனச்சுதந்திரத்துடன் திருமணம் செய்துக்கொள்ள வந்திருக்கிறீர்களா?”

“வந்திருக்கிறோம்” என்றனர் மணமக்கள்.

“நீங்கள் மண வாழ்க்கை நெறியைப் பின்பற்றி வாழ்நாளெல்லாம் ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும் தயாராக இருக்கின்றீர்களா?”

“இருக்கின்றோம்”

“இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும், கிறிஸ்துவின் சட்டத்திற்கும் ஏற்றபடி வளர்ப்பீர்களா?”

“வளர்ப்போம்”

இன்னும் சில கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கிக்கொண்டப் பின், பாதிரியார் மணமக்கள் சம்மதத்தைப் பெற்றார். பாதிரியார் உறுதிமொழியைக் கூற, மணமக்களும் அதைத் திருப்பி கூறினர்.

“ஸ்டீபன் ஜார்ஜ் என்னும் நான்” – பாதிரியார்

“ஸ்டீபன் ஜார்ஜ் என்னும் நான்” – ஸ்டீபன்

“பெலிஷியா ராஜ் என்னும் உன்னை” – பாதிரியார்

“பெலிஷியா ராஜ் என்னும் உன்னை” – ஸ்டீபன்

“என் மனைவியாக ஏற்றுக் கொண்டேன்” – பாதிரியார்

“என் மனைவியாக ஏற்றுக் கொண்டேன்” – ஸ்டீபன்

“இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும்” – பாதிரியார்

“இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும்” – ஸ்டீபன்

“நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து” – பாதிரியார்

“நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து” – ஸ்டீபன்

“வாழ்நாளெல்லாம் உன்னை ஏற்றுக்கொள்ளவும், மதிப்பளிக்கவும் வாக்களிக்கிறேன்” – பாதிரியார்

“வாழ்நாளெல்லாம் உன்னை ஏற்றுக்கொள்ளவும் ,மதிப்பளிக்கவும் வாக்களிக்கிறேன்”  -ஸ்டீபன்

அடுத்து பெலிஷியாவின் முறை. அவளுக்கும் இதே சம்பிரதாயம் தான். எனவே மீண்டும் ஒருமுறை அந்த பன்னிருவரிகளைப் படித்துவிடுங்கள். (குறிப்பு: ஸ்டீபன் ஜார்ஜ் என்பதை பெலிஷியா ராஜ் எனவும், பெலிஷியா ராஜ் என்பதை ஸ்டீபன் ஜார்ஜ் எனவும்,  மனைவியாக என்பதைக் கணவராக எனவும் மாற்றிக்கொள்க)

“ஆண்டவர் உங்கள் மேல் நிறைவாய் ஆசியைப் பொழியட்டும். இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்ற பாதிரியார் சொல்லுக்கு மொத்தத் திருச்சபையும் “ஆமென்” என்றது.

மோதிரங்கள் விரல்களிலிடப்பட்டன. முத்தங்கள் கன்னங்களிலிடப்பட்டன. வளைத்து வளைத்துப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இவைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல், ஓர் ஓரமாய் நின்றிருந்தாள், செளமியாவின் வற்புறுத்தலின் பேரில் வந்திருந்த ரத்னா. யார் கண்களுக்கும் படாத அவள், பெலிஷியாவின் எதேச்சையான பார்வைக்குச் சிக்கினாள். ஆனால் பெலிஷியா அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

புதுமணத் தம்பதி காரிலேரும் படலம் நடக்கத் துவங்கியது. ஸ்டீபன் முன்னே நடக்க, பெலிஷியா வராத வெட்கத்தை வரவழைத்துக் கொண்டு அவனைத் தொடர, அவள் படியிறங்கும் போது தடுத்து நிறுத்தினர், அவள் வயது பெண்கள். பூங்கொத்தைத் தூக்கிப் போடுமாறு அவர்கள் நச்சரிக்க, அவளும் அதற்குத் தயாராக, பெலிஷியாவின் கல்யாணமாகாத தோழிகள், உறவினர் பெண்கள் ஒவ்வொருவருக்கும் இடையே பிரகடனப்படுத்தப்படாத போட்டி ஒன்று தொடங்கியது. செளமியா எவ்வளவோ சொல்லியும ரத்னா வரவேயில்லை. அவள் மட்டும் தனித்தீவாய் நின்றிருந்தாள்.

பெலிஷியா பூங்கொத்தைத் தூக்கி வீசத் தயாரானாள்; கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தினாள். 3….. 2…. 1… நிற்க. தூக்கிய கைகள் கீழே இறங்கின. பெலிஷியா சர்ச்சில் ஒரு ஓரமாய் நின்றிருந்த ரத்னாவிற்கு முன்னே சென்று ஆஜரானாள். பூங்கொத்தை ரத்னாவின் கைகளில் திணித்துவிட்டு, ஸ்டீபனோடு காரிலேறி புறப்பட்டுச் சென்றுவிட்டாள். ரத்னா மட்டும் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள் பூங்கொத்தைப் பார்த்தவாரே.

– கதைப் படிக்கலாம் – 137

இதையும் படியுங்கள் : நம்பிக்கை

Exit mobile version